திருமணம் என்ற பெயரில் வளைகுடாக் கிழவருக்கு விற்கப்பட்ட இந்தியச் சிறுமியின் அவலக் கதை!

சிவப்பு நிறத் திருமண உடையில் இஸ்லாமியச் சிறுமி ஒருத்தி, தன் தாத்தா வயதிலிருக்கும் முதியவர் ஒருவருடன் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படமொன்று ஒரு வாரமாக இணையத்தில் உலா வருகிறது.
திருமணம் என்ற பெயரில் வளைகுடாக் கிழவருக்கு விற்கப்பட்ட இந்தியச் சிறுமியின் அவலக் கதை!

ஹைதராபாத்: 16 வயதுச் சிறுமியை, ஓமனைச் சேர்ந்த 65 வயது முதியவருக்குத் திருமணம் செய்து வைத்த விவகாரம் கடந்த ஒரு வாரமாகவே இணையத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. இம்மாதிரியான செய்திகள் நமக்கொன்றும் புதியது அல்ல. முன்பே இப்படிப்பட்ட பல செய்திகளை ஊடகங்களில் கண்டிருக்கிறோம் நாம். ஓமனில் இருந்து சிறுமிகளைத் திருமணம் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக அழைத்துச் சென்று அங்கே வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அவலம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்படி விற்கப்படும் சிறுமிகள் பல்வேறு தேசங்களில் பாலியல் அடிமைகளாகவும் ஆக்கப்படுகின்றனர். இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழான மக்கள் வாழும் மாநிலங்களில் இருந்து சிறுமிகள் மற்றும் அப்பாவி இளம்பெண்கள் இதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றனர். அயல்நாடுகளிலிருந்து குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலிருந்து இப்படி வரும் முதியவர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்காக சிறுமிகளையும், பெண்களையும் தேர்வு செய்து கொடுத்து, இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து வைக்க இங்கே காஸிகள் (இஸ்லாமிய மதகுரு) இருக்கின்றனர். நம் நாட்டில் தான் இஸ்லாமியர்களுக்குத் தனிச்சட்டம் ஆயிற்றே! அவர்களில் 65 வயது முதியவர், 16 வயது சிறுமியை மணந்து வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றாலும் கூட இங்கே கேள்விகள் கேட்பார் எவருமில்லை. 

சிவப்பு நிறத் திருமண உடையில் இஸ்லாமியச் சிறுமி ஒருத்தி, தன் தாத்தா வயதிலிருக்கும் முதியவர் ஒருவருடன் திருமணக் கோலத்தில் நிற்கும் புகைப்படமொன்று ஒரு வாரமாக இணையத்தில் உலா வருகிறது. இந்தப் புகைப்படத்தை காவலர் வசம் ஒப்படைத்த அந்தச் சிறுமியின் தாயார். தன் மகளை, தன் கணவனின் சகோதரியும், அவளது கணவனும் சேர்ந்து மூளைச் சலவை செய்து, அந்த முதியவருக்கு மணம் முடித்து வைத்து விட்டார்கள். திருமணம் நடந்து மூன்று மாதங்களாகின்றன. பெற்றோரானா தங்களுக்கே தெரியாமல் ஓமனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட  தங்கள் மகள், தற்போது ஓமனில், அந்த முதியவர் தன்னை உடலளவிலும், மனதளவிலும் சித்திரவதை செய்து, தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுத்தி வருவதாகவும், எப்படியாவது தன்னைக் காப்பாற்றி... மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இந்த விவகாரத்தில் சம்மந்தப் பட்டவர்களை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி காவல்துறையினர் தங்கள் மகளை மீட்டுத் தரவேண்டும் என அந்தத் தாய் புகார் அளித்திருக்கிறார். 

