நோசி ஜான்ஸன்: யார் இந்தச் சிறுவன்? தெரிந்து கொள்ளுங்கள்...

நாங்களும் உங்களைப் போன்றவர்களே! எங்களிடம் கை குலுக்குவதாலோ, எங்களைக் கட்டி அணைப்பதாலோ, முத்தமிடுவதாலோ எங்கள் நோய் ஒருக்காலும் பரவாது. எங்களைக் கண்டு அச்சம் வேண்டாம்!
நோசி ஜான்ஸன்: யார் இந்தச் சிறுவன்? தெரிந்து கொள்ளுங்கள்...

அது ஒரு மிகப்பெரிய பன்னாட்டுக் கருத்தரங்கம். 2000-ஆவது ஆண்டு ஜூலை மாதத்தில் டர்பனில் நடைபெற்றது. "13-ஆவது சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கம்' (XIII TH INTERNATIONAL AIDS CONFERENCE) என்பது அதன் பெயர்.

அக்கூட்டத்தின் மிகப் பிரமாண்டமான மேடையில் சிறுவன் ஒருவன் மைக்கைத் தன் கையில் பிடித்தபடி பேசுவதற்கு முன் பார்வையாளர்களை தீர்க்கமாகப் பார்த்தபடி ஒரு நிமிடம் மௌனமாக நிற்கிறான். நீக்ரோ இனத்தில் பிறந்த அவனது தலை முழுவதுமாக மழிக்கப்பட்டு இருக்கிறது. அதுவரை சலசலத்த பார்வையாளர்கள் பகுதி சட்டென ஆழ்ந்த மௌனத்திற்கு மாறுகிறது. அவன் பேசத் தொடங்குகிறான். அவனிடம் பயமோ, நடுக்கமோ இல்லை! 

"என் பெயர் நோசி ஜான்சன். (Nkosi Johnson) நான் பிறக்கும்பொழுதே எய்ட்ஸ் நோயோடு பிறந்தவன். என் நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டே வருகின்றன என்பது எனக்குத் தெரியும்! மரண தேவன் தன் இரு கைகளையும் விரித்தபடியே என்னை அள்ளிச் செல்லக் காத்திருக்கிறான் என்பதையும் நான் அறிவேன்!

எனக்கிருக்கும் மிகக் குறைந்த வாழ்நாளில் நான் உங்களிடம் ஒரு கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்! என் போன்ற எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவு அளியுங்கள்! நாங்களும் உங்களைப் போன்றவர்களே! எங்களிடம் கை குலுக்குவதாலோ, எங்களைக் கட்டி அணைப்பதாலோ, முத்தமிடுவதாலோ எங்கள் நோய் ஒருக்காலும் பரவாது. எங்களைக் கண்டு அச்சம் வேண்டாம்! நாம் அனைவரும் சமம்!' என்று முடித்தபொழுது கூடியிருந்த வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,000 பிரதிநிதிகளும் கைதட்டக்கூட மறந்து கண்ணீர் சிந்தினர் மௌனமாக!

டேஃப்னே நோசி (Daphne Nkosi) என்ற எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1989-ஆம் ஆண்டு நோசி ஜான்சன் பிறந்தார். தன் தந்தை யாரென்றே தெரியாத இவர் பிறந்த பொழுதே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ஜோஹன்ஸ்பர்க்கில் வசித்த "கெயில் ஜான்சன்' (GAIL JOHNSON)என்ற பெண்மணி இவரைத் தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டார். இவருக்கும் இவரது அன்னைக்கும் தேவையான உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவ செலவுகளை அவர் ஏற்றுக் கொண்டார். ஆப்பிரிக்கா முழுவதும் பரவியிருந்த 75,000 எய்ட்ஸ் நோயாளிகளைப் போலவே இவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளையும் வலியுடனும், வேதனையுடனும், நோயின் தீவிரத்துடனும் கழித்து வந்தார்கள். இவை யாவற்றையும் விட பிறரின் ஏளனமும், உதாசீனமும் பெரும் வேதனை அளித்தன. 

ஜோஹன்னஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் இயங்கி வந்த பள்ளி ஒன்றில் 1997ஆம் ஆண்டு இவரைச் சேர்க்க முற்பட்ட பொழுதுதான் "நோசி ஜான்சன்' பற்றி உலகம் அறிந்து கொண்டது. காரணம் பள்ளி அவருக்கு கல்வி அளிக்க மறுத்ததுதான்.

