‘ரிவெஞ்ச் போர்ன்’ எனப்படும் பழிவாங்கும் ஆபாசப் புகைப்படத் தொல்லைகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வது எப்படி?

2012 - 2014 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவணப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ‘மின்னணு வடிவத்தில் முறைகேடாக ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம்’ செய்யப்படுதல் 104 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
‘ரிவெஞ்ச் போர்ன்’ எனப்படும் பழிவாங்கும் ஆபாசப் புகைப்படத் தொல்லைகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வது எப்படி?

இன்று இணையத்தில், சமூக ஊடகங்களைச் சொந்த வீடு போலப் பாவித்துக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களைச் சர்வ சாதாரணமாகப் பகிர்ந்து கொள்ளும் எவரையுமே ஒருமுறையாவது மன உளைச்சலுக்கு ஆளாக்கவல்ல மிகப்பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ‘ரிவெஞ்ச் போர்ன்’  விவகாரம்.

முதலில் ரிவெஞ்ச் போர்ன் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். 

  • ஆணோ, பெண்ணோ நீங்கள் ஒருவருடன் மிகுந்த காதலுடன் பழகுகிறீர்கள், உங்களது உறவு ஒருவேளை திருமணத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முறிந்திருக்கலாம், அல்லது முறைகேடான வகையில் தொடர்ந்திருக்கலாம். ஏதோ ஒரு வகையில் நீங்கள் முக்கியத்துவம் அளித்து வந்த அந்த நபரின் மீதான நம்பிக்கையை நீங்கள் இழக்கும் போது உங்களுக்கிடையே மெலிதாகத் துவங்கும் பகை வளர்ந்து ஒரு கட்டத்தில் ரிவெஞ்ச் போர்ன் தாக்குதல் வரை செல்லலாம். இது ஒரு வகை. 
  • இரண்டாவது வகை உங்கள் மீது பொறாமை கொண்ட உங்களது நெருங்கிய நண்பர்கள் எனும் போர்வையில் உலவும் சில கெடுமதியாளர்களும் கூட இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம்.
  • மூன்றாவது வகை, சமூக வலைத்தளங்களில் உங்களுடன் இணைந்திருக்கும், உங்கள் மீது பொறாமையும், துவேஷமும் கொண்ட உங்களது நெருங்கிய உறவினர்களே கூட இப்படியான செயல்களின் ஈடுபடுவதற்கும் வய்ப்புகள் உள்ளன.
  • நான்காவது வகை, உங்களை யாரென்றே அறிந்திராத நபர்கள், அவர்களது வேலையே போர்ன் வலைத்தளங்களுக்கு பெண்களின் புகைப்படங்களை விற்பதாக இருக்கலாம். இவர்களை ‘போர்ன் தரகர்கள்’ என்று சொன்னால் தவறில்லை. இவர்கள், நீங்கள் அழகான உடலமைப்புடன் கூடிய பெண் எனில், லட்டு மாதிரி சமூக வலைத்தளங்கள் மூலமாகக் கிடைத்த உங்களது புகைப்படங்களை போர்ன் வலைத்தளங்களுக்கு விற்பதால் அதன் மூலமாகவும் இப்படிப்பட்ட சங்கடங்கள் நேரலாம். 

இப்படி நம்மால் யூகிக்க முடியாத அளவுக்குப் பல படு பயங்கரமான காரணங்கள் பல இருப்பதால் பெண்களோ, ஆண்களோ எவராயினும் தங்களது புகைப்படங்களைப் பிறர் பகிர முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் நல்லது. அல்லது புகைப்படங்களைப் பகிராமலே விட்டாலும் கூட எந்த ஒரு நஷ்டமும் இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

