அலுவலகங்களில் பணிச் சூழலை மேம்படுத்த எகனாமிக்ஸ் மாதிரி இந்த எர்கோனாமிக்ஸும் உதவுகிறது!

Ergonomist-கள் தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 14 லட்சமும், ஓரளவு அனுபவம் பெற்றவர்கள் ரூ. 18 லட்சம் முதல் 28 லட்சம் வரையும், Senior Ergonomist ஆண்டுக்கு ரூ. 42 லட்சம் வரையும் ஊதியம் பெறலாம்
அலுவலகங்களில் பணிச் சூழலை மேம்படுத்த எகனாமிக்ஸ் மாதிரி இந்த எர்கோனாமிக்ஸும் உதவுகிறது!

வேலைவாய்ப்புக்காக அறிவியல், புவியியல், சுற்றுச்சூழலியல், கணிதவியல் என பல இயல்களைப் படித்து வருகிறோம். கடுமையாக உழைத்து வேலைவாய்ப்பையும் பெற்றுவிடுகிறோம். ஆனால், வேலைக்குச் சென்ற பிறகு அந்த வேலையை எந்த அளவு  விரும்பி மகிழ்ச்சியாகச் செய்கிறோம் என்பதில்தான் அதன் வெற்றி உள்ளது. 

வேலையில், வேலை செய்யும் இடங்களில் பல காரணங்களால் உடல்ரீதியான பிரச்னை, மன அழுத்தம், சூழல் பிரச்னை என பலரும் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இது பணிச்சூழல் நோய் (occupational diseases) என கூறப்படுகிறது. உலக அளவில் பணியில் இருக்கும் சுமார் 70 சதவீதம் பேர் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால், மனித உழைப்பு குறைவதோடு, குறைந்த உற்பத்தி, வேலையில் தவறு நேர்தல், காலம் தவறுதல் என பணியிடத்தில் பல வகையான பின்னடைவுகள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் சரிசெய்யும் வகையில் தோன்றியதுதான் பணிச்சூழலியல் (Ergonomics) பாடம். இதில் தேர்ந்த வல்லுநர்கள்தான் பணிச்சூழலியலாளர்கள் (Ergonomist).

பணிச்சூழல் நோய் என்பது சர்வதேச பிரச்னை என்பதால், இதுகுறித்து ஆராய 1949-இல் இங்கிலாந்தில் பணிச் சூழலியல் ஆய்வுச் சங்கம்  (The Ergonomics Research Society) தொடங்கப்பட்டது. இதை மேம்படுத்தும் விதமாக ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1961-இல் நடைபெற்ற மாநாட்டுக்குப் பிறகு, 1976-இல் ஸ்விட்சர்லாந்தில் உலகின் பல நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு சர்வதேச பணிச்சூழலியல் கூட்டமைப்பு (International Ergonomics Association  IEA)தொடங்கப்பட்டது.

அதுமுதல் சர்வதேச அளவில் பணியின்போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்த ஆய்வுகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தரவுகளுடன் பணிச்சூழல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு ஆய்வுகளின் பலனாக பணி நேரம், கருவிகள், நிறுவன அமைப்புகள்,பணிச் சூழல் அனைத்தும் பணியாளர்களின் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக, பணிச்சூழல் பிரச்னைகள் உடல்கூறு மற்றும் செயல்பாடு, அறிதல் மற்றும் உணர்தல், நிறுவன அமைப்பு (Physiological, Cognitive, Organizational) சார்ந்ததாக உள்ளன. இவை அனைத்தையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் பணிச்சூழலியல் (Ergonomics)  பாடம். இதில், இளநிலை, முதுநிலை பட்டம், பட்டயம், முதுநிலை சான்றிதழ் படிப்புகள் முழுநேரமாகவும், பகுதிநேரமாகவும், தொலைநிலைக் கல்வியாகவும் பயிலும் வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலும் பிசியோதெரபி, சைக்காலஜி, ஆக்குபேசனல் தெரபி, ஹியூமன் பிசியாலஜி, டிசைன் & இன்ஜினியரிங் போன்ற முதல்நிலைக் கல்வியை முடித்தவர்கள் மட்டுமே, இரண்டாம் நிலை  வேலைவாய்ப்புக் கல்வியாக அவர்கள் துறைசார்ந்த பணிச்சூழலியல் பாடங்களைப் பயில்கின்றனர்.

