பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற தீபா மாலிக்!

"படுக்கையில் கிடக்க, வீல் சேரில் அமர எனக்கு விருப்பம் இல்லை. என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகள், என்னை இந்த நாற்பத்தைந்து வயதிலும் சாதனை புரிய வைத்துள்ளது''
பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற தீபா மாலிக்!

பாரா ஒலிம்பிக் போட்டியில், குண்டு எறிதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தீபாமாலிக்கிற்கு ஹரியானா அரசு நான்கு கோடி ரூபாய் பரிசாக அறிவித்துள்ளது. தீபா சொல்கிறார்:
"நான் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவள். குழந்தைப் பருவத்திலிருந்தே படு துரு துரு டைப். கல்லூரி காலத்தில் லூனா வண்டியில் பயணிப்பேன்... பல வித்தைகள் செய்வேன்.. பைக் ஓட்ட ரொம்பவும் ஆசை. ராஜஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியில் நானும் ஒரு ஆட்டக்காரி. அப்போதுதான் ராணுவத்தில் கர்னலாக இருந்த விக்ரம் சிங்கைச் சந்தித்தேன். நான் பைக் பைத்தியமாக இருப்பதை அறிந்த விக்ரம், ""உனக்கு ஒரு பைக் பரிசளிக்க விரும்புகிறேன்... என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா?'' என்று நேரடியாகக் கேட்டுவிட்டார். நானும் சம்மதம் என்றேன். அடுத்த நாளே புதிய கவாஸôக்கி பஜாஜ் பைக்குடன் வந்து விட்டார். பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனக்கு வயது இருபதுதான். இரண்டு பெண்குழந்தைகளுக்கு தாயானேன். கணவர் விக்ரம் அடிக்கடி எல்லைக்குப் போய்விடுவார். நான் ராணுவக் குடும்பத்தில் பிறந்தவள் என்பதால், கணவனைப் பிரிந்து வாழ்வது என்பது ஒரு சகஜமான விஷயம்.

கார்கில் யுத்த சமயத்தில் (1999) கணவர் விக்ரம் எல்லையைப் பாதுகாக்க பாகிஸ்தான் படையுடன் போர் புரிந்து கொண்டிருந்தார். நான் இங்கே இரண்டு மகள்களுடன் தனியே. அதில் மூத்த மகளுக்கு சிக்கலான உடல்நிலை பிரச்னை என்னை கலங்கச் செய்திருந்தது. அப்போதுதான், எனது முதுகு தண்டுவடத்தில் கட்டி உருவானதைக் கண்டு பிடித்தார்கள். புற்று நோய்க்கட்டி. கட்டியை அகற்றினால் மூளையிலிருந்து பல உடல் பாகங்களை இயக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் கீழ்ப் பகுதி செயல், உணர்வு இழந்துவிடும் என்று டாக்டர்கள் எச்சரித்தார்கள். கட்டியை அகற்றாவிடில், கட்டி உயிருக்கு எமனாகும்.

கணவருக்கு போர்க்களத்தில் என்ன வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். என் இரண்டு மகள்களின் பாதுகாப்பிற்காக யாராவது ஒருவர் உயிருடன் இருந்தாக வேண்டும். உடலின் கீழ்ப் பாகம் தளர்ந்தாலும், உயிருடன் இருப்பேனே.. அதனால் அறுவை சிகிச்சை செய்யச் சொன்னேன். அப்பா, அப்போது ஜோகன்ஸ்பர்க்கில் பணி புரிந்து கொண்டிருந்தார். சகோதரனுக்கோ ஊட்டியில் வேலை. கணவரோ கார்கிலில். உதவி செய்ய யாரும் பக்கத்தில் இல்லை. குழந்தைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு உதவிக்கு யாருமின்றி டில்லியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அடுத்தடுத்து மூன்று அறுவை சிகிச்சைகள். தோள்பட்டையிலிருந்து இடுப்பு வரை முதுகில் சுமார் நூற்றியெண்பது தையல்கள்.

பயந்த மாதிரியே, இடுப்பிற்கு கீழ் உறுப்புகள் செயல், உணர்வு இழந்து போயின. எனக்கு நானே சுமையானேன்... கணவர் கார்கில் போரில் வெற்றி பெற்று ஊர் திரும்பினார்... அந்த சந்தோஷத்தில் எனக்கு ஏற்பட்ட இழப்பை மறந்தேன்.

