குழந்தைகளை நேசிப்பவர்கள், கட்டாயம் சாலை விதிகளைப் புறக்கணிக்க மாட்டார்கள்!

உங்கள் வாகனங்களில் இண்டிகேட்டர்கள் சரியாக இயங்கினாலும் கூட ஒவ்வொருமுறையும் சாலையைக் கடக்க முயலும் போதும் கை சிக்னல் காட்டவும் மறக்கக் கூடாது.
குழந்தைகளை நேசிப்பவர்கள், கட்டாயம் சாலை விதிகளைப் புறக்கணிக்க மாட்டார்கள்!

மொத்த உலகிலும் சாலை விபத்துகளால் நேரும் மரணங்களில் 90% இரு சக்கர வாகன விபத்துகளால் தான் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. காரணம் மனிதத் தவறுகளே! வாகனம் வாங்கி ஓட்டத் திறனுள்ள எல்லோருமே சிறந்த வாகன ஓட்டிகள் என்று சொல்லி விட முடியாது. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெருநகரங்களில் தேவையை மட்டுமே முன்னிட்டு பெருவாரியான மக்கள் முறையாக வாகனங்களை இயக்கத் தெரியாமலே இரு சக்கர, 4 சக்கர வாகனங்களை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். முறையாக வாகனம் இயக்கக் கற்றுக் கொண்டவர்கள் எனில் எதனாலெல்லாம் விபத்துகள் நேரும் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். தெரிந்தே அத்தகைய தவறுகளை அவர்கள் செய்யத் துணிய மாட்டார்கள். இங்கே பிரச்னை முறையாக வாகனம் இயக்கத் தெரியவில்லை என்பதோடு சாலை விதிகளை, வாகன இயக்கு விதிகளை பின்பற்றவில்லை என்பதாகவும் இருப்பதால் அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள் தினமும் இருசக்கர வாகனங்களில் அலுவலகம் செல்லக்கூடியவராக இருந்தால், அதிலும் இரவில் தாமதமாக வீடு திரும்புபவராக இருப்பின் இவற்றையெல்லாம் சரியாகப் பின்பற்றி வருகிறீர்களா? என ஒன்றிற்கு இருமுறை சோதித்துப் பாருங்கள்.

இரு சக்கரமோ அல்லது நான்கு சக்கரமோ எந்த வாகனத்தைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி கீழ்கண்ட முக்கியமான பொருட்களை எல்லாம் முறையாக எடுத்துக் கொண்டீர்களா என்று பயணத்துக்கு முன் ஒன்றுக்கு இருமுறை சோதித்துப் பார்த்து விட்டு வாகனத்தை இயக்கத் தொடங்குவது நல்லது.

  • முதலுதவிப் பெட்டி
  • புளோரசண்ட் ஜாக்கெட்
  • டிரைவிங் லைசென்ஸ்

இந்த மூன்றையும் முதலில் வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு முறையாக வாகனத்தைச் துடைத்துச் சுத்தம் செய்திருக்கிறீர்களா? என்பதையும் ஒரு முறை சோதித்துப் பார்த்து விடுங்கள்.

பிறகு சாவியை வாகனத்தில் சொருகி அதை இயக்கிய பின் வாகனம் ஸ்டார்ட் ஆனதும்,  

  • வலது, இடது இண்டிகேட்டர் பஸ்ஸர்கள் முறையாக இயங்குகின்றனவா என்பதையும் சோதித்துப் பார்க்கவும். அவற்றோடு சேர்த்து;
  • டெயில் லைட்
  • ஹெட் லைட்
  • ஹார்ன் உள்ளிட்டவையும் சரியாக இயங்குகின்றனவா? என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.
  • அடுத்து மிக மிக முக்கியமான அம்சமான ஹெல்மெட்டைத் தினமும் துடைத்துச் சுத்தமாக வைத்திருந்து அதையும் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மேற்கண்ட பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்ட பின்; அடுத்ததாக வாகனத்தின் பெட்ரோல் அளவைத் தினமும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்,
  • பெட்ரோல் மட்டுமல்ல டியூப்களில் காற்று போதுமான அளவு நிரம்பி இருக்கிறதா?
  • சக்கரங்களை இணைக்கும் செயின்கள் உராய்ந்து தேய்ந்து போகாமல் இருக்க ஆயில் போதுமான அளவுக்கு இருக்கிறதா? என்பதையும் சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியமானது.

