மாத்தி யோசி!..

ஹி இஸ் ஆன் என்சைக்ளோபீடியா (he is an encyclopaedia)''  என்று ஹெட்போன் பாட்டி அந்த மீனவரைப் பெருமையோடு பாராட்டினார்.
மாத்தி யோசி!..

உன்னோடு போட்டிபோடு- 43

""ஹி இஸ் ஆன் என்சைக்ளோபீடியா (he is an encyclopaedia)''  என்று ஹெட்போன் பாட்டி அந்த மீனவரைப் பெருமையோடு பாராட்டினார்.

""எனக்கு  எந்த  சைக்கிளும் ஓட்டத் தெரியாதுங்களே!''  என்று மீனவர் வெட்கத்தோடு சொல்ல எல்லோரும் சிரித்தோம். 

""ஐயா, நல்ல செய்திகளப் பேசிக்கிட்டு இருக்கோம்.  இந்தப் பேச்சுவாக்குல நம்ம தமிழையா ரோட்டடின்னு என்னமோ சொன்னாரே? அதக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லச் சொல்லுங்க'' என்று மீசைக்காரர் கேட்டவுடன், தமிழையா சத்தமாகச் சிரித்துவிட்டு,  ""ஐயா நான் சொன்னது ரோட்டடியோ, கிணத்தடியோ அல்ல;  ஒரு பாட்டோட கடைசி அடி. அதுக்குப் பேரு தமிழ்ல ஈற்றடி. இப்படிக் கடைசி அடியக் கொடுத்து முழுப்பாட்ட பாடுமாறு கேட்பாங்க.  இந்தப் போட்டியில பலபேரு கலந்துக்கிடுவாங்க.  சிலபேரு பரிசு பெறுவாங்க'' என்று விளக்கம் கொடுத்தார் தமிழையா.

அப்போது ஓர்  இளைஞர்,  ""இப்படியெல்லாம் போட்டி வைப்பது யாருக்காக? இதனால் என்ன பயன்?  ஒரு வேளை, பொழுதுபோகாமல் இதெல்லாம் செய்திருப்பாங்களோ?''  என்று கேட்டார்.  உடனே தமிழ்மணி,  ""தம்பி அப்படி சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், நீங்கள் மாநில, மத்திய அரசின் (U.P.S.C)  போட்டித் தேர்வுகளில்   (Competitive exams) பங்கு பெற்றிருக்கிறீர்களா, க்ரூப்-1, க்ரூப்-2 தேர்வுகளுக்குத் தயாராகி இருக்கிறீர்களா? I.A.S. தேர்வில் பங்குபெறும் எண்ணமுண்டா?''  என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டார். 

 முதலில் கேள்வி கேட்ட அந்த இளைஞர் சற்றே தடுமாறிப் போனார்.  பின்  ""சார் நீங்கள் சொன்ன அந்தத் தேர்வுகளுக்கு நான் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறேன். இதோ என்னுடன் வந்திருக்கிற கலைக்குழு நண்பர்களில் சிலர் க்ரூப்-1 தேர்வில் தேர்வாகியிருக்கிறார்கள்.  நம் கோமாளி நண்பர் இருக்கிறாரே இவர் ஐ.அ.ந.  இல் (முதல் நிலைத் தேர்வு (Preliminary exam) பாஸ் செய்திருக்கிறார் தெரியுமா? என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு நானெல்லாம் திடுக்கிட்டுப் போய் மகிழ்ச்சியோடுக் கைதட்டி கோமாளி நண்பருக்கு வணக்கம்  சொன்னோம். அவரும் சட்டென்று தலையிலிருந்த தொப்பியை எடுத்து இடுப்பை வளைத்து அத்தனை பேருக்கும் வணக்கம் போட்டார். அந்த இளைஞர் சொன்ன வார்த்தையால் திணறிப் போன  தமிழ்மணி, ""மன்னிக்க வேண்டும் தோழர்களே,  உங்களையெல்லாம் நாங்கள் மிகச் சாதாரணமாக நினைத்து விட்டோம். வருங்கால இந்தியாவை தாங்கும் தூண்களே நீங்கள்தான், வெரி ஸôரி'' என்று அவர் கவலையோடு சொன்னார். 

