விசிலடிச்சா உடனே அதை ரோட் சைட் ரோமியோக்கள் வேலை என்பீர்களா?! இல்லைங்க அது ஒரு கலை!

இன்றளவிலும் நம் சென்னை மக்கள், விசில் என்றால் அது ரோட் சைட் ரோமியோக்கள் தெருவில் செல்லும் இளம்பெண்களை கேலி செய்யப் பயன்படுத்தும் மொழியாகவே கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.
விசிலடிச்சா உடனே அதை ரோட் சைட் ரோமியோக்கள் வேலை என்பீர்களா?! இல்லைங்க அது ஒரு கலை!

1958 ல் வெளிவந்த ‘கெளரா’ ப்ரிஜ் இந்தித் திரைப்படத்தில் வரும் ‘மேரா நாம் சின் சின்..’ பாடலின் துவக்கத்தில் வரும் டியூன் கேட்டிருக்கிறீர்களா? கேட்கவில்லையென்றால் கவலை வேண்டாம். உங்களுக்கு ஜகத் டர்கஸையும் அவரது விசிலிங் குழுவினரையும் தெரிந்திருந்தால் போதும். படத்தில் வரும் ஒரிஜினல் டியூனை துளி ஸ்ருதி பேதமின்றி அப்படியே விசிலிங் முறையில் பாடிக் காட்டுவதில் வல்லவர் ஜகத்.

இதோ உங்களுக்காக அந்தப் பாடலின் ஒரிஜினல் யூ டியூப் விடியோ லிங்க்...

69 வயது ஜகத் ஒரு விசிலிங் விற்பன்னர் மட்டுமல்ல அதற்கென்றே ஒரு பிரத்யேக குழுவையும் வேறு வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அவரையும் அவரது குழுவினரையும் சந்தித்த போது அவர்கள் சில பாடல்களை நமக்காக விசிலிங் முறையில் பாடியும் காட்டினார்கள். விசிலோடும், விசிலர்களோடுமான அந்த உரையாடல் இடையிடையே விசில் கச்சேரிப் பாடல்களுடனான ஒரு இனிமையான சந்திப்பாக அமைந்திருந்தது.

விசிலர்ஸ் குழுவினர்...

ஜகத்: எனக்கு விசிலிங்கில் இருந்த ஆர்வத்தால் 2005 ஆம் ஆண்டில் மும்பையில் இயங்கிய விசிலர்ஸ் அசோஸியேசனில் உறுப்பினராகச் சேர்ந்தேன். 2008 ஆம் ஆண்டில் அந்த குழு மூலமாக நிகழ்த்தப்பட்ட விசிலிங் ரெகார்ட் சாதனை நிகழ்வில் 48 பேருடன் கூடி ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா’ தேச பக்திப் பாடல் விசிலிங்கில் பாடப்பட்டது. அந்த சாதனையாளர்கள் 48 பேரில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்குண்டு. பிறகு 2011 ல் சென்னை திரும்பியதும் ‘சென்னை விசிலிங் வேர்ல்ட்’  என்ற குழுவைத் தொடங்கி அதன் மூலமாக நானும் எனது குழுவினரும் விசில் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். 

ஆர்வத்தால் பலர் எங்களது குழுவை நாடி வந்து சேர்ந்து கொள்ள நினைத்தாலும், யாருக்கு நிஜமாகவே விசில் கச்சேரியில் விருப்பம் உள்ளதோ அவர்களை மட்டுமே நான் குழுவில் சேர்த்துக் கொள்கிறேன். விசில் கச்சேரி செய்ய நினைப்பவர்கள் குறைந்த பட்சம் அவர்களுக்குப் பிடித்த ஒரு பாடலின் டியூனையாவது முழுதாக விசில் செய்யும் திறனுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது நிபந்தனை. அப்படிப்பட்டவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதால் இப்போது வரை எங்களது குழுவில் 10 நபர்கள் மட்டுமே உள்ளனர். எங்கள் குழுவில் மிக இளையவராக பூஜாவில் தொடங்கி வங்கி ஊழியரான கிருஷ்ணராஜ், குழந்தைகள் மருத்துவத்தில் நரம்பியல் நிபுணரான சைதன்யா வரை அனைவருமே மிகச் சிறந்த விசிலர்கள்.

