‘ரஸனை’ விசயத்தில் கி.ராஜநாராயணன் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க!

ஆனால் சில காதுகள் இருக்கின்றன. அந்தக் காதுகளுக்குள் எந்த நாட்டு இசையும் "செலாவணி' ஆகாது! இவர்கள் நம்முடைய ஒளரங்கசீப்புக்கு அண்ணாச்சிமார்கள்!
‘ரஸனை’ விசயத்தில் கி.ராஜநாராயணன் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க!

ரஸனை என்கிற விஷயம் ஒருவகையில் நாக்கின் ருசி அனுபவத்தைப் போன்றது. காதைப் பழக்கப்படுத்துகிறது என்பது சாமானியமான ஒரு காரியம் அல்ல. உயர்ந்த ஜாதி கர்நாடக இசையைக் கேட்டுக் கேட்டு நம்முடைய காதுகளைப் பழக்கப்படுத்த வேண்டும். தாய்ப்பாலையே உண்டு வளர்ந்த குழந்தை நெய் சாதத்தைத் துப்புகிற மாதிரி நம்முடைய காதுகள் முதலில் வெளியே தள்ளத்தான் செய்யும். நாள் ஆக ஆக அப்புறம் இசைக்கு "மகுடிக்குக் கட்டுண்ட நாகம்போல்' ஆகிவிடுவான் மனுஷன்.

ஆனால் சில காதுகள் இருக்கின்றன. அந்தக் காதுகளுக்குள் எந்த நாட்டு இசையும் "செலாவணி' ஆகாது! இவர்கள் நம்முடைய ஒளரங்கசீப்புக்கு அண்ணாச்சிமார்கள்! மிருகங்களும் பாம்புகளும்கூட இசைக்கு வசமாகும்! பாவி மனுஷன் மாத்திரம், இதற்கு விதிவிலக்கு! சங்கீதத்தையே கொலை செய்யத் தயங்குவதில்லை இந்த "மனுஷர்'கள்! எல்லாம் ரஸனை என்ற காரியம் இல்லாத குறை செய்கிற காரியம்தான். இதனால்தான் "ரஸனை என்கிறது ஒரு மனுஷனுக்கு இடைக்காலத்தில் வரக்கூடியது அல்ல; அது தாயின் வயிற்றிலிருந்து அவன் வரும்போதே அதைக் கொண்டு வந்திருக்க வேண்டும்'' என்று நம்முடைய பெரியவர்கள் மனம் விட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

இசையை அனுபவிக்கக் காதுகள் வேண்டும். ஆனால், இசையை உண்டாக்குகிறவனுக்கு அது வேண்டியதில்லை! ஜெர்மானிய தேசத்து தியாகப் பிரும்மமான பீத்தோவன் ஒரு பீரங்கிச் செவிடாம்! ஆனால், அவன் உண்டாக்கித் தந்த இசை வர்ணமெட்டுகளைக் கேட்டு பரவசமடையாதவர்களே கிடையாது. ஆகவே வழி காதாக இருந்தாலும் வந்து அடைகிறது மனசுதான்.

நம் இசையைப் பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். இலங்கேஸ்வரனான ராவணன் வீணையை மீட்டுவதில் வல்லாளன். அவன் வீணை மீட்டியபோது கல்பாறை இளகி வீணை அதனுள் பதிந்து ஒட்டிக் கொண்டதாகவும், அந்த வீணையை அனுமன் வந்து மீட்டிசைத்து கல்பாறையிலிருந்து வீணையை எடுத்ததாகவும் கேள்வி. (அனுமன் வாசித்த அந்த ராகத்தைத்தான் நாம் இப்போது ஹனுமகோடி என்கிறோம்) முகலாய சக்ரவர்த்தி அக்பர் காலத்தில் இருந்த சங்கீத மகா வித்வானான தான்சேன் என்பவர் வாயாரப் பாடி மழை பெய்வித்ததாகப் படித்திருக்கிறோம்.

தியாகராஜ சுவாமிகள், பாம்பு கடித்து இறந்து போன ஒரு பையனை, பாடி உயிர்ப்பித்ததாகக் கேட்டிருக்கிறோம். இன்னும் பலவும் இவையும் சுத்தக் கற்பனைகள் என்று வைத்துக் கொண்டாலும் இசையின்பால் மக்களுக்கு உள்ள ஈடுபாடு எவ்வாறு என்பதையே இவை  காட்டுகின்றன.