ஆப்பிரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி நோயுற்ற காரணத்தால் ஒருவருக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவது மாபெரும் தவறு என்று வாதிட்டார் கெயில். இதனால் நோசி ஜான்சன் மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதனால் அவரை உலகமே திரும்பிப் பார்த்தது. 

இதில் மாபெரும் சோகம் என்னவென்றால் இவர் பள்ளியில் சேர்ந்த அதே ஆண்டிலேயே இவரைப் பெற்ற அன்னை நோயால் இறந்துபோனதுதான்! ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல இவருக்கு நோயும் தீவிரமடைந்தது. இவனது தன்னம்பிக்கையை உலகிற்கு எடுத்துக் காட்டவே டர்பனில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கெயில் இவனை அழைத்துச் சென்றார்.

ஜார்ஜியாவில் 2000ஆவது ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டிலும் இதே கருத்தை முன் மொழிந்தான் நோசி! இவனைப் பற்றி அறிந்த அதிபர் நெல்சன் மாண்டேலா "வாழ்க்கையில் போராடப் பிறந்த உருவம்' என்று வர்ணித்தார். தனது வளர்ப்பு அன்னையுடன் இணைந்து தன்னைப் போலவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக "நோசியின் சரணாலயம்' என்ற பெயரில் இல்லம் ஒன்றைத் துவக்கினான். அவன் விருப்பப்படியே ஜோஹன்னஸ்பர்க்கில் அது துவக்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறது. 

இச்சிறுவன் 1-6-2001அன்று தனது 12ஆவது வயதில் உயிர் நீத்தான். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிலேயே மிக அதிக நாள் உயிரோடு இருந்த சிறுவன் இவன் ஒருவன் மட்டுமே! நஅஆஇ3 என்ற தென்னாப்பிரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று "உலகின் தலைசிறந்த 10 ஆப்பிரிக்கர்கள்' என்ற வரிசையில் நோசிக்கு ஐந்தாவது இடத்தை அளித்தது! 

"குழந்தைகளின் உரிமைகள்' என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதல் சாதனை புரிந்த சிறுவர்களுக்கு "சர்வ தேச அமைதி விருது' என்ற விருதை வழங்க முடிவு செய்தது. 

அவ்விருதைப் பெற்ற முதல் சாதனையாளர் என்ற பெருமையையும் நோசி ஜான்சன் பெற்றான்! ஆம்! 2015ஆம் ஆண்டு அவனது மறைவிற்குப் பின் பெறப்படும் விருதாக அது அமைந்தது. அவனது வளர்ப்பு அன்னை "கெயில் ஜான்சன்' அவனது சார்பாக விருதுப் பத்திரத்தையும் 10,000அமெரிக்க டாலர்களையும் ரஷ்ய அதிபர் "திரு மிகேல் கோர்பசேவ்' அவர்கள் கையால் பெற்றுக் கொண்டார். 

இதன் மூலம் பெறப்பட்ட உதவித்தொகை யாவற்றையும் நோசியால் தொடங்கப்பட்ட இல்லத்திற்கே அளித்தார் கெயில்!

இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட எழுத்தாளர் "ஜிம் வுட்டன்' என்பவர் இவர் உயிரோடு இருக்கும்பொழுதே இவரைப் பேட்டி கண்டார். "நாம் அனைவரும் சமமே' என்ற தலைப்பில் நோசியின் வாழ்க்கையைப் புத்தகமாக வடித்தார்.

"எம்.கே.அசான்தே' என்ற கவிஞர் தாம் எழுதிய கவிதை நூல் ஒன்றில் "நோசியின் ஆத்மா' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 

இறைவன் படைப்பில் சமுத்திரம் மிகப் பிரம்மாண்டமானது! ஆனால் அதைவிட ஒற்றைத் தேன் துளி மிக உயர்வானது! அல்லவா? பல்லாண்டுகள் உயிர்வாழ்ந்து ஒருவருக்கும் பயன் இன்றி மரிப்போர் மத்தியில் சில காலம் மட்டுமே வாழ்ந்தாலும் நோசி ஜான்சன் தேன் துளி போன்றவர்தானே?

என். லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,  
கடுவெளி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com