இதையொட்டியே, பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் பணிச்சூழலியல் கல்வி ஒவ்வொரு தொழில்சார்ந்து தனித்தனியாக முதுநிலை கல்வியாக  அதிக அளவில் வழங்கப்படுகிறது.

ஆனால், சில வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்ட வகுப்பாக B.Sc. (Hons) Ergonomics, B.Sc, Psychology with Ergonomics, 3 அல்லது 4 ஆண்டு பாடத்திட்டங்களாக வழங்கப்படுகிறது. இதில் முதலில் உள்ள பி.எஸ்ஸி, ஹானர்ஸ் எர்கனோமிக்ஸ் அனைத்துவிதமான பாடங்களையும் உள்ளடக்கியது என்பதால், எர்கனோமிக்ஸ் தொடர்பான பெரும்பான்மையான இடங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதில் உயர்கல்வியாக M.Sc- Ergonomics, M.Sc- Human Factors in Manufacturing Systems, M.Sc in Health Ergonomics, M.Sc in Human-Computer Interaction with Ergonomics போன்றவை உள்ளன. Chartered Institute of Ergonomics & Human Factors UK  அமைப்பால் வழங்கப்பட்ட அல்லது இங்கு பதிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட எர்கனோமிக்ஸ் சான்றிதழ் மூலம் சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். இந்த அமைப்பின் தகவல்படி யு,கே-வில் மட்டும் 2500-க்கும் அதிகமான Ergonomists பணியாற்றி வருகின்றனர்.

பணிச்சூழலியல் முடித்தவர்களுக்கு ராணுவம் மற்றும் அதைச்சார்ந்த ஒழுங்கமைப்பு நிறுவனங்கள், கணினி ஆலோசனை மையங்கள், உபயோகிப்பாளர் மற்றும் பாதுகாப்பு ஆய்வகங்கள், அரசு அமைப்புகள், பெரும்பான்மையான உற்பத்தி நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள், பயன்பாட்டு நிறுவனங்கள் போன்றவை முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

Ergonomist-கள் தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 14 லட்சமும், ஓரளவு அனுபவம் பெற்றவர்கள் ரூ. 18 லட்சம் முதல் 28 லட்சம் வரையும், Senior Ergonomist ஆண்டுக்கு ரூ. 42 லட்சம் வரையும் ஊதியம் பெறலாம். இந்த அதிநவீன உயர் தொழில்நுட்ப உலகுக்கு எர்கனோமிக்ஸ் மற்றும் ஹியூமன் பேக்டர்ஸ் கட்டாய தேவை என்ற சூழல் எழுந்துள்ளது. 

நாம் பல்துலக்கும் பிரஸ் முதல் அடுக்களையில் பயன்படுத்தும் பாத்திரங்கள், சாய்வு நாற்காலி, மேஜையின் வடிவங்கள் வரை இலகுவாக பயன்படுத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதன் பின்னணியில் எர்கனோமிஸ்டுகளே உள்ளனர். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், பெரிய டி.வி,  கணினி திரைகள் சுருங்கவும், மாற்றுத்திறனாளிகள் அல்லது  முதியவர்கள் பயன்படுத்தும் பல்திறன் நாற்காலிகள், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் சாய்வுப் படுக்கைகள், ஸ்கேன் கருவிகள், ராணுவ தளவாடங்கள், வாகனங்கள், கல்வி நிறுவனங்களை ஆசிரியர், மாணவர்களுக்கு ஏற்ப கட்டமைப்பது போன்ற பல நவீன உத்திகள் மூலம் நாம் செய்யும் பணியை எளிதானதாகவும், பாதிப்பு இல்லாமலும், தொடர்ந்து பணியாற்ற வசதியாக இருக்குமாறும் பார்த்துக் கொள்பவர்கள் Ergonomist. இவர்களின் மற்றொரு பெயர் Human Factors Specialist.
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com