ஒரு பெண் நோ என்று சொன்னால் நோ என்று  தான் அர்த்தம் யுவர் ஹானர்!

தவறு செய்ய ஒரு வினாடி போதும், ஆனால் தவற்றை நினைத்து அழ வாழ்க்கை முழுதும் நாட்கள் காத்திருக்கின்றன என்பதாகத் தான் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.
ஒரு பெண் நோ என்று சொன்னால் நோ என்று  தான் அர்த்தம் யுவர் ஹானர்!

பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட பெண்களின் மீது சுமத்தப்படும் வழக்கமான குற்றச்சாட்டுகள் சில உண்டு அவற்றில் பிரதானமானது "நீ ஒழுங்காக உடை  அணியவில்லை" என்பது. இதோ இந்தப் பெண் ஹோம்லியாகத் தான் புடவை அணிந்திருக்கிறாள். அவளுக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது?  என்று சுமார் 23 புகைப்படங்கள் வழியாகப் பதிவு செய்த புகைப்படக் கலைஞரும்,  பிளாக் பியர்ல் ஃபோட்டோ கிராபி நிறுவனருமான  'கணேஷ் டோஸ்ட்டி'யைப் பாராட்டலாம். 

விஷூவலாக கதை சொல்வது எளிதான வேலையில்லை. ஊரெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் வலுத்து வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு போட்டோ விஷுவல் வியக்க வைப்பதோடு இதன் வாயிலாக அவர்கள் சொல்ல விரும்பிய கருத்தை மனிதாபிமானத்தின் மீதான நம்பிக்கையோடும், அழகியலோடும்  பதிவு செய்திருப்பது  அருமை. பெரும்பாலான பாலியல் வன்முறைகள் எந்த விதமான முன் திட்டமிடலும் இன்றி தற்செயலாக நிகழ்ந்து சம்பந்தப்பட்டவர்களை எந்த அளவுக்கு விரக்தியில் தள்ளுகிறது என்று நாளிதழ்களில் தினமும் வாசித்துக் கொண்டு தானே இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணில் உடல்ரீதியாக ஏற்படும் காயங்கள் மருந்தினால் சரியாகலாம், ஆனால் உளவியல் ரீதியாக ஏற்படும் மிக நுட்பமான மனச்சிதறல்கள் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து சமூகத்தில் அந்தப் பெண்ணின் வாழ்வை முற்றிலுமாக நாசமாக்கி விடுகின்றன. 

சுஜாதா தனது நாவல் ஒன்றில் பெங்கலூரில் வசிக்கும் திருமணமான பெண் ஒருத்தி கப்பன் பார்க்கில் பாலியல் வன்முறைக்கு உள்ளவதையும் அதைத் தொடர்ந்து அவளுக்கும் அவளது கணவருக்கும் மனதளவில் ஏற்படும் அளவிட முடியாத மன விசாரங்களைப் பற்றியும் எழுதி இருப்பார். கதைப்படி ஒருமுறை தான் அந்தப் பெண் வல்லுறவுக்கு ஆளானார் எனினும் மனதளவில் தினம் தினம் அவர் அனுபவிக்கும் வேதனை பலநூறு முறை பாலியல் வன்முறைக்கு ஆளானதற்கு ஈடானதாக இருக்கும். ஆனாலும் காவல்நிலையத்தில் குற்றவாளிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு அடையாளம் காட்டவென்று அந்தப் பெண்ணை அழைப்பார்கள். அங்கே வயதில் மிக இளையவனான அந்தக் குற்றவாளியை ஆத்திரம் தீருமட்டும் அடிக்கச் சொல்லும் இன்ஸ்பெக்டரின் தூண்டுதலை ஏற்க மறுத்து அவள் மனம் பதறப் பதற வெளியேறுவதாக நாவல் முடியும். இந்த நாவலில் மட்டும் அல்ல இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகளில் எல்லாவற்றிலுமே மீசை கூட சரியாக அரும்பாத டீன் ஏஜ் பையன்களின் பங்கு அதிகமிருப்பதைக் காணும் போது என்ன செய்வதென்றறியாத கையாலாகாக் கோபம் மூளத்தான் செய்கிறது. இப்படியான குற்றங்களைக் களைவதற்கான வேலையை எங்கிருந்து தான் தொடங்குவது?  

