பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் ஆசை நிறைவேறுமா!

அவரைப் புரிந்து ஏற்றுக் கொள்கிற ஒரு பெண் அமைந்தால் பேரறிவாளனுக்குத் திருமணம் செய்து பார்க்கும் ஆசை தனக்கு இருப்பதாக அந்தத் தாய் வெகு ஆதூரத்துடன் தனது ஆசையை முன் வைக்கிறார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் ஆசை நிறைவேறுமா!

தனது 19 வயதில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியென சிறையிலடைக்கப்பட்டு சில வருடங்கள் மரண தண்டனைக் கைதியாக அல்லல்பட்டு, தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் இருந்த பேரறிவாளன், கடந்த வாரம் பல்வேறு சட்டப்போராட்டங்களின் பின் 1 மாத காலம் பரோலில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். வேலூர், ஜோலார்பேட்டையிலிருக்கும் அவரது இல்லத்தில் 30 நாட்களுக்கு மட்டும் தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் தங்க, பேரறிவாளனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் ஒன்றாக, இளமையில் சிறை செல்வதற்கு முன்பு தங்களது வீட்டில், தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீட்டெடுக்க முயன்று கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கு அவர் பரோலில் இருக்கும் காலம் வரையில் தினமும் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திடுமாறு உத்தரவு. 

பேரறிவாளன் விஷயத்தில் அவரைக்காட்டிலும் தமிழக மக்களின் மனதில் பெரிதும் இடம் பிடித்தவர் அவரது அன்னை அற்புதம் அம்மாளே!

கடந்த 27 ஆண்டுகளாக தன் மகனுக்காக அந்தத் தாயார் படாத பட்டுக் கொண்டு இருக்கிறார்.

தற்போது பரோலில் குறுகிய காலத்துக்காவது தங்களுடன் இணைந்திருக்க வந்திருக்கும் தன் மகனைக் குறித்து அந்தம்மாள் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் ஒரு தாயாக அவரது உணர்வுகளைப் பசுமையாகப் பதிவு செய்கிறது. இந்த 30 நாட்களுக்குள் தன் மகனுக்கொரு திருமணத்தை நடத்திப் பார்த்து விடும் ஆசையும், அன்பும் மிகுந்து வழிகிறது அவரது குரலில்!

இப்போதே 46 வயதாகி விட்டது. உடன் பிறந்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. (இருவரில் தங்கையானவர், தன் அண்ணனுக்கு விடுதலை கிடைத்த பின்பு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனப் பல காலம் காத்திருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை நிஜமாகும் முகாந்திரங்கள் வெகு தொலைவில் இருந்ததால் குடும்பத்தினரின் வற்புறுத்தல் மற்றும் அறிவுரையின் பேரில் அவருக்கும் மணமானதாகக் கேள்வி!) குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான பேரறிவாளனால் தன் உடன் பிறந்த சகோதரிகள் இருவரது திருமணத்திலும் கலந்து கொள்ள இயலவில்லை. மகன் இன்று வருவான், நாளை வருவான் என்று காத்திருந்து, காத்திருந்து நம்பிக்கை ஓய்ந்தவராக இருந்த அந்த அன்னைக்கு இன்றும் கூட பேரறிவாளன் கண் முன்னே வந்து வீட்டு வாசலில் நின்ற பிறகு தான், தன் மகன் வீட்டுக்கு வந்ததையே நம்ப முடிந்திருக்கிறது. மகனை நேரில் கண்ட சந்தோஷம் நிலைத்திருக்கும் இந்தத் தருணத்தில் அந்தத் தாயை, பாரத தேசத்தின் எல்லாத் தாய்மார்களுக்கும் இருக்கக் கூடிய வெகு சகஜமான மிக, மிக எளிமையான ஆசையொன்று சதா அலைக்கழிக்கிறது.

சிறைக்குச் செல்கையில் தலை கொள்ள முடியுடனும், முழு ஆரோக்யத்துடனும், இளமையுடனும் இருந்த தன் மகன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வருகையில் முன்நெற்றியில் வழுக்கையாகி முதிர்வு தெரிகிறது. வயதான பெற்றோரான தங்களது காலத்தின் பின் மகனுக்கென ஒரு வாழ்க்கை எஞ்ச வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடனிருக்கையில் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தன் மகன் விடுதலை ஆகியிருந்தால் அவனது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேண்டும். அதற்காகவாவது தன் மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மகனது வாழ்க்கையைப் பற்றி முழுவதும் தெரிந்த, அவரைப் புரிந்து ஏற்றுக் கொள்கிற ஒரு பெண் அமைந்தால் பேரறிவாளனுக்குத் திருமணம் செய்து பார்க்கும் ஆசை தனக்கு இருப்பதாக அந்தத் தாய் வெகு ஆதூரத்துடன் தனது ஆசையை முன் வைக்கிறார்.

ஆனால் தாயின் ஆசைக்கு மகனது பதில்;

அம்மா, 26 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கும் வந்திருக்கும் நான், இங்கிருக்கப் போவது வெறும் 30 நாட்கள் மட்டுமே! அதற்குள் இந்த ஆசைகள் எல்லாம் வீண்!’ என்பதே!

அற்புதம் அம்மாளின் ஆசை அப்படி ஒன்றும் பேராசை அல்ல! ஆனால் விதி சிலரது வாழ்க்கையில் மட்டும் மிக மோசமாக விளையாடி... மிக இயல்பாக ஈடேறக் கூடிய விஷயங்களைக் கூட படு பிரயத்தனப்பட்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வைத்து விடுகிறது. அப்போதும், இப்போதும் தன் மகனுக்காக ஓயாது நடந்து நீதி கேட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தாயின் ஆசை நிறைவேறுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com