கதை... கதைக்குள்ளே கதை!

மேகதூதம் போன்ற காவியங்களைப் படைத்த காளிதாசர் உஜ்ஜைனியை ஆண்ட போஜராஜ மன்னரின் நெருங்கிய நண்பர், அவைக்களப் புலவர், நவரத்தினங்களில் ஒருவர்''
கதை... கதைக்குள்ளே கதை!

உன்னோடு போட்டிபோடு! - 45

"ஓஹோ, பெண்களின் முகத்தை பூக்களோடு ஒப்பிட்டு சொல்லும் வழக்கம் அக்காலத்தில் இருந்தே இருக்கிறதா? நம் கவியரசு கண்ணதாசனும் சொல்லியிருப்பாரே'' என்று தமிழ்மணி கேட்க,  
"கண்ணதாசனுக்கு முன்பே வடமொழியில் மகா காவியங்களைப் படைத்த காளிதாசனும் இதேபோன்ற உவமையைப் பயன்படுத்தியிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பாடல் எனக்கு நினைவில் இல்லையே'' என்று நான் சொன்னேன்.  
"தமிழ்பாட்டே புரியாம இருக்குறப்ப வடமொழிப் பாட்டும் வந்துட்டா நாம எப்படித்தான் அத புரிஞ்சுக்கிறது? இப்பத்தான் ஹிந்திப் பாட்டுக்கு ஆடிட்டு இந்தப் பிள்ளைங்க உட்கார்ந்திருக்குங்க, இனி அந்தப் பாட்ட பாடப் போறது யாரு? அதுக்கு பொருள் சொல்லப்போறது யாருன்னு தெரியலையே?'' என்று ஒரு பெரியவர் கவலைப்பட்டார். 
அப்போது பேத்தி, "டோன்ட் ஒர்ரி, மை கிரான்ட்மா நோஸ் (Knows) போஃர் லாங்வேஜஸ் டமிழ், சான்ஸ்கிரிட், ஹிந்தி அண்ட் இங்கிலீஷ், கிரான்ட்மா டெல் தெம் தெட் சான்ஸ்கிரிட் ஸ்லோகா'' என்று பேத்தி பொரிந்து தள்ள ஹெட்போன் பாட்டியும் பெருமையோடும், புன்னகையோடும், "ஓகே டார்லிங், ஜஸ்ட் வெயிட்'' என்று பேத்தியைத் தட்டிக் கொடுத்தார்.  
"இந்த ரெண்டு பேரு கூட நான் ஒருவாரம் இருந்தா போதும் இங்கிலாந்துல வேலைக்குப் போயிடுவேன்'' என்று ஒருவர் மகிழ்ச்சியோடு சொல்லியபடி அவர்களை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.  
உடனே தமிழையா ஹெட்போன் பாட்டியைப் பார்த்து, "அம்மா நான் சொன்ன தமிழ்ப்பாட்டுக்கு ஏற்ற வடமொழிப்பாட்டு மகாகவி காளிதாஸரால் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நானும் அறிவேன். ஆனால் எனக்கும் நினைவுக்கு வரவில்லையே'' என்றார். ஹெட்போன் பாட்டி சட்டென்று எழுந்து பிரசங்கம் செய்பவரைப் போலப் பேசத் தொடங்க, அங்கிருந்த ஒரு பெரியவர் பாட்டியைக் காட்டிலும் வேகமாக எழுந்து,  
"தாயே, நீங்க எந்த மொழியில எதச் சொல்ல வந்தாலும் அத தமிழ் மொழியிலேயே சொல்லிட்டீங்கன்னா என் ஆத்மா குளிரும்'' என்று கேட்டுக் கொண்டார். 
உடனே பாட்டியும் சிரித்துவிட்டு,  "கவலைப்படாதீர்கள் நானும் செந்தமிழ் நாட்டுச் சேலை கட்டிய தமிழச்சிதான். என் பேத்திக்காகத்தான் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசுவேன், மலருக்குள் பூத்த மலர்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். சாகுந்தலம், குமாரசம்பவம், விக்கிரமஊர்வசியம், மாளவிகாக்கினிமித்திரம், இரகுவம்சம், மேகதூதம் போன்ற காவியங்களைப் படைத்த காளிதாசர் உஜ்ஜைனியை ஆண்ட போஜராஜ மன்னரின் நெருங்கிய நண்பர், அவைக்களப் புலவர், நவரத்தினங்களில் ஒருவர்'' என்று ஹெட்போன் பாட்டி சொல்லிக்கொண்டே போக, 
"இவுக சொல்லி முடிக்கிறதுக்குள்ள அந்த மலரெல்லாம் வாடிப் போயிடும் போல இருக்கே'' என்று கோமாளி சொல்ல,  
"ஓகே, ஷார்ட்டா சொல்றேன், 
குஸ மே குஸீமோத்பத்தி: சரூயதே நச தருச்யதே
பாலே தவமுகாம் போஜே நயனேந்தீவரத்வயம்
என்று ஹெட்போன் பாட்டி ஒரு ஸ்லோகத்தைச் சொல்ல, அங்கு பெரும் மெளனம் நிலவியது. 
