நம்பர் ஒன் பிராண்டட் நாப்கின் VS துணி நாப்கின்: பெண்களுக்கு மட்டுமல்ல சூழலுக்கும் உகந்தது எது?

ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக உபயோகப் படுத்தி தூக்கி எறியும் மாதவிடாய் நாப்கின்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? சுமார் 10,000 நாப்கின்கள்.
நம்பர் ஒன் பிராண்டட் நாப்கின் VS துணி நாப்கின்: பெண்களுக்கு மட்டுமல்ல சூழலுக்கும் உகந்தது எது?

ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக உபயோகப் படுத்தி தூக்கி எறியும் மாதவிடாய் நாப்கின்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? சுமார் 10,000 நாப்கின்கள். இவை சற்றுக் கூடக் குறைய இருக்கலாம். ஆனால் மலைப்பாக இருக்கிறது தானே?! சில வருடங்களுக்கு முன்பு வரை நாப்கின் விளம்பரங்களில் ‘ அவங்களும் தான் தெரிஞ்சுக்கட்டுமே, நாங்களும் மாடர்ன் தான் என்று’ என்பது தாரக மந்திரமாக இருந்தது. மாடர்ன் யுவதிகள் அனைவரும் மாத விடாய்க் காலங்களில் துணி உபயோகப் படுத்தினால் அது கட்டுப் பெட்டித்தனமானது, நாட்டுப்புறத்தனமானது என்றும், அதுவே நாப்கின்கள் பயன்படுத்தினால் அது தங்களது நவீனத் தன்மையை வெளிப்படுத்தும் என்று இளம் பெண்கள் நம்புவதாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் சில காலம் வந்து கொண்டிருந்தன. 

ஆனால் பயன்படுத்தி தூக்கி எரியும் நாப்கின்களை ஒரேயடியாக மட்கச் செய்து ஒழிக்க வகையில்லாததால் சூழலியலாளர்களிடையே தற்போது மீண்டும் துணியாலான மறு உபயோகத்துக்கு உகந்ததான நாப்கின்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் தற்போது உபயோகப் படுத்துமாறு தூக்கிப் பேசி பரிந்துரைத்துக் கொண்டிருப்பது துணியாலான நாப்கின்கள் மற்றும், மாதவிடாய் கப்புகளையே. 

இந்த இரண்டில் மென்ச்ச்சுரல் கப்புகள் என்று அறியப்படும் மாதவிடாய் கப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரைக்காக இணையத்தில் தேடும் போது தான் நான் அறிந்து கொள்ள நேர்ந்தது. இப்படி ஒரு விசயம் இருப்பதே பல பெண்களுக்கு தெரியுமோ என்னவோ? எனக்கு அது புதுமையான செய்தியாக இருந்தது.

இந்த கப்புகளை மாதவிடாய் காலங்களில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு விளக்கமளிக்க தனி இணையப் பக்கங்கள் நிறைய உண்டு. கூகுளில் மென்ச்சுரல் கப் என்றூ டைப் செய்து பாருங்கள் படங்களாகவும், வீடியோக்களாகவும் விளக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இது பெண்களின் ஆரோக்கியத்துக்கு உகந்ததா? என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்களை அணுகி அவர்களிடம் ஆலோசித்ததின் பின் இவற்றைப் பயன்படுத்துவது உத்தமம் என்று தோன்றுகிறது.

துணி நாப்கின்களைப் பொறுத்தவரை அவற்றின் சிறப்பாகச் சூழலியலாளர்கள் கருதுவது; அவற்றை வழக்கமான நாப்கின்களைப் போல பயன்படுத்தி விட்டு தூக்கி எறிய வேண்டியதில்லை. துவைத்து, சுத்தப்படுத்தி மறுமுறை உபயோகிக்கலாம் என்பதே! இப்போது மார்கெட்டில் பிரபலமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிராண்டட் நாப்கின்கள் அனைத்துமே ஒரு முறை மட்டுமே உபயோகிக்கத் தகுந்த தன்மை கொண்டவை. அவற்றை மறு உபயோகம் செய்ய முடியாது. பயன்படுத்தி தூக்கி எறியும் போது அதற்குப் பின் அவை என்ன ஆகும்? என்ன விதமான விளைவுகளை இந்தப் பூமியில் ஏற்படுத்தும் என்றெல்லாம் நாம் யோசிப்பதில்லை. ஆனால் பூமியில் சமீப காலங்களாக மாறி வரும் சூழல் மாற்றங்கள் உணர்த்தும் நீதி என்னவெனில் பூமியின் அடியில் மண் அடுக்குகளில் இத்தகைய நாப்கின்கள் மற்றும் மட்காத பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன ஒரு உறை தோன்றி மண்ணின் சுவாசத்தை தடுத்து நிறுத்தும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றனவாம்.

