ஒரு பெண்ணை நாம் எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம் என்பதை பொறுத்ததுதான் கிளாமர்!

சேலையிலும் கிளாமர் உண்டு, மாடர்னிலும் மங்களகரமுண்டு. அது பார்க்கும் பார்வையில் இருக்கிறது. 
ஒரு பெண்ணை நாம் எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம் என்பதை பொறுத்ததுதான் கிளாமர்!

"சிறுவயதிலிருந்தே எந்தவொரு செய்தித்தாளையும், இதழ்களைப் பார்த்தாலும் அதில் வரும் விளம்பரங்களில்  உள்ள மாடல்களைக் கண்டு மிகவும் ரசிப்பேன். அதுபோன்று சென்னையிலுள்ள தி.நகர் வழியாக போகிறபோதெல்லாம், நகைக்கடைகளிலும், துணிக் கடைகளிலும் வைத்திருக்கும் பெரிய பெரிய பேனர்களை பார்க்கும்போது எனக்குள் அப்படியோர் துள்ளலாகி நானே அந்த பேனர்களில் இருப்பது போன்று கற்பனை செய்து கொள்வேன். எப்போதும் ஒரே விஷயத்தை கனவு கண்டு கொண்டிருந்தால் அது ஒருநாளில் நிஜமாகும் என்பார்களே அதுபோன்றுதான் இன்று எனது கனவு கைகூடி வந்திருக்கிறது'' என்கிறார் மாடலிங் உலகில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்திருக்கும் மஞ்சு சங்கர். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

பூர்வீகம்?
சேலம். அப்பா ஆர்மியில் இருந்ததால் நான் குழந்தையாக இருந்தபோதே டெல்லிக்குச் சென்றுவிட்டோம். ஒருகட்டத்தில்  அப்பா ஆர்மியிலிருந்து வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு சதர்ன் ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின்னர் சென்னை நிரந்தரமாகிவிட்டது. 

முதல் மாடலிங் அனுபவம்?
பி.இ. படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிரபல நகைக்கடைக்கான விளம்பரத்தின் அறிவிப்பு ஒன்றைப் பார்த்தேன். அதற்கான டெஸ்டில் கலந்து கொண்டேன். பின்னர் திடீரென்று ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்து ""நாளை ராம்ப் வாக் இருக்கு... வந்திடுங்க'' என்றனர். வீட்டில் மாடலிங் பற்றி சொன்னதும், அரைகுறை ஆடை, அதிக மேக்கப், பேஷன் இப்படித்தான் இருக்கும் என்று பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், எனது ஆர்வத்தைப் பார்த்து சம்மதித்தனர். 

அதுவரை மாடலிங் ஷோ எதிலும் கலந்து கொண்டது இல்லை; பயிற்சியும் இல்லை. இருந்தாலும் தைரியமாக சென்றேன். "ஆயிரம் டைமண்ட் நெக்லஸ்' என்ற தீம். என்மீது கோடிக்கணக்கான விலையில் உள்ள வைர நகைகளை அணிவித்தார்கள். ஒரு வைரக்கல் என்றாலே ஜொலிக்கும் ஆனால் இத்தனை வைரங்களின் ஜொலிப்பைத் தாண்டி அங்கே அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை என் பக்கம் கவர வேண்டிய மிகப் பெரிய சவால் என் முன்னே. எனது தருணத்திற்கான மணி ஒலித்தது. உள்ளுக்குள் இருக்கும் படபடப்பை வெளிக்காட்டாமல் தைரியமாக நடந்து சென்றேன். அதற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது இன்றும் மறக்கமுடியாது.

 
சந்தித்த சவால்கள்?
மாடலிங் உலகத்திற்குள் வந்தபோது, எதுவுமே தெரியாத பூஜ்ஜியமாக இருந்தேன். நான் ஒரு மாடல் என்று தைரியத்தோடு சொல்லிக் கொள்ள இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது.  பொதுவாக, பேஷன் உலகத்திற்குள் வரும்போது நிறைய இழப்புகளையும், தியாகங்களையும் செய்ய வேண்டிவரும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல, நாம்  எந்த நிலையிலும், எங்கேயும் சுயக்கட்டுப்பாடுடனும், சுயமரியாதையுடனும்  இருந்தால் நிச்சயம் எதையும் இழக்க வேண்டியதில்லை.  பணம் நமக்குத் தேவைதான். ஆனால் தேவையான அளவுக்குதான் தேவை. இந்த எண்ணம் இருந்தாலே எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் நமக்கான மரியாதை நிச்சயம் கிடைக்கும். சவால்கள் இல்லாத துறை எதுவுமில்லை. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் நல்லதும், கெட்டதும் இருக்கும். அதில் மிகக் கவனமாக நல்லதை மட்டுமே தேர்வு செய்து கொண்டால் சவால்களை சாதாரணமாக எதிர் கொள்ளலாம். 


