குடும்ப வன்முறைக்கு உதாரணமாக ஒரு பெண்ணின் கதை- 1!

அஞ்சலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். திருமணமாகி ஒன்றரை வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. அஞ்சலி, அழுதுகொண்டே என்னிடம் பேசினார். 
குடும்ப வன்முறைக்கு உதாரணமாக ஒரு பெண்ணின் கதை- 1!

நாம் இப்போது... "குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்' பற்றிப் பார்க்கலாம். இப்படியொரு சிறப்புச் சட்டம் இயற்றும் அளவிற்கு குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 3,838 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. வெளிச்சத்துக்கு வந்த வழக்குகளின் எண்ணிக்கை இவை. ஆனால் தன்னுடைய எதிர்காலம், குழந்தையின் எதிர்காலம் என்று எண்ணி, வன்முறைகளிலேயே சுழன்று கொண்டு, உண்மையிலேயே வதை பட்டுக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேரை என் அனுபவத்தில் இந்த நிமிடம் வரை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது அப்பட்டமான உண்மை.

பொதுவாக, பெண்கொடுமை, குடும்ப வன்முறை இவற்றிலெல்லாம் புகுந்த வீட்டினர்தான் காரணமாக இருப்பார்கள் என்றொரு கருத்து பரவலாகவே இருந்து வருகிறது. அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கும் படி! சில நேரங்களில், பெண்ணைப் பெற்றவர்களும்கூட காரணமாக இருந்துவிடுகிறார்கள், இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசியில் ஓர் அழைப்பு. அஞ்சலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். திருமணமாகி ஒன்றரை வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. அஞ்சலி, அழுதுகொண்டே என்னிடம் பேசினார். 

அஞ்சலி உயர் படிப்பு படித்திருக்கிறார். வேலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்த போதும், அம்மாவின் வற்புறுத்தலினால் அவருக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அஞ்சலியின் அப்பா, அவரின் கல்விக்காகவோ, திருமணத்திற்காகவோ எந்த ஒரு செலவோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை; செய்திருக்கவில்லை. காரணம், அவள் பெண்ணாய் பிறந்ததாலும், தன்னிடம் வசதி குறைவு என்பதால் ஒருவித தாழ்வு மனப்பான்மையிலும், அஞ்சலியின் அம்மாவை துன்புறுத்துவதிலேயே ஆரம்பம் முதல் இன்று வரை காலம் கழித்துக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு பல பெண்களுடன் தொடர்பு. சம்பாதிக்கும் சிறு தொகையையும் ஊதாரித்தனமான செலவுகளில் கரைத்து விடுவது என பொறுப்பற்ற வாழ்க்கை. அஞ்சலியின் அம்மாவோ தன் உடன் பிறந்த சகோதரர்களின் பண உதவியால் மகளை நன்கு படிக்க வைத்து நகைகள், சீர்வரிசை, பைக் என்று குறையின்றி கொடுத்து சிறப்பான முறையில் திருமணமும் செய்து வைத்திருக்கிறார். தந்தையின் தயவு இன்றி, தாயே தன் மகளுக்குத் திருமணம் முடித்துவைத்ததை அந்த ஊதாரி தந்தையால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம். மனைவியையும் மகளையும் எப்படியாவது கொடுமைப்படுத்தவேண்டும் என்று துடித்த அந்தத் தந்தை அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

திருமணத்தின்போது அஞ்சலியின் கணவர் ஒரு தனியார் கம்பெனியில் தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருந்தார் என்றும், தற்போது வேலையும் இல்லை என்று கூறினார். வருமானம் தான் பிரச்னை போலிருக்கிறது என்று நான் நினைத்த மாத்திரத்தில், அவர் சொன்ன செய்தி இடி தாக்கியது போல் 
இருந்தது. 

கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் செலவு செய்த அம்மாவின் சகோதரர், வசதி வாய்ப்புகளில் சிறப்போடு இருப்பவர். அவரின் தயவிலேயே காலத்தைக் கழித்துவிடலாம் என்று அஞ்சலியின் கணவர் எண்ணியிருக்கிறார். ஆனால், "திருமணத்திற்குப் பிறகு பண உதவியோ பொருளுதவியோ தன்னிடம் எதுவும் எதிர்பார்க்கவேண்டாம். திருமணம் செய்து கொடுத்ததோடு தன் கடமை முடிந்து விட்டது!' என அந்த உறவினர் கூறிவிட்டார். இது அஞ்சலியின் கணவருக்குப் பெரிய அதிர்ச்சி. 