இந்த நாப்கின் உறைகள் மற்றும் மட்காத பிளாஸ்டிக் கழிவுகள் இரண்டும் சேர்ந்து மண்ணின் மேற்புறத்தை அடைத்துக் கொள்வதால் மழைக்காலங்களில் நீர் பூமிக்குள் உறியப்படுவது தடை படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. அதுமட்டுமல்ல மண்ணின் ஈரப்பதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால் நிலம் வறண்டு புவி வெப்பமயமாதம் அதிகரிக்கிறது. இவை அனைத்துமே இயற்கைச் சீற்றங்களுக்கு வழி வகுக்கின்றன. இவற்றைத் தடுக்க வேண்டுமெனில் படிப்படியாக பூமியை மனிதன் வாழத் தகுதியற்ற வாழிடமாக மாற்றிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நாம் இல்லாமலாக்க வேண்டும். 

பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைத்தால் அன்றி அதை முற்றிலுமாக ஒழிப்பது என்பது கடினமே என்பதால் சூழலின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களான நாம் நமது வாழ்க்கை முறையில் நவீனத்தின் பெயரில் மேற்கொண்ட சில மாற்றங்களை முற்றிலுமாக கை விட வேண்டுமென்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்! அதிலொன்று தான் இந்த நாப்கின் விவகாரம்.  

ஆனால் மாத விடாய் நாப்கின்களைப் பொறுத்தவரை இரு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நமது அம்மாக்களின் காலத்திற்கு முன்பு வரை அன்றைய பெண்கள் நாப்கின்களைப் பற்றி பரவலாக அறிந்திருக்கவில்லை... அவர்களுக்கு உடனடியாகக் கை கொடுத்தவை வீட்டில் உபரியாக இருந்த கிழிந்த துணிகளே! அவற்றை சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுடன் இருந்த பெண்கள் போதுமான அளவுக்குத் துவைத்து உலர்த்திப் பயன்படுத்தினார்கள். ஆனால் உழைக்கும் வர்க்கம் சார்ந்த அன்றாடங்காய்ச்சிப் பெண்களுக்கு அப்படியெல்லாம் சீராடிக் கொண்டிருக்க நேரமில்லையென்று கருதியதால் போதுமான கவனமின்றி மாத விடாய் நாட்களைக் கடக்க ஏதோ ஒரு உபாயம் என சுத்தமற்ற அழுக்குத் துணிகளைப் பயன்படுத்தி தங்களது உடல்நலனை சீரழித்துக் கொண்டனர்.

இவை அனைத்துமே முற்போக்கு பெண்ணியவாதிகளால் அப்போதே விவாதிக்கப்பட்ட விசயம் தான். அந்த நிலையிலிருந்து பெண்கள் கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து தற்போது ஏழை முதல் சீமான்கள் வரை அனைவரது வீட்டுப் பெண்களும் ஏதாவது ஒரு வகையில் விலை உயர்ந்த நாப்கின்கள் தொடங்கி மலிவு விலை நாப்கின்கள் வரை பயன்படுத்தி ஓரளவுக்கு தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கி இருக்கும் போது , திடீரென இப்போதிருக்கும் நாப்கின்கள் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல நமது சுற்றுச் சூழல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே அவற்றுக்குப் பதிலாக பெண்களே நீங்கள் இனி மீண்டும் மறு உபயோகம் செய்யத் தக்க துணி நாப்கின்களை பயன்படுத்துங்கள் எனும் வலியுறுத்தல் சமீப காலங்களில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com