உடனே சில இளைஞர்கள் ஓடிவந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு, ""சார் நீங்கள் எவ்வளவு பெரியவர்? ஐ.டி. பீஃல்டில்  தொழில் முனைவோராக (entrepreneur) இருந்து அமெரிக்காவில் லட்சக்கணக்கான டாலர்களில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்த நீங்கள் அந்த வேலைகளை அவர்களிடமே ஒப்படைத்து விட்டு எங்களைப் போன்ற இளைஞர்களுக்காக தமிழகத்தில் வந்து கடற்கரை கிராமத்தில் பணி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முன்னால் நாங்கள் எம்மாத்திரம்?'' என்று பணிவோடு கூறினார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நானும், கடல்சார் பொறியியல் துறைப் பேராசிரியரும், தமிழையாவும், ஹெட்போன் பாட்டியும் நெகிழ்ந்து போய் விட்டோம்.  

""சரி, அந்தத் தம்பி  கேட்ட அதே கேள்வியை நான் கேட்கிறேன். நீங்க சொன்ன பரீட்சைகளுக்கும், தமிழ் கவிதையின் ஈற்றடிக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டார் மீசைக்காரர்.

இப்போது தமிழையா, ""ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் போட்டித் தேர்வுகள் என்பது  பெரும்பாலும் மனப்பாடம் செய்து எழுதுவது அன்று. கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்கும் மாணவர் கற்பனைத் திறன் மிகுந்தவராகவும், விடையை ஊகித்து அறியும் (assume) தன்மையுடையவராகவும்  இருந்தால்தான் தேர்வில் வெற்றி பெறமுடியும், இது உங்களுக்கே தெரியும். இதுபோலக் கவிதை என்பது படைப்பு. பாட்டைக், கவிதையை, நாமாக எழுதுவது ஒருவகை என்றால் தலைப்புக் கொடுத்தோ, பாடலின் தலைப்புக்கு ஏற்பவோ, பாடலின் வரிக்கு ஏற்பவோ கவிதை எழுதப் பழக்குவதும் I.A.S.தேர்வுக்கு தயார் செய்வது போல ஒன்றுதான். இப்படிப் பாடல் இயற்றவும் தனித்திறன்  வேண்டும்'' என்று முடித்தார்.

உடனே நானும், ""படிப்பதும், மனப்பாடம் செய்வதும் மட்டும் கல்வியாகாது. கற்ற கல்வியைச் சந்தர்ப்பத்திற்கு (Presence of mind) நேரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தத் தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். நான் ஒரு உதாரணம்  சொல்லுகிறேன் பாருங்கள். ஐ.அ.ந. தேர்வு போன்ற தேர்வு ஒன்றில் எழுத்துத் தேர்விற்குப் பிறகு வாய்மொழித் தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தேர்வு நடந்த இடம் மூன்றாவது மாடி, மேலே செல்வதற்கு லிஃப்ட் போன்ற வசதிகள் இல்லை. இப்போது அந்தத் தேர்வாளர்களில் ஒருவர் வந்த பையனிடம் ஒரு கேள்வி கேட்டாராம். அதைக் கேட்டு அந்த மாணவர் திகைத்துப் போனாராம். அது என்ன கேள்வி தெரியுமா?'' என்று நான் கேட்டு நிறுத்தினேன். 

""ஆப்பிரிக்காவில் ஓடும் நதியின் பெயர் என்ன? என்று கேட்டிருப்பார்'' என்று ஒருவரும்,
""எகிப்திய பிரமிடுகளில் உள்ள மம்மிகளின் வயது என்ன?'' என்று ஒருவரும் சொல்ல,
""இதெல்லாம் ஈசியான கொஸ்டின்,  தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலுக்குப் பிறகு எத்தனை முதல்வர்கள் ஆண்டார்கள்? என்று கேட்டிருக்க வேண்டும்'' என்று ஒருவர் சொல்ல எல்லோரும் சிரித்தோம்.

நான், ""இல்லை, இல்லை'' என்று சொல்லிக்கொண்டே வந்தேன். சற்று நேரம் எல்லோரும் மெüனமாய் இருக்கவே, நானே தொடங்கினேன், ""அவர் அந்த மாணவரிடம் பாடத்திட்டத்தில் இருந்தெல்லாம் கேள்வி கேட்கவில்லை,  இப்போது மூன்றாவது மாடிக்கு வந்தீர்களே, நீங்கள் ஏறிவந்த படிகள் எத்தனை?'' என்று கேட்டாராம் என்று நான்  சொன்னவுடன்,

""அப்படிப் போடுங்க அருவாள!  இப்படிக் கேட்டாதான் ஒரு பயலும் பாஸôக மாட்டான், இதுக்கும் அந்த வேலைக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கோபத்தோடு கேட்டார் மீசைக்காரர். இளைஞர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள், ஹெட்போன் பாட்டியும், பேத்தியும் வழக்கப்படி கலந்துரையாடினார்கள். 

