இப்போதும் பெண்கள் மாப்பிள்ளையாக அரவிந்த் சுவாமியைக் கனவு காண்கிறார்களா?!

பெரும்பாலான வீடுகளில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டு வந்து கிளிஷேவாக சொல்லும் ஒரு வார்த்தை இப்போது வரையிலும் புழக்கத்தில் இருக்கிறது, ’மாப்பிள்ளை அரவிந்த் சுவாமி மாதிரி இருக்கிறார்... என்பதே 
இப்போதும் பெண்கள் மாப்பிள்ளையாக அரவிந்த் சுவாமியைக் கனவு காண்கிறார்களா?!

காதலர் தின ஸ்பெஷல்!

90 களில் அரவிந்த் சுவாமியைக் காதலிக்காத பெண்கள் இல்லை. இதை 90 களின் இளம்பெண்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இடையில் சில வருடங்கள் காணாமல் போயிருந்த தங்களது ஹீரோ அட்லீஸ்ட்  செம ஸ்டைலிஷ் ஆண்ட்டி ஹீரோவாகவாவது திரும்ப வந்தாரே என்று திருப்தியாகவே இருக்கும் இப்போது. 

பெரும்பாலான வீடுகளில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டு வந்து கிளிஷேவாக சொல்லும் ஒரு வார்த்தை இப்போது வரையிலும் புழக்கத்தில் இருக்கிறது, ’மாப்பிள்ளை அரவிந்த் சுவாமி மாதிரி இருக்கிறார்... என்பதே அது. மாப்பிள்ளை அரவிந்த் சுவாமி மாதிரி இருப்பதாகச் சொல்லிச் சொல்லியே பல திருமண புரோக்கர்கள் கல்லாக் கட்டிய காலம் அது. மாப்பிள்ளை அரவிந்த் சுவாமி மாதிரி இருந்தாலும் இல்லாமலே போனாலும் பெண் வீட்டாருக்கு கவலை இல்லை. ஏனென்றால் அது வெறுமே ஒரு சந்தோசகரமான எதிர்பார்ப்பு மட்டும் தான் அதைத்தாண்டி எதுவுமில்லை என்பது பெண்களுக்கும் தெரியும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் தெரியும். மாப்பிள்ளை அரவிந்த் சுவாமி மாதிரி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் காட்சியில் காட்டப்படுவதைப் போல தனது வருங்காலக் கணவன் தன்னைச் சார்ந்த எல்லோருடனும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்பதாகக் கூட அர்த்தம் இருக்கலாம் இல்லையா? ரோஜா படத்தில் அரவிந்த் சுவாமி அறிமுகக் காட்சியே பெண் பார்க்கும் படலம் தான்...

சென்னை கமலா தியேட்டரில் போகன் திரைப்பட புரொமோஷனுக்காக வந்து ரசிகர்களிடையே பேசிய அரவிந்த் சுவாமியிடம் படத்தின் இயக்குனர் ‘அதெப்படி நீங்கள் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை இத்தனை வெள்ளையாக இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார் அதற்கு அரவிந்த் சுவாமி;

‘நான் உள்ளே வரும் போது அதோ அந்த ஃபோகஸ் லைட்டை அணைத்து விடுங்கள் என்று கூறினேன். ஆனால் அதை அணைக்காமல் விட்டு விட்டார்கள். இத்தனை வெளிச்சமாக இருந்தால் நான் மட்டுமல்ல யாராக இருந்தாலும் வெள்ளையாகத் தான் தெரிவார்கள் என்கிறார் வெள்ளந்திச் சிரிப்புடன், அது அரவிந்த் சுவாமி!

சில வருடங்களுக்கு முன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிரகாஷ் ராஜ் நடத்திய  ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’யில் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டார் அரவிந்த் சுவாமி. நிகழ்ச்சியின் வரவேற்புப் படலத்தில் பிரகாஷ் ராஜ் அரவிந்த் சுவாமியைப் பார்த்து; ‘அதெப்படிங்க ரோஜா படத்துல இருந்து இப்போ வரைக்கும் மாற்றமே இல்லாம நீங்க சிரிக்கும் போதெல்லாம் உங்க கன்னத்துல ரெண்டு ஆப்பிள் தெரியுது! என்று சிலாகித்து ரசித்தார்.