"யாரும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் இந்த ஸ்லோகத்துக்குப் பொருள் சொல்லுகிறேன்  கேளுங்கள்.
"மலரில் மலர்கள் மலர்ந்திருக்கின்றன'  என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர,  பார்த்ததில்லை. 
இளம்பெண்ணே உனது முகமாகிய தாமரையில் கண்களாகிய இரண்டு நீலநிற அல்லி மலர்கள் மலர்ந்துள்ளன என்பதே இதற்குப் பொருள்'' என்று ஹெட்போன் பாட்டி சொல்லி முடித்தார். 
"இத வடமொழியில எழுதுனது யாரு?'' என்று மீசைக்காரர் கேட்டார்.
"போஜப் பிரபந்தம்  என்ற நூலில் பல்லாட சேனர் எனும் புலவர் பாடியிருக்கிறார். இதற்குப் பின்னே ஒரு கதை இருக்கிறது'' என்று ஹெட்போன் பாட்டி சொல்லி நிறுத்தினார்.  
"ஆஹா, இந்த உலகத்தில் கதைகள் மட்டும் இல்லையென்று சொன்னால் மனிதர்கள் வாழவே முடியாது என்று நினைக்கிறேன். கதை, கதை, கதைக்குள்ளே  கதை, அதை நீங்க சொல்லுங்க'' என்று கோமாளி உற்சாகத்தோடு ஹெட்போன் பாட்டிக்குக் கைகொடுத்தார். 
"நம்ம கோமாளி சார் சொல்றது உண்மைதான். தன்னுடைய தாத்தா, பாட்டி மடியில கதை கேட்டதுனாலதான் தான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறதா இப்ப ஒருத்தர் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்படிச் சொன்ன அந்த பிரபலமான மனிதர் யார் தெரியுமா?'' என்று தமிழ்மணி கேட்க,   
"மிஸ்டர். சுந்தர் பிச்சை சி.இ.ஓ. ஆஃப் கூகுள் (C.E.O. of Google) ஆம் ஐ கரெக்ட்?''  என்று பேத்தி உற்சாகமாய் கேட்டவுடன், "நீ எப்பவுமே கரெக்ட்தான் கண்ணு'' என்று பேத்தியைக் கொஞ்சினார் ஹெட்போன் பாட்டி.  
"அம்மா... இந்தக் கதையில.. அந்தக் கதைய.. விட்றாதீங்க''   என்று மீசைக்காரர் கவலையோடு கூறினார். 
"நோ நோ, நா மறக்க மாட்டேன். நண்பர்களாயிருந்த போஜராஜனுக்கும், கவிஞராகிய காளிதாசனுக்கும் இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்பட தன் நாட்டை விட்டு வெளியேறுமாறு காளிதாசனுக்குக் கட்டளை இட்டாராம் போஜமன்னர். காளிதாசரும் மாறுவேடம் பூண்டு வேறு நாட்டில் ஒரு வாழ்ந்து வந்தாராம். அச்சமயத்தில் போஜராஜன் தான் எழுதிய " ராமாயணசம்பு'  எனும் காவியத்தை காளிதாசனின் வாழ்த்தோடு வெளியிட விரும்பினானாம். ஆனால் காளிதாசன் இருக்குமிடத்தை போஜராஜனால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அவன் ஒரு யுக்தி செய்தானாம். அது என்ன யுக்தி தெரியுமா? என்று ஹெட்போன் பாட்டி கேட்டு நிறுத்தினார். 
"ஒற்றர் படையை வைத்து காளிதாசரை தேடச் சொல்லியிருப்பார்'' என்றார் தமிழ்மணி.
"காளிதாசர் ஓவியத்தை ஊரெல்லாம் ஒட்டி கண்டுபிடித்தவருக்குப் பரிசு என்று அறிவித்திருப்பார்'' என்று மீசைக்காரர் சொன்னார். அப்போது தமிழையா, "இல்லை இல்லை போஜராஜன் கவிஞன், காளிதாசனும் கவிஞன். அதனால் ஏதாவது ஒரு பாடலின் இரண்டு வரிகளை இயற்றி அதை முடிப்பவர்களுக்குப் பரிசு என்று அறிவித்திருப்பார்'' என்று சொன்னார்.
