ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...!

பாடலின் அருமையை உணர்ந்து, தன் நிலையை எண்ணி நம்பிக்கையோடு திருக்குறள் இராமையா சொல்லிக் கொண்டே வர வர அவருக்குள் இந்த அஷ்டாவதானக் கலை கை கூடி வந்ததாக அவரே சொல்லியிருக்கிறார்.
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...!

உன்னோடு போட்டிபோடு! - 21

"முருகப் பெருமானை நினைந்து, அந்தச் சந்நியாசி சொன்ன மந்திரத்தையும் சொல்லியபடி, அஷ்டாவதானி திருக்குறள் இராமையா 48 நாள்கள் திருக்குறளையும் மனனம் செய்துவர அவருக்கு அஷ்டாவதானம் கைகூடியதாம்'' என்று நான் சொல்ல, "அந்தச் சந்நியாசி சொன்ன மந்திரம் என்ன மந்திரம்?'' என்று தமிழ்மணி கேட்டார். நான் சொல்லத் தொடங்குமுன்...
"அந்த மந்திரத்தை வெளியே சொல்லக் கூடாது; சொன்னால் பலிக்காது அல்லது தலை வெடிச்சுப் போகும். அப்படித்தானே சொல்லப் போறீங்க?'' என்று மீசைக்காரர் கேலியாகக் கேட்டார்.
நான் மீண்டும் புன்னகையோடு, "அப்படியெல்லாம் சொல்லி நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. நிரூபிக்கப்படுகின்ற உண்மைகளைத்தான் அறிவியல் எப்போதும் ஏற்கும். உலகமும் ஒத்துக் கொள்ளும். இதோ சொல்கிறேன் கேளுங்கள். அந்தச் சந்நியாசி திருக்குறள் இராமையாவிடம் சொன்ன மந்திரப்பாடல் இதுதான்'' என்று நான் தொடங்க... "இருங்க, இருங்க ஜஸ்ட்... வெயிட்... நான் அதை அப்படியே "டேப் பண்ணிக்கிறேன்'' என்று பேத்தி பதற, ஹெட்போன் பாட்டியும் "நீயேன் இவர் சொல்லப் போறதை உன் மூவி கேமராவில "ஷுட்' பண்ணக்கூடாது? ஒய் நாட்?'' என்று தன் பேத்தியிடம் பரபரக்க...
"உங்க பதட்டத்தைப் பார்த்து அவருக்கு மந்திரம் மறந்திடப் போகுது'' என்று தமிழ்மணி சிரிக்க...
"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. சமீபகாலத்தில் தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் "பிரேக்கிங் நியூஸ்' என்று சொல்லிச் சொல்லி சாதாரண நிகழ்ச்சியைக்கூட நம்மைப் பதட்டத்தோட கேட்க வச்சுட்டாங்க, பாக்க வச்சுட்டாங்க. இனிமே பிரேக்கிங் நியூஸ் இல்லாம வாழ முடியாதோ? என்று மக்கள் பதற்றம் அடையும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்'' என்று வருத்தத்தோடு சொன்ன நான், தொண்டையைச் செருமிக் கொண்டு,

"முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்
பொருபுங் கவரும், புவியும், பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே''

என்று சொல்லி முடித்தேன். எங்கும் அமைதி நிலவியது.
"ஹும்... இந்த மாதிரி எல்லா மந்திரத்தையும் வடமொழியில சொல்லி வச்சுட்டாங்கன்னா என்னதான் புரியும்?... யாருக்குத்தான் தெரியும்?'' என்று ஒருவர் கவலைப்பட்டார்.
"ஐயா, இந்தப் பாடல் தமிழ்ப்பாடல்தான். தமிழ்மொழியில் எழுதப்பட்டதுதான். உங்களுக்குப் புரியாததெல்லாம் வடமொழி, மந்திரம் என்று கவலைப்படாதீர்கள் என்று தைரியம் சொன்ன தமிழாசிரியர், என்னைப் பார்த்து "ஐயா இந்தப் பாடல் அருணகிரிநாதருடைய பாடல்போல இருக்கிறதே...?'' என்று கேட்டார்.
 "சரியாகச் சொன்னீர்கள். இந்தப் பாடல் அருணகிரிநாதருடைய "கந்தர் அநுபூதி'யில் வருகிற 15-ஆவது பாடல்தான். இந்தப் பாடலில், முருகன், குமரன், குகன் என்னும் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று பெயர்களையும் மனம் உருகிச் சொல்கின்ற உணர்வினை எமக்கு அருள வேண்டும் என்று பக்தியோடு, தேவர்களும், பூவுலக மக்களும் துதித்துப் பாடுகின்றனர். அப்படிப் பாடப்படும் அந்த முருகப் பெருமான் தன்வயத்தம், தூய்மை, இயற்கை அறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், வன்மை, வரம்பிலா இன்பம் என்னும் எட்டு வகையான குணங்களை அதாவது "எண்குணத்தான்' எனும் பண்பினை உடையவன்...'' என்று நான் சொன்னேன்.
 "இந்தப் பாடலை நானும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். மேடைகளில்கூடச் சொல்லியிருக்கிறேனே ஆனால்... நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறதே'' என்று தமிழாசிரியர் வியப்போடு கூறினார்.
 "உண்மைதான் ஐயா. நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறுதான் நம் நாட்டு முனிவர்களும், ஞானிகளும் பல பாடல்களை நமக்காகப் பாடித் தந்திருக்கிறார்கள். நாம் அவற்றின் பொருள் புரிந்து பயன்படுத்தினால் பாடலுக்கும் பெருமை; நமக்கும் பயன்பாடு உண்டு.
 "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்று மாணிக்கவாசகர் கூறுவது இதைத்தான்'' என்றேன்.
 "ஐயா சொல்வது உண்மைதான். நாம் மருந்துக் கடையில் மருந்து, மாத்திரை வாங்கும்போது அதன் பயன்பாடு என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என அறிந்து சாப்பிட்டால்தான் பயன் கிடைக்கும்'' என்று என் கருத்தை வலியுறுத்தினார் தமிழ்மணி.

