குணதிசையும்... குடதிசையும்:

"எத்தனையோ அரிய செய்திகளை அறிந்த நீங்கள், உங்களுக்குள் பேசிக்கொண்டால் எங்களுக்கு யார் சொல்வார்கள்? இரவு முழுக்கப் பேச வேண்டும், கேட்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் நாங்கள் இருக்கிறோம்.
குணதிசையும்... குடதிசையும்:

உன்னோடு போட்டிபோடு! - 23

"மாதங்களைப் பருவ முறைப்படி ஆறாகப் பிரித்த நம் முன்னோர்கள் ஒரு நாளின் பொழுதினையும் ஆறாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் ஒன்றான மாலை நேரத்தைத்தான் மயக்கும் மாலையாகச் சொல்லியிருக்க வேண்டும்'' என்று தமிழைய்யா சொல்ல "நிறுத்துங்கள்'' என்ற சப்தம் கேட்டு நாங்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தோம்.
 "எத்தனையோ அரிய செய்திகளை அறிந்த நீங்கள், உங்களுக்குள் பேசிக்கொண்டால் எங்களுக்கு யார் சொல்வார்கள்? இரவு முழுக்கப் பேச வேண்டும், கேட்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் நாங்கள் இருக்கிறோம். அதனால் இப்போது முக்கியச் செய்தி எதுவும் பேச வேண்டாம்...'' என்று ஒரு பெரியவர் உரிமையோடு எங்களுக்குச் சொல்ல நாங்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டோம்.
 "ஐயா கோபப்பட வேண்டாம். நாங்கள் மாலை நேரம் எப்படி மயக்கத்தைத் தருகிறது என்பதைப் பற்றித்தான் பேசத் தொடங்கினோம். அங்கே கூடார  வேலைகள் நடக்கட்டும். நாம் இந்த மணல் மேட்டில் சென்று அமர்ந்து மாலை நேரக் காட்சியைக் கண்டு ரசிப்போம் வாருங்கள்'' என்று நான் கூப்பிட்டவுடன், எல்லாரும் நான் காட்டிய மணல் மேட்டைப் பார்த்தார்கள்.
 கடற்காற்று சுழன்று சுழன்று அடித்துக் கொண்டே இருப்பதால் கடல் மணல் துகள்கள் சிறு மேடு பள்ளங்களை உருவாக்குகின்றன. நான் சொன்ன மணல் மேடு வெண்மணல் குவியலாகக் கிடக்கச் சிறு குன்று போன்ற அந்த மணல் மேட்டை நாங்கள் அனைவரும் கால்கள் மணலில் புதைய மெதுவாக நடந்து சென்று அடைந்தோம்.
 "வாட் எ பியூட்டி, கிராண் மா. திஸ் பிளேஸ் இஸ் லுக்கிஸ் லைக் சுகர்ஹில்'' என்று மகிழ்ச்சியில் பேத்தி கூச்சலிட ஹெட்போன் பாட்டியும், "ஓ.கே. ஓ.கே'' என்று சொல்லியபடி, "ஐயா என் பேத்திக்கு மகிழ்ச்சி வந்தால் எல்லா மொழியிலும் பேசுவாள். இந்த மணல் மேட்டைப் பார்த்தால், "சீனிமலை' மாதிரி இருக்கிறதாம் அவளுக்கு'' என்று மொழிபெயர்த்துச் சொன்னார்.
 "சீனிமலையா? இரட்டமலை சீனிவாசன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்'' என்று தன் நினைவுக்கு வந்த செய்தியைப் பதிவு செய்தார் ஒரு பெரியவர்.
 "சிவபெருமான் அமர்ந்திருக்கும் கைலாயமலை இப்படிப் பனிமலையாகத்தானே இருக்கும்'' என்று கையெடுத்துக் கும்பிட்டார் தமிழையா.
 "அதுமட்டுமல்ல, இந்த மணல் மேட்டைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் துளசிச் செடிகள் உள்ளன. அந்த வாசனை வருகிறது. மூச்சை இழுத்துப் பாருங்கள்'' என்று நான் சொல்ல... எல்லோரும் பதஞ்சலி யோகத்தில் பிரணாயாம மூச்சுப் பயிற்சி செய்வதுபோல் ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து முகமகிழ்ச்சியோடு "அட ஆமாம்... காற்றெல்லாம் துளசி வாசனைதான்'' என்றார்கள்.
 "காடெல்லாம் பிச்சி... கரையெல்லாம் செண்பகப்பூ'' என்று ஒருவர் மகிழ்வோடு நாட்டுப்புறப் பாடலை முணுமுணுத்தார்.
 "வில்லிபாரதத்தைப் பாடிய வில்லிபுத்தூர் ஆழ்வார், "அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்தில்' இராமேஸ்வரம் பகுதிக்கு அர்ச்சுனன் வருவதைக் கூறும்போது இதேபோல ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறார். இராமேஸ்வரத்தில் எப்படி இப்படிக் காற்றில் துளசிவாசம் வருகிறது? என யோசித்த அர்ச்சுனன், ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கிறான். சென்ற யுகத்தில் இராமாவதாரத்தில் இராமன் துளசிமாலை அணிந்து இந்த வழியாகத்தானே இலங்கை சென்றிருக்க வேண்டும். சீதாபிராட்டியை மீட்டு வந்து இதே இடத்தில்தான் ஈஸ்வரனாகிய சிவபெருமானைப் பூசித்திருக்க வேண்டும். அதனால்தான் காற்றெல்லாம் இன்றும் துளசிவாசம் என்று அர்ச்சுனன் நினைத்தானாம்'' என்று நான் கூறி முடித்தேன்.
 உடனே,

