வெண்ணிலாவின் ஆற்றுவழிப் பயணம்!

நீ காயப்பட்டிருக்கிறாய். காயம் என்பது வெறும் காயம். இந்தக் காயத்துக்கு நீ கற்பு என்னும் சாயத்தைப் பூசிப் பார்க்க வேண்டாம். அந்தக் காயத்தை நமக்கான திருமணம் என்கிற மருந்தினால் சரிபடுத்திக்கொள்ளலாம்.
வெண்ணிலாவின் ஆற்றுவழிப் பயணம்!

வெண்ணிலாவும் கதிரவனும் வேலூர் மோர்தானா அணைக்கு அருகில் பேருந்திலிருந்து இறங்கினார்கள். கதிரவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களில் ஒருவன். வெண்ணிலா அவனுக்குத் தூரத்துச் சொந்தம். விடுமுறையில் வந்திருக்கிறாள். சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள்.

பத்து மணிப் பகலிலும் சில்லென்று வீசிய காற்று அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கிறோம் என்பதை மறந்து பள்ளி மாணவிபோல் அணையை நோக்கி ஓடினாள்.

வடகிழக்குப் பருவ மழை இந்தமுறை பொய்க்கவில்லை. 6 ஆண்டுகள் கழித்து நல்ல மழை என்று ஊரார் கூறிக்கொண்டிருந்தனர்.

மோர்தானா அணை கட்டப்படுவதற்கு முன்னதாக, ஆந்திராவிலிருந்து ஓடிவரும் ஆற்றுவெள்ளம் கௌண்டன்ய மகாநதி வழியாகக் குடியாத்தம் ஊருக்குள் பாயும். வடகிழக்குப் பருவ மழை முடிவுறும்போது, கௌண்டன்ய மகாநதியின் கரையோர மக்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக மாறிவிடும். கரையோரப் பகுதிகளில் குடிசைகள் போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட அறிவுறுத்தப்படுவார்கள். ஒரு வாரம் கழிந்ததும் மீண்டும் வந்துவிடுவார்கள்.

பேர்தான் கெளண்டன்ய மகாநதி என்றிருந்தாலும், ஆண்டுதோறும் இப்படியான வெள்ளப்பெருக்குகளைப் பார்க்கமுடியாது. திடீரென்று எதாவது ஒரு ஆண்டில் இவ்வாறு நிகழ்வது உண்டு. எனவே வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு என்று சொல்லி, இங்கு இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. அணை என்று சொல்ல வேண்டியதில்லை. இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பிறகு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துவிட்டது. மோர்தானா அணையைக் கட்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு ஏதாவது வருமானம் கிடைத்திருக்கலாம்.

“குட்டையைக் கட்டிவிட்டு அணை என்று சொல்கிறார்கள்” என்று பொதுமக்கள் கிண்டல் அடிக்கிற கதையும் அங்கு நடப்பது உண்டு.

இந்த நிலையில்தான் 6 ஆண்டுகள் கழித்து மோர்தானா அணை நிரம்பி வழிவதாகவும், விரைவில் திறக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிரம்பி வழியும் அணையைப் பார்ப்பதற்காக, குடியாத்தம் வாழ் மக்கள் மோர்தானா அணையை நோக்கி வரத் தொடங்கினர். அந்தக் கூட்டத்தில் இருவர்தான் இந்த வெண்ணிலாவும் கதிரவனும்.

மற்ற பார்வையாளர்களைப்போல் வெண்ணிலாவும் அணையைத் தூர இருந்து பார்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், அவள் அந்த அணையின் கால்வாயில் இறங்கிவிட்டாள். இதுநாள்வரை காய்ந்திருந்த கால்வாயில் மழையின் காரணமாக இடுப்பளவுக்கான தண்ணீர் ஓடியது. இந்தக் கால்வாய் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று சென்று கௌண்டன்ய மகாநதியாக மாறிவிடும்.

