பிக் பாஸ் கடைசியில் பலரது பிழைப்புவாதமாகிப் போனது தான் மிச்சம்!

இன்று தமிழ்நாட்டில் திட்டிக் கொண்டே பிக் பாஸ் பார்க்கிறவர்கள் அனேகம் பேர். திட்டுவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் பிக் பாஸ் மோகத்தில் இருந்து விடுபடவில்லை. அவர்களுக்கு அந்த வீட்டில்
பிக் பாஸ் கடைசியில் பலரது பிழைப்புவாதமாகிப் போனது தான் மிச்சம்!

இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் பேசுபொருளாகி இருக்கும் பிக்பாஸ் ரியாலிட்டி ரீல் ஷோ குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகளும், விவாதங்களும் இணைய ஊடகங்களில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கையில் அச்சு ஊடகங்கள் அதற்கு அத்தனை முக்கியத்துவம் தராமல் அடக்கி வாசிப்பது சற்று ஆரோக்யமான இதழியல் தர்மமாகவே மக்களில் சிலரால் முன்னிறுத்தப்படுகிறது. ஒரு கமர்சியல் தொலைக்காட்சி சேனல், தனது ரசிகர்களுக்குப் புதுப் புது ஐடியாக்களுடனான நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தருகிறோம் என்ற பெயரில் இப்படி ஒரு மேலை நாட்டு ரியாலிட்டி ஷோவின் உரிமையை விலை கொடுத்து வாங்கி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களுடனும், டிஆர்பி ரேட்டிங் குறித்த கவனத்துடனும், எப்படியாவது இந்த நிகழ்ச்சியை அது முடிவடையும் வரையில் மக்களது கவனத்திலிருந்து இம்மி பிசகாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும் காய் நகர்த்தி இந்த ஷோ வை வழி நடத்திச் செல்கிறது. இது அவர்களுடைய தொழில் தர்மமாக இருக்கலாம். அதை விமர்சிக்க வேண்டுமெனில் நாம் கட்டாயம் விமர்சித்தே ஆக வேண்டிய மிக முக்கியமான பிற பிரச்னைகளில் இருந்து விலகியவர்கள் ஆவோம். இதற்குச் செலவளிக்கும் சில மணி நேரங்களை நாம் ஏன் முக்கியமான சமூக முன்னேற்ற பிரச்னைகளுக்குச் செலவிடாமல் போனோம் என்று நம்மை நாமே குட்டிக் கொள்ளும் நிலையை நாமே வரவழைத்துக் கொண்டவர்களாவோம்.  

ஏனெனில் இன்று தமிழ்நாட்டில் திட்டிக் கொண்டே பிக் பாஸ் பார்க்கிறவர்கள் அனேகம் பேர். திட்டுவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் பிக் பாஸ் மோகத்தில் இருந்து விடுபடவில்லை. அவர்களுக்கு அந்த வீட்டில் தினமும் என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொள்ள நிறையவே ஆர்வம் இருக்கிறது. சிலருக்கு இந்த நிகழ்ச்சியைக் காண விருப்பமில்லை என்றால் அவர்கள் செய்ய வேண்டியது அதைப் பற்றிய விமர்சனமில்லை. ஏனென்றால் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்யச் செய்ய அது அந்த நிகழ்ச்சிக்கான இலவச விளம்பரமாகவே அமையுமே தவிர, அதனாலெல்லாம் அந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு விடப் போவதில்லை என்பதே அப்பட்டமான நிஜம். இப்போது நாம் தெரிந்தும், தெரியாமலும் மறைமுகமாகச் செய்து கொண்டிருப்பது அத்தகைய முரணான ஊக்குவிப்பைத் தான். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியத் தொலைக்காட்சிகளில் தேவையற்ற குப்பை என்று நினைப்பவர்கள் அதைப் பார்க்காமல் தவிர்ப்பது ஒன்றே இப்போதைக்கு அந்த நிகழ்ச்சிக்கு எதிராக நம்மால் செய்ய உகந்த ஒரே ஒரு நல்ல காரியம். ஏனெனில் பிக் பாஸைத் தடை செய்ய வேண்டுமெனில் அதே விதமாக மக்கள் மனதை சீரழிக்கும் மற்றெல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கூட நாம் நிச்சயம் விமர்சித்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப் படுவோம். இந்த இடத்தில் தான் நமக்குள் பெரும் குழப்பங்கள் நிலவுகின்றன. தனியார் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் எதை விமர்சிப்பது? எதை விமர்சிக்காமல் புறக்கணிப்பது, எதை மேம்போக்காக எடுத்துக் கொள்வது? எதை போனால் போகிறது என்று விட்டுத் தள்ளுவது? என்று தீர்மானிப்பதில் நமக்குள் பெருங்குழப்பமும், முரணும் எப்போதும் உண்டு.