 "கன்றியவெங் கரன் முதலோர் களத்தில் வீழ, 
கலிகுலநாயகன் இதயங்கலங்கி வீழ,
ஒன்றுபட மரம்ஏழும், உததிஏழும்,, ஊடுருவச் சரந்தொடுத்த ஒருவில்வீரன்
 துன்றிஎழுபது வெள்ளம் குரங்கின்சேனை 
சூழ் போத,வாய்த்த திருத்துணைவனோடும்
 சென்றவழி இன்றளவும் துளவம்நாறும் 
சேது,தரிசனம் செய்தான் திறன் வல்லோனே''

என்று  தமிழையா ராகத்தோடு பாடலைச் சொல்லி இராமேஸ்வரம் நோக்கிக் கரம் குவித்தார்.
 அவரது புலமைத்திறத்தைக் கண்டு நான் வியந்து நிற்க, மற்றவர்கள் எல்லோரும் அந்தப் பாடலுக்கான பொருள் தெரியாமல் மயங்கி நின்றார்கள்.
 "ஐயா, அர்ச்சுனன் மகாபாரதத்தில் வருபவன். ஸ்ரீராமரோ இராமாயணத்தில் வருபவர். மகாபாரதத்தில் இராமாயணமா?'' என்று ஒருவர் கேட்க,
 "எதுல எது வந்தா என்னய்யா? அவரென்ன அர்ச்சுனனும் இராமனும் சந்திச்சாங்கன்னா சொன்னாரு? இரு புராணத்தில வர்றதுங்க ஒரே இடத்தில் சந்திக்க முடியுமா? முதல்ல பாட்டுக்கு பொருள் என்னான்னு கேக்காம, நீங்க பாட்டுக்குப் பேசினா எப்படி?'' என்று படபடத்தார் மீசைக்காரர்.
 நான் உடனே இருவரையும் சமாதானம் செய்து விட்டுத் தமிழையா கூறிய வில்லிபாரதப் பாடலுக்குப் பொருள் சொல்லத் தொடங்கினேன்...
 "இராமபிரானது கூர்மையான அம்புகளால், இராவணனின் தம்பிகளான கரண் போன்றோர் போர்க்களத்தில் மடிந்து வீழ, குரங்குக் கூட்டத்தின் தலைவனாகிய வாலி இதயம் கலங்கி, இறந்து மண்ணில் விழ, ஏழுமரா மரங்களையும் ஏழு கடல்களையும் ஊடுருவிச் செல்லுமாறு செய்த இராமபிரான் எழுபது வெள்ளம் குரங்குச் சேனைகளோடும் தன் தம்பி இலக்குவனோடும், சென்றது இந்த இராமேஸ்வர வழிதான். அப்படிச் சென்ற அவனது பாதங்களில் பக்தர்கள் துளசியினை இட்டு வணங்கிய வாசனை இன்றளவும் மணக்கிறதே என்று அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை வந்தபோது எண்ணி மகிழ்ந்தானாம். அந்த துளசி வாசம் இன்றளவும் வீசுகிறதே என்று நாம் பேசிக்கொண்டே அதனை நுகர்ந்தோம்'' என்று சொல்லி முடித்தேன்.
 "அடேயப்பா, ஒரு பாட்டுக்குள் பாதி ராமாயணத்தை முடித்துவிட்டாரே வில்லிபுத்தூரார். கதைக்குள் கதை என்பது இதுதான் போலும்'' என்று தமிழ்மணி மகிழ்வோடு கூறினார்.
 மாலை மயங்க மேற்கில் சூரியன் செம்பரிதியாய்க் கடலில் மறையத் தொடங்கினான். அப்போது கடலின் கிழக்குப்புறத்தில் முழு நிலவாக பூரண சந்திரன் கிளம்பிய காட்சியைத் தீவின் நடுவே இருந்து பார்த்த, எங்களின் கண்கள் வியப்பில் விரிந்தன.