சரி வாகனத்தில் சாவியை நுழைத்து இவற்றையெல்லாம் ஒருமுறைக்கு இருமுறை சோதித்துப் பார்த்து முடித்து விட்டீர்கள் எனில்; இப்போது உங்களது வாகனம் சாலையில் இயக்குவதற்குத் தகுதியானதாக இருக்கிறது என்று அர்த்தம்.

சரி இப்போது வாகனத்தை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்கிறீர்கள். இப்போது சாலை விதிகள் என்ற ஒரு விஷயம் இருக்கிறதே அதைப்பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே?! சாலைகளில் உங்களுடன் பயணிக்கும் உங்களது சக வாகன ஓட்டிகளில் சிலர் சாலை விதிகளைப் பின்பற்றவில்லை என்றால் உடனே நாமும் அவர்களைப் போலாகி விட முயலக் கூடாது.

ரோட் கிராஸ் வித் ஹேண்ட் சிக்னல்:

உங்கள் வாகனங்களில் இண்டிகேட்டர்கள் சரியாக இயங்கினாலும் கூட ஒவ்வொருமுறையும் சாலையைக் கடக்க முயலும் போதும் கை சிக்னல் காட்டவும் மறக்கக் கூடாது. ஏனெனில் நமக்கு பின்னால் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகளில் சிலர் இண்டிகேட்டர்களை சரியாகக் கவனிக்காமல் வந்து மோதி விட்டால் வேதனையும், பொருட்சேதமும் நமக்குத் தான். அதனால் மறக்காமல் ஹேண்ட் சிக்னலுடன் சாலையைக் கடக்கவும்.

ஸ்பீட் லிமிட் இன் சிட்டி

பள்ளி, கல்லூரிகள், மார்கெட், கோயில், போன்ற ஜன சந்தடி மிகுந்த இடங்களில் வாகன வேகத்தைக் கட்டுப்பாட்டுடன் குறைத்து நிதானமாக ஓட்ட வேண்டும். இது இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வாகனங்களுக்குமே பொருந்தும்.

லேன் டிசிப்ளின்

சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்கையில் எப்போதுமே லேன் டிசிப்ளின் என்று சொல்லக்கூடிய வரிசைக் கிரமத்தை கடைபிடிக்க வேண்டும். சாலையின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டி பின்னால் அதி விரைவாக வந்து கொண்டிருக்கும் வாகனங்களைப் பற்றிய கவனமில்லாமல் அடிக்கடி திடீரென இடமோ, வலமோ தனது வரிசையை மாற்றினால் அது அந்த குறிப்பிட்ட வாகன ஓட்டிக்கும் பாதுகாப்பானதில்லை. அவரோடு அதே சாலையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் அது பாதுகாப்பானதில்லை. இந்தியாவில் பெரும்பாலான விபத்துகளுக்கு இந்த ஒழுங்கின்மையும் ஒரு காரணம்.

சேஃப் ஓவர் டேக்

சாலைகளில் இடமும், வலமும் மாறிச் செல்ல முறையான ஹேண்ட் சிக்னல் மற்றும் இண்டிகேட்டர்களைப் பயன்படுத்த வேண்டும். முன்புறம் அதி விரைவாகச் சென்று கொண்டிருக்கும் பிற வாகனங்களைச் சடாரென ஓவர் டேக் செய்ய நினைப்பது பாதுகாப்பற்றதோடு அது  சாலைப் பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பானதும் கூட!

சாலை விதிகளை மதிக்க வேண்டும்

எத்தனை அவசரமான அலுவலாக இருந்தாலும் சரி, அது மனித உயிரோட ஒப்பிடும் போது இரண்டாம் பட்சம் தான். ஆகவே வாகன ஓட்டிகள் எவரும் அவரவர் உயிரைத் துச்சமாக மதித்து எந்த வேலையையும் விரைந்து முடித்தாக வேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டு சாலைப் பயணங்களில் அதிவிரைவுப் பயணங்களைத் திட்டமிடத் தேவையில்லை.


வளைவுகளில் நிதானமாகச் செல்லவும்

வளைவுகளில் முந்தாதீர் எனப் பல இடங்களில் பதாகைகளும், தட்டிகளும் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் நம்மில் பலர் அதைப் பார்ப்பதோடு சரி... எதற்கு அந்த அறிவுரை என்பதை புத்தியில் ஏற்றிக் கொள்வதே இல்லை. அது தவறு வளைவுகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் நிதானித்துச் சாலையை கடப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான இடைவெளியை பராமரிக்கவும்

மிகவும் குறுகலான அல்லது ஜன நெருக்கடி மிகுந்த சாலைகளில் பயணிக்கும் போதோ அல்லது சிதிலமான சாலைகளில் முன்புற, பின்புற வாகனங்களுடன் நெருக்கமாகப் பயணிக்கும் போதோ முன்புற வாகனத்திலிருந்து 10 அடி இடைவெளியை விட்டுப் பயணிப்பதை அந்தச் சாலையைப் பகிர்ந்து கொண்ட அத்தனை வாகனங்களுமே பின்பற்ற வேண்டும்.

