வைரமணி... முத்துமணி!

ஹெட்போன் பாட்டி தன் "5டி' கேமராவில் அந்த நாரையின் செயல்களைப் பதிவு செய்ததோடு, அதை போட்டோ எடுத்து, முகநூலில் அனுப்ப அந்த நாரையின் படம் உலகம் முழுவதும் பறக்கத் தொடங்கியது.
வைரமணி... முத்துமணி!

உன்னோடு போட்டிபோடு! - 14
"நம்மகிட்ட உட்கார்ந்து இருக்கிற பறவை நாரைபோல இருக்கிறது. நீங்கள் எல்லோரும் "கொக்கு' எனும் பறவையைப் பற்றிப் பேசுகிறீர்களே? நாரைப் பறவைக்கு ஒரு பாட்டும் இல்லயா?'' என்று ஒருவர் கேட்க,
"ஏன் இல்லை? அந்தப் பாட்டைச் சொல்லவா?'' என்று மற்றொருவர் ஆவேசம் வந்தவர் போலக் கேட்டார்.
"கொக்கு, நாரை போன்றவை எல்லாம் நீர்ப்பறவைகள்தான். "குருகு' எனும் பறவையும் இதே இனத்தைச் சேர்ந்ததுதான், மாணிக்கவாசகர் தன்னுடைய திருவெம்பாவையில்
"கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின விளம்பின சங்கம்'
எனக் காட்டுக்குயிலையும், நாட்டுக்கோழியையும் நீர்வாழ் பறவைகளைக் குருகுகள் என்றும் பாடியிருக்கிறார்'' என்று நான் விளக்கம் கொடுத்தேன்.
"கடிகாரம் இல்லாமலே காட்டுக்குயில்கள் முதலில் குரல் கொடுக்க, பின் நாட்டுப் பகுதியில் வாழும் கோழிகள் கூவ, இவற்றின் சப்தத்தால் நீர்ப்பறவைகளும் விழித்தெழக் கடைசியிலதான் நம்ம மனுசப் பயக எந்திரிக்கிறாங்க... என்னத்தச் சொல்ல?'' என்று அந்தப் பெரியவர் அலுத்துக் கொண்டார்.
"இருங்கையா நாரையைப் பற்றி நான் 8-ஆம் வகுப்புப் படிக்கிறபோது ஒரு பாட்டை வாசிக்கச் சொல்லி எங்க தமிழையா சொன்னாரு. நானும் உடனே,  "நாராய் நாராய் செங்கால் நாராய்' அப்பிடீன்னு வாசிப்பேன். அதுக்கு அப்புறம் அந்தப் பாட்டை மறந்து போனேன். ஆனா அது நாரையைப் பத்தி எழுதின பாட்டுன்னு எனக்கு ஞாபகம் இருக்கு'' என்று "நாரைப் புராணம்' படித்தார் இன்னொரு பெரியவர்.
"ஐயா இவர் சொல்லிய பாட்டை நானும் படிச்சிருக்கேன். ஆனா யார் பாடினா? எதுக்குப் பாடினார்ன்னு தெரியலையே'' என்று ஹெட்போன் பாட்டி தயங்க "டோண்ட் ஓர் கிராண்ட்மா... கூகுள் இருக்கப் பயமேன்? மாதா, பிதா, குரு, தெய்வம் அது உங்க காலம். மாதா, பிதா, குரு, கூகுள் தெய்வம் எங்க காலம்'' என்று பெருமையாகச் சொன்ன பேத்தி மீண்டும் தன் செல்போனுக்குள் புகுந்தது.
"எல்லோரும் நான் சொல்றதக் கேளுங்க. இந்த நாரைப் பறவையும், பனங்கிழங்கும் கையில் இருக்கும்போதே இதைச் சொன்னால்தான் பெருமை'' என்று முன்னுரையோடு தொடங்கினேன்.
"ஐ, காட் இட்'' என்று சத்தமிட்ட பேத்தி தன் பாட்டியிடம் அந்தச் செல்போனில் இருந்த பாடலைக் காட்டியது.
"கங்கிராட்ஸ்  சத்திமுத்தப்புலவர் எழுதிய நாரை விடு தூதுதான். இதுதான்... இதுக்குத்தான் அதுதான்... அதேதான்'' என்று மகிழ்ச்சியுடன் ஹெட்போன் பாட்டி கைதட்டிச் சொல்ல, எல்லோரும் என்னைப் பார்த்தார்கள்.
"இதோ இந்த நாரைப் பறவையின் நீண்ட மூக்கு எதனைப்போல் இருக்கிறது தெரியுமா?'' என்று நான் கேட்டேன். நான் கேட்டவுடன் எல்லோரும் நாரையிடமே கேட்டுவிடுவோம் என்பதைப்போல அதனைப் பார்க்கத் தொடங்கினார்கள். அந்த நாரையும் அங்கிருந்த கடல் நண்டு ஒன்றினைத் தன் கூர்மையான அலகால் குத்தி மேலே தூக்கி வாயைப் பிளந்து விழுங்கிவிட்டு எங்களை வெற்றியோடு பார்த்தது.
"நாரையின் கூர்மூக்கு தந்தக்குச்சு போல இருக்கு''
"சீனாக்காரன் சாப்பாட்டுக்குச்சி போல இல்ல''
"எங்க அப்பத்தா தலையில "பேன்' எடுக்கிறதுக்காக வச்சிருக்கிற "ஈருவள்ளி' போலத்தான் தெரியுது'' என்று ஆளாளுக்கு ஒவ்வொரு உதாரணம் சொல்லத் தொடங்கினார்கள்.