புகைப்படத்தில் இருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் தனிரிகா. தனிரிகா என்றால் ’மலர்களின் தீராக்காதலி’ என்று அர்த்தமாம். பெயருக்கேற்றவாறு தனிரிகா பூப்போன்றவள். அவளும் அவளது அப்பாவும் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரமொன்றில் அவளது ஆசைப்படியே பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தருகிறார் அவளது தந்தை ஆத்ரேயா. அப்பாவும் பெண்ணும் அழகான பூந்தோட்டமுமான அவளது வாழ்வில் விதி நான்கு இளைஞர்கள் வாயிலாக குறுக்கிடும் போது என்ன நிகழ்கிறது என்பது தான் இந்த போட்டோ விஷூவல் கதை சொல்லும் உத்தியின்  மையம்.

நான்கு இளைஞர்களும் நெருங்கிய நண்பர்கள் தான் ஆனாலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான வாழ்க்கை முறைகள். ஒவ்வொருவரின் வாழ்க்கைப் புத்தகத்திலும் ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டதும், அறிந்து கொள்ளாததுமான  விடுபட்ட பக்கங்கள் சில இருந்தன. நால்வரும் வெகு நாட்கள் கழித்து சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த கல கலப்பான சூழலின் மையமாக இருப்பது அவரவர் ரசித்த பெண்களைப் பற்றிய சம்பாஷனைகளே! நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஒதுக்குப்புறமான கடலோர சிறுநகர் ஒன்றின் ஆளரவமற்ற பிரதேசம் போலிருக்கிறது அவர்கள் ஒன்று கூடிய இடம். அங்கே திடீரென தேவதைக்கு ஒப்பான அழகில் ஒரு பெண் கடந்து செல்லும் போது நால்வருக்குள்ளும் சட்டென மூளும் காமமே பெருந்தவறுக்கான முதல் பொறியாகி விடுகிறது. 

நடக்கவிருக்கும் அந்த தவறுக்குப் பின் அவர்களில் யாரும் மிருகங்களுக்கு ஈடாகக் கூட மதிக்கப்படப் போவது இல்லையெனும் ஞானம் அந்த நால்வருக்குள்ளும் உண்டு. எனினும் சூழலை சாதகமாக்கிக் கொள்ளும் அசுரத் தனம் ஆட்டி வைக்க தொடர்ந்து அந்தப் பெண்ணை மானபங்கம் செய்ய முயல்கிறார்கள். இதில் ஆச்சர்யம் ஒன்றுண்டு நால்வரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் தொடர்ச்சியான சகவாசம் உள்ள நபராக சித்தரிக்கப்படும் ருத்ரா தான் இந்த பெரும் பிழையில் இருந்து தன் நண்பர்களைக் காக்கும் நல்லவராகி விடுகிறார். தனிரிகாவை அப்படியே விட்டு விட்டு  அவர்கள் நகர்ந்தாலும், தனிரிகாவுக்கு உடலளவில் எதுவும் நேரவில்லை என்றாலும் கூட அவளது விருப்பமின்றி எதிர்பாராமல் அவளுக்கு நடந்து விட்ட இந்த  மோசமான நிகழ்வால் அவளது மனம் மிகக் கடுமையாக பாதிப்படைந்து விடுகிறது. இந்தப் பாதிப்பில் இருந்து தனிரிகா மீண்டாளா?  என்பதை கீழுள்ள முகநூல் பக்கத்தை அழுத்தி தெரிந்து கொள்ளுங்கள்;

https://www.scoopwhoop.com/Photo-Story-Rape-Survivors#.wc8221ali

இங்கே நாம் மிகச் சரியாக உணர்ந்து கொண்டாக வேண்டிய விசயம் எதுவெனில்;

பாலியல் வன்முறைகளை அணுகுதலைப் பற்றிய சரியான புரிதலை உண்டாக்குதல்; தினம் தினம் நாளிதழ்களில் வாசித்து கடந்து கொண்டு தான் இருக்கிறோம். இதைப் பற்றி கருத்தரங்குகள் நடத்துகின்றோம், தொலைக்காட்சி சேனல்களில் விவாதங்கள் நடத்துகிறோம், ஆனால் இந்தியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த  நிர்பயா சம்பவத்திற்குப் பின் இப்படி ஒரு விசயம் நடக்கக்
கூடாதென நம்பும் அதே வேலையில் படிப்பறிவற்ற அஞ்ஞானச் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் படித்த பண்பான மனிதர்கள் கூட வயது வித்யாசமின்றி இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கும் அதே தினசரிகளும், தொலைக்காட்சிகளுமே சாட்சிகளாக நிற்கின்றன. களையவே முடியாத பெரும் சமூகப் பிரச்சினை இது எனும்படியானதற்கு எது காரணமாக இருக்க முடியும்? 

