அட நம்ம ARS! பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... எங்கே போயிட்டார் இத்தனை நாளா!?

அன்றைய ‘ஃபிலிப்ஸில்’ உயர் பதவி வகித்த எனக்கு, திரைப்படம், நாடகங்களில் நடித்ததெல்லாம் எதிர்பாராத அமைந்து விட்ட நிகழ்வுகள். நான் நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. என் வாழ்வில் அது ஒரு விபத்தைப் போல த
அட நம்ம ARS! பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... எங்கே போயிட்டார் இத்தனை நாளா!?

90 களில் டி.வி நாடகப் பிரியர்களுக்கும், தூர்தர்ஷன் திரைப்படப் பிரியர்களுக்கும் மிகப் பரிச்சயமான முகம் இது! இளமையான ரஜினி, கமல் திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவோ, பணக்கார அப்பாவாகவோ, கல்லூரி பேராசிரியராகவோ வருவார். எந்த ஒரு திரைப்படத்திலும் படம் நெடுக இவரைக் கண்டதே இல்லை. ஏதாவது ஓரிரு காட்சிகளில் தான் வருவார். ஆனால் வந்த காட்சிகளின் ஊடே நெஞ்சில் நின்றார். அதனால் தான் இப்போதும் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களின் ஞாபகங்களில் மீண்டும் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறார். தனது திரையுலக, நாடக உலகப் பிரவேசம் பற்றி ARS  அவரே சொல்வாறென்றால் கேட்பதற்கு சுகம் தானே!

அன்றைய ‘ஃபிலிப்ஸில்’ உயர் பதவி வகித்த எனக்கு, திரைப்படம், நாடகங்களில் நடித்ததெல்லாம் எதிர்பாராத அமைந்து விட்ட நிகழ்வுகள். நான் நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. என் வாழ்வில் அது ஒரு விபத்தைப் போல தன்னிச்சையாக நிகழ்ந்தது. எங்களது அலுவலகத்தில் சுதந்திர தினவிழாவுக்காக ஆண்டு தோறும் நாடகம் போடுவார்கள். ஒரு முறை அப்படிப் போட்ட நாடகம் ஒன்றில் என்னை நடிக்கச் சொல்லி சக ஊழியர்கள் வற்புறுத்தினார்கள். முழுக்க முழுக்க கொண்டாட்ட உணர்வில் பொழுது போக்கிற்காக நடத்தப் படும் அந்த நாடகத்தைப் பார்க்க ஒரு சமயத்தில் அன்றைய நாடக உலக ஜாம்பவான் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் சகோதரர் சுந்தர் வந்திருந்தார். அவர் என் நடிப்பைப் பார்த்து விட்டு ‘நன்றாக நடிக்கிறாயே, நீ ஏன் தொழில்முறை நடிகர் ஆகக் கூடாது?’ என்று பாராட்டினார். அவர் கேட்ட போது, எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்று நான் கூறி விட்டாலும், என் நண்பர்கள் அனைவரும் ‘ யுனைட்டெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்’ நாடகக் குழுவின் தரத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி என்னை அதில் இணைந்து நடிக்கச் சொல்லி உற்சாகப் படுத்தினார்கள். அதனால் நான் என் முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினேன்.

இப்படித் தான் நானும் யுனைட்டெட் அமெச்சூர்ஸ் நாடகக் குழு அமைப்பாளருமான ஒய்.ஜி.பார்த்தசாரதியும் நண்பர்கள் ஆனோம். முதலில் பொதுவாகப் பேசிக் கொள்ளத் தொடங்கிய நாங்கள் பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆனது வரலாறு இதை தமிழ் நாடக உலகம் நன்கு அறியும். 

ஒய்.ஜி.பி குழுவினர் 'தஞ்சை டு திருவையாறு' வரை ட்ரிப் சென்று வரலாம் என ஒரு முறை முடிவு செய்திருந்தார்கள். ஒய்.ஜி.பி என்னையும் அந்த ட்ரிப்பில் இணைந்து கொள்ளுமாறு கேட்டார். நானும் தஞ்ஞாவூர்க்காரன் தான் என்றதும் அவருக்கு மிகுந்த சந்தோசமாகி விட்டது. ட்ரிப் முழுதும் மறக்க முடியாத நினைவுகள் பல இருந்தாலும் பயணத்தின் இடையில் ஒரு நாள் ஒய்.ஜி.பி சொன்னது தான் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தனது குழுவில் இருந்த ஒருவர் விலகுவதால் இனிமேல் அவரது இடத்தை  ARS நிரப்புவார் என ஒய்.ஜி.பி அறிவித்தார். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் கூடவே உற்சாகமாகவும் இருந்தது. இப்படித் தான் நான் ஜனரஞ்சக நாடகங்களில் அறிமுகமானேன்.

