ஜுவாலாவின் பெண்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக ஒருபோதும் பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளத் தேவையில்லை!

ஜுவாலாவின் பெண்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக ஒருபோதும் பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளத் தேவையில்லை!

ஜுவாலாவின் முக்கிய நோக்கமே, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையோடும், தற்காத்துக் கொள்ளும் பலத்துடனும் இருக்க வேண்டும் என்பது தான்.

ஒரு சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையில் உதயமானது ஜுவாலா!

பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களின் வெற்றியே; தமது துயரத்தின், அவமானத்தின் பின்னரும் வெற்றி கரமாக வாழ்ந்து காட்டுவதில் தான் உள்ளது. அதற்கான நியாயமான உதவிகளைச் செய்து தரும் முனைப்பில் உருவானது தான் ‘ஜுவாலா’ அமைப்பு, சுருக்கமாகச் சொல்வதென்றால் JFJ (Jwala for justice). இதன் நிறுவனர் டாக்டர். திவ்யா குப்தா. இந்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான திவ்யா 2012 ஆம் ஆண்டில் கெளகாத்தி சிறுமி ஒருத்தியை ஒரு மதுபான விடுதியின் முன் 30 மனித மிருகங்கள் சேர்ந்து சீரழித்த கொடூரமான செய்தியை ஊடகங்கள் வழியாக அறிந்தார். அன்று அவரது இதயம் சுக்கு நூறானது. ஒரு சிறுமியை 30 பேர் பலாத்காரம் செய்வது எனில் அது என்ன மாதிரியான வக்கிரம்?! அதைத் தட்டிக் கேட்க ஒரு மனித ஜீவன் கூட அந்த இடத்தில் இல்லை எனில் அது என்ன மாதிரியான நியாயமற்ற, ஈவு இரக்கமற்ற உலகம். என திவ்யாவை அந்தச் செய்தி கொந்தளிக்கச் செய்தது. அந்த கொந்தளிப்பில் உருவானது தான் திவ்யாவின் ஜுவாலா அமைப்பு. இது முற்றிலும் பாலியல் வன்முறையால் தினம் தினம் பாதிக்கப்பட்டு அதை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாமல், நீதி கிடைக்காமல் தவிக்கும் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான அமைப்பு. தனது ஜுவாலா அமைப்பின் முதல் செயல்பாடாக திவ்யா சுட்டுவது கெளகாத்தி சிறுமிக்காக நடத்திய மெளன யாத்திரையைத் தான். அந்தச் சிறுமிக்கு நீதி வேண்டி ஒரு குழுவாக ஜுவாலா அமைப்பினர் ஊர்வலம் சென்றனர். அது தான் இவர்களது நியாயப் போராட்டத்திற்கான முதல் அடி!

முதல்படி மனநல ஆலோசனை:

ஆரம்பத்தில் ஜுவாலா மூலமாக பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மனநல ஆலோசனைகளைத் தந்து கொண்டிருந்த நிலையில் அந்த ஒரு முயற்சி மட்டும் போதாது என்று திவ்யாவுக்குத் தோன்றியது. இந்தப் பெண்களின் வாழ்வை நேர்மறையாக முன்னெடுக்க இந்த ஆலோசனைகள் மட்டும் போதாது என அதிருப்தி அடைந்த திவ்யா, ஜுவாலாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டே இருந்தார். நமது இந்தியப் பெண்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தேவைகளுக்காக எப்போதும் கணவரையோ, தந்தையையோ அல்லது மகன்களையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் தான் இப்போதுமிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்றால் அவை பாலியல் வன்முறைகள் மட்டும் தான் என்பதில்லை. வயதான பெண்களும், அநாதரவான பெண்களும் கூட எத்தனையோ விதங்களில் வன்முறைகளுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். அவர்களுக்கான ஒரே விடுதலை எனில் அது பொருளாதார சுதந்திரம் மட்டுமே. எனவே இப்பெண்களை பொருளாதார ரீதியாக வலுவுள்ளவர்களாக மாற்ற என்ன செய்யலாம் என ஜுவாலா அமைப்பின் மூலமாக ஆலோசிக்கத் தொடங்கினோம். 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் வாய்ப்புகள்:

முதலில் எங்களை அணுகும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செய்திதாட்களைக் கொண்டு பைகள் தயாரிக்கப் பயிற்சி அளித்தோம். அவற்றை சந்தையில் விற்பனை செய்தோம். ஆனால் செய்தி தாள் பைகளுக்கு ஆயுள் குறைவு என்பதால், கார்மெண்ட்டுகளில் உபரியாகக் கிடைத்த வேஸ்ட் துணிகளைக் கொண்டு பைகள் தயாரிக்க அந்தப் பெண்களுக்கு பயிற்சி அளித்தோம். இந்தப் பைகளுக்கு ஆயுள் அதிகம் என்பதோடு பிளாஸ்டிக் பைகளுக்கு நல்ல மாற்று என்பதால் விற்பனை அதிகரித்தது. அந்தப் பெண்களுக்கு ஒரு நிரந்தர வருமானமும் கிடைத்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் பொருளாதார விடுதலை அடைய இது ஒரு சிறிய முயற்சி தான். ஆனால் இது அவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்தது.