திருக்குறள் ராமையா
திருக்குறள் ராமையா


 "இந்தப் பாடலின் அருமையை உணர்ந்து, தன் நிலையை எண்ணி நம்பிக்கையோடு திருக்குறள் இராமையா சொல்லிக் கொண்டே வர வர அவருக்குள் இந்த அஷ்டாவதானக் கலை கை கூடி வந்ததாக அவரே சொல்லியிருக்கிறார். தன் முயற்சியும், இடைவிடாத பயிற்சியும், இரு சிறகுகளாக அமைய உலக அரங்கிற்குள் புகழ்பெறத் தொடங்கினார் திருக்குறள் அஷ்டாவதானி இராமையா. உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று அவர் செய்த சாதனைகள் பலப்பல. ஒரு சபையில் நடுவே அவர் அமர்ந்திருக்க, சுற்றிலும் நிற்பவர்கள் திருக்குறள் புத்தகத்தைத் தங்கள் கைகளில் வைத்தபடி அவரைச் சோதிக்க, அவரும் சற்றும் தயங்காது "சக்ரவியூகத்தில்' சுழன்று போர் செய்த அபிமன்யூவைப்போல, அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து வெற்றி கண்டார்'' என்று நான் விளக்கிச் சொன்னேன்.
 "ஆனால் அபிமன்யூ சக்கரவியூகத்திலிருந்து வெளிவர முடியவில்லை. அது துரோணரும் மற்றவரும் செய்த சூழ்ச்சி என்று சொல்வார்கள்'' என்று அபிமன்யூவிற்காகக் கவலைப்பட்டார் ஒரு பெரியவர்.
 "இந்த மந்திரப்பாட்டு எனக்கு முன்னமே தெரியாமப் போச்சே... சே'' என்று வருத்தப்பட்டார் அங்கிருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.
 "ஆமப்பா. நானும் எனது ஞாபகசக்தியைக் கூட்டணுங்கிற ஆசையோடு ஒரு யோசனை செஞ்சேன்.
 எங்க எதிர்த்த வீட்டுக்காரர் ஒரு மாத்திரையோட பேரைச் சொல்லி அதை வாங்கித் தினம் ரெண்டு வேளை சாப்பிடச் சொன்னார். நானும் அதே மாத்திரைய விடாம ஒரு மாசம் சாப்பிட்டேன்...''
 "அப்பிடிப் போடு... ஞாபக சக்தி கூடிப் போச்சா?'' என்று ஒருவர் ஆர்வமாய்க் கேட்க.
 "கூடிப்போச்சா... எல்லாம் போச்சு. அந்த மாத்திரை டப்பாவை எங்க வச்சம்னு ஞாபகம் வரலை, மறந்து போச்சு'' என்று சோகமாய்ச் சொல்ல எல்லோரும் சிரித்தோம்.
 "இன்னும் ஒரு செய்திகூட உண்டு. இப்போதும் திருக்குறள் இராமையாவின் மகன் "சோடச அவதானி'யாக, அதாவது 16 செயல்களை ஒரே நேரத்தில் செய்து வருபவராக விளங்கி வருகிறாராம்...'' என்று நான் இந்தத் தலைமுறையின் பெருமைகளைச் சொன்னேன்.
 "உண்மைதான் ஐயா. தன் கண்களைத் தானே பறித்துக்கொண்ட கூரத்தாழ்வாரும், பார்வை இடையிலே பறிபோனாலும், தன் முயற்சியால் பெருமை பெற்ற திருக்குறள் அஷ்டாவதானி இராமையாவும் இழந்ததை எண்ணி வருந்தாமல்... இனி வருவதை எண்ணி வாழ்ந்தார்களே அதனால்தான் அவர்கள் சாதனையாளர்களாக இன்றும் போற்றப்படுகிறார்கள்!'' என்று தமிழ்மணி பெருமையோடு சொன்னார்.
 "அந்தகக் கவி வீரராகவ முதலியாரும், மாம்பலக் கவிராயரும், கால்களற்ற ஒரு புலவர், கண்களற்ற இன்னொரு புலவர் என இரட்டைப் புலவர்களும் தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து தமிழ்க் கவிதைகளைப் பாடி மகிழ்ந்தனர்... என்று பார்க்கும்பொழுது உடல் குறைபாடு என்பது நம் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கும் என்று சொல்வது பிழை... என்பது எனது கருத்து'' என்றார் தமிழ்மணி உறுதியாக.
 "உண்மைதான். மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில் நமக்குக் குறைபாடு இருக்குமேயானால் அது பிழையோ அல்லது பழியோ ஆகாது. அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் ஒரே இடத்தில் சும்மா இருக்கிறோமே... அதுதான் பிழை, குற்றம் இதைத் திருவள்ளுவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் தெரியுமா?'' என்று நான் கேட்க, எல்லோரும் "திருக்குறள் கூகுளான' தமிழாசிரியரைப் பார்க்க, அவரும் உடனே... "அதிகாரம் 62 ஆள்வினையுடைமை குறள் 618

பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி''

எனச் சொல்ல...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com