பயணத்தின் நடுவில் கிடைத்த நேரத்தில் எல்லாம் நான் எனது வசனங்களை மனப்பாடம் செய்துகொண்டிருந்தேன் .முடிவில் அந்த நாடக கதாபாத்திரம் எனக்கு நற்பெயரையே பெற்றுத் தந்தது. அந்த நாடகத்தில் நான் நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வித்யா, உள்ளிட்ட பிரபலமானவர்களோடு மேடையைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். நாடகத்தைப் பார்த்து விட்டு உடன் நடித்தவர்கள் தொடங்கி அனைவரும் பாராட்டினார்கள். அதன் பின் ஒய்.ஜி.பி ‘நீ இனி எப்போதும் என் குழுவில் இருந்து விலகவே கூடாது’ என்று கூறி விட்டார். சோ மற்றும் ஒய்.ஜி.பி யின் ஆத்மார்த்தமான நட்பால் எனக்கு மேடை நாடகங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தன. 

திட்டமிடப்படாத, எதிர்பாராத, முன் தயாரிப்புகள் அற்ற என் நாடகப் பிரவேசத்தைப் போலவே திடீரென்று ஒரு நாள் நாடகம் இயக்கினால் என்ன என்றும் எனக்குத் தோன்றியது. அப்படித்தான் நான் இயக்குனர் ஆனேன். இயக்குனராக எனது முதல் நாடகம் ‘கண்ணன் வந்தான்’  அது பின்னர் சிவாஜி நடிப்பில் திரைப்படமாகி சில்வர் ஜூப்ளி கண்டது. அந்தப் படம் தான் 1973 ல் வெளிவந்த ‘கெளரவம்’.


தொடர்ந்து ARS நடித்தவற்றுள் அவருக்கு மிகவும் பிடித்த நாடகம் என்றால் அது மிக வித்யாசமான கதாபாத்திரத்தில் அவர் தோன்றி நடித்த ‘இம்பெர்ஃபெக்ட் மர்டர்’ எனும் நாடகத்தையும், ‘குருஷேத்ரா’ நாடகத்தையும் குறிப்பிடுகிறார். குருஷேத்ராவில் ARS கணிதப் பேராசிரியராக நடித்து அந்த நாடகம் அன்றைய காலகட்டத்தில் மிகப் பிரபலமாக ரசிக்கப் பட்டதாம். இந்த நாடகங்களில் நடித்ததால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி எல்லாம் அப்போது தனக்கு ரசிகர்கள் ஆனதாக ARS பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார்.

அப்போதெல்லாம் வித்யாசமான நல்ல கதைகளை, சம்பவங்களை வெற்றிகரமான நாடகங்களாக மாற்ற நாடக மேதைகள் பலர் இருந்தனர். கே.பாலசந்தர், வி.எஸ்.ராகவன், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இயக்க சிவாஜி, நாகேஷ் உள்ளிட்ட திறமைசாலிகள் நடித்து மிகப் பெரிய வெற்றிகண்ட நாடகங்கள் பல அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலையில் அமெச்சூர் நாடகக் குழுவின் நாடகங்கள் ரசிக்கப் பட வேண்டும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற வேண்டும், என்றால் நாங்கள் நிச்சயமாக வித்யாசமான படைப்புகளைத் தர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம். அந்த நிர்பந்தமும், தொடர்ந்த பயிற்சிகளும் தான் மக்கள் விரும்பும் அருமையான நாடகங்களைப் போடும் உத்வேகத்தை எங்களுக்கு அளித்தது. இல்லா விட்டால் இத்தனை ஜாம்பவான்களுக்கு மத்தியில் எங்களது நாடகத்தை யார் பார்ப்பார்கள்? எனும் பயம் எங்களுக்கு இருந்து தொடர்ந்து எங்களை இயக்கிக் கொண்டிருந்தது.

