சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும்! ஏன் தெரியுமா? 

நீர்நிலைகளின் வறட்சிக்கு இன்னுமொரு காரணம் சீமைக்கருவேல  மரங்கள். சீமைக்கருவேல மரங்கள் நமது பூமியின்  எதிரி.  இந்த மரங்களின் வேர் பூமியின் வெகு ஆழத்துக்குச் சென்று நிலத்தடி  தண்ணீரை  உறிஞ்சும்.  
சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும்! ஏன் தெரியுமா? 

"தண்ணீர் வசதி உள்ள இடங்களில் தோட்டம்  போடுவது..  பயிர்  வளர்ப்பது பெரிய விஷயமில்லை.  விருதுநகர் போன்ற பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்.. அதனால்   நிரந்தர வறட்சியுள்ள  இடங்களில்  வித்தியாசமான ஊட்டி காய்கறி செடிகளை  வளர்க்க முடியாது.  ஆனால் அவசியமான அத்தியாவசியமான வீட்டுக்குத் தேவையான  காய்கறிச் செடிகளை இங்கு வளர்க்க முடியும். அப்படி  வளர்க்கும்  விதத்தை  நாலு பேருக்குச் சொல்லித் தருகிறேன்'' என்கிறார் வெயிலோடு சடுகுடு விளையாடி வித்தியாசமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும்  அர்ச்சனா ஸ்டாலின். இவர், அடிப்படையில்  ஒரு  பொறியியல்  பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து  வந்த  நிலையில், மண்வாசனை  ஈர்த்ததால் கணினி வேலையை உதறி.. சுற்றுப்புறச் சூழ்நிலையைத் தூய்மைப் படுத்தவும், இயற்கை முறையில் காய்கறி வளர்க்கும் ஆர்வத்துடன் வந்துவிட்டவர்.  

அவரின் அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: 

"கல்லூரிக் காலம்தான் எனக்கு ஒரு திருப்பத்தைத்  தந்தது.  வாழ்க்கை  என்னும் ஓடம் வழங்குகின்ற பாடத்தை ஒரு சிலரால் மட்டுமே படிக்க முடிகிறது. கல்லூரியில் பயிலும் போதே நண்பர்களுடன் சேர்ந்து  BUDS (Be united to do service) என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பை 2008- இல் தொடங்கினேன். கிராமப்புற வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை BUDS எனக்கு அறிமுகம் செய்தது.  சில இந்தியக் கனவுகளையும் மனதில் விதைத்தது. BUDS  உறுப்பினர்களுடன் கிராமப்புறங்களின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது.  கிராமப்புறங்களில் வறண்டு கிடக்கும் பராமரிக்கப்படாத நீர் நிலைகளையும், குளங்களையும் குழுவாகச் சென்று மராமத்து செய்து நீர் ஆதாரத்தைப் பெருக்கி, சுற்றுச் சூழலை வளமாக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்புடன் செயல்பட்டோம். 

சென்னையில் பொறியியல் படிப்பு முடிந்ததும், கணவர் ஸ்டாலினுடன் இணைந்து  2012- இல் ஜியோ வெர்ஜ் (Geo Verge) என்னும் ஐ.டி. நிறுவனத்தை விருதுநகரில் தொடங்கினேன்.  பிறகு, இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில் முனைவை ஊக்குவிக்கும் மதுரையின் நேட்டிவ் லீட் ஃபவுண்டேஷனின் (Native  lead Foundation)  மையக் குழுவில் சேர்ந்தேன்.

மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும்  இதர மாவட்டங்களில், இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில், இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குத் தொழில் முனைதல் பற்றி பயிற்சி வழங்கியதுடன்  கலந்துரையாடலும் நடத்தியுள்ளேன். 

ஜூலை 2015 - இல் நேச்சுரல்ஸ் சலூனின் நிர்வாகக் குழுவில் இணையும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கு ஸ்டேட்ரஜிக் மார்க்கெட்டிங் தலைமைப் பொறுப்பில்  செயல்பட்டதில்  மார்க்கெட்டிங்  துறையில்  அனுபவம் கிடைத்தது.

சமூகத்தில் பெரியளவில் மாற்றங்களை நிகழ்த்த வேண்டுமானால் கிராமங்களைத்  தன்னிறைவுப்  படுத்த  வேண்டும் என்பதைப்   புரிந்து கொண்டோம். அதன்படி எங்கள் அணுகுமுறையையும் மாற்றிக் கொண்டோம். விருதுநகர்  சுற்றுப்புறங்களில்  குளங்களை தூர்வாரி சுத்தம்  செய்தோம்.   வேப்ப மரங்களை  நட்டோம். பலன்  கிடைக்காமல் இல்லை. அதிசயமாகப்  பெய்த மழையில் குளங்கள் நிரம்பின. சுமார் பதினைந்து  ஆண்டுகளாக நிறையாத குளங்கள் நிரம்பியதால்  அந்தப் பகுதியில் வாழும்  மக்களின்  மனநிலை  எப்படி சந்தோஷத்தில்  மிதந்திருக்கும். 

