ஜெயலலிதா, சோபன் பாபு பற்றி பிரபல தெலுங்கு எழுத்தாளர் கே.ராமலஷ்மி...

பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி மறைந்த ஜெயலலிதாவைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் ஆச்சர்யப் படத்தக்கவை.
ஜெயலலிதா, சோபன் பாபு பற்றி பிரபல தெலுங்கு எழுத்தாளர் கே.ராமலஷ்மி...

பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி மறைந்த ஜெயலலிதாவைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் ஆச்சர்யப் படத்தக்கவை. தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதா என்ற பிம்பம் ஒரு இரும்புப் பெண்மணியை மட்டுமே எப்போதும் நினைவிலாடச் செய்யும். அவர் தமிழக அரசியல் களத்திலும் சரி, சினிமா உலகத்திலும் சரி தனது மென்மையான குணங்களோ அல்லது சாத்வீக பிம்பமோ அவ்வளவாக வெளித்தெரியாதவாறே அமைந்தவராக இருந்தார். தமிழ் சினிமாக்களில் தலைகாட்டத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலும் கூட படப்பிடிப்புத் தளங்களில் யாருடனும் பெரிதாக முகம் காட்டிப் பேச விரும்பாது ஏதேனும் ஆங்கிலப் புத்தகங்களில் முகம் புதைத்துக் கொள்பவராகவே இருந்தார். ஆனால் அவருக்குள்ளும் சில மென்மையான பக்கங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு முதல் உதாரணம் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடனான அவரது உறவு!

அதைப் பற்றி பிரபல தெலுங்கு எழுத்தாளரும், 1987 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்குரியவருமான ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி என்ன சொல்லி இருக்கிறார்? எனப்பாருங்கள்; (தெலுங்கில் தனது கணவரைப் போலவே இவரும் பிரபல எழுத்தாளரே! தமிழில் ராஜம் கிருஷ்ணனைப் போல தெலுங்கில் பெண்களது உரிமைகள் சார்ந்து பல படைப்புகளை உருவாக்கிய பெருமை இவரைச் சேரும்).

ஜெயலலிதாவைப் பற்றி மட்டுமல்ல எம்ஜிஆர், கருணாநிதி, ஸ்டாலின், சசிகலா, சோபன் பாபு என தனக்குத் தெரிந்தவரை, தான் அவர்களைப் பற்றி அறிந்த விஷயங்களை தெலுங்கு இணையதள ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார் கே.ராமலஷ்மி!

அவரது நேர்காணலைக் காண்பதற்கான யூ டியூப் வீடியோ இணைப்பு...

எம்ஜிஆரைப் பற்றி கே. ராமலஷ்மி...

எனக்குத் தெரிந்த அளவில் எம்ஜிஆர் மிக நல்ல மனிதர். கனிவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஜெயலலிதாவைப் பற்றி கே.ராமலஷ்மி...

ஜெயலலிதா, ஒரு பூவைப் போல மென்மையானவர், தொட்டால் வாடி விடும் அளவுக்கு மிக மென்மையான மலர் அவர். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம், அத்தனை அழகு மட்டுமல்ல இனிமையானவரும் கூட! தெலுங்கில் கோரண்டாகு (மருதாணி) திரைப்படத்தின் படப்பிடிப்பு அவரது இல்லத்தில் தான் நடந்தது. மதியத்துக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் கூட, அப்போது அங்கிருந்த அத்தனை பேரையும் மதிய உணவை தன் வீட்டிலேயே உண்டு செல்ல வேண்டும் என்று இனிமையாக வற்புறுத்தியவர். வற்புறுத்தியதோடு, தன் கையாலேயே அருமையாகச் சமைத்தும் போடுவதாகச் சொல்லி அனைவரைக்கும் உணவளித்து சந்தோசப்பட்டவர். அவரை சோபன் பாபு மணந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவே இல்லை. அதைத் தான் விதி என்கிறோம்.

சசிகலாவைப் பற்றி...

அவரது முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை, இப்படியும் ஒரு பெண் இருக்கக் கூடுமா? ஜெயலலிதாவுடன் இருந்தவரை நன்றாகச் சம்பாதித்தார் இல்லையா? அதோடு விட்டிருக்க வேண்டும். நான் வாசித்த பல தமிழ் பத்திரிகைகளில், ஜெயலலிதாவுக்கு தீவிரமான ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை இருந்தது... அவர் உடல்நலம் குன்றிய அன்று இரவில் இருவருக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதில் ஜெயலலிதாவைப் பிடித்து சசிகலா தள்ளி விட அவர் கீழே விழுந்திருக்கிறார். போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு சமைத்துப் போட ஒரு வயதான பிராமணப் பெண்மணி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நடந்த நிகழ்வைப் பார்த்து அதிர்ந்து ‘ அம்மா, அவர் கீழே விழுந்து விட்டாரே! என்று ஓடி வருகையில், இதில் தலையிட்டாயானால், கொன்று விடுவேன்’ நீ தள்ளிப்போ என்று விரட்டியிருக்கிறார் சசிகலா என்றெல்லாம் செய்திகள் பல்வேறு யூகங்களைக் கிளப்புவதாக இருந்தன. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் திகிலான புதிர்கள் மட்டுமே! இப்படியும் ஒரு பெண்ணால் இருக்க முடியுமா? என்று தோன்றியது எனக்கு. இந்தச் சம்பவத்தைப் பற்றி பல தமிழ் புலனாய்வு இதழ்களில் பல கோணங்களில் யூகமாக எழுதித் தள்ளினார்கள். நெருப்பில்லாமல் புகையாதே! ஆனால் அதற்கெல்லாம் ஆதாரங்கள் இருந்தால் அல்லவோ அவரைத் தண்டிக்க முடியும்?!