விசிலர்ஸ் குழுவைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் இந்த 6 ஆண்டுகளில் எங்களுக்கு இப்போதும் இந்த சென்னை நகர மக்கள் எங்களது விசில் கச்சேரியைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் தணியவே இல்லை. ஏனெனில் பல இடங்களில் விசில் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது பாடல் வரிகளின் டியூன் கேட்டு பேரார்வத்துடன் ஓடி வரும் மக்கள், அருகில் வந்ததும் இது விசில் கச்சேரி தான் என்று அறிந்ததும் சில நிமிடங்களில் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்கள். விசில் அடிப்பதைப் பற்றிய மக்களின் மூட நம்பிக்கைகளையும், பிற்போக்கு கற்பனைகளையும் களைவது சற்றுக் கடினமான காரியம் தான். ஆனால் விசில் கச்சேரி செய்வதும் ஒரு கலை என்பதை மக்கள் ஒப்புக் கொள்ளச் செய்வதே எங்கள் குழுவின் நோக்கம் என்பதால் அதற்காக நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். 

இன்றளவிலும் நம் சென்னை மக்கள், விசில் என்றால் அது ரோட் சைட் ரோமியோக்கள் தெருவில் செல்லும் இளம்பெண்களை கேலி செய்யப் பயன்படுத்தும் மொழியாகவே கற்பிதம் செய்து கொள்கிறார்கள். விசில் கச்சேரி செய்பவர்களை ஒரு படி கீழாகத் தான் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல என்று அவர்களுக்குப் புரிய வைப்பதே எங்களது முயற்சி என்கிறார்
விசிலர்ஸ் குழுவின் மற்றொரு அங்கத்தினரான சைதன்யா.

இவர்களது குழுவில் விசில் கச்சேரிகளுக்கு முன்பு ஒவ்வொரு முறையும் புதுப் புது தீம் தயார் செய்கிறார்கள். அந்த தீம் அடிப்படையில் பாடல்களைத் தேர்வு செய்வது ஜகத். பாடல்களைத் தேர்ந்தெடுத்ததும் அவற்றை மெயில் மூலமாக ஜகத் தனது குழுவினருக்கு அனுப்புகிறார். முதலில் வருகிறவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் எந்தப் பாடலுக்கு யார் விசில் கச்சேரி செய்வது என்பதை அவர்களுக்குள்ளாக முடிவு செய்து கொள்கிறார்கள். சில பாடல்களை விசில் செய்யும் போது அவர்கள் விரும்பிய வடிவத்தில், டியூனில் அது அமையவில்லை என்றால் துடிக்கும் தாளமுடன் கூடிய இசையை துணைக்கு வைத்துக் கொள்வார்களாம். 

விசில் குழு உறுப்பினர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ் பேசுகையில், வங்கி ஊழியரான எனக்கு விசில் கச்சேரி என்றால் மிகவும் விருப்பம். அதில் கலந்து கொள்ள அத்தனை ஆசையாக இருப்பேன். சில நேரங்களில் மொழி தெரியாத படங்களில் இருந்தும் கூட சில மக்களிடையே பிரபலமான சில பாடல்களை விசில் கச்சேரி செய்ய வேண்டியதாகி விடும். அம்மாதிரியான நேரங்களில் பாடல் வரிகள் தெரியாவிட்டாலும் டியூனில் அதிக கவனம் செலுத்தி பாடும் போது ரொம்பவே காமெடியாக இருக்கும். விசில் கச்சேரியைப் பொருத்தவரை பாடல் வரிகளின் அர்த்தம் தெரிவதை விட அட்சர சுத்தமாக பாடல்களின் டியூன் தெரிந்திருப்பது தான் முக்கியம். எனக்கு பெரும்பாலும் வார்த்தைகளின் அர்த்தம் புரிவதில்லை. ஆனால் டியூன்களைத் துல்லியமாகப் பிடித்து பாடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றார்.