சிறுமியின் தாய் அளித்த புகாரின் படி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தந்தை வழி உறவினர்கள் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் போக்கைப் பொறுத்து, சிறுமியின் தந்தையையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்கும் எண்ணத்தில் இருக்கின்றனர் காவல்துறையினர். ஏனெனில் ஓமன் முதியவருக்கு மகளை மணம் முடிக்கக் கேட்டு முதலில் அணுகியது பெற்றோரைத்தான். சிறுமியின் தாய் மறுக்கவே, அதன் பின்னரே அவளது உறவினர்களை அணுகி இருக்கின்றனர். சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தின் படி, தன் கணவரின் சகோதரியும், அவளது கணவரும் சேர்ந்து தங்கள் மகளிடம், அந்த ஓமன் முதியவரின் ஆடம்பர வளைகுடா வாழ்வைப் பறைசாற்றும் புகைப்படங்களைக் காட்டி மூளைச்சலவை செய்து சிறிது, சிறுதாக அவளை ஆசைக்குட்படுத்தியே மனமாற்றம் செய்திருக்கிறார்கள்... முதலில் மறுத்த அந்தச் சிறுமி, பிறகு படிப்படியாக அந்த வாழ்க்கையின் மீது ஆசை கொள்ளத் தொடங்கி, பெற்றோருக்கே தெரியாமல், குறிப்பிட்ட தினத்தன்று அவர்களுடன் சென்று அந்த ஓமன் முதியவரை இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளப் வைக்கப்பட்டிருக்கிறாள். திருமணம் முடிந்ததும் சில நாட்கள் சிறுமியுடன் இந்தியாவில் கழித்த முதியவர், முன்னதாகத் தான் ஓமனுக்குச் சென்று, அங்கிருந்து திருமணச் சான்றிதழ்களைக் காட்டி சிறுமியை ஓமனுக்கு அழைத்துக் கொள்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். பின்னர் கடந்த மாதத்தில் சொன்னபடி விசா ஏற்பாடு செய்து, சிறுமியை ஓமனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். ஓமனுக்குச் சென்ற சில தினங்களிலேயே தன் தாயைத் தொடர்பு கொண்ட சிறுமி, தன்னால் அங்கே முதியவரின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு இருக்கு இயலாதென்றும், உடனடியாகத் தன்னை ஹைதராபாத்துக்கு அழைத்துக் கொள்ளுமாறும் கூறி அலைபேசியில் கதறவே... தற்போது இந்த விவகாரம் காவல்துறை மற்றும் ஊடகங்கள் வாயிலாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வரை சென்று... அவரை மிகுந்த மனக் கவலைக்கு உட்படுத்தி இருக்கிறது. அவர், உடனடியாக இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஞிடம் எடுத்துச் சென்று ஹைதராபாத் சிறுமிக்கு நியாயம் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறுமியை இந்தியாவுக்கு மீட்கும் முயற்சியில், ஓமன் முதியவர் கெடு விதித்துள்ளதாகத் தெரிகிறது. சிறுமியின் உறவினர்கள், ரூ 5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு அதற்கு பிரதிஉபகாரமாகத் தான் சிறுமியை மணம்முடித்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கு அந்தச் சிறுமியை, கிழவருக்கு விற்றிருக்கிறார்கள். ஆகவே தற்போது தன்னிடம் வாங்கிய 5 லட்சத்தை திருப்பி அளித்தால் மட்டுமே, தன்னால் சிறுமியை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியும். என முதியவர் சிறுமியின் தாயிடம் கூறி இருக்கிறார். 

மகளை மீட்கும் வழி அறியாது திகைத்த அந்தத் தாய்... தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதோடு தன் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய உறவினர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஓமனில் தன் மகள் எங்கிருக்கிறாள் என்ற விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மஸ்கட்டில் இருந்து தன்னைத் தொடர்பு கொண்ட மகள், தற்போது என்ன நிலையிலிருக்கிறாள்? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். மகள் தன்னைத் தொடர்பு கொண்ட போதெல்லாம் , தன்னை உடனடியாக அங்கிருந்து மீட்கா விட்டால், இறப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை. எனக் கதறியதால்.., இவ்விஷயத்தில் காவல்துறை மற்றும் மத்திய அரசு தலையிட்டு ஆவண செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த இந்திய ஏஜெண்டான இஸ்லாமிய மதக்குரு தற்போது தலைமறைவாகி விட்டார். உறவினர்களும் தலைமறைவாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நிகழப்போகிறது? மஸ்கட்டில் இருந்து சிறுமி பத்திரமாக மீட்கப் படுவாரா? என்பதை விட ஹைதராபாத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இம்மாதிரியான அவலங்களுக்கு எப்போது முடிவு வரும் என்பது தான் புரியாத புதிர்.

இதில் விமான நிலையத்தில் வைத்தாவது சிறுமியைக் காப்பாற்ற  வழி இருந்திருக்கிறது. சிறுமியின் சான்றிதழ்களை சோதித்துப் பார்க்கும் போது விமான நிலைய ஊழியர்கள் யோசித்திருக்க வேண்டாமா? சிறுமியின் திருமணச் சான்றிதழில் இருக்கும் வயது வித்யாசத்தை உத்தேசித்தாவது சிறுமியையும், அவளுடன் பயணம் செய்ய வந்தவர்களையும் விமான நிலைய அதிகாரிகள் சோதனக்குட்படுத்தி விசாரணை செய்திருக்க வேண்டும். அப்போது தவற விட்டு விட்டு , இப்போது யோசித்து என்ன பயன்?! என்ற ரீதியிலும் ஊடகங்களில் இந்த விவகாரம் விமர்சிக்கப் பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com