கால்வாயில் வெண்ணிலா இறங்கிவிட்டதும் கதிரவன் கத்தினான்.

“ஆழமாக இருக்கப்போகிறது. மூழ்கிவிடப்போகிறாய்”, அவன் பேச்சைக் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.

“நீயும் வா” என்று கைநீட்டி அழைத்தாள்.

தனக்கு விருப்பமானவளின் அழைப்பைக் கேட்டதும் கதிரவனும் கால்வாயில் இறங்கினான். கால்வாயின் ஓரமாக நடந்துசென்றால், முழங்கால் அளவிலான நீரிலேயே சென்றுவிட முடியும். நீர்த்தேக்கம் இன்னும் திறக்கப்படாததால், பெருவெள்ளம் ஓடிவருவதற்கு வாய்ப்பு இல்லை.

எனவே, இருவரும் நடைப்பயணத்தைத் தொடங்கினர்.

“இந்தக் கால்வாய் வழியாகவே நடந்துபோய் ஆற்றுக்குள் நுழைந்துவிடலாம். ஆசையாக இருக்கிறது”.

வெண்ணிலாவின் ஆர்வத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கதிரவனும் ஒப்புக்கொண்டான்.

வெண்ணிலாவின் வெள்ளைத் தாவணியும் நீலநிறப் பாவாடையும், வெள்ளத்தில் நடந்துசெல்லும் அன்னமாகவே கதிரவனுக்குத் தோன்றியது. அந்த அன்னப்பறவைக்கு வரப்போகும் கெடுதலை முன்கூட்டியே உணர்வதற்கான பட்டறிவு கதிரவனுக்கு இல்லை.

இதுதான் நல்ல சூழ்நிலை. தனது காதலைச் சொல்லிவிடலாம் என்று தீர்மானித்தான். எனினும், அவனுக்குள் கொஞ்சம் அச்சம் தலைதூக்கியது. நல்ல நண்பனாகத் தன்னை நினைத்து வருகிறாள். தனிமையைப் பயன்படுத்தி அவள் நல்லெண்ணத்தைச் சிதைப்பது சரியா என்கிற குழப்பம் அவனுக்குள் முளைத்தது.

திடீரென வெண்ணிலா திகைப்புடன் கத்தினாள்.

“இங்கே பாரேன். இந்த இடத்தில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. நாம் கால்வாயின் அந்தக் கரைக்குச் சென்றுவிடலாம். மோர்தானாவை ஒட்டிய காட்டு மரங்களுக்கு மத்தியில் பயணம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கும். மீண்டும் இந்த வாய்ப்பு இருக்காது”.

கதிரவனுக்கு ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை.

“வேண்டாம்” என்று தலையை அசைத்தான்.

“புலி சிங்கம் ஏதாவது கடித்துவிடுமா? பயமாக இருக்கிறதா? நீ வரவில்லை எனில் பரவாயில்லை, நான் போகிறேன்”.

சொல்லாமல் கொள்ளாமல், திடீரென கால்வாயைக் கடக்க ஆரம்பித்தாள்.

முட்டி வரை நின்ற தண்ணீர் தற்போது அவளின் இடுப்பை நெருங்கியது. ஆனால் அவள் அதைப்பற்றிக் கவலைப்படாமல், ஓடோடிச் சென்று கால்வாயின் அடுத்த கரையை எட்டிவிட்டாள். அதிகபட்சம் 200 அடிதான் இருக்கும். கதிரவனும் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

“உனக்கு ரொம்ப தைரியம்தான்”.

“எனக்கு என்ன பயம், நம்ம ஊர், நம்ம ஆறு”.

சாலையோரக் கால்வாயைவிட காட்டோரக் கால்வாயில் நடப்பது வித்தியாசமான மகிழ்ச்சியாக உணர்ந்தான் கதிரவன்.