சில வருடங்கள் வீட்டில் முடங்கிக் கிடந்தேன்... பிறகு திடீரென்று மீண்டும் பைக் பைத்தியம் தொற்றிக் கொண்டது. என் போன்ற உடல் ஊனம் உள்ளவர்களுக்கு வண்டி ஓட்ட லைசென்ஸ் கிடைப்பது அரிது. பத்தொன்பது மாதம் தொடர்ந்த முயற்சியில், லைசென்ஸ் வழங்கினார்கள். ஆனால் இடுப்பிற்கு கீழ் செயலிழந்த நான் ஓட்ட பல மாற்றங்களை பைக்கில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு பணச் செலவு அதிகமாகும். அது பெரிய கேள்விக்குறியாக அமைந்தது. எனது நிலைமையைக் கேள்விப்பட்டு விஜய் மல்லையா உதவி செய்ய முன்வந்தார். டெல்லியில் உள்ள நிறுவனம் நான் பைக்கை ஓட்ட தேவையான மாற்றங்களைச் செய்து கொடுத்தது. Himalayan Motorsports Association மற்றும் Federation of Motor Sports Clubs of India அமைப்புகளில் சேர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டேன். இந்தியாவின் பைக் ஓட்டும் முதல் மாற்றுத் திறனாளியானேன். ஊனம் உடலில் வரலாம்... மனதில் எண்ணத்தில் வந்து விடாமல் பார்த்துக் கொண்டேன்.

அறுபது கி.மீ தூரமுள்ள பைக் ஓட்டத்தில் தொடங்கி, இமாலயத்தின் ஒன்பது பள்ளத்தாக்குகளை இணைக்கும் மூவாயிரம் கி. மீ. தூரத்தை பத்து நாட்களில் பைக் பயணம் செய்யும் அளவிற்கு அனுபவம் பெற்றேன். 2013-இல் சென்னையிலிருந்து டில்லி வரை சுமார் 3278 கி. மீ. பிரத்யேக பைக்கில் பயணித்திருக்கிறேன். இப்படி நெடுந்தூரப் பயணங்களை மேற்கொண்ட முதல் மாற்றுத்திறனாளி உலகத்திலேயே நான்தான். இந்த அரிய சாதனைகளுக்காகப் பல விருதுகள் கிடைத்தன. பைக்கை திறமையாக ஓட்ட வலிமையான தோள்கள் தேவை. வலிமையான தோள்கள் அமைய, நீச்சல் கற்றுக் கொண்டேன். குண்டு எறிதலிலும் பயிற்சி பெற்றேன். நீச்சல் போட்டிகளில் பல பிரிவுகளில் தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறேன். 2011-இல் நியூசிலாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் குண்டு எறிவதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஈட்டி எறிதல், நீச்சல், குண்டு எறிதல் பிரிவுகளில் இதுவரை 54 தேசிய விருதுகளும் 13 சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அதனால் "லிம்கா' சாதனைப் புத்தகத்தில் என் பெயர் நான்கு முறை இடம் பிடித்தது. 2012-இல் "அர்ஜுனா விருது' எனக்கு வழங்கப்பட்டது.

2016-இல் பாரா ஒலிம்பிக்சில் கலந்து கொள்ள அனுமதி கிடைத்ததால், குண்டு எறிவதில் வெள்ளிப் பதக்கம் பெற முடிந்துள்ளது. பாரா ஒலிம்பிக்சில் பங்கு கொள்ளும் முதல் இந்திய பெண் என்ற பெருமையும் எனக்கு கிடைத்திருக்கிறது..

ரியோ பாரா ஒலிம்பிக்சில் பங்கு பெற பயிற்சி வசதிகள் எங்கள் ஊரில் கிடையாது. அதனால் சில வருடங்களாக டில்லிக்கு அருகிலுள்ள குடுகாவ்ங் நகரில் தங்கி பயிற்சி பெற்றேன். படுக்கையில் கிடக்க, வீல் சேரில் அமர எனக்கு விருப்பம் இல்லை. என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகள், என்னை இந்த நாற்பத்தைந்து வயதிலும் சாதனை புரிய வைத்துள்ளது'' என்கிறார் தீபா மாலிக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com