அடர் வனத்தைப் போல தன்னிச்சையாக வாழ விரும்பும் பெண்ணின் வாழ்வே ‘ஆதிரை’ எனும் நாவல்!

யாருக்கும் கட்டுப்பாடுகள் பிடிப்பதில்லை. தன் மேல் செலுத்தப்படும் மனித ஆதிக்கங்களை உடைத்து வெளிவரவே எல்லோரும் முயல்கிறார்கள். இந்த ஆதிரையும் அப்படிப் பட்டவளே! 
அடர் வனத்தைப் போல தன்னிச்சையாக வாழ விரும்பும் பெண்ணின் வாழ்வே ‘ஆதிரை’ எனும் நாவல்!

‘க’ என்றால் கனா அல்லது கற்பனை அல்லது கவின் என்று எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் இருக்கலாம். இந்த நாவலை வாசித்த பின் எனக்குத் தோன்றியது ‘க’ என்றால் கட்டுப்பாட்டை, சக மனிதனின் ஆதிக்கத்தை விரும்பாத ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பே க. இந்த நாவலில் வரும் ‘க’ அலைஸ் ஆதிரா தமிழ் இலக்கியச் சூழலில் அப்படி ஒன்றும் வித்யாசமான பெண் இல்லை. ஏனெனில் மிகப் பெரும்பான்மை படைப்பாளிகளின் மன இயல்பு அது தான். யாருக்கும் கட்டுப்பாடுகள் பிடிப்பதில்லை. தன் மேல் செலுத்தப்படும் மனித ஆதிக்கங்களை உடைத்து வெளிவரவே எல்லோரும் முயல்கிறார்கள். இந்த ஆதிரையும் அப்படிப் பட்டவளே! 

நாவலின் மையமான ஆதிரைக்கு பொருளாதாரச் சிக்கல்கள் இல்லை. அவளது வசிப்பிடம் ஒரு மலைப்பிரதேசமாகக் காட்டப்படுகிறது. ஆரம்பம் முதலே உலகோடு அல்லது இந்த சமூகத்தோடு ஒட்டாமல் அவளொரு தனிப்பிறவியாகவே சித்தரிக்கப் படுகிறாள். பெற்றோர் செய்து வைத்த திருமண பந்தம் ஆதிரைக்கு அபத்தமாகத் தோன்ற, அதிலிருந்து வெளி வந்து அவள் ஆதியோடு 10 வருடங்கள் வாழ்கிறாள். 10 வருடங்களின் கடைசி நாளில் ஆதியுடனான வாழ்வும் சலிக்கவே அவனிடமிருந்தும் அவள் பிரிவதில் தொடங்குகிறது இந்த நாவல்.

ஆதியைப் பிரிந்தபின் தனது தனி வாழ்வில் அவள் கண்டடையும் கலைஞன் கவின் அவளை ஈர்த்துக் கொள்கிறான். அவன் ஈர்த்துக் கொண்டானா? அல்லது அவனது ஓவியக் கலை அவளை ஈர்த்ததா? என்பது குறித்து நாவலில் பிரித்தறிய இயலவில்லை. ஆதிரையும், கவினும் அவள் காட்டின் மீது கொண்ட பிரேமையுடனும், அவனுக்கு தனது ஓவியங்களின் மீது கொண்ட பிரேமையுடனும் இணைந்து வாழ்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல தங்களை ஒத்த சிந்தனை கொண்ட அதாவது இந்த சமுதாயம் இது தான் மனித வாழ்க்கை, இப்படித் தான் மனிதர்கள் வாழ வேண்டும் என்று விதித்து வைத்த நியதிகளை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு... அப்படிச் சொல்வது கூட கொஞ்சம் வன்மையாகத் தோன்றலாம். ‘க’ வில் இணைந்து வாழ்வோர் அந்த வன்மையக் கூட விரும்பாதவர்கள். அவர்கள் தங்களது இயல்புக்கேற்ற தன்னிச்சையான ஒரு வாழ்வை வாழ ஆதிரையும், கவினும் தொடங்கிய ‘க’ வில் வந்து இணைந்து கொள்கிறார்கள். அது எப்படி என்பதை இயற்கையின் மீதான பெரு வனப்பான இது தான் இந்த நாவலின் சிறப்பு. ஆனால் ஒரு பெண் எத்தனை முயன்றாலும் ஒரு துளி ஏமாற்றம் அல்லது தன்னிறைவின்மை அவளை வாழ்நாள் முழுதும் தொடரும் என்பதற்கு ஆதிரை மிகச் சிறந்த உதாரணம்.

