'பாகுபலி' பிரபாஸ் போல அருவியில் தாவ முயன்ற மும்பை தொழிலதிபர் மரணம்!

இவரது செயலை சில ஊடகங்கள் ‘பாகுபலி ஜம்ப்’ முயற்சி என்று விளிக்கின்றன. அந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை முக்காலே மூணு வீசம் காட்சிகள் சிஏஜி எனப்படும் கிராபிக்ஸ் உத்திக் காட்சிகள்
'பாகுபலி' பிரபாஸ் போல அருவியில் தாவ முயன்ற மும்பை தொழிலதிபர் மரணம்!

மக்களில் சிலருக்கு எத்தகைய எச்சரிக்கைகளும் சமயத்தில் பயன் அளிப்பதும் இல்லை. அவர்களது புத்திக்கு அது உரைப்பதும் இல்லை. முன்பு இப்படித்தான் ‘சக்திமான்’ என்றொரு குழந்தைகளுக்கான தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. முகேஷ் கன்னா சக்திமானாக அதில் ஒரு விரலை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மந்திரம் உச்சரித்து தனக்குத் தானே சுழலும் பூமி போலச் சுற்றுவார்... உடனே அவருக்குப் பறக்கும் சக்தி வந்து நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்குச் சென்று விடுவார். இது அந்த தொடரில் வந்த காட்சி. இதைப் பார்த்து நிஜமென்று நம்பிய சிறுவர்களில் பலர் மொட்டை மாடியில் நின்று கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்த்து உயிரிழந்த சம்பவங்கள் அன்று சில உண்டு.

இத்தனைக்கும் தொடரின் ஆரம்பத்தில் முதற்கட்டமாக இது நாடகம்... தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்படும் நடிப்பு இது’ என பொறுப்புத்துறப்பு செய்து அதாவது எச்சரிக்கை செய்து விட்டுத்தான் சம்மந்தப்பட்ட தொடரின் தயாரிப்பு நிறுவனம் அதை ஒளிபரப்புகிறது. ஆனாலும் நம் மக்களுக்கு எச்சரிக்கையையும் தாண்டி ‘த்ரில்’ என்பது வாழ்க்கையில் தேவையாகத் தான் இருக்கிறது. அதற்கான பலிகள் தான் மேற்சொன்ன உதாரணங்கள். சக்திமான் பார்த்து சிறுவர்கள் பலியானார்கள் என்றால் அதை கற்பனையினால் தூண்டப்பட்ட அறியாமை என்று நம்பலாம். ஆனால் இங்கே மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், இப்படி ஒரு பாதுகாப்பில்லாத சாகஷச் செயலில் ஈடுபட்டு உயிரிழந்த சம்பவம் மிக்க பரிதாபமாக இருக்கிறது.

'இந்திரபால் படேல்' எனும் அந்த மும்பைத் தொழிலதிபர் மும்பையை அடுத்து 73 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சஹாபூர் போர்ட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சி ஒன்றில் பாகுபலி தி பிகினிங் திரைப்படத்தில் காட்டப்படும் சிவுடு எனும் கதாபாத்திரத்தை இமிடேட் செய்து அருவியைத் தாண்டிக் குதிக்கச் செய்த முயற்சியில் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார். இவரது செயலை சில ஊடகங்கள் ‘பாகுபலி ஜம்ப்’ முயற்சி என்று விளிக்கின்றன. அந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை முக்காலே மூணு வீசம் காட்சிகள் சிஏஜி எனப்படும் கிராபிக்ஸ் உத்திக் காட்சிகள் என்பதை படம் பார்த்த சிறு குழந்தை கூட சொல்லி விடும். அப்படி இருக்க அந்தக் காட்சியை நம்பி அருவியைத் தாண்டிக் குதிக்க முயன்ற செயலை என்னவென்று சொல்ல?! 

மொத்தத்தில் எத்தனை எச்சரிக்கை செய்யப்பட்டாலும் தனிமனித கட்டுப்பாடு என்ற ஒரு விஷயமும் உண்டு. மனிதர்கள் தங்களால் எதைச் செய்ய முடியும்? எது விபரீதத்தில் கொண்டு விடும்? என்பதை பகுத்துணரக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com