தகுதியிருந்தும் பாரபட்சத்தால் தள்ளிப்போகும் நோபல் பரிசு!

இரு முறை அறிவியல் உலகின் மிக உயரிய பரிசு கிடைக்காமல் போனபோதும், தனது ஆன்மிக, தத்துவ ஈடுபாட்டால் அந்த கவலையைக் கடந்தார் ஜார்ஜ்.
தகுதியிருந்தும் பாரபட்சத்தால் தள்ளிப்போகும் நோபல் பரிசு!

உலக அளவில் புகழ் பெற்ற நோபல் பரிசு, அதைத் தீர்மானிக்கும் ஸ்வீடன் குழுவினரிடையே காணப்படும் பாரபட்சம் காரணமாக அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இதற்கு மிகப் பொருத்தமான, வருத்தத்துக்குரிய சான்று, இரு முறை நோபல் பரிசு தேர்வுக் குழுவால் நிராகரிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி இ.சி.ஜார்ஜ் சுதர்ஸன்.

கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானியான ஜார்ஜ் சுதர்ஸன், குவான்டம் இயற்பியலில் பல முன்னோடி முடிவுகளை வெளியிட்டவர். அவரது வி-ஏ கோட்பாடு தொடர்பான முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட எலக்ட்ரோ வீக் கோட்பாட்டுக்காக, ஷெல்டன் கிளாஸவ், முகமது அப்துஸ் சலாம், ஸ்டீவன் வெயின்பெர்க் ஆகியோர் 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றனர்.

அதேபோல, அவரது சுதர்ஸன் - கிளாபர் பிரதிநிதித்துவ கோட்பாட்டுக்காக, அதில் சம பங்களித்த ராய் ஜே கிளாபருக்கு மட்டும் 2005-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இவ்விரு தருணங்களிலும், உலக விஞ்ஞானிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்து, இந்திய விஞ்ஞானி ஜார்ஜ் சுதர்ஸனை நோபல் பரிசுக் குழு நிராகரித்தது. இது நோபல் குழுவின் உள் அரசியலை அம்பலப்படுத்தியது. ஆனால், தனக்கு நோபல் பரிசு கிடைக்காததற்காக ஜார்ஸ் சுதர்ஸன் கவலைப்படவில்லை.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டம், பல்லத்தில், 1931, செப். 16-இல் சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார், எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்ஸன். சுருக்கமாக இ.சி. ஜார்ஜ் சுதர்ஸன்.

கோட்டயம் சிஎம்எஸ் இடைநிலைக் கல்லூரியில் (1946- 1948) அவரது பள்ளிக் கல்வி கழிந்தது. பின்னர் சென்னை, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டம் (1951) பெற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் (1952) பெற்ற அவர், 1952 முதல் 1955 வரை மும்பை டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் (TIFR) ஆய்வு உதவியாளராகப் பணி புரிந்தார். அப்போது பிரபல விஞ்ஞானி ஹோமி பாபாவுடன் சிறிதுகாலம் பணியாற்றினார்.

1955-இல் மேற்படிப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராச்சஸ்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ஜார்ஜ், அங்கு ஆசிரியராகப் பணியாற்றியபடியே 1957 வரை ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு விஞ்ஞானி ராபர்ட் மார்ஷக்கின் வழிகாட்டலில் ஆய்வில் ஈடுபட்ட ஜார்ஜ், 1958-இல் பிஎச்.டி. பட்டம் பெற்றார். 

அதன் பிறகு, முதுமுனைவர் பட்ட ஆய்வுக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்ற ஜார்ஜ், ஜூலியன் ஸ்விங்கரின் வழிகாட்டலில் கோட்பாட்டு இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

பிரபஞ்ச உருவாக்கத்தின் காரணத்தை அறிய விஞ்ஞானிகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதை அனுமானங்களாலும், கணிதக் கணக்கீடுகளாலும் உறுதிப்படுத்தும் துறையே கோட்பாட்டு இயற்பியல் துறை. இதில் ஜார்ஜ் சுதர்ஸன்  பிரதானக் கோட்பாடுகள் பலவற்றை உருவாக்கியுள்ளார்.

