ஆஸ்திரேலியர்களை தேநீர் காதலில் விழ வைத்த பெண்!

"வீட்டில் எல்லாரும் சட்டம் படித்து விட்டு சாயா ஆத்தறியே'' என்று கோபப்பட்டார்கள். "தேநீர் தயாரிப்பவர்களும் சாதிக்க முடியும் என்று காட்டவே "சாய் வாலி'யைத் தொடங்கினேன்'' என்கிறார் உப்மா.
ஆஸ்திரேலியர்களை தேநீர் காதலில் விழ வைத்த பெண்!

தேநீரை விரும்பாதவர் யார்?

தேநீரின் மணம், சுவை, தேநீரை சுடச்சுட அருந்தினால் கிடைக்கும் புத்துணர்வு... இவைதான் மக்களை தேநீர் பக்கம் இழுக்கின்றன. தேநீர் தயாரிப்பதை ஒரு கலையாக சிலர் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் 'உப்மா விர்தி' வித்தியாசமானவர். இவர் தயாரிக்கும் தேநீரை அருந்த ஆஸ்திரேலியாவில் ஒரு கூட்டமே காத்து நிற்கிறது. இருபத்தாறு வயதாகும் உப்மா இந்தியாவில், அவர் வீட்டில் போடப் பழகிய தேநீர், ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு பெயரைத் தேடித்தரும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. சட்டம் படித்த உப்மா பகுதிநேர தேநீர் தயாரிப்பாளர், விற்பனையாளராக மாறியிருக்கிறார். வழக்கறிஞராக பணிபுரிந்தால் கிடைக்கும் புகழைவிட அதிகமாகவே உப்மா பிரபலமாகியிருக்கிறார். இதனையொட்டி இந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் வணிக மகளிர்மணியாகத் (Business  Woman) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். "சாய் வாலி' (தேநீர் பெண்) என்ற பெயரில் தேநீர் கடை நடத்தி வரும் உப்மா தனது தொழில் மாற்றம், தீவிர தேநீர் ரசிகையானது குறித்து சொல்கிறார்:
"பொழுது போக்கிற்காகத் தேநீர் தயாரிக்கத் தொடங்கினேன், ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்ததால் பகுதி நேரத் தொழிலாக தேநீர் தயாரிப்பை ஏற்றுக் கொண்டேன். தேநீர் தயாரிப்பில் மூழ்கிப் போனேன்.
நான் சண்டிகரில் பிறந்து வளர்ந்தவள். எனது இந்த தேநீர் வெற்றிக்கு காரணம் என் தாத்தாதான். அவர் ஓர் ஆயுர்வேத டாக்டர். மருத்துவரானாலும் தேநீரை மிகச் சுவையாகத் தயாரிப்பார். தேநீர் தயாரிப்பது ஒரு கலை என்று அடிக்கடி சொல்வார். அதுவும், தேநீரில் மசாலா வாசனைப் பொருட்கள், மூலிகைகளைப் பக்குவமாகக் கலந்து ஆயுர்வேத தேநீர் தயாரிப்பார். அதன் மணமும் சுவையும் மனதை மட்டுமல்ல உடலையும் சிலிர்க்க வைக்கும். தாத்தா அவர் கைப் பக்குவத்தை எனக்குச் சொல்லித் தந்தார். தேநீர் தயாரிப்பது எனக்கு ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது.
உறவினர் வீடுகளுக்குப் போகும் போது நான் தான் தேநீர் போடுவேன் என்று நேரே சமையலறைக்குச் சென்று விடுவேன். வீட்டிலும் ஸ்பெஷல் டீ போடணும்னா என்னைத்தான் அழைப்பார்கள். என் சகோதரரின் திருமணத்தின் போது விருந்தினர்களுக்கு எந்த ஆயாசமும் இன்றி ஆயிரம் கோப்பை தேநீர் தயாரித்து அநாயசமாகப் பரிமாறினேன். சுவையான தேநீர் என்று பாராட்டு கிடைத்தது. மேல் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவிற்கு வந்த போதும் நண்பர்களுக்கு தேநீர் தயாரித்து வழங்கி அசத்தினேன்.
தாத்தாவின் கைப் பக்குவத்தை இங்கே ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதும் மக்கள் " தேநீர் காதலில்' விழுந்து விட்டார்கள். ஒரு கோப்பை தேநீர் குடித்து முடித்ததும் "ஒன் கப் மோர்'' என்று மீண்டும் கேட்கிறார்கள். இந்திய மூலிகையும், மசாலா பொருள்களும் சேர்ந்து "சாய் வாலி' தேநீர் சிட்னியில் ஒரு பரபரப்பு விஷயமாகி விட்டது. மெல்பர்ன் தேநீர் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டேன்.
சின்னதாகத் தொடங்கிய கடை, மக்கள் ஆதரவால் இரண்டு ஆண்டுகளில் நன்கு வளர்ந்து விட்டது. ஆன்லைன் விற்பனை கூட தொடங்கியுள்ளேன். வித விதமான டீ தூள்கள், இலைத் துகள்கள், தேநீர் கப்புகள், தேநீர் வடிகட்டி, தேநீரில் தயாரித்த சாக்லெட்டுகள் போன்றவற்றை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறேன். "தேநீர் கலை' என்ற பெயரில் சுவையான ஆயுர்வேத தேநீர் தயாரிப்பது எப்படி? என்று வகுப்புகள் எடுக்கிறேன். இந்த முயற்சி, உழைப்புதான் இந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் "வணிக மகளிர்மணி' என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது.
தேநீர் தயாரிப்பில் வெற்றி பெற்றாலும் வழக்கறிஞர் தொழிலை விடவில்லை.
"வீட்டில் எல்லாரும் சட்டம் படித்து விட்டு சாயா ஆத்தறியே'' என்று கோபப்பட்டார்கள். "தேநீர் தயாரிப்பவர்களும் சாதிக்க முடியும் என்று காட்டவே "சாய் வாலி'யைத் தொடங்கினேன்'' என்கிறார் உப்மா.
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com