புத்தம் புதிய மழை நீர். புதிதாகப் பிறந்திருக்கும் கெண்டை மீன் குஞ்சுகள். கால்வாய் ஓரம் எட்டிப் பார்க்கும் தவளைகள், தலைப்பிரட்டைகள். எல்லாம் சேர்ந்து இருவரின் கால்களுக்கும் புகுந்து கிச்சுமுச்சு ஊட்டின.

அந்தப் பக்கத்தில் சாலை, நடுவில் கால்வாய், இந்தப் பக்கத்தில் காட்டு மரங்கள். சில்லென்று வீசும் காற்று. பகல் பொழுது. கால்களில் விளையாடும் மீன்கள். பக்கத்தில் தனக்குப் பிடித்தமான நண்பனாகக் கதிரவன்.

வெண்ணிலாவுக்கு இந்த அனுபவம் உள்ளக் களிப்பைத் தந்திருக்க வேண்டும். காட்டோரத்தில் தானாக வளர்ந்திருந்த பலா மரத்தை உற்று நோக்கி அதை நோக்கி நடந்தாள். வெளித்தோற்றத்தில் முள்ளாக இருந்தாலும், உள்ளே இருக்கும் பழத்தின் சுவையை நினைத்து மகிழ்ந்தாள். கைக்கு எட்டிய பலாக்காயை எட்டித் தொட்டாள்.

“காயாக இருக்கிறதா? பழுக்கவில்லை போலிருக்கிறது!?” என்றாள்.

“பழமாக இருந்தாலும் அதை அறுத்துச் சாப்பிடுவதற்கு நம்மிடம் எந்தக் கத்தியும் இல்லை. அறுத்துச் சுமந்துகொண்டு செல்லவும் முடியாது. வெறுங்கையை வீசிக்கொண்டு நடக்கிற சுதந்திரத்தை இழந்துவிடுவோம்’’ என்றான்.

காட்டு மரங்களை ரசித்தவாறு இருவரும் தங்களின் நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.

தனது காதலைச் சொல்லிவிடலாம் என்று நினைக்கும்போதுதான் கவனித்தான். கால்வாயின் அகலம் தற்போது விரிவடைந்திருந்தது. கால்வாய் தற்போது ஆறாகக் காட்சியளித்தது.

சாலையோரத்துக்கும் தங்களுக்குமான இடைவெளியில் பெரிய நீண்ட ஆறு தென்பட்டது. அந்தக் கரையைக் கடக்க வேண்டுமானால் ஆற்றில் இறங்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று தெரியவில்லை.

“வெண்ணிலா வா திரும்பிப் போய்விடலாம்” என்றான்.

வெண்ணிலாவும் சரி என்று தலையசைத்துத் திரும்பும்போது, “வீல்” என்று அலறினாள். அதுவரை கால்வாயாகத் தெரிந்த சிற்றோடையில் திடீரென பெருவெள்ளம். அணையைத் திறந்து விட்டுவிட்டார்களா? அல்லது அணை உடைந்துவிட்டதா?

வேறு வழியே இல்லை.

வெண்ணிலாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் ஓடினான்.

மழையால் சேறாகிப் போயிருந்த கருவேலம் மரங்களுக்கு இடையே நடக்கும்போது நிறைய முள்கள் தென்பட்டன. நல்லவேளையாக இருவரும் அணிந்திருந்த காலணிகள் பாதுகாப்பைத் தந்தன.

திரும்பிப் பார்த்தபோது, வெள்ளப்பெருக்கின் வேகம் சட்டென்று குறைவதாகத் தோன்றியது.

ஆனால், ஆற்றுக்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் எதிர்ச் சாலை இவர்களின் கண்களில் படவேயில்லை.

வெண்ணிலாவுக்கு உடல் எல்லாம் நடுங்கியது. ஆற்றுவெள்ளம் அதிகரித்தால் என்ன நிகழும் என்ற அச்சம் தண்டுவடத்துக்குள் சில்லென்று புகுந்தது.

கதிரவன் தைரியம் ஊட்டினான்.

‘‘கவலைப்படாத. இப்படியே அரைமணி நேரம் நடந்துபோனா உப்பரப்பள்ளி ஊர் வந்துவிடும்’’.

இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

‘‘நல்லவேளை, இது பகல் நேரமா இருக்கு. மாலை நேரமா இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்…’’

கதிரவன் சிரித்தான்.

தரையில் வீழ்ந்துகிடந்த ஊதா நிற நாகப்பழத்தைக் கையில் எடுத்தாள். சேறாக இருந்தது. ஆற்றுத் தண்ணீரில் கழுவிச் சாப்பிடும்போது, இயற்கையின் கண்ணுக்குத் தெரியாத சுவையை அனுபவித்தாள். சில பழங்களைப் பொறுக்கிக் கழுவிக் கதிரவனிடமும் தந்தாள்.

“அணையைத் திறந்திருக்கமாட்டார்கள். சில நேரங்களில் இப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்படும். தானாகக் குறைந்துவிடும். வா நாம் ஆத்தோரமாவே நடக்கலாம்”.

சின்ன சின்ன பாறைக் குன்றுகள், திடீரென கால் முட்டியை மீறி இடுப்பு வரையிலும் தொடும் தண்ணீர். ஆனால், பயமற்ற சூழல் உருவாகியிருப்பதை இருவரும் உணர்ந்தார்கள்.

ஆற்றுத் தண்ணீரையும் அதில் வளர்ந்திருந்த கோரைப் புற்களின் பசுமையையும் பழுப்பு நிறத்தையும் பார்க்கும்போது, வெண்ணிலாவுக்கு இயற்கை என்றால் என்ன என்பது புரிந்தது. வழியெல்லாம் காணப்பட்ட ஈச்சம் பழ மரங்களும், பனை மரங்களும் மழையில் நனைந்து, தங்களுக்கான மாதக்கணக்கிலான காத்திருப்புக் குளியலை அனுபவத்திருந்தன.

ஒரு பக்கம் ஆறு. மறு பக்கம் காடு. என்ன இனிமையான பயணம். பாதம் வரை தொடும் தண்ணீர், திடீரென முட்டிக்கால் வரை, பிறகு இடுப்பு வரை, இந்த ஆற்றோரத்தில் நடப்பது எவ்வளவு ஆனந்தத்தைத் தருகிறது.

நடந்துசென்று கொண்டிருந்த கதிரவன், திடீரென “ஏய் ஏய்!” என சிரித்துக்கொண்டே கத்தினான்

பயமற்ற பதற்றத்துடன் என்னவென்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை. இந்த இடத்தில் பள்ளமாக இருக்கிறது. தெரியாமல் காலை விட்டுவிட்டேன்”.

யாராவது மணல் திருடி பள்ளமாக்கியிருக்கலாம்.

வெண்ணிலா கைகொடுத்து அவனைப் பக்கத்தில் இழுத்தாள்.

இழுத்த வேகத்திலேயே அலறினாள். அவளின் வலது காலின் மீது ஊர்ந்துகொண்டு ஒரு பாம்பு சென்றது. நீளமான பாம்பு. வெடுக்கென்று காலை இழுத்ததில், அருகில் இருந்த முள்செடி கிழித்ததா அல்லது பாம்பு கடித்ததா என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் “அம்மா“ என்று அழுதாள்.

கதிரவன் அதிர்ச்சியுற்று, அவளின் காலையும் நழுவி ஓடும் பாம்பையும் பார்த்தான்.

“கவலைப்படாதே அது, தண்ணீர் பாம்பு. விஷமற்றது’’.

பக்கத்திலிருந்த முள்செடியிலிருந்து அவள் காலை அகற்றினான்.

இருவரும் பக்கத்திலிருந்த நனைந்துபோன ஒரு பாறையின் மீது அமர்ந்தார்கள்.

“தேவையற்ற வேலை. தெரியாத்தனமாக வந்துவிட்டோம்’’.