திருமணம் முடித்து சில மாதங்களில் கணவர் வேலை பார்க்கும் ஊருக்கு குடி பெயரும் போது, தனக்குக் கொடுத்த கட்டில், மெத்தை, டிவி, பிரிட்ஜ் உட்பட அனைத்துப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது என்று புகுந்த வீட்டினர் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கான காரணம் பின்பு தான் அஞ்சலிக்குத் தெரிய வந்திருக்கிறது. அவருக்கு சீர்வரிசையாக வந்த பண்ட பாத்திரங்கள், டிவி, பிரிட்ஜ், போன்ற அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் மாப்பிள்ளையின் சித்தப்பா தன் மகளுக்குத் தரத் திட்டமிட்டிருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்த தன் மகளுக்குப் போட வேண்டிய நகைகளில் 10 பவுன் பாக்கி தரவேண்டியதிருக்கிறது என்றும், அதைக் கொடுப்பதற்காக அஞ்சலியின் நகைகளையும் கொடுக்கும்படி மாமியார் வற்புறுத்த,  கணவரும் தன்னுடைய அம்மாவின் மகுடிக்கு மயங்கி, இந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

நகைகளைத் தர மறுக்கும் அஞ்சலியை மிரட்டி சம்மதிக்க வைப்பதற்காக,  ஒரு கட்டத்தில் இவருடைய கணவர் தூக்குமாட்டிக்கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், அதைத் தடுத்து விடுவார் என்று சொல்லி, அஞ்சலியின் கைகளைக் கயிற்றைக் கொண்டு கட்ட முயன்றிருக்கிறார். உடனே இந்தப் பெண் தன் கைகளைக் கட்டுவதைத் தடுப்பதற்காக தன் கணவரைப் பிடித்துத் தள்ளி விட்டிருக்கிறார்.

இவ்வளவு நேரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாமியார், "நீ எப்படி என் மகனைப் பிடித்துத் தள்ளலாம்?' என்று ஒரு ருத்ர தாண்டவத்தையே அரங்கேற்றியிருக்கிறார். 

அஞ்சலியின் மாமனாருக்கும்  தனிப்பட்ட வருமானம் எதுவும் கிடையாது தன்னுடைய தம்பியின் தயவிலேயே இன்றுவரை காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று கணவர் கூறியதை நம்பி, பல மைல்களுக்கு அப்பால் உள்ள தன் தாய் வீட்டிற்குத் தன் கணவரோடு வந்த இந்தப் பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கும் என்று தெரியாது. இந்தப் பெண்ணை அம்மா வீட்டில் விட்டுவிட்டு, பழிவாங்கக் காத்திருந்த ஊதாரி மாமனாருடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றவர், திரும்ப வீட்டுக்கு வராமலேயே நேரடியாக தன் ஊருக்குச் சென்றிருக்கிறார். பேருந்து ஏறுவதற்கு முன்பாக போன் செய்து, "நீ உன் அம்மாவுடனே இருந்துகொள். இனி என்னுடன் வரவேண்டாம்' என்று கூறிச் சென்றவர் சென்றவர்தான். போன் தொடர்பு கூட கிடையாது. ஒரு சில மாதங்கள் ஓடிவிட்டன. 

மனைவியுடன் பேசாத கணவர், ரகசியமாக இவரின் தந்தையுடன் மட்டும் தொலைபேசியில் பேசிவருவதை ஒருநாள் கண்டுபிடித்திருக்கிறார் அஞ்சலி. 
தொலைபேசியில் ரகசியமாக மருமகனும் மாமனாரும் பரிமாறிக் கொண்ட தகவல்களைக் கேட்டபோது... ஓர் அதிர்ச்சி தரும் பின்னணியை அறியமுடிந்தது!

- தொடரும்

படம்: அண்ணாமலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com