கடல் திரைப்படப் புரொமோஷன் விழாவில் நிகழ்வைத் தொகுத்து வழங்கிய ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், அரவிந்த் சுவாமியிடம் ‘ரோஜா’ படத்தில் நடிக்கும் போது நீங்கள் எதற்காகவோ நிஜமாகவே அழுதீர்களாமே! எதற்கு என்று இப்போது இந்த மேடையில் சொல்லுங்கள் என்று கேட்டார். அரவிந்த் தேசியக் கொடியை எரிக்கும் சீனைச் சொல்கிறீர்களா என்பார். இல்லை, அது இல்லை. வேறொரு காரணத்துக்காக நீங்கள் அழுதீர்கள் என்று என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குத் தெரியும். இப்போது இங்கே இவர்களும் தெரிந்து கொள்ளட்டும். சொல்லுங்கள் என்றார்.

இப்படி மாட்டி விட்டு விட்டீர்களே... என்று சிரிப்புடனுடம், கொஞ்சம் வெட்கத்துடனும் அரவிந்த் சுவாமி சொன்ன பதில் கியூட்டோ கியூட். ‘இல்லை அப்போது எனக்கு 21 வயது தான். ரொமாண்டிக் சீன்களில் நடிக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்காகத் தான் நான் அழுதிருக்கிறேன்’ என்றார். ரோஜாவின் வெற்றிக்கு படத்தில் இருந்த கவிதைத் தனமான காதல் காட்சிகளும் பிரதானக் காரணங்கள் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அன்றைக்கெல்லாம் ‘புது வெள்ளை மழையையும், காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே?’ வையும் ரசிக்காத காதலர்களும், தம்பதிகளும், கல்லூரி பருவத்தினரும் இருக்கவே முடியாது. இன்றைக்கும் கூட நிலமை அதே தான்.

90 களில் ‘தளபதி’ மூலம் மணிரத்னத்தால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி ரோஜா, பம்பாய் என்று அரவிந்த் கிளாசிக்கல் ஹிட் திரைப்படங்கள் கொடுத்திருந்தாலும், நடு நடுவே மறுபடியும், தேவராகம், தாலாட்டு, உட்பட சில வெற்றி பெறாத திரைப்படங்களிலும் அரவிந்த் சுவாமி நடித்திருந்தார். சுஹாசினிக்காக ‘இந்திரா’ மணிரத்னத்துக்காக ‘உயிரே’ படத்தில் ஷாருக்கானுக்கு டப்பிங் பேசியது என்று சில காலம் ஓடியது. தேவராகம் கதை கொஞ்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஒட்டாத கதையாக இருந்தாலும் பாடல்கள் அனைத்து தேனில் நனைத்த பலாச்சுளைகள்! சாம்பிளுக்கு இதைக் கேளுங்கள். வயது வித்யாசம் மட்டும் பொருத்தமாக இருந்திருந்தால்  ஸ்ரீதேவிக்கு கமலை விட கச்சிதமான மேட்ச் அரவிந்த் சுவாமியாகத் தான் இருந்திருக்கக் கூடும். பாடலைக் காணொளியாகக் கண்டால் பார்ப்பவர்களுக்கே அது புரியக் கூடும்.

பொருந்தா ஜோடி போல ரேவதியுடன் ஒரு படத்தில் செண்பகப் பூவைப் பார்த்து ஒரு சேதி சொன்னது காற்று’  என்று டூயட் பாடுவார். இந்தத் திரைப்படத்தில் அரவிந்தும், ரேவதியும் தனித்தனியாக அழகாகவே இருப்பார்கள். ஆனால் இருவருக்கும் ஏதோ ஒன்று செட்டாகவில்லை. இந்நாளைய டி.வி ஹீரோயின்களில் பலர் அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருப்பார்கள். அந்தப்படமும் பெரிதாக வெற்றி பெறாத படமே! ஆனால் இந்தப் பாடல் காதுக்கு மட்டுமில்லை கண்ணுக்கும் பழுதில்லாமல் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

மேலே சொன்ன படங்களுக்குப் பின் ராஜீவ் மேனனின் மின்சாரக் கனவு... 
அழகன் அரவிந்த் சுவாமியை தனது குரங்குச் சேட்டையால் ஓவர் டேக் செய்து பிரபு தேவா அந்தப் படத்தில் காஜோலுக்கு ஹீரோவாகி விடுவார். படம் சுமாரான ஹிட் ஆனால் பாடல்களோ எவர்கிரீன் ஹிட். இதிலும் அரவிந்த் சுவாமிக்கு கஜோலுடன் ஒரு சூப்பர் ஹிட் ரொமாண்டிக் டூயட் உண்டு. அது தான் தங்கத் தாமரை மகளே... அரவிந்த் சுவாமி சார்பில் எஸ்பிபி தனது கானாம்ருதத்தால் உருகி உருகிக் கரைந்திருப்பார் கஜோலுக்காக.  