“பயப்படாதே, இன்னும் கொஞ்சம் தூரம்தான். பக்கத்து ஊருக்குப் போய்விடலாம். அதோ தெரிகிறது பார்“ என்றான்.

அவள் பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த ஊரும் கண்ணுக்குத் தெரியவில்லை.

தனக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகக் கூறுகிறான் என்பதைப் புரிந்துகொண்டு, வானத்தைப் பார்த்தாள். பருந்துகள் சில கூர்ந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தன. தன்னை உற்றுநோக்கிக் கொத்திக்கொண்டு போய்விடுவதைப்போல் உணர்ந்து, வேகமாக எழுந்துகொண்டு நடக்கத் தொடங்கினாள்.

“திடீரென மழை பெய்ததால், ஆற்றில் ஊர்ந்துசெல்லும் பாம்புகளைக் கண்டறிந்து கொத்திச் செல்ல பருந்துகள் வருகின்றன. அந்தக் காலம்போல் கழுகுகள் வருவதில்லை. அந்த இனம் இருக்கிறதா இல்லையா என்றுகூட தெரியவில்லை. வா வேகமாகப் போய்க்கொண்டே இருக்கலாம்’’.

பயமும் புன்சிரிப்பும் மாறி மாறி வெண்ணிலாவின் வார்த்தைகளில் வெளிப்பட்டன.

கதிரவன் திடீரென வெண்ணிலாவின் கைகளைப் பற்றி நிறுத்தினான். ஏதோ சத்தம்.

யானைகள் பிளிறிடுவதுபோல் தெரிந்தன இருவருக்கும். யானையின் காலடித் தடங்கள் எதுவும் தென்படவில்லை.

“வா சீக்கிரம் போய்விடலாம்’’.

“யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்” என்று பல மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு செய்தித்தாளில் படித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

“இந்தக் காட்டில் புலி சிங்கம் எல்லாம்கூட இருக்குமா?’’

“இப்போது இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. இந்தக் காட்டுப் பகுதியில் யானைகள் நிறைய உண்டு. கரடிகளும் நரிகளும் உண்டு. எந்த வனவிலங்கிடம் மாட்டிக்கொண்டாலும் நம்மால் தப்பிக்க முடியாது. வா வேகமாக ஓடலாம்’’.

வெண்ணிலா தன்னால் முடிந்தவரை கதிரவனின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினாள்.

ஆற்றின் வெள்ளமும் தன்னுடைய வேகத்தை அதிகரித்துக்கொண்டே வந்தது. பயத்தில் ஓடினாலும், கைக்கு எட்டிய தூரத்தில் மாட்டக்கூடிய செடி கொடி பூக்களை எட்டிப் பறித்துக்கொண்டும், தடவிக்கொண்டும் ஓடுவதில் வெண்ணிலாவுக்கு மகிழ்ச்சி கரை புரண்டது.

“பூச்சியைத் தின்னும் தாவரங்கள் இங்கே நிறைய இருக்கின்றன. உன் விரல்களை ஏதோ ஒரு வண்ணத்துப்பூச்சி என்று நினைத்துக்கொண்டு அவை உன் கைகளை இழுத்துத் தின்றுவிடப்போகின்றன’’.

திடீரென கதிரவன் நின்றான். ஏதோ வாகனத்தின் சத்தம்.

ஊருக்கு அருகில் வந்துவிட்டோம்.

தூரத்தில் பார்த்தான். சேறு வழியாகவே ஒரு மோட்டார் சைக்கிளில்  இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தனர். இரண்டு பேர் இல்லை, மூன்று பேர். அப்பாடா ஊருக்குப் பக்கத்தில் வந்துவிட்டோம்.

மூன்று மனித முகங்களைப் பார்த்ததும் இருவருக்கும் பயம் போயிற்று.

இவர்கள் ஓடிவருவதைப் பார்த்ததும், மூன்று பேரும் உற்றுநோக்கினார்கள்.

