ஐம்ஸ்ட் பல்கலைக் கழகம்: மலேசியாவில் டத்தோ சாமிவேலு நிறுவிய, தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கல்விக் கடல்!

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய  ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது மலேசிய நாட்டில் உள்ள பினாங்கில் இருக்கும் ஐம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகம் தான் என்று தைரியமாகக் கூறலாம்.
ஐம்ஸ்ட் பல்கலைக் கழகம்: மலேசியாவில் டத்தோ சாமிவேலு நிறுவிய, தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கல்விக் கடல்!

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய  ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது மலேசிய நாட்டில் உள்ள பினாங்கில் இருக்கும் ஐம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகம் தான் என்று தைரியமாகக் கூறலாம். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தது தமிழரான டத்தோ சாமிவேலு. இன்றும் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக  இருக்கிறார். இந்த பல்கலைக்கழகம் மிகப் பெரியது என்று சொல்வதற்கான காரணம், ஏக்கர் கணக்கில் இடம் இருப்பதால் மட்டும் அல்ல, இந்த பல்கலைக்கழகத்தின் உள்ளேயே எல்லாமே இருக்கிறது. ஆமாம், படிப்பவர்கள், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்  என அனைவரும் தங்கி இருக்க இடமும் இருக்கிறது.

239 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவர் அடி எடுத்து வைத்தால், முதுகலை பட்டம் மட்டும் அல்ல, அதற்கு மேலும் பெற்று வெளியே வரலாம். காரணம், இங்கே படிக்கலாம், தங்குவதற்கு விடுதிகள் உள்ளன, ஒலிம்பிக் நிர்ணயம் செய்த அளவு நீச்சல் குளம் உள்ளது. தடகள மற்றும் விளையாட்டு துறை சம்பந்தமான எல்லா வசதிகளும் இங்கு இருக்கிறது. மாணவர்களுக்கு உபயோகமாக இருக்க உள்ளேயே புத்தகக் கடையும், வங்கியும் கூட உண்டு. இன்னும் சொல்லப் போனால் தங்களது வீட்டிற்கோ அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் கடிதமோ, அல்லது மற்ற பொருள்களை அனுப்ப ஏதுவாக  கொரியர் வசதியும் கூட அமைய பெற்றது தான் இந்தப் பல்கலைக்கழகம்.

1984 ஆம் வருடம் மஞ்சு இன்ஸ்டிடியூட் என்று ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் வருடம் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்  அண்ட் டெக்னாலஜி (Asian Institute of science and technology)  என்று பெயர் மாற்றப்பட்டது. அதுவே பின்னாளில் மெல்ல மெல்ல ஒரு பல்கலைக்கழகமாக உருவாகத் தொடங்கியது. 2008 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இந்த பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா டத்தோ சாமுவேல் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இன்று எல்லாவிதமான அனுமதிகளையும் பெற்று, ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாறி உள்ளது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இதில் நீங்கள் மருத்துவமும் படிக்கலாம், பொறியியல் வல்லுநராகவும் ஆகலாம்.  

உலக நாடுகளின் பலவற்றில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் இங்கு வந்து படிக்கிறார்கள். பினாங் நகரிலிருந்து சுமார் 40 நிமிடங்கள் காரில் நாம் சென்றால், இந்த பல்கலைக்கழக வளாகத்தை அடையலாம். இன்று இந்த பல்கலைக்கழகத்தில்  3500 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால் ஏழாயிரத்திற்கும் மேல் தங்கி படிக்க இந்த பல்கலைக்கழகத்தில் வசதி உள்ளது. குறிப்பாக மாணவர்கள் எந்த விதமான பயமும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் படிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

24  மணி நேரமும் முக்கியமான பகுதிகளின் cctv  கேமரா மூலம்  இவர்கள் பாதுகாக்கப் படுகிறார்கள். இந்த பிரமாண்டமான பல்கலைக்கழகத்தில் ஒரு நூலகம் உள்ளது. இதில் ஒரு பக்கம் முழுவதும் மருத்துவ நூல்களும், இன்னொரு பக்கம் முழுவதும் பொறியியல் சம்மந்தப்பட்ட நூல்களும் உள்ளன. ஒரே சமயத்தில் 300 மாணவச்செல்வங்கள் இதில் படிக்கும் வசதி இருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் விரும்பும் புத்தகம் அல்லது வேண்டும் புத்தகம் கிடைக்கவில்லை என்றால், அதை கணினி மூலம் பார்க்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. நூலகத்திற்கு உள்ளையே 30 கணினியும், இந்த கணினி சம்மந்தப்பட்ட (cyber centre) அறையில் 100 கணினியும் உள்ளன. மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கள் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம்.

விளையாட்டு  என்று பார்த்தால் உள்விளையாட்டில், பாட்மிண்டன் -4, கூடைப்பந்து-1, ஸ்குவாஷ்-3, டேபிள் டென்னிஸும் உடற்பயிற்சிக்கு கூடமும் தலா ஒன்று உள்ளன. வெளி விளையாட்டு என்றால் டென்னிஸ் கோர்ட்-3, கூடைப்பந்து-1, ஒலிம்பிக் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரு நீச்சல் குளம், அதைப் பார்வையாளர்கள் கீழேயும், மேலேயும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இவை மட்டும் அல்லாமல் தடகளப் போட்டிகளை சிறப்பாக நடத்த செயற்கை ஒளி பாய்ச்சும் விளக்குகள் உட்பட அமைந்த ஒரு தடகள விளையாட்டு திடலும் உள்ளது. 

சென்னையில் உள்ள மலேசிய கவுன்சில் ஜெனரல் ஏ. பாஜராசம் இந்த பல்கலைக்கழகத்தை பற்றிக் கூறுகையில், "உலக நாடுகளே பெருமைப்படும் அளவிற்கு இந்த பல்கலைக்கழகம் திகழ்கிறது. இதில் படிக்கும் மாணவ மாணவியர், இந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் மிகப் பெருமை என்று நினைக்கிறார்கள். எங்கள் நாட்டிலேயே எந்தப் பல்கலைக்கழகம் சிறந்தது என்று பார்க்கும் பொழுது மாணவர்களின் பாதுகாப்பு மட்டும் அல்லாமல் உயர் கல்விக்கு AIMST பல்கலைக்கழகம் 2ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு உலக சுகாதார  அமைப்பு (WHO)  தங்களது  நற்சான்றிதழை அளித்துள்ளது'' என்று பெருமைப்படக் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com