நீர்நிலைகளின் வறட்சிக்கு இன்னுமொரு காரணம் சீமைக்கருவேல  மரங்கள். சீமைக்கருவேல மரங்கள் நமது பூமியின்  எதிரி.  இந்த மரங்களின் வேர் பூமியின் வெகு ஆழத்துக்குச் சென்று நிலத்தடி  தண்ணீரை  உறிஞ்சும்.  இதன் காரணமாக நிலத்தடி நீர் வற்றிப் போய்  வறட்சி  நிரந்தரமாக வந்துவிடும்.  அதனால், சீமைக் கருவேல மரங்களை விருதுநகரைச்  சுற்றிலும் வேருடன் நீக்கி வருகிறோம். "சென்ற  வாரம்  சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை,   சீமைக் கருவேல மரங்களை  வேருடன் அகற்றிவிட்டு  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆணைப் பிறப்பித்துள்ளது.  அரசு என்றில்லை, நாமும் இந்தப் பணியில் ஈடுபடலாம். தேர்வு செய்யப்பட்ட இடங்களில் சீமைக் கருவேல மரங்களை வேரோடு  பிடுங்கி அகற்றி வருகிறோம்.  வேர்கள்  மண்ணுக்குள் புதைந்து   கிடப்பதால்,   வெட்டப்பட்ட சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளர்ந்து விடுகின்றன.   விறகு போதும்  என்று  சீமைக் கருவேல மர வேர்களை விட்டுவிடல் ஆகாது.  இதனால்,  பாதுகாப்பான  சுற்றுச் சூழலை    நமக்கும் நாளைய தலைமுறைக்கும் உறுதிப்  படுத்தலாம். இந்தக் களை எடுத்தலில் உள்ளூர்  நிலத்தடி நீரின் அளவையும் பாதுகாக்கலாம். சேமிக்கலாம்.  அதனால் விறகுக்காகச்  சீமைக்  கருவேல  மரங்களை  வெட்டும் போது  வேரோடு  வெட்டி எடுப்பது  ஒரே கல்லில் இரண்டு  மாங்காய் அடிப்பது போன்றது.

அதுபோன்று சமையலறையில் காய்கறி நறுக்கும் போது  கிடைக்கும்  காய்கறிக் கழிவுகள்தான்   செலவில்லாத   உரம்.  வீரிய  உரம். தரமான  விதைகளை மட்டும்  வாங்க வேண்டும்.  செடிகளைச்  சுற்றிலும்  களை  வராமல் பார்த்துக் கொள்வது  முக்கியம். இன்று விதைத்தால்  நாளை பலனை எதிர் பார்க்கக் கூடாது. பயிர் வளர்ப்பது  மந்திரத்தில் மாங்காய்  வரவழைப்பது  மாதிரி கிடையாது. எந்த  ஒரு  விதைக்கும்,  செடிக்கும்  அதற்கான  காலத்தை அனுமதிக்க வேண்டும். உடன்  பலனை   எதிர்பார்க்காமல்  பொறுமையோடு காத்திருப்பது பயிர் வளர்ப்பதில் முக்கிய அங்கம்.  மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம்.

வீடுகளில்  ஊர்களில்  மரங்களை வளர்த்தல் போன்ற பணிகளை " பட்ஸ் டிரஸ்ட்' என்ற  எங்களது  அறக்கட்டளை மூலமாகச் செய்து வருகிறோம். காரணம்,  ரசாயன  உரங்கள் மூலம் வளர்க்கப் படாத காய்கறிகள் இந்தியாவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  ரசாயன உரங்கள் எல்லா பயிர் வளர்ப்பிலும்  பயன்படுத்தப்படுகின்றன.  அது போன்று  பூச்சி கொல்லி மருந்துகளும்  தாராளமாகப்  பயிர்கள் மேல்  அடிக்கப்படுகின்றன.   கீரைகள் பல வகைகள் கிடைக்கலாம்.  அவை  சாக்கடை கழிவு நீரில்  வளர்க்கப்படுபவை என்று  எத்தனை பேருக்குத் தெரியும்.  ஆக, தினந்தோறும் காய்கறிகள் என்ற பெயரில்  நாம் விஷம் தோய்ந்த காய்கறிகளை உணவாக  சேர்த்து வருகிறோம். இந்த  அபாய காய்கறிகளிலிருந்து  தப்ப,  கணவர் ஸ்டாலினுடன் இணைந்து தொடங்கியதுதான்  my Harvest  என்னும்  அமைப்பு.  விளை நிலங்களை குத்தகைக்கு எடுத்து  இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி  கொல்லி  மருந்துகள் பயன்படுத்தி  காய்கறிகளை  உற்பத்தி செய்து  விற்பது  இதன் நோக்கம். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு  கிடைத்துள்ளது.     "உணவை  மதியுங்கள் விவசாயிகளை   மதியுங்கள்'   என்ற  தத்துவத்தின்   அடிப்படையில் செயல்படுவதுதான்  மை ஹார்வெஸ்ட்..  

மாற்றத்தை விரும்பினால் மாற்றமாய்  நீ  மாறு - என்ற அண்ணல் காந்திஜியின் அற்புத வரிகளுக்கு ஏற்ப  பயணத்தைக் தொடர்ந்தால், சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்'' என்கிறார் அர்ச்சனா ஸ்டாலின். 

- அங்கவை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com