சரி ஒருவேளை இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த ஞானமெல்லாம் இல்லாமல் விளையாட்டுத்தனமாக உங்களது அந்தரங்கப் புகைப்படங்களை நீங்கள் இணையத்தில் பதிவேற்றி விட்டீர்கள். பிறகு உடனுக்குடனே ஏதோ ஒருவித அச்சத்தில் அதை நீக்கியும் வீட்டீர்கள் என்றாலும் கூட ஒரு முறை நீங்கள் பதிவேற்றிய புகைப்படங்கள் மேற்கூறிய விஷமிகளால் ஸ்டோர் செய்யப்பட்டு உங்களுக்கே தெரியாமல் வெவ்வேறு ஆபாச இணையதளங்களுக்கு உடனுக்குடனே விற்கப்பட்டிருக்கலாம். அப்படியொரு நிலை வரும்போது பாதிக்கப்பட்டவர்கள் என்ன விதமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து உங்களது அந்தரங்கமான புகைப்படம் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாச இணையதளங்களில் எவற்றிலேனும் பதிவேற்றப்பட்டு, உங்களை மிரட்டும் நோக்கில் பூமாராங்காக  உங்களுக்கே திரும்ப வரலாம்.

அப்போது அந்தத் உளத் தாக்குதலை சட்ட ரீதியாக எதிர்கொள்வது எப்படி? 

  • முதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை துணிந்து சைபர் கிரைமில் புகாராகப் பதிவு செய்ய வேண்டும். ஒருவரது அந்தரங்கப் புகைப்படத்தை, பாலியல் அனுகூலங்களுக்காகவோ, அல்லது மிரட்டும் தொனியிலோ எவர் ஒருவரும் முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது என்கிறது தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம். (IT Act) பாதிக்கப்பட்டவர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைமில் (FIR) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • 2012 - 2014 ஆண்டுகளுக்கிடையிலான தேசிய குற்ற ஆவணகப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த காலகட்டத்தில் மட்டுமாக மின்னணு வடிவத்தில் முறைகேடாக ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும் சதவிகிதம் எப்போதுமில்லாத வகையில் 104 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தற்போது அது இன்னமும் கூட அதிகரித்திருக்கலாம்.
  • தங்களுக்கு நேர்ந்த ரிவெஞ்ச் போர்ன் மிரட்டல்கள் மற்றும் மன உளைச்சல்களை எதிர்த்து சட்ட உதவியை நாடும் பெண்களுக்கு சைபர் கிரைம் மூலமாக உதவ முடிந்தாலும் கூட குற்றவாளிகளுக்கான தண்டனை வெறும் மூன்று ஆண்டுகளாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இம்மாதிரியான குற்றங்கள் குறைய வாய்ப்பிலாத சூழலே இப்போது வரை நிலவுகிறது. அந்த மூன்று ஆண்டுகள் தண்டனையிலும் கூட ஜாமீன் பெற்றுக் கொள்ளவும் சட்டத்தில் இடமிருப்பதால் இத்தகைய குற்றங்கள் குறைவதைக் காட்டிலும் மேலும், மேலுமென அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
  • இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டால் ஒழிய இத்தகைய அவலங்களில் சிக்கி சமயத்தில் தற்கொலை வரை முயற்சி செய்வோரின் துயர் தீர வழியே இல்லை.

இத்தனை தூரம் சட்ட உதவியை நாடியும் கூட இம்மாதிரியான பழிவாங்கும் ஆபாசப் புகைப்படத் தொல்லைகளில் இருந்து மீள முடியாத நிலையிலிருக்கும் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரு எளிய உபாயம் உண்டு. அது என்னவெனில் தேவையற்ற மன உளைச்சல்களுக்கு ஆளாவதை விடுத்து, துணிந்து அத்தகைய மிரட்டல்களை உதாசீனம் செய்து,

‘சட்டப்படி ஆபாசப் புகைப்படங்களைப் பகிர்வது தான் குற்றம், நான் பாதிக்கப்பட்டவள்’ என்னால் இனியும் இந்த மன உளைச்சலில் சிக்கித் தவிக்க முடியாது, என்ன மிஞ்சிப் போனால் புகைப்படங்களை லட்சம், கோடி முறை பகிர முடியுமா? பகிர்ந்து கொள், என்னால் தடுக்க முடியாத ஒன்றின் மீதான அச்சத்தை நான் புறக்கணிக்கிறேன், அதைக் கடந்து செல்கிறேன்’

- என்று மன உறுதியுடன் வெளிப்படையாகப் பிரகடனம் செய்து, அத்தகைய மிரட்டல்களைக் காலடியில் இட்டு நசுக்கி விட்டுச் செல்வீர்களெனில் அதுவே இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய முதல் பெரிய வெற்றியாக இருக்கக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com