சோபன் பாபுவைப் பற்றி...

சோபன் பாபுவிடம் இருந்து ஒருமுறை அவரது வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது, சென்றிருந்தேன், அப்போது அவர், அம்மா, நீங்கள் எப்போதுமே பெண்களைப் பற்றியே நாவல் எழுதுகிறீர்கள், பெண்கள் சார்பாகவே திரைக்கதை எழுதுகிறீர்கள், ஏன் ஆண்களின் கஷ்ட நஷ்டங்களையும் தான் கொஞ்சம் எழுதினாலென்ன?! என்றார். நான் சிரித்துக் கொண்டேன், அன்றைய காலகட்டத்தில் பெண்கள் தானே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள், ஆண்கள் அல்லவே... ஜெயலலிதாவுக்கும், சோபன் பாபுவுக்கும் இடையில் ஒரு அழகான உறவு இருந்தது. சோபன் பாபுவின் மனைவியைப் பார்த்திருக்கிறீர்களா? தோற்றத்தைப் பொருத்தமட்டில் அவருக்கும் சோபன்பாபுவுக்கும் கொஞ்சமும் பொருத்தமிருக்காது. சோபன்பாபுவின் குருவின் மகள் அவர். தன் குருவால், பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது என்பதால், தானே அவரை மணந்து கொண்டதாக சோபன் பாபு கூறியிருந்தார். அப்படித்தான் அவர்களது திருமணம் நடந்திருந்ததே தவிர அவருக்குப் பொருத்தமான மனைவி அல்ல அவர். ஜெயலலிதா சோபன்பாபுவுக்கு மிகச்சிறந்த மனைவியாக விளங்கியிருக்கக் கூடும், ஒருவேளை அவர்களுக்கு திருமணம் நடந்திருந்தால்!
ஆனால் அவர்கள் இருவருமே சோபன் பாபுவின் முதல் மனைவியை மிகவும் மதித்தார்கள். அவரை ஏமாற்ற இவர்களுக்கு விருப்பமில்லை. அவர்கள் நியாயமாக நடந்து கொண்டார்கள், அவ்வளவு தான்.

ஸ்டாலினைப் பற்றி...

இப்போது தமிழக சட்டமன்றத்தை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள் இல்லையா? எப்படி இருக்கிறது? அங்கிருப்பவர்களில் ஸ்டாலினே தேவலாம் போல இருக்கிறது அங்கத்திய நிகழ்வுகளைக் காணும்போது. ஸ்டாலின் இளைஞராக இருக்கும் போது அவரது வீடு கிண்டி அருகில் இருந்தது. அங்கு அக்கம்பக்கத்து கல்லூரிப் பெண்கள் எல்லாம் அவரது பார்வையில் பட்டு விடக்கூடாது என்று முக்காடு போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு நடமாடுவார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். அத்தனை மோசமானவராகக் கருதப்பட்ட ஸ்டாலினையே தேவலாம் என்று ஆக்கி விட்டார்கள் இப்போது அங்கிருக்கும் ஆளும்கட்சிக்காரர்கள். 

கருணாநிதி பற்றி...

‘கருணாநிதி கெட்டவரில்லை, அவர் மிகச்சிறந்த ஸ்காலர். தெலுங்கில் சிலப்பதிகாரத்தை மொழிபெயர்ப்பதற்கான உரிமையைக் கேட்டு அவரைச் சந்தித்திருக்கிறேன் ஒருமுறை. உன்னால், முடியுமா? நன்றாக மொழிபெயர்ப்பாயா? என்றார்... நான், முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிறகு தெலுங்கில் மொழிபெயர்ப்பேன் என்று வேண்டுகோள் விடுத்தேன். சரி அப்படியானால் அதற்கு கட்டணமாக என்ன தருவாய்? என்று கேட்டார்,  நூல் உரிமையைக் கேட்டு நான் தான் உங்களிடம் வந்திருக்கிறேன், நீங்கள் கேட்கும் தொகையைத் தருகிறேன் என்றேன். அவர் உடனே சிரித்துக் கொண்டே சரி இந்தா, தெலுங்கில் சிலப்பதிகார மொழிபெயர்ப்பு உரிமை உனக்கே’ என்று எழுதிக் கொடுத்தார். கட்டணமாக நான் 111 ரூபாய்கள் கொடுத்தேன்.’

Image courtesy: the news minute.com, google & youtube.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com