மம்மூட்டியுடன் இணைந்து ‘புதையல்’ என்றொரு படத்தில் மாறுபட்ட நடிப்பைத் தருகிறேன் என்ற பெயரில் அரவிந்த் சுவாமி நகைச்சுவை ஹீரோவாக முயற்சித்திருந்தார். ஆனால் படம் சுமாராகக் கூட ரசிகர்களை ஈர்த்ததாகத் தெரியவில்லை.
 
நடுவில் மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தில் கலைஞராக நடித்த பிரகாஷ் ராஜுக்காக ‘உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே’ என்று காதல் வசனம் பேசி அட்டகாசமான ரொமாண்டிக் ட்ரீட் கொடுத்தார். இந்த வசனத்தைப் பற்றிய சுவாரசியமான விசயம் ஒன்றை ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வந்த அரவிந்த் சுவாமியிடம் பிரகாஷ்ராஜ் பகிர்ந்து கொண்டார். அதாவது  படத்தில் நடித்த தானே அந்தக் காட்சிக்கான வசனத்தை காட்சியிலும் பேசி விடுவதாக பிரகாஷ் ராஜ் மணிரத்னத்திடம் பலமுறை கேட்டதாகவும், ஆனால் மணிரத்னம் அரவிந்த் சுவாமி பேசிய விதமே நன்றாக இருப்பதாகக் கூறி படத்தை வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். அந்த எவர்கிரீன் வசனத்திற்கான காணொளி இதோ உங்களுக்காக...

இடையில் இயக்குனர் மகேந்திரனின் ‘சாசனம்’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி பிற்பாடு அந்தப் படமும் காணாமல் போனதைப் போலவே அரவிந்த் சுவாமியும் தமிழ் திரையுலகை விட்டு காணாமலே போனார்.

சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபடியும் மணிரத்னத்தின் ‘கடல்’ மூலம் அர்விந்த்சாமி ரீ எண்ட்ரி ஆனார் என்று சொல்லலாம். கடலில் கண்ட அரவிந்த் சுவாமியாகவே ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்களில் மாட்டிக் கொண்டிருந்திருந்தால் அது அவருக்கு மீண்டும் ஒரு தேவராகு!!! காலம் ஆகியிருக்கக் கூடும். 

அப்படியான துரதிருஷ்டம் எதுவும் நிகழாமல் ‘தனி ஒருவனில்’ சித்தார்த் அபிமன்யூவாக தனித்த அடையாளத்துடன் வந்து டாப் கியரில் தமிழ் திரையுலகில் தனது இருப்பின் முக்கியத்துவத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்து விட்டார்.

‘தனி ஒருவனுக்கு’ முன்பு ‘கடல்’ திரைப்படம் தான் அரவிந்த் சுவாமியின் ரீ எண்ட்ரி. அந்தப் படத்தைப் பொறுத்த வரை அது அவரது பழைய ரசிகைகளை!!! மட்டுமே ஏதோ ஒரு வகையில் திருப்திப் படுத்தும் விதத்தில் இருந்ததே தவிர தனி ஒருவனைப் போல இந்தக் கால இளசுகளையும், குழந்தைகளையும் கூட ஈர்க்கக் கூடிய விதத்தில் அந்தப் படம் அமையவில்லை. தனி ஒருவனில் படத்தின் ஹீரோவுக்கு இணையாக தனி ஒருவனாக அரவிந்த் ஸ்வாமி பட்டையைக் கிளப்பினார். இதைப் பற்றி பேசும் போது ஒரு நேர்காணலில் அரவிந்த் ஸ்வாமி சொன்ன பதில்;

‘90 களில் நான் சினிமா பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவனாக இருந்து விட்டேன். ‘சூது கவ்வும்’ மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கும் போது எனக்கு 46 வயதாகி விட்டது. அதனால் என்ன இன்னும் 4, 5 வருடங்கள் எனக்கு பிரைம் டைம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.  அதற்குள் என்னால் எத்தனை நல்ல படங்கள் தர முடியுமோ? அத்தனையிலும் எனது நடிப்பின் மாறுபட்ட பரிணாமங்களை தர முயற்சிப்பேன்.’

