துணை கலெக்டர் ஆகிறார் பி.வி. சிந்து!

துணை கலெக்டர் ஆகிறார் பி.வி. சிந்து!

சிந்துவை கெளரவிக்கும் வகையில்,  அவருக்கு  ஆந்திர  மாநில  அரசு  குரூப் 1 அந்தஸ்துள்ள துணை  ஆட்சியர் (கலெக்டர்) பதவி வழங்க முடிவு செய்துள்ளது. 

நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து (வயது 21) ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.  சிந்துவை கெளரவிக்கும் வகையில்,  அவருக்கு  ஆந்திர  மாநில  அரசு  குரூப் 1 அந்தஸ்துள்ள துணை  ஆட்சியர் (கலெக்டர்) பதவி வழங்க முடிவு செய்துள்ளது. 

ஆந்திர அரசின் புதிய தலைநகராக அமராவதி  அழகுற உருவாகி வருகிறது.. இதற்கான கட்டுமானப்  பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஐதராபாத்தை  சேர்ந்த சிந்து ஒலிம்பிக்கிஸில் பதக்கம் வென்றதையடுத்து, முதல்வர் சந்திரபாபுநாயுடு, ஏற்கெனவே மூன்று  கோடி ரூபாய் பரிசுத்தொகை, 1000 சதுரஅடியில்  வீட்டுமனையும்  வழங்கி உள்ளார். சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு, பேட்மிண்டன் அகாடமி அமைப்பதற்காக இடத்தையும் அரசு ஒதுக்கியுள்ளது.

புதிய தலைநகரான அமராவதி உருவாவது தொடர்பாக நடந்த மகளிருக்கான நிகழ்ச்சியில், துணை கலெக்டராக சிந்து நியமனத்திற்கான பணி ஆணை அவருடைய தாயார் விஜயாவிடம் வழங்கப்பட்டது.  இருப்பினும் முறையான அரசு ஆணை    வந்ததும்தான் சிந்து பணியில் சேர்வார்.  பணியில் சேர்ந்தாலும் விளையாட்டுக்கு  இடையூறு  இல்லாதவாறு  அரசு  ஆவன செய்ய  வேண்டும் என  சிந்துவின்  அம்மா  விஜயா  கேட்டுக்  கொண்டுள்ளார். 

துணை கலெக்டர் பதவியை  ஏற்றுக்கொள்ளும், பி.வி.சிந்து, எட்டு, ஒன்பது ஆண்டுகளில் அவர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவார். தற்போது சிந்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு உதவி மேலாளராகப் பணி புரிந்து வந்தாலும்,  முழு நேர வேலை  இறகுப் பந்து விளையாடுவதுதான்.  வெகு விரைவில் சிந்துவிற்கு   துணை மேலாளர்(விளையாட்டு) பதவி வழங்குவதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. ஒலிம்பிக்ஸில் சிந்து வெள்ளி வென்றதை பாராட்டி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஐந்து கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார்.  அவரது அரசும்   சிந்துவிற்கு  அதிகார மட்டத்தில்  அரசு வேலை வழங்கப்படும் என்ற  உறுதியைத்  தந்துள்ளது. ஆக சிந்துவுக்கு பரிசு மழையுடன், பதவிகள் மழையும்  சேர்ந்து கொட்டுகிறது.

- ஏழிசை  எழில் வல்லபி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com