தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும்! பிரிகேடியர் மிஸ். துர்காபாய்

என் 12 வயதில் பள்ளிக்கூடம் விட்டுவந்து ஒருநாள், வாசலில் காயப்போட்டிருந்த பச்சை
தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும்! பிரிகேடியர் மிஸ். துர்காபாய்

'என் சொந்த ஊர் திண்டிவனம். அப்பா கோலார் தங்க வயலில் ஆசிரியர் பணியில் இருந்ததால், நான் அங்கேதான் 1930-இல் பிறந்தேன். 1942-இல் என் சித்தப்பா சுதந்திரப் போராட்டத்தில் கைதானதையடுத்து, மீண்டும் நாங்கள் திண்டிவனத்திற்கு வந்தோம். 

என் 12 வயதில் பள்ளிக்கூடம் விட்டுவந்து ஒருநாள், வாசலில் காயப்போட்டிருந்த பச்சை வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டுவிட்டேன். காலரா வேகமாகப் பரவிய காலம் அது. எனக்குப் பேதி ஏற்பட்டதால், எங்கே காலரா தாக்கிவிடுமோ என்ற பீதி ஏற்பட்டது. 

அப்போது, எனக்கும், என்னைப்போன்று பாதிக்கப்பட்ட பலருக்கும் வைத்தியம் பார்த்த மருத்துவர்களின் கனிவான சேவை என் மனதில் ஆழப் பதிந்தது. நானும் மருத்துவ சேவையில் ஈடுபடவேண்டும் என்று அப்போதே தீர்மானித்தேன். 

டாக்டருக்குப் படிக்க வசதியில்லாத காரணத்தால், நர்சிங் படித்துவிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தேன். நர்சிங் படித்த பெண்களை ராணுவத்தில் சேர்க்கும் அறிவிப்பு 1953-ஆம் ஆண்டு வந்தது. அதற்கு விண்ணப்பித்தேன். வேலை கிடைத்தது.1953-இல் என் 23ஆம் வயதில் பணியில் சேர்ந்தேன். லெப்டினன்ட், கேப்டன், மேஜர், லெப்டினன்ட் கர்னல், கர்னல் என்று படிப்படியாக பதவி உயர்வு பெற்று பிரிகேடியர் ஆனேன். 'பிரிகேடியர் பதவி வகித்த முதல் தமிழ்ப்பெண்' என்ற பெருமை என்னைச் சேர்ந்தது. 

1962-இல் சீனப்போர், 1965 மற்றும் 1971-இல் பாகிஸ்தான் போர் போன்ற யுத்த காலங்களில், கண்ணிழந்தவர்களை, கையிழந்தவர்களை, காலிழந்தவர்களை குவியல் குவியலாக கொண்டுவருவார்கள். யுத்தங்களால் ஏற்பட்ட கொடுமைகள் பாதிப்புகள் வடஇந்தியர்களே உணர்வார்கள். தென்னிந்தியாவில் உள்ளவர்களுக்கு அந்த பாதிப்பு தெரியாது. 

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை சார்பில், ஆப்பிரிக்காவின் காங்கோவில் ஓராண்டு பணிபுரிந்தேன். பாலியல் நோயாளிகள் அங்கு அதிகம். அவர்கள் மாமிசம், மரவல்லிக்கிழங்கு மற்றும் அதன் இலைகளை அதிகம் உண்பார்கள். அதனால், அவர்கள் உடலில் பயங்கரமான துர்நாற்றம் வீசும். வெயில், பனி, கடும் குளிர் போன்ற எந்த பிரதேசத்தில் பணிபுரிந்தபோதும் நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன். 

அப்போதெல்லாம், ராணுவ சேவையில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொண்டால் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற நிலை இருந்தது. எனக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லை. பின்னர், 1968 -இல் திருமணம் செய்துகொண்டும் பணியாற்றலாம் என்ற நிலை வந்தது. அப்போதும் நான் திருமணம் செய்ய விரும்பவில்லை. நான் நாட்டுக்காக சேவையாற்றிப் பெற்ற எண்ணற்ற விருதுகளும் பதக்கங்களும்தான் என் மாங்கல்யம்.

35ஆண்டுகள் ராணுவ சேவை முடிந்து, 1988-இல் ஓய்வு பெற்றேன். என் தம்பி மகள், மகன்களுக்குத் திருமணம் செய்துவைத்தேன். அவர்கள் மூலம் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். நாட்டுப் பற்றோடும், தமிழ்ப்பற்றோடும் வாழ்ந்தது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்திருக்கிறது. ஓய்வு நேரங்களில் எழுத்துப்பணி மற்றும் சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறேன்''. 
- ரவிவர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com