அர்ச்சுனா அங்கே செல்... அவர்களை வெல்!

தேவேந்திரனின் வீரவுரைகளால் களம் புகுந்த அர்ச்சுனன், இந்திரனின் தேரிலேறி மாதலியென்னும் தேரோட்டியோடு வீரப்போர் புரியச்சென்றான். ஆனால், எந்த ஆயுதமும் அவர்கள் மீது பாயவில்லை
அர்ச்சுனா அங்கே செல்... அவர்களை வெல்!

உன்னோடு போட்டிபோடு! - 11

அந்தக் கடற்கரைத் தீவில், பச்சைப் பனையோலைகளில் வேக வைத்த பனங்கிழங்குகளை எங்களுக்குத் தந்தபோது, "நிவாதகவச காலகேயர்களைப் பற்றிச் சொல்லவா? அல்லது உண்ணவா?'' என்று கேட்ட நான், முதலில் சொல்லத்தான் தொடங்கினேன்.

"நிவாதகவச காலகேயர் என்பவர்கள், இந்திரலோகத்தின் தலைவனான தேவேந்திரன் முதலான தேவர்களுக்குத் துன்பம் கொடுத்து வந்த அழிக்க முடியாத அசுரர்களாவார்கள். கருமேகம் போன்ற நிறத்தினையும், ஆயுதங்களால் துளைக்க முடியாத வலிய தசைகளால் ஆன உடம்பினையும் உடையவர்கள், இவர்கள்.

முன்னொரு காலத்தில், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அதிலும் தப்பித்தவர்கள்தான் இந்த நிவாதகவசர்கள் என்று மகாபாரதத்தைத் தமிழுக்குத் தந்த வில்லிபுத்தூராழ்வார் கூறுகிறார்'' என்று சொல்லிமுடித்தேன்.

"நிவாத கவசமா? கந்த ஷஷ்டி கவசம் தானே கேட்டிருக்கோம்?'' என்று ஒரு பெரியவர் தலையைச் சொறிய.. "ஏன் நம்ம பாம்பன்சுவாமிகள் கூட, ஷண்முகக்கவசம் பாடியிருக்கார்ல?'' என்று மற்றொருவரும் கேட்டார்.

"கவசம்னா தலைக்கவசம், ஹெல்மெட்... சரி நிவாத கவசம்னா யு மீன் புல்லட் ப்ரூப்?''  என்று அந்தப் பேத்தி கேட்க, "அதே தான்டீ ஆனா, அதத் தனியா மாட்டிக்கிற மாட்டா அவாளுடைய ஒடம்பே கவசமாட்டம் இருக்கும். அப்பிடித்தானே ஐயா?'' என்று அந்த ஹெட்போன் பாட்டி, தன் சந்தேகத்தை என்னிடம் கேட்டார்கள்.

"சரியாச் சொன்னீங்க... தேவர்களாலேயே வெல்ல முடியாத பலம் படைத்த அந்த அசுரர்களை வெல்வதற்காக பூலோகத்திலிருந்து தன் மகனாகிய அர்ச்சுனனை அழைத்துச் சென்றானாம், தேவேந்திரனாகிய இந்திரன்'' என்று நான் சொன்னேன்.

"பார்த்தீங்களா? தேவாதி தேவர்களால கூட ஜெயிக்க முடியாத அசுரர்கள நம்ம மனுஷங்கதான் ஜெயிச்சிருக்காங்க. அதனாலதான் அர்ச்சுனன், வில்லுக்கு விஜயன்னு பேர் வாங்கியிருக்கான். மனுஷன் நெனச்சா ஏழுலகத்தையும் ஜெயிப்பான். மனுஷன்டா'' என்று பெருமையாக மீசையை முறுக்கினார், நம் மீசைக்காரர்.
"உண்மைதான். ஒரு புதுக்கவிதைக்காரர்கூட,
அத்தனையையும் முடிப்போம்..
அந்தக் கர்த்தரையும் பிடிப்போம்..
என்று பெருமிதமாகப் பாடியிருக்கிறார்'' என்று மகிழ்வோடு நான் சொன்னேன்.

"அது சரி, அப்பிடி வலிமையான அசுரர்கள அர்ச்சுனன் எப்பிடித்தான் ஜெயிச்சாரு? எங்க போயி ஜெயிச்சாரு? அதச் சொல்லுங்க வேகமா... பனங்கெழங்கு ஆறுது.. எச்சி ஊறுது...'' என்று அந்தப் பெரியவர் சொல்ல, எல்லோரும் ஆமோதித்தார்கள். நான் தொடர்ந்தேன்.