இந்த பாஸிட்டிவ் எண்ணங்கள் தான் அரவிந்த் சுவாமியை அடுத்தடுத்து தெலுங்கு தனி ஒருவன் ரீமேக், போகன், சதுரங்க வேட்டை என உற்சாகத்தோடு நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

20 வயதில் ‘தளபதி’,  21 வயதில் ‘ரோஜா’, 30 வயதில் ‘பம்பாய்’,  ‘அலைபாயுதே’ கெஸ்ட் ரோல், 40 வயதில் ‘கடல்’, 46 வயதில் ‘போகன்’ இப்படி அரவிந்த் சுவாமியின் தமிழ் சினிமா கிராப் இடையிடையே அறுந்து, அறுந்து மீண்டதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? இதோ அவரே சொல்கிறார்.

‘முதலில் கல்லூரி நாட்களில் பாக்கெட் மணிக்காக விளம்பரப்படங்களில் நடிக்கத் தொடங்கியது தான் ஆரம்பம். லியோ காஃபி, சாலிடர் டி.வி விளம்பரங்களைப் பார்த்து விட்டு மணிரத்னம் தளபதி படத்தின் அர்ஜூன் ரோலுக்கு மேக் அப் டெஸ்ட் வரச் சொன்னார். சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் பற்றி எல்லாம் தெரியுமென்றாலும் சினிமாவைப் பற்றி சினிமா உலகத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாதவனாக இருந்ததால் அவர்களோடு பயமின்றி நடிக்க முடிந்தது. அடுத்து ரோஜாவில் நடிக்க மணி என்னிடம் பேசிய போது நான் என் அப்பாவிடம் பேசச் சொன்னேன். அப்பாவுக்கு நான் சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்லப் போகிறவனுக்கு எதற்கு சினிமா? என்று கேட்டார். மணிரத்னம் அப்பாவுடன் பேசி அவரை சம்மதிக்க வைத்து தான் ரோஜாவில் நடித்தேன். ‘ரோஜா’ முடிந்ததும் நான் படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டேன்.

அரவிந்த் சுவாமி நடித்த லியோ காஃபி விளம்பரம் இதோ;

அரவிந்த்சுவாமி நடித்த சிந்தால் சோப் விளம்பரம் காண...

இடையில் 93 ல் என் அம்மாவுக்கு கேன்சர் எனத் தெரிந்ததும் அவரோடு நேரம் செலவிட விரும்பி மீண்டும் இந்தியா வந்து அம்மாவோடு தங்கி இருக்கத் தொடங்கினேன். என் பெற்றோர் இருவருமே 95 காலகட்டத்தில் இறந்து விட்டார்கள். அப்பா இறந்த பின் அவரது தொழில்களைப் பாதுகாத்து, நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. அதனால் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க முடியாமலானது. அதைத் தொடர்ந்து திருமணம், குழந்தைகள் என சில வருடங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கினேன். என் குழந்தைகள் இப்போது வளர்ந்து விட்டார்கள். அவர்கள் இப்போது எல்லா நேரங்களிலும் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இப்போது எனக்கு நிறைய நேரம் இருக்கிறது நல்ல சினிமா செய்ய. அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்.’  

திரைப்படங்கள் தவிர அரவிந்த் சுவாமி  ‘டேலண்ட் மேக்ஸிமஸ்’  என்று ஒரு பிபிஓ ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நடுவில் நடிக்காமலிருந்த சில வருடங்களில் ஒரு விபத்தில் சிக்கி உடல் பருமன் கூடி கிட்டத்தட்ட பழம் பெரும் நடிகர் ரங்காராவுக்கு வாரிசாக அப்பா வேடங்களில் பொருந்திப் போகக் கூடிய அளவுக்கு அரவிந்த் சுவாமி உருமாறியிருந்தார்.

சற்றேறக் குறைய உலக அழகி ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட சமயம் அது. அப்போது அழகுக்கு உதாரணமாகக் கூறப்படும் இவர்கள் இருவரது மாறிப்போன தோற்றங்களைப் பற்றி நிறைய கேலி, கிண்டல், மீம்ஸ்கள் என இணையத்திலும், அச்சு ஊடகங்களிலும் கலாய்த்து தள்ளினார்கள்.