கிளாமர் இல்லாமல் மாடலிங் இல்லையா? கிளாமர்தான் ஒரு பெண்ணா?
கிளாமர் என்பது எந்தளவிற்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்ததுதான். உதாரணமாக ஒரு சாதாரண ஜுஸ் விளம்பரத்திற்கு கூட அதிகப்படியான எக்ஸ்போஸ் செய்து காட்டுகிறார்கள். அதுவே அதிகம் எக்ஸ்போஸ் செய்ய வேண்டிய விளம்பரத்திற்கு ஒரு பார்வைமட்டுமே இருக்கும். அதனால், ஒரு பெண்ணை நாம் எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம் என்பதை பொறுத்ததுதான் கிளாமர். சேலையிலும் கிளாமர் உண்டு, மாடர்னிலும் மங்களகரமுண்டு. அது பார்க்கும் பார்வையில் இருக்கிறது. 

சரியான துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோமா என்று எந்த சந்தர்ப்பதிலாவது நினைத்துண்டா?
ஒருமுறைக்கூட அப்படி நினைத்ததில்லை. நான் மிகவும் நேசித்து, விரும்பித்தான் இந்தத் துறைக்கு வந்தேன். இதில்தான் வர வேண்டும் என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன். அதை தக்க வைத்துக்கொள்ளவும், அடுத்தகட்டத்தை நோக்கி செல்லவும் என் திறமைகளை வளர்த்துக் கொள்ளவுமே முயற்சிகள் செய்து வருகிறேன். அந்த தேடலுக்கானப்  பயணத்தையும் தொடங்கிவிட்டேன்.   

வெளிநாட்டு மாடல் அழகிகள், இந்தியன் மாடல் அழகிகள் என்ன வித்தியாசம்?
பொதுவாக பாரின் மாடல்களைப் பொருத்தவரை இந்த துறையை தேர்ந்தெடுத்ததும், நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுத்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, அவர்களுக்கு 3 மாதங்கள் வரை "வார்ம் அப்' பயிற்சி மட்டுமே இருக்கும். இதுபோன்று அடுத்தடுத்து பல கட்ட பயிற்சிகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டிதான் அவர்களால் மாடலாக வர முடியும். அதனால்தான் அவர்களால் இந்த துறையில் நிலைத்து நிற்க முடிகிறது.

இந்தியன் மாடல் அழகிகளைப் பொருத்தவரை இங்கே பயிற்சி அளிக்கவோ, வழிகாட்டவோ யாரும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டு, பின் தானாக தெரிந்து, புரிந்துதான் வர வேண்டியிருக்கிறது. அதுபோன்று இங்கே நமது பெண்களிடம் இயல்பாகவே தன்னம்பிக்கையின் அளவு மிகவும் குறைவு. காரணம், நமது கலாசாரம். அதனால் ஏற்படும் தயக்கமும். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் இந்திய மாடல்கள் மிக அழகானவர்கள். அவர்களின் முகத்தில் இருக்கும் அழகு வேறு எந்த நாட்டிலும் இல்லை. அதன் காரணமாகத்தான்  இந்தியாவில் இருந்து மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் போட்டிகளுக்குப் போகிறவர்கள் சிலர் பல கட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் சில நேரங்களில் பாடி லாங்வேஜ் மூலம் அடிப்பட்டு விடுகிறார்கள். இதனால்தான் மற்ற நாடுகளைவிட நமது நாட்டில் மாடல்கள் மிகவும் குறைவு.

உங்கள் புகைப்படங்களை பார்க்கும்போது? உங்களது தாயார் என்ன சொல்வார்கள்?
அம்மாவுக்குப் பிடித்திருந்தாலும் சரி, பிடிக்கலன்னாலும் சரி அதை நேரடியாக சொல்லிவிடுவாங்க. இத்தனைக்கும் அம்மா சேலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால்  ஜெனரேஷன் கேப் எங்களுக்குள் அவ்வளவாக வந்ததில்லை. நான் சில சமயங்களில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டாலும், என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துபவர் அம்மாதான். 

- ஸ்ரீதேவி குமரேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com