"தேவேந்திரன், தன் மகனான அர்ச்சுனனிடம், அர்ச்சுனா அவர்கள் வெல்ல முடியாதவர்கள். நீ வீரத்தோடு செல். அவர்களை வெல். கடல் நடுவே உள்ள தீவில் வசிக்கும் அவர்கள் உன் தேவதத்தம் என்னும் சங்கநாதத்தால், உன்னோடு போரிட வர வேண்டும். வெற்றி உனக்கே என்று அனுப்பி வைத்தான்'' என்று நான், அந்தப் போர்க்களக் காட்சியை நேர்முக வருணனை செய்யத் தொடங்க, "அடப் போங்கய்யா... ஆகாசத்துல ஏது கடலு?'' என்று திரும்பவும் மீசைக்காரர் கோபத்தோடு கேட்டார்.

"திருப்பாற்கடல்ன்னு நீங்க கேட்டதில்லையா? அதான் ஆகாசக்கடல்'' என்று ஹெட்போன் பாட்டி ஆவேசமாகச் சொல்ல, "தட் இஸ் மில்கிவே கேலக்ஸி (MILKYWAY GALAXY) என்று மொழிபெயர்த்து வழிமொழிந்தது, அந்தப்பேத்தி. இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே நான் பாரதக் கதைக்குள் புகுந்தேன்.

"தேவேந்திரனின் வீரவுரைகளால் களம் புகுந்த அர்ச்சுனன், இந்திரனின் தேரிலேறி மாதலியென்னும் தேரோட்டியோடு வீரப்போர் புரியச்சென்றான். ஆனால், எந்த ஆயுதமும் அவர்கள் மீது பாயவில்லை. அவர்கள் சாகவுமில்லை. அலையலையாய் அவர்கள் வரத் தொடங்கினார்கள்.
ஏதிசூலம் எழுமழு ஈட்டியின் 
சாதிசக்கரம் தாங்கும்தடக் கையார்  
மோதுபோரெனின் மொய்ம்புடன் முந்துவோர்  
ஓதமேழும் உடனுண்டு உமிழுவோர்'' 
என்று நான் வில்லிபாரதப்பாட்டை வேகமாகச் சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த அத்தனைபேருக்கும் மயக்கமே ஏற்பட்டது. 

"கவலைப்படாதீர்கள். பொருளும் சொல்கிறேன். முத்தலைச்சூலம், கோடரி, கூரீட்டி, சக்கரப்படை எனும் எல்லா ஆயுதங்களையும் அர்ச்சுனன் எய்தபோதும், அவர்கள் அத்தனையையும் தூசுதட்டுவது போலத் தட்டி, ஏழு கடல்களையும் உண்டு உமிழ்பவர்களைப் (துப்புபவர்களை) போல முன்னேறத் தொடங்கினார்கள். அவர்களோ மூன்றுகோடிப்பேர். சற்றே திகைத்துப்போன அர்ச்சுனன், யாது செய்வதென்று யோசித்தான். எந்த ஆயுதமும் பயன்படவில்லை'' என்று நான் பதற்றத்தோடு சொன்னேன்.

"அறிவாயுதத்தைப் பயன்படுத்த வேண்டியதுதானே?'' என்று கடல்சார் பொறியியல் பேராசிரியர் கவனமாக எடுத்துக் கொடுத்தார். உடனே நானும், "ஆம் அறிவு என்னும் ஆயுதம்தான் நம் எதிரிகளால் கைப்பற்ற முடியாத ஒன்று என்று நம் வள்ளுவப் பேராசான் கூறியுள்ளதை நினைத்துப் பாருங்கள்..
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்''
என்று திருக்குறளை எடுத்துக்கூறிவிட்டுக் கதைக்குள் மீண்டும் வந்தேன். 

"வெல்ல முடியாத நிவாதகவச காலகேயர்கள் திகைக்கும் வண்ணம் சட்டென்று தன் தேரினைத் திருப்புமாறு தேரோட்டிய மாதலிக்குக் கட்டளையிட்டார், அர்ச்சுனன். தேர் திரும்பியது. போர்க்களத்தை விட்டு ஓடத் தொடங்கியது. அந்தக் காட்சியைப் பார்த்த அவ்வசுரர்கள் கைதட்டி, சிரித்துத் தங்கள் வாயிலடித்துக்கொண்டார்கள். அடுத்த நொடியில் அங்கேயொரு அதிசயம் நிகழ்ந்தது''

- தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com