பேச்சினால் - கவிதையால் - சொல்ல முடியாததைக் கூட இசையினால் உணர்த்திவிட முடியும். ஆன்மாவின் ஒரே பாஷை இசைதான். அது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

ஒருசமயம், பாதிரியார் ஒருவர் ஒரு கிராமத்தில் ஏசு கிறிஸ்துவின் மகிமையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்பொழுது வசந்த காலம். ஒரு மரத்தின் கீழ் அந்தக் கூட்டம் நடந்தது. பாதிரியார் சொல்லப் போவதைக் கேட்க ஜனங்கள் ஆவலோடு இருந்தார்கள். கூட்டத்தினருக்கு மத்தியில் ஒரு ஸ்டூல் போடப்பட்டிருந்தது. அதன் மேல் பாதிரியார் ஏறி நின்றார். சபையோரைப் பார்த்து வாய் திறந்து பேசப் போகும் அதேசமயத்தில் அந்த மரத்தின் மேலிருந்த குயில் ஒன்று தன் இனிமை மிகுந்த குரலினால் பாட ஆரம்பித்தது. அப்படி அது மூன்று முறை பாடிக் கூவியது. அதைக் கேட்டதும் பாதிரியாருக்கு மனசு புல்லரித்து, கண்களில் நீர் கோர்த்தன. கைகளைப் பிணைத்து தன் நாடியில் ஒட்டவைத்துத் தலை கவிழ்ந்து அப்படியே சிறிது நேரம் நின்றார். பின்பு தனக்குள் "ஆமென்'' என்று கூறி ஸ்டூலை விட்டுக் கீழே இறங்கிவிட்டார்! கூட்டத்திலிருந்தவர்கள் பாதிரியாரைப் பார்த்து "ஏன் பேச்சை ஆரம்பிக்காமல் இறங்கி விட்டீர்கள்?'' என்று கேட்டார்கள். பாதிரியாருக்கு அவர்களைப் பார்த்து ஒரே ஆச்சரியம்! அவர் ஜனங்களைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள் கேட்கவில்லையா இப்பொழுது? அந்தக் குயில் பாடியதைக் கேட்கவில்லையா? நான் சொல்ல நினைத்திருந்ததையெல்லாம் விட அது நன்றாகவும், மிகவும் இனிமையாகவும் கூறிவிட்டது. நான் இனி பேசுவதற்கு மிச்சம் ஒன்றும் இல்லை!'' என்று கூறிவிட்டு ஸ்டூலை எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்!

ஆழ்ந்த பொருள் கொண்ட இந்தக் கதையை சங்கீத ரசனை கொண்டவர்களால் மிகவும் அனுபவிக்க முடியும். மொழி அறியாத வேற்று நாட்டவருக்குக்கூட இசையின் மூலம் நாம் ஒரு "செய்தி'யை உணர்த்திட முடியும். தேச தேசங்களின் எல்லைகளையெல்லாம் கடந்து இசை செலாவணியாகும்.

"ஸ்ருதி மாதா; லயம் பிதா'' என்று நம்மவர்கள் சொல்வார்கள். இந்தப் பிரபஞ்சமே நாத மயம். கோயில் காண்டாமணியின் ஓசையைக் கேட்டு உடம்பும் மனமும் புல்லரிக்காத மனிதன் யார்? சங்கின் நீண்ட ஒலி வந்து தொடாத உள்ளம் எந்த உள்ளம்?

காற்றெனும் வானவன் கொண்டு வரும் ஓசைகளையெல்லாம் நமது கவிஞன் பாரதி அடுக்கடுக்காய்க் கூறி வர்ணித்திருக்கிறான். ஒலி இன்பத்தை அனுபவிக்க வேண்டாமா? "ஏ மனிதனே! நீ உன் உள்ளத்தைப் பக்குவப்படுத்து. அதன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்திரு'.

இசை உன்னை சொர்க்கத்துக்கு அருகே கொண்டு செல்லும். ஓர் இசைவிழா சிறப்பு மலரில் "ரஸனை' என்ற தலைப்பில் 
கி.ராஜநாராயணன்.

தொகுப்பு: கேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com