தூக்கியெறியும் பால் பாயிண்ட் பேனா சுற்றுப்புறச் சூழலை வெட்டிச் சாய்க்கும் வாள்!

"விண்வெளி வீரர்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டதுதான் பால் பாயிண்ட் பேனா. இன்று மை போட்டு எழுதும் பேனாக்களை பயன்பாட்டில் இல்லாமல் செய்துவிட்டது.”
தூக்கியெறியும் பால் பாயிண்ட் பேனா சுற்றுப்புறச் சூழலை வெட்டிச் சாய்க்கும் வாள்!

"பிளாஸ்டிக் கழிவுகள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பிளாஸ்டிக் உறைகள், பாட்டில்கள் மட்டும்தான்.  ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் பாயிண்ட் பேனா நம் நினைவுக்கு வருவதில்லை. அதுவும் பிளாஸ்டிக் தயாரிப்புதான்.  நாம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பேனா சுற்றுப்புறச் சூழலை வெட்டிச் சாய்க்கும் வாளாக மாறியுள்ளது'' என்கிறார்  பால் பாயிண்ட் பேனா பயன்படுத்துவத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லட்சுமி மேனன். இவர் ஒரு  பன்முகக் கலைஞர். வரைகலை விற்பன்னர். இன்டீரியர் டிசைனர். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஆர்ட் காலரியில் பணிபுரிந்தவர். தற்சமயம் எர்ணாகுளத்திற்குப் பக்கத்தில் வசித்து வருகிறார். இவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"விண்வெளி வீரர்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டதுதான் பால் பாயிண்ட் பேனா. இன்று மை போட்டு எழுதும் பேனாக்களை பயன்பாட்டில் இல்லாமல் செய்துவிட்டது.”

அதிலும் தற்போது "உபயோகி... (மை தீர்ந்ததும்) தூக்கி எறி..'' (use and throw)  இந்த வகை பேனாக்கள் ஒரு ரூபாய் விலையில் கிடைப்பதால்  மக்களும் அவைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். முன்பு உபயோகித்த ரீஃபில்லை மட்டுமே தூக்கி எறிவோம். பேனாவின் உடல் (body) நம்மிடம் இருக்கும். மீண்டும் ரீஃபில்லை அதில் போட்டு மீண்டும் பயன்படுத்துவோம். ரீஃபில் பிளாஸ்டிக்கில்  செய்யப்படுவதால், உபயோகிக்கப்பட்ட வளையும் தன்மையுள்ள ரீஃபில் மட்டுமே பிளாஸ்டிக் கழிவாகக் கருதப்பட்டது. இப்போது உறுதியான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட, பால் பாயிண்ட் பேனாக்கள் பிளாஸ்டிக் கழிவுகளாகிவிட்டன. இந்தப் பேனாக்களில் இருக்கும்  உலோகத்தால் ஆன முனை, உள்ளே ஒட்டியிருக்கும் மை, காரணமாக மறுசுழற்சி செய்வதில் பல பிரச்னைகள் உள்ளன. அதனால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பேனாக்கள்  மக்கிப் போகாத கழிவாக மெல்லக் கொல்லும் விஷமாகப் பரவி 
வருகிறது.

சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதற்கும், உலகம் வெப்பமயம் ஆவதற்கும் வளரும் நாடுகளைக் குறை சொல்லும் அமெரிக்காவில்  மட்டும் ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான ""யூஸ் அண்ட் துரோ'' பேனாக்கள் தூக்கி எறியப்படுகின்றன. 

இந்தியாவிலும் மக்கள்தொகை அதிகம் ஆனதால் பல கோடி பேனாக்கள் ஆண்டுதோறும்  பிளாஸ்டிக் கழிவுகளாக தூக்கி எறியப்படுகின்றன. இவை நாம் தெரிந்தே உருவாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள். பால் பாயிண்ட் பேனாக்களை, இதர பிளாஸ்டிக் பொருள்களைப்போல்  மறுசுழற்சி செய்வது கடினம். சாதாரண பிளாஸ்டிக் கழிவுகள் மக்கிப் போக பல நூற்றாண்டு   பிடிக்கும். இந்த பால் பாயிண்ட் பேனா கழிவுகள் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மக்கிப் போகாது. இவை நிரந்தரக் கழிவுகளாக  அப்படியே  நிற்கும்'' என்று கூறும் லட்சுமி மேனன் தன்னால் முடிந்த ஒரு புதுமையான தீர்வைத் தந்திருக்கிறார்.
அந்தத் தீர்வுதான் "பேப்பர் பேனா'!  

கெட்டியான மையைக் கசியாமல் வைப்பதற்காக பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட சிறிய  குழாயைப் பயன்படுத்திதான் ஆக வேண்டும். காகிதக் குழாயில் கெட்டியான மையை  வைப்பதில் பல பிரச்னைகள் உண்டு. மையின் ஈரம் காகிதத்தால் உறிஞ்சப்படும். மை கடினமாகி பேனாவின் முனைக்குத் தொடர்ச்சியாக வராது. அதனால் வேறு வழியில்லாமல்  பந்து முனை, கெட்டியான மை அடைக்கப்பட்ட ரீஃபில்லை நான் வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறேன். அதைப்  பிடித்து  எழுத வசதியாக செய்தித்தாளை வேண்டிய அளவு  அந்த ரீஃபில் மீது சுற்றுகிறேன். பேனாவின் கடைசி பாகத்தில் "அகத்தி' மரத்தின் விதை ஒன்றை வைத்து விதை நழுவி கீழே விழுந்துவிடாமல் செய்தித்தாளை அழுத்தி மூடுகிறேன். மை தீர்ந்ததும் ரீஃபில்லை நாம் தூக்கி எறியும்போது கால இடைவெளியில்  காலி ரீஃபில்லில் இருக்கும் விதை விரிந்து செடியாகி மரமாகிறது. 

தற்போது இந்தப் பேப்பர் பேனா கார்ப்பரேட் நிறுவனங்களிலும், தனியார் அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. சான்பிரான்சிஸ்கோவிலும் துபாயிலும் விற்பனையாகின்றன.  ஆனாலும், மண்ணையும் நீர்நிலைகளையும் கெடுக்கும் பிளாஸ்டிக் பேனாக்கள் உபயோகத்தைக்   குறைக்க பொருத்தமான தீர்வு மை ஊற்றி எழுதும் பேனாக்களை உபயோகிப்பதே. அதற்காக "பேனா இயக்கம்'' ஒன்றையும் தொடங்கியுள்ளேன். 

பிள்ளைகளிடம் மை ஊற்றி எழுதும் பேனாவை அறிமுகப்படுத்த வேண்டும். கேரளாவில் தொடங்கியிருக்கும் இந்த இயக்கத்தை அடுத்த மாதம் போபால் நகரிலும் தொடங்கப் போகிறேன்..'' என்கிறார் லட்சுமி மேனன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com