இரு சக்கர வாகனப் பயணத்தில் இருக்கும் போது அலைபேசி பயன்படுத்த மாட்டேன் எனும் உறுதி.

எத்தனை முக்கியமான விஷயமாக இருந்தாலும் சரி, இரு சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது செல்லில் அழைப்பு வந்தால் வாகனத்தை இண்டிகேட்டருடன் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டுப் பேசி முடித்தபின் மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும். அல்லது நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடைந்ததும் அங்கிருந்து நிதானமாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் வாகனத்தை இயக்கிக் கொண்டே ஒடது காதில் அலைபேசியை வைத்து கழுத்தைச் சாய்த்து வளைத்த பொஸிசனில் அப்படியே பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கிக் கொண்டு செல்வார்கள். இது முற்றிலும் தவறான முறைமட்டுமல்ல தவிர்க்க வேண்டிய முறையும் கூட! .

இவை தவிர நாம் அடிக்கடி மறந்து போகிற சில சாலை விதிகளை அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது, அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • இரு சக்கர வாகனத்தில் நெடுந்தொலைவு செல்லும் போது, சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் பயணத்தை நிறுத்தி இடையில் கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டுப் பயணத்தைத் தொடர்வது  ஆரோக்யமானது மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட!
  • இரு சக்கர வாகனத்தில் சாலையில் செல்லும் போது சாலையில் விலங்குகள் குறுக்கிட்டால், முதலில் விலகி அவற்றுக்கு வழி விட்டு, அவை கடந்த பின் வாகனத்தை இயக்குவது;
  • சாலைகள் எப்போதும் சவாலானவையே! ஆனால் அப்படிப்பட்ட சாலைகள் தான் நமது வாகன ஓட்டும் திறமையை மேலும், மேலும் பண்படுத்த உதவும்.
  • எப்போது இரு சக்கர வாகனத்தில் செல்வதாக இருந்தாலும் மது அருந்துவதையோ அல்லது மயக்கம் தரும் மருந்துகளை உட்கொள்ளுவதையோ தவிர்க்க வேண்டும்.
  • இரவுப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஃபுளோரஸ்சண்ட் ஜாக்கெட்டுகள் உங்களை பின்னால் வரும் வாகன ஓட்டியின் கண்களுக்குப் புலனாகச் செய்வதில் உதவும்.
  • நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் சாலை விதிகளை மிகக் கடுமையாகவும், விரும்பியும் பின்பற்றத் தொடங்கினேன்

 
ஆகவே புரிந்து கொள்ளுங்கள் சாலை விபத்துகள் தவிர்க்கப் படக்கூடியவையே என்பதை உணருங்கள். நாம் சாலையைப் பயன்படுத்துகிறோம் எனவே அதற்கான மரியாதையை அதற்கு அளித்துத் தான் ஆக வேண்டும். எனவே சாலைகளை மதியுங்கள்! சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்

ஒவ்வொரு வருடமும் சாலை விபத்தில் 1.2 மில்லியன் மனிதர்கள் இறந்து போகின்றனர் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இறந்தது வேண்டுமானால் 1.2 மில்லியன் மனிதர்களாக இருக்கலாம். ஆனால் அந்த மரணங்களால் நிர்மூலமாகி மீண்டும் வெகு பிரயத்தனப்பட்டு தளிர்க்க நேர்ந்த குடும்பங்கள் எத்தனை, எத்தனையோ?! அன்பிற்குரியவர்களின் மரணம் மன நிம்மதியை மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் பொருளாதாரப் பாதுகாப்பையுமே நிர்மூலமாக்கி விடுகிறது. ஆகவே விபத்தினால் நேர்வது மரணம் மட்டுமல்ல ஸ்திரத் தன்மையற்ற எதிர்கால வாழ்வும் தான்! எனவே வாகனங்களை இயக்கும் போது அசட்டுத் துணிச்சலுக்கோ, கவனமற்ற யோசனைகளுக்கோ இடம் தராமல் சாலை விதிகளையும், பாதுகாப்பையும் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வோடு நமது பயணங்களை சுமூகமாக்கிக் கொள்வோமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com