ஒவ்வொரு விசில் கச்சேரிக்கும் முன்னதாக இவர்களது விசிலர்ஸ் குழுவினர் இரண்டு அல்லது மூன்று முறை ஒன்றாகக் கூடி பிராக்டிஸ் செய்கிறார்கள். விசில் கச்சேரியில் இவர்களுக்கு இருக்கும் பேரார்வத்தின் அடுத்த கட்டமாக கர்நாடக இசைப் பாடல்களையும் விசில் கச்சேரியில் சாத்தியமாக்க வேண்டும் என்பது தான் குழுத் தலைவரான ஜகத்தின் ஆசை. அதுமட்டுமல்ல ஜகத் மறைந்த நகைச்சுவை நடிகரும், அபார நடனக் கலைஞருமான சந்திரபாபு அவர்களின் தீவிர விசிறி, சந்திரபாபு பாடல்களைப் பற்றிப் பேசும் போது மனிதர் மிகுந்த உவகையுடன் சொன்னவை, ‘1959 ல் வெளிவந்த  சகோதரி திரைப்படத்தில் வெளிவந்த பாடலான ‘நான் ஒரு முட்டாளுங்க பாடலும்,  1962 ல் வெளிவந்த அன்னை திரைப்படப் பாடலான ‘புத்தி உள்ள மனிதரெல்லாம்’ என்ற பாடலும் சந்திரபாபு நடித்த திரைப்படங்களின் கிளாஸிக் வகைப்பாடல்கள். விசில் கச்சேரியில் இந்த இரண்டு பாடல்களையும் அபாரமாகப் பிராக்டிஸ் செய்யலாம். கூடிய விரைவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களுக்கு, அவரது சிறந்த பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து எங்களது குழுவின் விசில் கச்சேரி பாடல்கள் மூலம் சிறப்பான  அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஆசைப்படுவதாக ஜகத் கூறுகிறார்.

நம்மில் பெரும்பாலோருக்கு இசையை ரசிக்கத் தெரியும், ஆனால் பாடத் தெரியாது. அப்படிபட்டவர்கள் விசில் கச்சேரியில் ஆர்வம் காட்டினால், அவர்களால் டியூன் தப்பாமல் விசில் செய்ய முடியுமா? அல்லது இசை ஞானம் இருந்தால் தான் விசில் கச்சேரியெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியை ஜகத்திடம் கேட்டோம். அதற்கு அவரளித்த பதில்;

‘விசில் கச்சேரிக்கு பெரிதாக இசை ஞானம் தேவையில்லை. ஆனால் குறைந்தபட்சம் டியூன்களை தப்பிதமில்லாமல் விசில் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விசில் கச்சேரியின் இடையில், தொடர்ந்து விசில் செய்யவும் , எந்த இடத்தில் நிறுத்தி, எந்தெந்த இடங்களில் நிறுத்தாமல் அதே நேரம் டியூன் தப்பாமல் மூச்செடுத்து விசிலிங் செய்வது என்பதைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது தொடர் பயிற்சியின் மூலம் கை வரக் கூடிய விசயம் தான்.

விசிலிங்கில் மூன்று வகை பயிற்சிகள் உள்ளன.