அப்போது தன் கையில் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பனங்கிழங்கைத் தலைகீழாகப் பிரித்து அதன் நுனியைப் பிளந்து இரண்டாக்கி நடுவிலிருந்த நரம்பை எடுக்க முயன்ற ஹெட்போன் பாட்டியைப் பார்த்த பேத்தி சட்டென்று "மை காட், இந்தப் பிளந்த பனங்கிழங்கு வாயைப் போல இருக்கே அந்த நாரையின் வாய்'' என்று சத்தம் போட எல்லோரும் பனங்கிழங்கையும் நாரையின் பிளந்த வாயையும் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, "அட ஆமாய்யா அப்பிடியேதான் இருக்கு'' என்று அதிசயத்தார்கள்.
நானும் மகிழ்ச்சியாக அந்தப் பேத்தியின் கூர் அறிவைப் பாராட்டிவிட்டு, "இதத்தான் ஐயா நம் சத்திமுத்தப் புலவர் உவமையாகச் சொல்லி இருக்கிறார்.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்'...
என்று பாடியுள்ளார். இத்தனை அழகான உவமையை உலகில் எந்தப் புலவனும் சொல்லியிருக்க முடியுமா? என்று தெரியவில்லை'' என்று நானும் என் கையில் இருந்த பனங்கிழங்கைப் பிளந்து நாரையின் வாய்போல, உள்ளிருக்கும் மெல்லிய குச்சியை அதன் நாக்குப்போல இருக்கும் அழகையும் காட்டி மகிழ்ந்தேன்.
எங்கள் அனைவரின் கண்டுபிடிப்பால் மகிழ்ந்துபோனது போல அந்தச் செங்கால் நாரையும் தன் சிறகுகளை விரித்து, தன் கூர்அலகை மேல்நோக்கித் தூக்கியபடி ஒரு சுற்றுச் சுற்றி வந்து படபடவென ஓடிக் காட்டியது.
அத்தனை பேரின் முகத்திலும் மகிழ்ச்சி. ஹெட்போன் பாட்டி தன் "5டி' கேமராவில் அந்த நாரையின் செயல்களைப் பதிவு செய்ததோடு, அதை போட்டோ எடுத்து, முகநூலில் அனுப்ப அந்த நாரையின் படம் உலகம் முழுவதும் பறக்கத் தொடங்கியது.
"பார்த்தீர்களா? அக்காலத்தில் ஓர் ஏழைப் புலவன் தான் பார்த்த பொருட்களை மனதில் நிறுத்தி வைத்து அதனை உவமையாகக் காட்டிப் பாடியதால்தான் இன்றளவும் அந்தப் பாடல் நிற்கிறது. நாரையின் படம் நம் பாட்டியம்மாவின் "பேஸ்புக்கில்' பறக்கிறது. பார்க்காத பொருளை உவமை சொன்னால் அதனை எல்லாராலும் அறிந்து கொள்ள முடியாது...'' என்று நான் சொல்லி முடித்தேன்.
"உண்மைதான். குழந்தைகளுக்கான பாடல் ஒன்று ஆங்கிலத்தில் உண்டு. இன்றைக்கும் நம் நாட்டுக் குழந்தைகளும் பாடி மகிழும் பாடல்தான் அது.
 "ட்டுவிங்கிள் ட்டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் 
ஹெள ஏ வொண்டர் வாட் யூ ஆர்?'
இந்தப் பாடலில் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வைரங்களைப்போல மின்னுகின்றன என்று முடியும்.
"அப் அபோவ் த வேர்ல்டு சோ ஹை
லைக் ஏ டைமன்ட் இன் த ஸ்கை'
இந்தப் பாட்டில் வரும் உவமைகள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்றார் நம் நாட்டு அறிஞர் ஒருவர்'' என்று கடல்சார் பொறியியல் பேராசிரியர் சொல்லி முடித்தார்.
உடனே அந்தப் பாடலை தன் "செல்போனில்' பாடவிட்டு அதற்கு ஒரு மெல்லிய நடனமும் அங்கிருந்த குழந்தைகளோடு அந்தப் பேத்தி ஆட, பாட்டியும் கடல் அலைகளும் தாளம் போட்டன.
"இதில் என்ன தப்பு இருக்கிறது? ஆகாயத்தில் மின்னும் சின்னச் சின்ன நட்சத்திரங்கள் பூமியின் வைரங்களைப் போல மின்னுகின்றன'' என்று பாடியிருக்கிறார் அந்நாட்டுப் புலவர்,  ஜான் டெய்லர்'' என்று ஹெட்போன் பாட்டி அந்நாட்டுப் புலவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
"இல்லை பாட்டியம்மா... குழந்தைகள், இதைப் பாடும் பள்ளிக் குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் எத்தனை பேர் வைரங்களைப் பார்த்திருப்பார்கள்? சொல்லுங்கள் நீங்கள் யாராவது வைரங்களைப் பார்த்ததுண்டா?'' என்று அந்த மீனவ நண்பர்களைப் பார்த்துக் கேட்க,
"எம் பேரு முத்துமணி எம் மனைவி பேரு
வைரமணி என்று நடுவர் சொல்ல...''

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com