அதே குழப்பத்துடன் தான் நாம் இப்போது பிக் பாஸையும் விமர்சிக்கிறோம் என்ற பெயரில் நமது நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று விமர்சிக்கிறோம், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சம்மந்த்தப் பட்ட தொலைக்காட்சி உரிய மரியாதை தரவில்லை என்று குமுறுகிறோம், ஏன் விஜய் டி.விக்காரர்கள், தங்கள் பங்கேற்பாளர்களுக்கு தப்பும் தவறுமாக தமிழ்த்தாய் வாழ்த்தை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம் என்ற பெயரில் அதைச் சீரழிப்பதை விட போட்டியாளர்களுக்கு தேசிய கீதம் கற்றுத் தர முயன்றிருக்கலாமே? அதற்கெல்லாம் அவர்களுக்கு தைரியமில்லை... தமிழ்த்தாய் வாழ்த்து என்றால் அத்தனை இளப்பமாகி விட்டதா அவர்களுக்கு? என்று சீறுகிறோம்... மறுபக்கம் இரவில் குடும்பத்தோடு அமர்ந்து அந்த நிகழ்ச்சியைப் பார்த்து நாளைக்கு அந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் என்னவெல்லாம் விமர்சிக்கலாம் என்று திட்டமிடுகிறோம். அதையாவது உருப்படியாகச் செய்திருந்தோமானால் ஒரு விசயத்தை நாம் எளிதில் கண்டுபிடித்தவர்களாகி இருப்போம்.

ஆரம்பம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியைக் காண்பவர்கள் எனில்; நன்றாக யோசித்துப் பாருங்கள்... பொழுது போக்கு அம்சங்களைத் தாண்டி விமர்சித்துப் பெரிதாக்கக் கூடிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் அத்தனை முக்கியத்துவம் தர வேண்டிய அம்சங்கள் என்ன இருக்கிறது? சிலர் நடிகை ஓவியா அணிந்து வரும் ஆடைகள் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கின்றன என்கிறார்கள், சிலர் பிக் பாஸில் ஜூலியானாவை பிற சினிமா பிரபலங்கள் ஓரம் கட்டுகிறார்கள்... ஏன் சாமானியப் பெண் ஒருத்தி பிக் பாஸில் வெல்லக் கூடாதா? என்று விமர்சிக்கிறார்கள். சிலரோ ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராமுக்கு, ஜல்லிக்கட்டு விவகாரத்தின் காரணமாக ஜூலியின் பால் அரசியல் மற்றும் இனத்துவேசம் இருக்கிறது என்று ஒரு சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். போட்டியின் நடுவில் நடிகர் பரணி அதீத மன உளைச்சலால் பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்ப முயல்வதாகக் காரணம் காட்டி அவரைப் போட்டியில் இருந்து விலக்குவதாக ஒருநாள் அறிவித்ததும், உடனே மறுநாள் பரணிக்கு ஆதரவாகப் பலர் திரண்டெழுந்து பிக் பாஸ் பற்றியும், அதன் அபத்தங்கள் பற்றியும் பேசுகிறார்கள். 

இதற்கிடையில் காயத்ரி ரகுராம், ஓவியாவைக் குறித்து, சேரி பிஹேவியர் என வர்ணித்த விசயம் பிக் பாஸ் ரசிக கோடிகளால்!!! பெரிதாக்கப்பட்டு நாளை காயத்ரி மீது இதன் காரணமாக வழக்குப் பாயும் அளவுக்கு நிலமை தற்போது நெட்டிஸன்களால் தீவிரமடைந்திருக்கிறது.

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பிக் பாஸை முன் வைத்து ஒரு விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சேர்ந்து, தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கக் கூடிய பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முன்வந்தமைக்காக நடிகர் கமல்ஹாசனை கைது செய்தால் என்ன? என்றும் உடனடியாக இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரி காவல்துறையில் புகார் அளித்து விட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உடனே ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசியவர்கள் அனைவருக்குமே ‘பிக் பாஸ்’ ஒரு மொக்கை நிகழ்ச்சி என்ற விசயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அந்த நிகழ்வில் பேசியவர்களில் நடிகை கஸ்தூரி சொன்ன கருத்தை இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும்.