  • இன்வார்ட் விசிலிங் (வாயைத் திறக்காமல் வாய்க்குள்ளாக விசில் சத்தம் எழுப்புவது)
  • அவுட்வார்ட் விசிலிங்( உதடுகளைக் குவித்து காற்றை கட்டுப்படுத்தி விசில் செய்வது)
  •  டீத் விசிலிங் ( நாக்கைப் பயன்படுத்தி விசில் கச்சேரி செய்வது)

இந்த மூன்றில் இன்வார்ட் விசிலிங் செய்வது கொஞ்சம் கஷ்டம். விசிலிங்கில் ஆர்வமுள்ள பெரும்பாலோனோருக்கு இன்வார்ட்& அவுட்வார்ட் விசிலிங் இரண்டுமே எளிதான விசயம் தான். டீத் விசிலிங் கற்றுக் கொள்ள அதிக நேரம் ஆகும். அது தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

பெண்கள் விசில் கச்சேரி செய்ய குடும்பத்தினர் ஆதரவு அவசியம்!

இவர்களது குழுவில் திவ்ய செளந்தரி இன்வார்ட் விசிலிங் செய்வதில் திறமைசாலி, மற்ற இரண்டு பெண் உறுப்பினர்களான பூஜாவும், சைதன்யாவும் அவுட்வார்ட் விசிலிங் செய்வதில் வல்லவர்கள். பெண்களைப் பொறுத்தவரை முதலில் விளையாட்டாக விசில் கச்சேரி செய்ய வந்து, பின்னர் அதை பெரு விருப்பத்துடன் கூடிய ஹாபியாகத் தொடர்வதற்கு அவர்களது குடும்பத்தினரின் ஆதரவும் மிகவும் அவசியம் என்கிறார் சைதன்யா. சைதன்யா திருமணமானவர். குழந்தைகள் நரம்பியல் மருத்துவரான சைதன்யாவின் விசில் கச்சேரிக்கு அவரது கணவரும், மாமியாரும் ரசிகர்களாம். எனது வேலையில் இருக்கும் சின்னச் சின்ன டென்ஸன்களைப் போக்கும் அருமருந்தாக, நான் விசிலிங்கை கருதுகிறேன் என்கிறார் சைதன்யா.

பள்ளியில் விசிலடித்தால் தண்டித்த காலம் மலையேறி இப்போதெலாம் ஊக்குவிக்கிறார்களாமே!

ஒரு முறை தனது மகனின் பள்ளியில் சைதன்யா, பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விசில் கச்சேரி செய்யப் போக, அன்று நிறையப் பெற்றோர்கள் இவரை அணுகி ‘எங்களது குழந்தைக்கும் விசிலிங் கற்றுத் தர முடியுமா? என்று கேட்பதில் முடிந்தது அந்தக் கச்சேரி. இப்போது சைதன்யா தனது மகன்களது பள்ளித் தோழர்களுக்கு விசிலிங் கற்றுத் தரும் முனைப்பிலும் நேரம் ஒதுக்கப் போகிறாராம். அது மட்டுமல்ல, முன்பெல்லாம் பள்ளியில் கிடைக்கும் இடைவேளை நேரத்தில் மாணவர்களோ, மாணவிகளோ விசில் அடித்தால் ஆசிரியர்கள் அழைத்து கண்டிப்பார்கள். தண்டனை தருவார்கள். ஆனால் இப்போது பள்ளி இடைவேலையில் விசில் அடித்த மாணவியை ஆசிரியை அழைத்து காலை பிரேயரில் விசில் கச்சேரி செய்கிறாயா? என்று உற்சாகப் படுத்தும் அளவுக்கு காலம் மாறி இருக்கிறது. மக்களின் குறிப்பாக ஆசிரியர்களின் இந்த மனமாற்றமும், புரிந்துணர்வும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியதே என்கிறார்.

பூஜாவுக்கு விசில் திறமையால் பிரபல பள்ளியில் இடம் கிடைத்தது!

இவர்களது குழுவில் இளையவரான பூஜாவுக்கு ஸ்கூல் மாற வேண்டிய சூழல் வந்த போது, பூஜாவின் விசில் திறமையைப் பார்த்து அதனடிப்படையில் ஒரு பிரபல பள்ளி நிர்வாகம் பூஜாவுக்கு தங்களது பள்ளியில் இடம் அளித்தது. என பூஜாவின் தந்தை தன் மகளைக் குறித்துப் பெருமையாகக் கூறுகிறார்.