சுயமாக வாழ உதவுவது:

ரமீலா என்ற பெண்ணை அவளது குடிகாரக் கணவன், தினமும் குடித்து விட்டு அடிப்பது, பாலியல் தொல்லை தருவது எனத் தொடர்ந்து மிக மோசமாக நடத்திக் கொண்டிருந்தான். ஒருநாள் நிலைமை கை மீறிச் சென்றதும் அந்தப் பெண் அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் தனது அவலநிலை குறித்து புகார் செய்தார். ஆனால் காவல்நிலையத்தில் அவளது புகாருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சாதாரண கணவன் மனைவி சண்டை எனக் கருதி அவளைத் திரும்ப வீட்டுக்கு அனுப்பினர். மீண்டும் அடி, உதை என அவதிப்பட்ட ரமீலா தாங்க முடியாத ஒரு கணத்தில் ஜுவாலாவை அணுகினாள். ஜுவாலா ரமீலாவுக்காக நீதி கேட்டு காவல்துறை சென்றது. அதன் பின்னரே காவல்துறை விழிப்பு கொண்டு ரமீலாவின் பக்கமிருக்கும் நியாயத்தை உணர்ந்து அவளது குடிகாரக் கணவனை சிறையில் தள்ளியது. 

ஒரு ரமீலா மட்டுமல்ல சவிதா என்றொரு பெண். அவளது கணவனுக்கு மனைவியை அடிப்பதே ஒரு பொழுது போக்கு என்பது போல அவன் தினமும் செயல்பட்டுக் கொண்டிருந்தான். சவிதாவுக்கு ஜுவாலா களமிறங்கி அவளுக்குத் தேவையான சட்ட உதவிகளையும், மனநல ஆலோசனைகளையும் நல்கி தன்னை சகல விதத்திலும் அவமதித்து கேவலமாக நடத்தும் கணவரிடமிருந்து பிரிந்து சுயமாக வாழ வழி சொல்லிக் கொடுத்தது, இப்போது சவிதா ஒரு கல்லூரியில் பேராசிரியை. அவர் பொருளாதார தேவைக்காக இனியும் தன் கணவனிடம் அடியும், உதையும் பட்டுக் கொண்டு காலம் தள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவரை உனர வைத்தது ஜுவாலா!

ஆண்களிடம் அல்லவா பேசிப் புரிய வைக்கை வேண்டும்?!

அது மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கிப் பதற வைத்த டெல்லி நிர்பயா சம்பவத்தின் பின் ஜுவாலா சார்பாக டாக்டர் திவ்யா ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் இளம்பெண்களிடையே பெண்களுக்குத் தேவையான பாதுகாப்புணர்வு குறித்து உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் அவர் தெரிவித்த மிக முக்கியமான விசயம், நாம் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆண்டாண்டு காலமாக பெண்களிடம் தான் அதிகமும் சொல்லிக் கொண்டே வருகிறோம். பெண்களை எப்படி நடத்த வேண்டும் என ஆண்களிடம் தானே நாம் சொல்லி இருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் ஏன் ஆண்களிடம் பேசக் கூடாது. அவர்களால் தான் பெண்கள் இத்தனை இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அது குறித்த போதிய புரிதலை, சக மனித ஜீவன்களான பெண்களை தோழமையுடன் நடத்த வேணிட்ய அவசியம் குறித்து ஆண்களிடம் தானே நாம் நிறைய பேசி இருக்க வேண்டும். பெண்கள் விசயத்தில் ஆண்களுக்கு தான் மனமாற்றம் தேவை, எனவே இனிமேல் பெண்களான நாம், நம்மை எப்படி மதிப்பது? எப்படி சக உயிராகப் பாவிப்பது? எப்படி தங்களுக்கான நியாயங்களைப் பெறுவது என இனி நமது சக ஆண்களிடத்தில் பேசத் தொடங்குவோம்’ என்றார். இது தானே தேவையான மாற்றம். இந்த மாற்றம் வந்து விட்டால் பாலியல் வன்முறை என்பதே ஒரு கட்டத்தில் இல்லாமலாகி விடக் கூடும் இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் திவ்யா.

தன்னம்பிக்கை, தற்காப்பு தான் முதல் தேவை!

அது மட்டுமல்ல ஜுவாலாவின் முக்கிய நோக்கமே, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையோடும், தற்காத்துக் கொள்ளும் பலத்துடனும் இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக திவ்யா திறன் வாய்ந்த நிபுணர்களை நியமித்து சுமார் 15,000 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காப்புக் கலை மற்றும் சுய முன்னேற்ற வகுப்புகளை நடத்தி வருகிறார். பெண்கள் அதிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையோடும், தற்காத்துக் கொள்ளும் திறனோடும் இருந்து விட்டால் பிறகு இந்த உலகத்தின் ஏளனப் பார்வையை அவர்களே ஒருநாள் மாற்றி விடும் வல்லமை கொண்டவர்களாகி விடுவார்கள் என்பது திவ்யாவின் எண்ணம்.

என்னைத் தொட்டால் உன்னை அழிக்கும் நெருப்பாவேன் நான்!:

கடைசியாக வன்முறைகளுக்கு ஆளான பெண்கள் அனைவருக்கும் திவ்யா சொல்லிக் கொள்ள விரும்புவது; பெண்களே நீங்கள் எத்தனையோ விதமான வன்முறைகளுக்கு ஆளாகி இருப்பீர்கள். ஆனால் மறவாதீர்கள். இனியொரு முறை பாலியல் ரீதியாக உங்களைத் துன்புறுத்த அணுகும் மிருகங்களிடம் துணிந்து சொல்லுங்கள்; ‘என்னைத் தொட்டால் உன்னை அழிக்கும் நெருப்பாக நான் மாறுவேன்’ என; அதுவே உங்களுக்கான தன்னம்பிக்கை, தற்காப்பு உணர்வு. அது உங்களை அனைத்திலிருந்தும் மீட்டெடுக்கும். என்கிறார். ஜுவாலா என்றால் நெருப்பு என்று தான் அர்த்தம். பெண்கள் தங்களை முறைகேடாக அணுகும் ஆண்களிடம் நெருப்பாகத் தானே அமைய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com