அவர்களின் கைகளில் மதுபாட்டில்கள் இருப்பதை நெருக்கத்தில் வந்த பிறகுதான் வெண்ணிலா பார்த்தாள். ஏதோ புரியாத நம்பிக்கையில்,  அந்த மூன்று பேரைப் பார்த்துவிட்டுக் கதிரவனைப் பார்த்தாள்.

“டமால்”

மூன்று பேரில் ஒருவன் கதிரவனின் தலையில் ஒரு மதுபாட்டிலை வீசி எறிந்தான். திடீர் தாக்குதலைக் கதிரவன் சமாளிக்க முயற்சி செய்வதற்குள்ளாக வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டது.

கதிரவன் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே நினைவிழந்து கீழே விழுந்தான்.

*

உணர்வு திரும்பி கண் விழித்துப் பார்த்தபோது தன்னைச் சுற்றிலும் நிறைய பேர் நின்றிருந்தார்கள். அவனின் அம்மா, அப்பா, உறவினர்கள். ஏற்கெனவே எங்கேயோ நுகர்ந்த வாசனை. மருந்துப் பொருட்களின் வாசனை. தான் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்துகொண்டான். அதிர்ந்துபோய் எழ முயற்சி செய்தான். பக்கத்திலிருந்து செவிலியர் தோளைப் பிடித்து அழுத்தினாள். தலையில் பலத்த காயம். எழுந்துகொள்ளக்கூடாது. என்ன நிகழ்ந்திருக்கும். வெண்ணிலா எங்கே? அவனின் நினைவுகள் சுழலும்போதே, இதயம் நின்றுவிடும்போல் வலி. கை கால்கள் உதறல் எடுத்தன.

நிறைய சொந்தக்காரர்கள், காவல்துறையினர், வெண்ணிலாவின் சொந்தக்காரர்கள். வெண்ணிலாவும் இவனின் சொந்தம்தான். அவளின் அத்தை மகன்.

கொஞ்சம் அயர்ந்துபோய், நிலைமையைப் புரிந்துகொண்டு மற்றவர்களிடம் தெரிந்துகொண்டு, பக்கத்து அறையில் படுக்கையில் கிடந்த வெண்ணிலாவைப் போய்ப் பார்த்தான்.

அவள் கண்கள் விழித்திருந்தன. இவனை உற்றுநோக்கினாள். உயிரற்றுப்போய் கிடந்த அவள் பார்வையில், அவமானமும் வாழ்க்கைத் தோல்வியின் உச்சகட்டமும் தெரிந்தது.

இப்போது சொல்வாயா “ஐ லவ் யூ” என்று கேலியாகப் பார்ப்பதுபோல் இருந்தது அவளின் பார்வை.

கதிரவன் மெள்ள அவளிடம் வந்தான். தலையை மெதுவாக வருடினான்.

“வெண்ணிலா, இந்தப் பூமி முதன்முதலாகத் தண்ணீரால் உயிர்பெற்றது. அதன்பிறகு ஒரு செல் உயிரினம், தாவரங்கள், நீர் வாழ்வன, நீர்நில வாழ்வன, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள். இந்த 5 அறிவு கொண்ட உயிர்களால் நீ காயப்படவில்லை. ஆனால், ஆறறிவு கொண்ட உயிரினங்கள் என்று சொல்லப்படுபவற்றால் நீ காயப்பட்டிருக்கிறாய். காயம் என்பது வெறும் காயம். இந்தக் காயத்துக்கு நீ கற்பு என்னும் சாயத்தைப் பூசிப் பார்க்க வேண்டாம். அந்தக் காயத்தை நமக்கான திருமணம் என்கிற மருந்தினால் சரிபடுத்திக்கொள்ளலாம். உன் விருப்பத்தைச் சொல். என் பெற்றோர் உங்கள் வீட்டில் வந்து பெண் கேட்பார்கள்”.

வெண்ணிலாவின் வெற்றுப் பார்வையில் ஒளி பெருகுவதை கதிரவன் உணர்ந்துகொள்ள அதிக நொடிகள் தேவைப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com