 "மார்வலஸ் அமேஸிங்' என்று கத்திக்கொண்டே பேத்தி தன் கேமராவில் கிழக்கும் மேற்குமாக மாறி மாறிப் படம் பிடிக்க, "என்ன அழகு! ஒருபக்கம் தங்கத்தோடு (மறையும் சூரியன்) மறுபக்கம் வெள்ளித்தோடு (உதிக்கும் சந்திரன்)'' என்று ஹெட்போன் பாட்டி தன் காதுகளைத் தடவியபடி மகிழ்ந்தார்.
 நான் மிக்க மகிழ்ச்சியோடு அவர்களைப் பார்த்து, "நீங்கள் மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படித்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன்.
 "இல்லை. ஆனால் எனக்குத் தமிழ் டீச்சர் ஒருத்தவங்க மணிமேகலையின்னு வந்தாங்க. அவங்க எல்லாப் பாடத்தையும் பாடியே நடத்துவாங்க'' என்று ஹெட்போன் பாட்டி சொல்லிவிட்டு, "ஏன் மணிமேகலையில் இந்த மாதிரிக் காட்சி வருகிறதா?'' என்று கேட்டார்கள்.
 "ஆம் அம்மா மணிமேகலையில், மணிமேகலா தெய்வம் தோன்றிய காதையில், மாலை நேர வருணனையில், சீத்தலைச்சாத்தனார் இதே காட்சியைக் காட்டுகிறார்'' என்று நான் சொல்லிவிட்டுத்  தமிழையாவைப் பார்த்தேன்.
 அவரும் சற்றும் தயங்காது

  "ஒரு பெருங் கோவில் திருமுக வாட்டி
   குணதிசை மருங்கில்  நாள்முதிர் மதியமும்
   குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்
   வெள்ளி வெண் தோட்டொடு பொற்தோடாக
   எள்ளறு திருமுகம் பொலிய''..

என்று மணிமேகலை வரிகளை எடுத்துக் கூறினார்.
 "பார்த்தீர்களா, உங்கள் மணிமேகலை டீச்சர், மணிமேகலைக் காப்பியத்தை உங்களுக்குப் பாடிச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.. அது உங்கள் மனதில் நின்றிருக்க வேண்டும்'' என்று நான் கூறினேன்.
 "சரி இதில் கிழக்கே சந்திரன், மேற்கே சூரியன் என்று எங்கே வருகிறது?'' என்று ஒருவர் கேட்டார்.
 
 "குணதிசை - என்பது கிழக்குதிசை
  முதிர்மதியம் - என்பது முழு நிலவு
  குடதிசை - என்பது மேற்கு திசை
  சென்றுவீழ்கதிர் என்பது சூரியன்
 
இவை இரண்டும் பூமிப்பெண்ணின் காதுகளில் வெள்ளித் தோடாகவும், தங்கத் தோடாகவும் ஜொலிப்பதாக இந்தப் பாடல் சொல்கிறது'' என்றார் தமிழையா.
 அப்போது மீசைக்காரர் அதிர்ச்சியாக ஒரு கேள்வியைக் கேட்டார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com