‘பிக் பாஸ் ஒரு மொக்கை நிகழ்ச்சி, அதில் கலந்து கொண்டவர்கள் யார்? மதர் தெரஸாக்களா? தொழில்முறை நடிகர்கள், தாங்கள் இப்படி, இப்படித்தான் நடிக்கப் போகிறோம் என்று தெளிவாக ஒப்பந்தம் போட்டு, அதற்கான தொகையைப் பெற்றுக் கொண்டு, முன்கூட்டியே எல்லாவற்றையும் முடிவு செய்து கொண்டு தான் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை விமர்சனம் செய்து நேரத்தை வீணடிப்பதை விட, பார்க்கப் பிடிக்காவிட்டால் சேனலை மாற்றி விடுவது இந்தப் பிரச்னையை முடிப்பதற்கு எளிதான வழி என்றார். இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசப் பேச அது மேலும், மேலும் மக்களைச் சென்றடையும், யாராலுமே பேசப்படாமல் இருந்தால் சில நாட்களில் அந்த நிகழ்ச்சி தானாகவே நிறுத்தப்பட்டு விடலாம். அதைத்தானே நாம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு, அந்த நிகழ்ச்சியைத் தடை செய்யுங்கள் என்று கோருவதிலும், அதன் தொகுப்பாளரை கைது செய்யுங்கள் என்று சொல்வதிலும் நியாயமில்லை. என்றார் கஸ்தூரி.

பிக் பாஸால் தமிழ் கலாச்சாரம் சீரழிகிறது என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில் கஸ்தூரி சொன்ன ஒரு விசயம்; இன்று எல்லோரது கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கிறது. அதில் முகப்புத்தகம் என்றொரு விசயம் இருக்கிறது. அதில் எத்தனை பேர் பிட்டுப் படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இதையெல்லாம் நம்மால் தடுக்க முடிந்ததா? ஒட்டுமொத்தமாக இம்மாதிரி விசயங்களுக்கு தணிக்கை வேண்டும். இணையத்தில் யூ டியூபில் வெளியிடப்படும், பகிரப்படும் ஆபாச வீடியோக்களுக்கெல்லாம் இதுவரை தணிக்கை என்ற ஒரு விசயமே பின்பற்றப்படவில்லை. ஆனால் மக்களுக்கு இப்போது இணைய வசதி எளிதாக கிடைக்கிறது. நாம் இவற்றுக்காக எல்லாம் எதிர்ப்புக் குரலோ, கண்டனக் குரலோ எழுப்பாமல் அம்போவென விட்டு, விட்டு ஒரு தனியார் கமர்சியல் தொலைக்காட்சி தனது டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கச் செய்யும் ட்ரிக்குகளை நிஜம் என நம்பிக் கொண்டு அதைப் பற்றியே பேசி அந்த நிகழ்ச்சிக்கு தேவையற்ற விளம்பரத்தை தேடித்தந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் பிக் பாஸில் கலந்து கொள்ள என்னையும் தான் அழைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை என்பதால் மறுத்து விட்டேன். என்றார்.

அவர் சொல்வதும் ஒரு வகையில் சரி தான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்... நமது ஊடகங்களும், அரசியல்வாதிகளும், சமூகப் போராளிகளும், சினிமாக்காரர்களும் சேர்ந்து பிக் பாஸைத் தடை செய்கிறார்களோ இல்லையோ... இப்போதைக்கு அந்த நிகழ்ச்சி அவர்களுக்கெல்லாம் பிழைப்புவாதம் செய்ய மிக நல்லதொரு முகாந்திரமாகி இருக்கிறது. அவரவர் சார்பில் நின்று கொண்டு இன்னும் சில வாரங்களுக்கு பிக் பாஸை முன்னிட்டு நடத்தப்படும் விமர்சனம் மற்றும் கண்டன நிகழ்வுகளில், விவாதங்களில் எல்லாம் கலந்து கொண்டு போட்டியைப் பற்றியும், அதன் பங்கேற்பாளர்களைப் பற்றியும் பேசிப் பேசி வெளு, வெளு என்று வெளுக்கலாம். எத்தனை வெளுத்தாலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் ஒரு சீஸனோடு முடிந்து விடப் போகிறது என்று மட்டும் நம்பி விடாதீர்கள் மகா ஜனங்களே! இதைக் காட்டிலும் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதத்தில், அதி விரசமான உடலசைவுகள் கொண்ட நடனப் போட்டி நிகழ்ச்சிகளான மானாட, மயிலாடவும், ஜோடி நம்பர் ஒன்னும் பல சீசன்கள் தாண்டியும் இரு தொலைக்காட்சிகளில் வெற்றி நடை போடுகின்றன என்பதை அறியாதவர்களா நாம்?! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com