""சரி, அவர் இன்டர்வியூக்குப் போற அவசரத்துல நாலு நாலு படியா தாண்டிப் போயிருந்தாருன்னா எப்படி தான் ஏறிவந்த படிகளை எண்ணிப் பார்க்க முடியும்?'' என்று ஒரு பெரியவர் கவலைப்பட்டார். அப்போது தமிழ்மணி, ""ஐயா நீங்கள் சொன்ன இந்தக் கேள்விக்கு எந்த மாணவராவது சரியாக விடை சொன்னாரா?'' என்று கேட்டார்.

""சொன்னாரே... அதை இங்க யாராவது சொன்னா நல்லாயிருக்குமே'' என்று நான் கேட்டேன். உடனே கோமாளி ""ஐ நோ, ஐயா. வெரி சிம்ஃபிள்.  ஈஸி..''  என்று சொல்லி அவர் நிறுத்த, எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

""அவரு என்ன கேள்வி கேட்டாரு? மூணாவது மாடி வரைக்கும் ஏறி வந்த படிகள் எத்தனை? இதானே  கேள்வி, அவர் இப்படித்தான் சொல்லியிருக்கணும், நான் இறங்கிப் போறப்ப எத்தனை படிகள் இருக்கின்றனவோ, அத்தனை படிகள்தான் நான் ஏறிவந்த போதும் இருந்திருக்க வேண்டும். சரியா?''  என்று கோமாளி கேட்டவுடன்,

""சபாஷ்''  என்று நான் அவரைப் பாராட்டிவிட்டு ""உங்கள் உண்மையான பெயர் என்ன?''  என்று கோமாளியிடம் கேட்டேன். அவரும் சிரித்தபடி, ""சந்திரன். சந்துருன்னு கூப்பிடுவாங்க'' என்றார் அமைதியாக.

நான் உடனே ""சந்துரு I.A.S.'' என்று சத்தமாகச் சொல்லி வாழ்த்த எல்லோரும் ""வாழ்க, வாழ்க'' என்று வழிமொழிந்தார்கள்.

""பார்த்தீர்களா, நம்முடைய பாடத்திட்டத்தில் அவர் கேட்ட கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. அந்த இடத்திற்கு ஏற்றவாறு யாரும் சிந்திக்காத விஷயத்தை சற்றே மாற்றி யோசித்தால் எந்தக் கேள்விக்கும் விடை கண்டுபிடித்து விடலாம்'' என்று நான் சொன்னேன். இப்போது தமிழையாவும், ""ஐயா சொல்வது உண்மைதான், நம் முன்னோர்களான ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களைச் சோதித்துப் பார்க்கும்போது அவர்களின் பல்திறன் (Versatile) அறிவையும் சோதித்துப் பார்ப்பார்களாம். பாட்டெழுதும் கவிஞர்களையும் அவர்களின் முழுத்திறமையை  வெளிக்கொண்டுவர, அவர்களை உலகம் அறியுமாறு செய்ய பாடலின் கருத்தையோ?, பாடலுக்கான கருவையோ?, தலைப்பையோ? கடைசி வரியையோ? கொடுத்து அந்தப் பாடலை நிறைவு செய்யச் சொல்வார்களாம். அதன்படி பார்த்தால் இந்தப் போட்டிகளில் முதலிடத்திலிருந்து வெற்றி பெற்றிருப்பவர் நம் காளமேகப் புலவர்தான்'' என்றார் தமிழையா. 
உடனே ஹெட்போன் பாட்டியும், 

""சிலேடைப் பாடல்களால் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவாரே அந்தக் காளமேகமா?'' என்று மகிழ்ச்சியோடு கேட்டார்.

""ஆம் அவரேதான், பாம்புக்கும், வாழைப்பழத்திற்கும், கண்ணாடிக்கும், அரசனுக்கும் என்று பல பொருள்களை சிலேடையால் ஒப்பிட்டவர். அவர் பாட்டில் பூனைக்கு ஆறுகால் என விடுகதையைத் தொடங்கி,

 "கண்டதுண்டு  கேட்டதில்லை காண்' என்று ஒரு பாடலை ஈற்றடியாய் முடித்திருப்பார். எங்கே இங்க யாராவது இந்த ஈற்றடிப் பாட்டை முழுமையாகச் சொல்லமுடியுமா?'' என்று கேட்டார் தமிழையா.

""பூனைக்கு ஆறுகாலா? அப்ப ஆனைக்கு அறுபது காலா?...''  என்று கோமாளி தொடங்க...
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com