உடனே ஹெட்போன் பாட்டி ஆச்சரியத்தோடு, "யு ஆர் எக்ஸôக்ட்லி கரெக்ட்'' (you are exactly correct) என்று சத்தமாகச் சொல்லித் தமிழையாவைப் பாராட்டி விட்டுப், "போஜராஜன் தான் எழுதிய இரண்டு வரிப்பாட்டை, ஸ்லோகத்தை யார் முடித்துத் தருகிறார்களோ அவர்களுக்குத் தன் ராஜ்யத்தில் பாதியைத் தருவதாகவும் அறிவித்தானாம். ஏனென்றால் இந்தப் பாடலைப் பூர்த்தி  செய்ய காளிதாசனைத் தவிர வேறு யாராலும் முடியாது. அதன் மூலம் காளிதாசன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம் என மன்னன் முடிவு செய்தானாம்'' என்று ஹெட்போன் பாட்டி சொல்லிக் கொண்டு வர, "சே, பேசாம அந்தக் காலத்துல பொறந்திருக்கலாம், யாரு வேணாலும் நாட்ட யாருக்கு வேணாலும் பிரிச்சுக் கொடுக்குறாங்களே! எனக்கு அந்தப் பாட்டு  தெரிஞ்சிருந்தா பாட்டெழுதி நாட்ட வாங்கியிருப்பேன்'' என்று கோமாளி சற்றே வருத்தத்தோடு சொன்னார்.
"ஏன் இப்போதும்தான் யார் யாருக்கோ ஓட்டப் போட்டு நாட்டை யார் யார் கையிலேயோ கொடுத்திட்டீங்களே, எல்லாம் ஒண்ணுதான்'' என்று சோகத்தோடு சொன்னார் ஒரு பெரியவர். விட்ட இடத்தில் தொடர்ந்தார் ஹெட்போன் பாட்டி, "மன்னனின் அந்த அறிவிப்பைக் கேட்டாள் நாட்டியக்காரி ஒருத்தி. அந்த ஸ்லோகத்தைத் தன் வீட்டுச் சுவற்றில் எழுதி வைத்திருந்தாளாம், அவள் வீட்டில் தங்கியிருந்த காளிதாசர் இந்தப் பாட்டுக்கான பின்னணி ஏதும் தெரியாமல் அதை முடித்து எழுதி வைத்தாராம். பேராசை கொண்ட அந்த நாட்டியக்காரி நாட்டில் பாதியைத் தானே அடைய வேண்டுமென்று நினைத்து ஒரு சூழ்ச்சி செய்தாளாம். பாடலை எழுதிய காளிதாசரைத் தாக்கி ஒரு குழியில் தள்ளிவிட்டு விட்டு அந்தப் பாடலை எடுத்துக்கொண்டு போய் மன்னனிடம் கொடுத்தாளாம்'' என்று ஹெட்போன் பாட்டி விறுவிறுப்பாகச் சொல்ல,
"இந்தக் காலத்துல வர்ற சீரியல் வில்லியான  "தெய்வமகள்' காயத்ரி மாதிரில்ல இருக்கா அந்த நாட்டியக்காரி'' என்று ஒரு  பெரியவர் ஆதங்கத்தோடு சொன்னார். 
"இந்த வயசான காலத்துல இராமாயணம், மகாபாரதம், தமிழ்க்கடவுள் முருகன் இது மாதிரி சீரியலைப் பார்க்காம, வாணி ராணி, நந்தினி, பிக்பாஸ் ஓவியா இப்படில்ல பார்த்துக்கிட்டு இருக்காரு இவரு'' என்று கோமாளி செல்லமாக அவர் கன்னத்தில் தட்ட, எல்லோரும் சிரித்தார்கள்.
"அந்த ஸ்லோகத்தின் அருமையைப் புரிந்து கொண்ட மன்னன் அந்த நாட்டியக்காரியை மிரட்டி காளிதாசன் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டு காளிதாசரைக் காப்பாற்றி தனது ராமாயணசம்பு காவியத்தை அவருக்குப் படித்துக்காட்டி வெளியிட்டாராம்'' என்று ஹெட்போன் பாட்டி சொல்லி முடித்தார். 
"எப்படி அம்மா, இப்படி நாங்கள் கேட்டவுடன் உங்களால் சொல்ல முடிந்தது'' என்று தமிழையா கேட்க, "நீங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே எங்களுடைய குடும்ப நண்பர்  சங்கர சீதாராமனிடம் குறுஞ்செய்தியில் இது பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன விளக்கம் தான் இது'' என்று ஹெட்போன் பாட்டி பெருமிதமாகச் சொல்ல,  "எல்லோரும் அருட்செல்வர் வாழ்க! வாழ்க!' என்று வாழ்த்த, ஒரு மோட்டார் படகு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு கடற்கரையோரம் விரைந்து வந்தது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com