ஆனந்த விகடனில் ஒரு படி மேலே போய் திருமணமாகாத ஒரு முதிர்கன்னியின் கனவுலகில் வாழும் நாயகனாக அழகான ரோஜா காலத்திய அரவிந்த் சுவாமியை மையமாக்கி சிறுகதையே வெளிவந்தது. ஆனால் அரவிந்த் சுவாமி இதனாலெல்லாம் மனமுடைந்து போனதாகத் தெரியவில்லை. அந்தச் சூழலில் தான் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும் என நினைத்த அரவிந்த் சுவாமியை அவரது மனைவிக்குப் பிடிக்காமல் போகவும் ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறதே என அவரது ரசிகைகள் அப்போது ஆச்சர்யப்பட்டிருக்கலாம், ஆனால் அந்தக் காரணங்கள் எல்லாம் அவரது பெர்சனல் என்பதோடு அரவிந்த் சுவாமி மறுமணம் செய்து கொண்டு, தனது திரைப்பிரவேசத்தையும் கடலில் இருந்து மீண்டும் தொடங்கினார். ஏனெனில் அரவிந்த் சுவாமி ரசிகர்களை எல்லாம் தாண்டி மணிரத்னம் ஒருவேளை அதிகப்படியாக அவரை நேசித்திருப்பாரோ என்னவோ?! அதனாலன்றோ மறுபடியும் திரும்பிவந்தார் அழகான மாப்பிள்ளை.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அழகான மாப்பிள்ளை என்றால் அது அரவிந்த் சுவாமியும் அவர் நடிக்காமலிருந்த காலத்தில் அஜித்தும் தான் என்றொரு மாய பிம்பம் சில பொழுதுகள் இருந்து பதங்கமாயிற்று என்பது நிதர்சனம். 

போகன் புரொமோஷன் விழாவில் அரவிந்த்சுவாமியிடம் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வி;

‘சார் தமிழ்நாட்ல மாப்பிள்ளைன்னா அது நீங்க மட்டும் தானா? ஏன் எல்லாரும் மாப்பிள்ளை அரவிந்த் சுவாமி மாதிரி இருக்கணும்னு விரும்பறாங்க. இப்பக் கூட அப்படித்தானாமே? என்றதற்கு;

கண்களும், கன்னங்களும் ஒளி கொண்ட குளிர் சிரிப்புடன் அரவிந்த் சுவாமி சொன்ன பதில்; ‘இல்லையே... இப்ப நான் நெகடிவ் ரோல் எல்லாம் பண்றேன். இப்ப அப்படி நினைக்க மாட்டாங்களே’ என்றார்.

இதற்கான பதில் பெண்களுக்குத் தெரிந்திருக்கும். அதை அவர்கள் சொல்லத் தேவையில்லை

90 களின் இளம்பெண்கள் மட்டுமல்ல தனி ஒருவனுக்கும், போகனுக்கும் பிறகு 2017 ன் இளம்பெண்களுக்கும் அரவிந்த் சுவாமியைப் பிடித்திருக்கிறது என்பதே அவரடைந்த வெற்றி! 

ஏதோ திரையுலகில் திரும்பி வந்தோம், பிடித்த கதாபாத்திரங்களில் நடித்தோம், போனோம் என்றில்லாமல்  சமகால சமூகப் பிரச்சினைகளுக்காகவும் அரவிந்த் சுவாமி குரல் கொடுக்கத் தவறுவதில்லை என்பதை சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் அவ்வப்போது வெளிவரும் அவரது கருத்துக்கள் மூலம் தெளிவாகிறது.

குறிப்பாக ஜல்லிக்கட்டு புரட்சியின் போது காவல்துறையினர் ஆட்டோவுக்கு தீ வைத்த சம்பவத்தை காணொளி ஆதாரத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது, பீட்டா அமைப்பினரின் மிருக வதைகளை எண்ணிக்கை வாரியாக  அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டிய அவரது பதிவு, மேலும் தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதரண சூழலில்  ஊழல் ஆட்சியை ஒழித்துக் கட்ட ‘மீண்டும் ஒரு தேர்தல்’ என்பதே சரி என பதிவிட்டது என அரவிந்த் சுவாமி இன்றைய தேதிக்கு சினிமா மட்டுமல்லாமல் சமுதாயப் பங்களிப்பிலும்  மிகவும் உற்சாகமாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார். 

ஆக மொத்தத்தில் போகனில் லீட் ரோல் செய்ததில் அரவிந்த் சுவாமி ரிட்டர்ன்ஸ், செகண்ட் இன்னிங்ஸ் களை கட்டத் தொடங்கி இருக்கிறது.

இனி வரும் நாட்களில் அழகான மாப்பிள்ளைக்கு அரவிந்த் சுவாமியை உதாரணம் காட்டுகிறார்களோ இல்லையோ, திறமையான நடிகர் என்பதற்கு நிச்சயமாக இவரை உதாரணம் காட்டலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com