பாட்டுப் போட்டி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக விசில் கச்சேரியும் ஏன் இருக்கக் கூடாது?

மென்பொருள் வல்லுனரான திவ்யா பேசுகையில், இன்று நாம் பார்க்கும் மனிதர்களில் பத்தில் ஒருவருக்கு மிக அருமையாக விசில் அடிக்கத் தெரியும். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் முறையான பயிற்சி மட்டும் தான். பயிற்சி இருந்தால் போதும் விசில் கச்சேரிக்குத் தயாராகி விடலாம். ஆனால் அதற்கு முன்பு இங்கே நாம் முதலில், நம் மக்களிடையே விசில் அடிப்பதைப் பற்றியதான சில மூட நம்பிக்கைகளையும், பிற்போக்குத் தனமான ஏளன எண்ணங்களையும் களைந்தால் போதும், பிறகு வெகு எளிதாக விசில் கச்சேரி செய்வதும் கலையின் ஒரு வடிவம் தான் என நாம் நிரூபித்து விடலாம். அதற்கு முதல்படியாக நமது ஊடகங்களில் பாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் உலவும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக விசில் கச்சேரியையும் அங்கீகரிக்கச் செய்யலாம்.

ஜப்பானிலும், சீனாவிலும் விசில் அடிப்பது ஒரு கலையாம் தெரியுமா !

ஜப்பானிலும், சீனாவிலும் விசில் கச்சேரியை கலை வடிவமாக அங்கீகரித்திருக்கிறார்கள். அங்கே பள்ளி கல்லூரிகளில் விசில் போட்டிகள் உண்டு என்பதோடு மாணவர்களுக்கு அங்கெல்லாம் விசிலடிக்க பள்ளி, கல்லூரிகளில் கற்றுத் தருகிறார்கள். இந்தியாவில் மட்டும் தான் விசில் அடிப்பதை ரோட் சைட் ரோமியோக்களின் ஒட்டு மொத்தக் குத்தகையாக மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஜப்பானில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விசில் கச்சேரி போட்டியில் சீனியர் கேட்டகிரி பிரிவில் கலந்து கொண்டு ஜகத் முதல் பரிசு பெற்றார். எங்கள் குழுவுக்கு மிகப் பெருமிதம் தந்த நிகழ்வு அது. ஆனால் இப்போதும் கூட விசில் கச்சேரியில் இந்தியர்கள் பெரும்பாலும் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது என்கிறார் திவ்யா!

விசில் கச்சேரி மிகச் சிறந்த உளவியல் நிவாரணி!

இவர்களோடு பேசிய பின் தான் புரிகிறது... சாதாரண விசிலில் இத்தனை விசயங்கள் இருக்கின்றனவா? என்று. பொதுவாக இசை கேட்பதும், பாடுவதும் எல்லோருக்குமே பிடித்தமான ஒரு பொழுது போக்கு. அதில் விசில் கச்சேரி கொஞ்சம் வித்யாசமாக இருந்தாலும், இவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது அது மிகச் சிறந்த உளவியல் நிவாரணியாகவும் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. கீழே உள்ள யூ டியூப் விடியோ லிங்க் பாடலில் வரும் விசில்  இசை கேட்டால் அது உங்களுக்கே புரியும். கேட்டுப் பாருங்கள்...

ஆகவே உங்களில் யாருக்கேனும் விசில் அடிப்பதில் ஆர்வம் இருந்தால், அட சாதாரண விசில் பழக்கம் தானே என்று அதை அப்படியே சில வருடங்கள் கழித்து வீணடித்து விடாதீர்கள்... தொடர்ந்து பயிற்சி செய்து விசிலை ஒரு கலையாகப் பரிணமிக்கச் செய்ய உதவுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com