அவள் தனக்குப் பிடித்த வாழ்வைத் தேடித் தேடி வாழ எடுக்கும் முயற்சி கடைசியில் ‘ழ’ வைப் பார்த்து பொறாமைப் படுவதில் முடிகிறது. ‘ழ’ கவினின் புது இணையாக மாறியதிலிருந்து ஆதிரைக்கு மனச் சமாதானமில்லை. நாவலில் இயற்கை வர்ணனைகள் அபாரம். இயற்கை போலவே தன்னிச்சையாக வாழ விரும்பும் பெண்மை குறித்தான வர்ணனைகளும் அபாரம். ஆனால் இயற்கை தன்னில் எந்த விதமான தராசும் வைத்துக் கொள்வதில்லை என்பதால், தனக்கென அது எதையும் வேண்டுவதில்லை. ஆனால் பெண்மை அப்படிப் பட்டதல்ல, அவள் தான் ஆதிக்கம் செலுத்த விரும்பாவிட்டாலும், தன்னை முக்கியமானவளாகக் கருதுகிறாள். அவளது அந்த எண்ணம் என்னவாயிற்று என்பதை நீங்கள் நாவலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு பெண் தனக்கு என்ன தேவை? என்பதை தானே முடிவு செய்பவளாக இருந்தால்... இந்த சமூகம் பெண்களுக்கு விதித்த கோட்பாடுகளை, நியதிகளை புல் நுனிப் பனித்துளியைச் சுண்டுவது போல வெகு இயல்பாக சுண்டி எறிபவளாக இருந்தால் அவள் எப்படி இருக்கக் கூடும் என்பதற்கு உதாரணமே ஆதிரை. இந்த நாவலில் ஆதிரை இந்த உலகத்துப் பெண்கள் அரிதென நினைக்கும் ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து பார்க்கிறாள். அதில் வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் அவளுக்கு அக்கறை இல்லை. ஏனெனில் அவள் இங்கு தனக்கு மிகப் பிடித்த காட்டை, பல்லுயிர்ப் பெருக்கமான காட்டைத் தன் ஆதர்ஷமெனக் கொள்கிறாள். காடு எப்போதும், எதையும் மறுப்பதுமில்லை, வேண்டுவதுமில்லை. அது தன் போக்கில் தன் வனப்புடன் நீண்டு, நீடித்துக் கிடக்கிறது. அது போலவே ஆதிரை உருவாக்கிய ‘க’ வும் அவள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவளைப் போலவே தன்னிச்சையான வாழ்வை வேண்டுபவர்கள் வந்தடையும் இடமாக நீடிக்கப் போகிறது. இடையில் எந்த ஏமாற்றங்களும் எதுவும் செய்வதற்கில்லை. என்பதாக நாவல் முடிகிறது.

காட்டில் வாழ நாம் ஒரு தாவரமாகவோ, விலங்காகவோ தன்னிச்சையாக மாறிப் போக வேண்டும். ஆதிரையும், கவினும் ஒருமுறை அடர் வனத்திற்கு மேற்கொண்ட பயணம் பற்றிய வர்ணனை இந்நாவலில் உண்டு. புதிதாகக் காடு காண்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கக் கூடும். அருமையான விவரிப்புகள் அவை.  காட்டின் இயல்பு பற்றியும், தன்னிச்சையான வாழ்வில் பெரு விருப்பம் கொண்ட பெண்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததில் இந்த நாவலுக்கும் முக்கிய இடமுண்டு. ஜெயமோகனின் ‘காடு’ காட்டிய வனத்தின் சாயலை இந்த காட்டிலும் காண முடிந்தால் அது உங்கள் வாசிப்பின் மகத்துவம்.

மலையாளத்தில் காட்டைக் ‘காவு’ என்பார்கள். இங்கே ‘க’ என்பது காட்டையும் குறிக்கும் என நாம் கடைசியாக முடிவுக்கு வந்தால் அதில் தவறில்லை. 

பெண்ணின் மனதை காட்டின் இயல்போடும், இயற்கையின் பெரு வனப்போடும் பொருத்திப் பார்த்து ஒரு நாவல் எழுதத் தோன்றியமைக்கு எழுத்தாளரைப் பாராட்டலாம்.

பெண்ணின் மனம் என்ற ஒற்றைப் புள்ளியில் இந்த நாவல் விரிவான விமர்ச்சனத்திற்கு உரிய பேசுபொருளாகிறது.

நூல்: ஆதிரை
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூ.140
ஆசிரியர்: க.வை.பழனிசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com