நானொரு தீவிரமான சிவாஜி ரசிகன். அவர் எனது நாடகங்களைப் பார்க்க மாலை 6.15 முதல் 7  மணி வரையிலான ஷோ வுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சில சந்தர்பங்களில் ஒப்பனை அறை வரை வந்து ‘என்ன இன்னுமா நீங்கள் தயாராகவில்லை?’ என்று கேட்டு விட்டுப் போவார். அவரை நினைக்கும் போதெலாம் எனக்குப் பெருமையாக இருக்கும், ஒரு தீவிர சிவாஜி ரசிகனாக அவரைப் பற்றிப் பேசுவதென்றால் நான் நாள் முழுக்க பேசிக் கொண்டே இருப்பேன். ஒரு நடிகனாக அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது அதிகம். அவர் மீது கொண்ட அளவற்ற பற்றீனால் மட்டுமே இப்போதும் என்னால் அவரைப் போலவே நடித்துக் காட்ட முடியும், அவரை போலவே பேசிக் காட்ட முடியும் என்று சொல்லிப் புன்னகைக்கிறார் ARS.
 
நான் மிக ரசித்த சிவாஜியுடன் இணைந்து 1981 ஆம் வருடம் மோகனப் புன்னகை என்றொரு படம் நடித்தேன். ஷூட்டிங் முதல் நாளில் அவருடன் நான் இணைந்து தோன்றும் காட்சி படமாக்கப் பட்ட போது எனக்கு நடுக்கமாக இருந்தது. பலமுறை எனது வசனங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் சிவாஜி மாதிரியான லெஜெண்ட் உடன் நடிக்கையில் அவரே உடன் நடிப்பவர்களின் நடிப்பையும் சேர்த்து ஈடுகட்டி விடுவார் என்பதை பிறகு அந்தப் படத்தை திரையில் பார்க்கும் போது உணர்ந்தேன். இந்தத் தலைமுறை நடிகர்கள் நிச்சயம் அதை சிவாஜியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

வெள்ளித் திரையில் ARS நடித்த முதல் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ஸ்ரீதர். நாடகம், சினிமா, இயக்குனர் பொறுப்பு என படு பிஸியாக இருந்த போதும் ARS  தனது உத்யோகத்தை விட்டு விடவே இல்லை. எப்படி முடிந்தது இப்படி ஒரே நேரத்தில் பல குதிரைகளில் சவாரி செய்ய? என்று கேட்டால், அதற்கு தனது தந்தைக்கு தான் அளித்த உறுதி மொழியைப் பற்றிக் கூறுகிறார் ARS. 

மிகவும் கண்டிப்பானவரான அவரது தந்தையிடம், ‘ நான் நாடகங்களில் நடிக்கட்டுமா?’ என்று இவர் அனுமதி கேட்ட போது, ‘நடிக்கலாம், ஆனால் நீ வகிக்கும் உயர் பதவிக்கு குந்தகம் வராமல் நீ  கெளரவமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தாராம். அந்த நிபந்தனையை ARS  தனது வாழ்நாள் முழுக்க கடை பிடித்திருக்கிறார்.

வேலை, நாடகம், சினிமா என்று ஓடிக் கொண்டிருக்கையில் இவருக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி. கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் கூட படப்பிடிப்பு தளங்களில் காத்துக் கொண்டிருக்க நேர்ந்த சந்தர்பங்கள் அப்போது இருந்திருக்கிறதாம். ஆம்... அவர்கள் எனக்காக காத்திருந்தார்கள். இன்றைய நடிகர்கள் அப்படி பெருந்தன்மையாக இருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் மீது அவர்கள் கொண்ட மதிப்பாக நான் அதை உணர்ந்து கொண்டேன். என்கிறார். அது மட்டுமல்ல எனது பிஸியான நேரங்களில் என்னை நடிக்க வைப்பதற்காக எனக்கு விமான டிக்கெட் வரை புக் செய்து தரும் அருமை நண்பர் ஒய்.ஜி.பி யை நான் என்றென்றும் மறக்க முடியாது என்கிறார் பூரிப்புடன்.

நான் சூப்பர் ஹிட் ஹீரோ நடிகன் இல்லை. ஆனால் எனக்கென்று திரையுலகில் மிகச் சிறப்பான இடம் வாய்த்தது. அதை நினைத்தால் இப்போதும் கனவு மாதிரி இருக்கிறது. என்று பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் ARS  பாரத ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் 'சங்கீத நாடக அகாதெமி' விருதும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கையால் 'கலைமாமணி விருதும்' பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தூர்தர்ஷன் முதன் முதலாக நாடகங்களை ஒளிபரப்பத் தொடங்கிய போது, அதன் மூலம் முதல் வெளிச்சம் பெற்றவர்கள் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள் ARS மற்றும் ஒய்.ஜி.பி இருவரும் தான்.

இத்தனை பெருமைகளுக்கும், இனிமையான நினைவுகளுக்கும் சொந்தக்காரரான ARS ஐ இன்றைய தலைமுறை இயக்குனர்களும் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கான பழைய ரசிகர்கள் திருப்தி அடைவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com