ஒளியியல் இசைவுப்பெருக்கம் (Optical Coherence), ஒளியைவிட வேகமாகச் செல்லும் டேக்யான் துகள் (Tachyon), குவான்டம்-ஜீனோ விளைவு (Quantum Zeno Effect), சுழல் புள்ளியியல் தேற்றம் (Spin Statistics Theorem), சுதர்ஸன்- கிளாபர் பிரதிநிதித்துவம் (Sudarshan- Glauber Represntation) ஆகியவை ஜார்ஜ் சுதர்ஸனின் பிரதானப் பங்களிப்புகளாகும்.

1962-இல் அமெரிக்க விஞ்ஞானி ராய் ஜே கிளாபர், ஒளியியலில் பாரம்பரிய மின்காந்தவியல் கோட்பாடு பயனளிப்பதில்லை என்றார். அதற்கு முன்னதாகவே அக்கருத்தை தகுந்த நிரூபணங்களுடன் குறிப்பிட்டிருந்தார் ஜார்ஜ் சுதர்ஸன். இவ்விருவரிடையிலான வாதப் பிரதிவாதங்களின் விளைவாக சுதர்ஸன்- கிளாபர் பிரதிநிதித்துவக் கோட்பாடு உருவானது. 

அதேசமயம், கிளாபர் இதை பி-பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தனியே முன் வைத்தார். பின்னாளில் 2005-இல் அதற்காக கிளாபருக்கு நோபல் பரிசு கிடைத்தது. உண்மையில் அவ்விருது ஜார்ஜுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.  

இரு முறை அறிவியல் உலகின் மிக உயரிய பரிசு கிடைக்காமல் போனபோதும், தனது ஆன்மிக, தத்துவ ஈடுபாட்டால் அந்த கவலையைக் கடந்தார் ஜார்ஜ்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் (1957-1959) நிறுவன ஆய்வாளர், ராச்சஸ்டர் பல்கலைக்கழகத்தில் (1959-1963) உதவி பேராசிரியர், ஸ்விட்சர்லாந்து கல்வி நிறுவனத்தில் (1963-1964) வருகை பேராசிரியர், சைராகஸ் பல்கலைக்கழகத்தில் (1964-1969) பேராசிரியர் மற்றும் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்த ஜார்ஜ், 1969 முதல் ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். 

வெளிநாட்டில் பணிபுரிந்தாலும், தாய்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் ஜார்ஜின் கல்விப்பணி தொடர்ந்தது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) 1971 முதல் 1991 வரை முதுநிலை பேராசிரியராகவும், சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தில் 1984 முதல் 1991 வரை இயக்குநராகவும் அவர் இருந்தார்.

சி.வி.ராமன் விருது (1970), இந்திய அரசின் பத்மபூஷண் (1974), பத்மவிபூஷண் (2007), போஸ் பதக்கம் (1977), மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாதெமியின் பரிசு (1985) உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கெளரவங்களையும், பல கெளரவ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ள ஜார்ஜ், உலக அளவிலான கல்வி நிறுவனங்களில் கூட்டு உறுப்பினராகவும் (ஃபெல்லோ) உள்ளார். 

தற்போது அமெரிக்காவில் மனைவி, மூன்று மகன்களுடன் வாழும் ஜார்ஜ் சுதர்ஸன், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவரது கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சிகள் பிரதிபலன் கருதாமல் தொடர்கின்றன- பிரபஞ்ச இயக்கம் போலவே.

"இரு முறை அறிவியல் உலகின் 
மிக உயரிய பரிசு கிடைக்காமல் 
போனபோதும், தனது ஆன்மிக, 
தத்துவ ஈடுபாட்டால் அந்த 
கவலையைக் கடந்தார் ஜார்ஜ்"

- வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com