எந்த விசயம் மனிதனை மிருக நிலைக்கு கொண்டு செல்கிறது? பெண் ஒரு போகப் பொருள் எனும்படியான சிந்தனையின் போக்கை எதைக் கொண்டு இல்லாமலாக்குவது? சமீபத்தில் வெளியான ”பிங்க்” இந்திப் படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞராக வரும் அமிதாப் டாப்ஸியிடம் குறுக்கு விசாரணைக்குப் பின் முடிவாக நீதிபதியிடம் இப்படிச் சொல்கிறார். ”ஒரு பெண் நோ என்று சொன்னால் நோ என்று தான் அர்த்தம் யுவர் ஹானர்” படத்தில் நீதிபதி அதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் நிஜத்தில் இந்தச் சமூகமெனும் நீதிபதி மட்டும் வேதங்களையும், புராணங்களையும், காவியங்களையும், கதைகளையும் சந்தர்பவாதமாய் துணைக்கு வைத்துக் கொண்டு, நீ பெண்! பெண்ணான நீ இப்படி இப்படித் தான் இருந்தாக வேண்டும், இல்லா விட்டால் உனக்கான  துன்பத்தை நீயாக தேடிக் கொண்டவளாவாய், இரவில்ஊர் சுற்றாதே! இப்படி காண்பவர் கண்களையெல்லாம் உறுத்துமாறு ஆடை அணியாதே! என்றெல்லாம் பெண்ணுக்கு கட்டுப்பாடுகளை வகுத்து அதை மீறும் பெண்களை என்னவோ பாலியல் வன்முறையை அவர்களே வேண்டி விரும்பித் தேர்ந்தெடுத்தாற் போல குற்றம் சுமத்தத் தயாராகி விடுகிறார். 

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து கொண்டே பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தங்களுக்கு நிகழும் வன்முறைகளை காவல்துறையிடம் எடுத்துச் செல்ல தயங்குகின்றனர். நிர்பயா இறந்து விட்டார். வார்ட் பாயால் கொடும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளான அருணா ஷெண்பக் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் பல வருடங்கள் வதைபட்டு சில வருடங்களுக்கு முன் இறந்தார்,  இறந்தவர்களைக் காட்டிலும் இப்படியான பாதிப்புக்குப் பின் உயிரோடு இருப்பவர்களில் எத்தனை பேர் மோசமான மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதான தெளிவான ஆய்வுகள் அவசியம் நடத்தப்பட வேண்டும். சமூகத்தின் முன்னிலையில் உறவுகளாகட்டும், நண்பர்களாகட்டும் அவர்களை எவ்விதம் நடத்துகிறார்கள் என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களை மன உளைச்சலில் இருந்து மீட்பதே இந்தப் பிரச்சினைக்கு முதலும் கடைசியுமான சரியான தீர்வு.

தனிரிகாவின் கதை நமக்குச் சொல்வது என்ன? 

பாலியல் வன்முறை என்றால் என்ன ? ஒரு பெண்ணை அவளது அனுமதியின்றி உடல் ரீதியாக மிக மோசமாகக் கையாள்வது தான் பாலியல் வன்முறை. இதை யார் நிகழ்த்துகிறார்கள்? தனியாகவோ, கூட்டாகவோ ஆண்கள் தான் நிகழ்த்துகிறார்கள். அவர்கள் ஏன் நிகழ்த்துகிறார்கள்? என்ற கேள்வி பல்லாண்டுகளாகக் கேட்கப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. சமூகமும் அதற்கான காரணங்களை பலவிதமாக மாற்றி மாற்றி விவாதித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் இதற்கொரு முடிவில்லை. எட்டு மாதக் கைக்குழந்தைகள் முதற்கொண்டு இப்படியான அவலங்களுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்ன தான் உடல் நலனுக்கும், மன நலனுக்கும் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும், இந்தச் சமூகத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்தக் கூடியதான மனநிலை அவர்களை விட்டு விலகுவதே இல்லை. இப்படி பாலியல் வன்முறைக்குப் பின் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உளவியல் ரீதியாக நிகழும் தொடர் மாற்றங்களைச் சித்தரிப்பதே மேலே குறிப்பிடப்பட்ட போட்டோ விஷூவல் தொடரின் மைய நோக்கம். தவறு செய்ய ஒரு வினாடி போதும், ஆனால் தவற்றை நினைத்து அழ வாழ்க்கை முழுதும் நாட்கள் காத்திருக்கின்றன என்பதாகத் தான் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com