பார்பிக்யூ நேஷன்: கிரில்டு உணவுகளின் சொர்க்கம்!

நபர் ஒருவருக்கு 666 ரூபாய்களோடு டாக்ஸ் தனி. எல்லாம் சேர்த்து ஒருவர் சாப்பிட 700 முதல் 750 வரை ஆகலாம். ஆனால் கொடுக்கும் காசுக்கு குறையில்லாமல் சுவைத்து விட்டு வரலாம்.
பார்பிக்யூ நேஷன்: கிரில்டு உணவுகளின் சொர்க்கம்!

நேற்று மதிய உணவுக்காக நுங்கம்பாக்கம் பார்பிக்யூ நேஷன் சென்றிருந்தோம். முதல் முறையாகச் செல்பவர்கள் எனில் முன்னரே டேபிள் ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டு செல்வது நல்லது. ஏனெனில் காத்திருக்கும் அலுப்பு மிச்சம்.

ஸ்டார்ட்டர்கள்:

முதலில் ஸ்டார்ட்டர்கள் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு டேபிளிலும், நடுவில் பொருத்தப் பட்டுள்ள கிரில் அடுப்புகளில், மரக்கைப்பிடிகளுடன் அவற்றுக்கான பிரத்யேக உலோக குச்சிகளில் சிக்கன், மீன், இரால், பனீர், மஷ்ரூம், உருளைக் கிழங்கு, மசால் தடவிய பழத்துண்டங்கள், என்று வகை வகையாக சுடச்சுட கொண்டு வந்து பரிமாறி விட்டுச் செல்கிறார்கள். சுவையைப் பொறுத்து அடுத்தடுத்து தேவைப்பட்டால் நாம் ஆர்டர் செய்து கொண்டு ஸ்டார்ட்டர்களை நிதானமாக ஒரு கை பார்க்கலாம். இன்னும் அதிக ஸ்பைஸியாக வேண்டுமானால் சிக்கன் லெக் பீஸ், பீட்ரூட் வடை போல ஒரு வஸ்து, மட்டன் கைமா ரோல், மசால் தயிர் உருளை என்று சிலவற்றை பிளேட்டிலும் பரிமாறுகிறார்கள். எல்லாமே சொல்லும்படியான அருமையான சுவையில்! கிரில் அடுப்புக்கு இரு புறமும் ஒரு பக்கம் சாஸ் வகையறாக்கள், மறுபுறம் லைம், பெப்பர், சால்ட் உள்ளிட்டவை திரவ நிலையில் சின்னச் சின்ன செராமிக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டிருக்கிறது. அருகிலேயே அவற்றை கிரில் அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் மீது தேவைக்கேற்ப தடவிக் கொள்ளத் தோதாக ஒரு குட்டித் தூரிகை(பிரஸ்) வேறு. கிரில் அடுப்பில் கோர்க்கப் பட்டிருக்கும் உலோக குச்சிகளின் கைப்பிடியை அடிக்கடி நாம் உருட்டி உருட்டி வைத்த்துக் கொண்டால் மீனும், சிக்கனும், இராலும் அபாரமான கிரிஸ்பியில் வெந்து சுவை நாவைக் கட்டிப் போடுகிறது.

சாஃப்ட் ட்ரிங்ஸ்:

மெனு கார்டில் வாயில் நுழையாத பெயர்களில் 10 க்கும் மேற்பட்ட வகைகள் பட்டியலிடப் பட்டுள்ளன. நாங்கள் வெர்ஜின் மொஜிட்டோவும், லிச்சியும் ஆர்டர் செய்து கொண்டோம். இரண்டையுமே தயார் செய்த கரங்களுக்கு தங்கப் காப்பு போடலாம். அத்தனை பெர்ஃபெக்ட் சுவை! ஆனால் இதில் மனம் ஏற்றுக் கொள்ளாத ஒரு விசயம், இவற்றுக்கான பில் தனியாம். ஆசை ஆசையாக இரண்டாம் முறையும் ஆர்டர் செய்து வாங்கி, சுடச் சுட கிரில்டு உணவுகளை ருசித்து விட்டு இடையிடையே இதனையும் அருந்தி முடித்தால் அப்புறமும் வயிற்றில் காலி இடம் இருக்குமா தெரியாது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கிரில் அடுப்பில் மசால் தடவப் பட்டு அரைகுறையாக வெந்த அன்னாசிப் பழத் துண்டுகள் அமிர்தமாக இருந்தன.

சூப் ஸ்டார்ட்டர்களுக்குப் பிறகு உண்பதா அல்லது முன்பே உண்பதா என்பது சாப்பாட்டுப் பிரியர்களின் உணவு ஆர்வத்தைப் பொறுத்தது. சிலர் முதலிலேயே சூப்பில் தொடங்குவார்கள். சிலருக்கு ஸ்டார்ட்டர்களுக்குப் பின் சூப் எடுத்துக் கொண்டு, அதன் பின் மெயின் கோர்ஸ் தொடங்கப் பிடிக்கும்.

மஷ்ரூம் சூப், சிக்கன் கிளியர் சூப், வெஜ் சூப் என்று அங்கிருக்கக் கூடியதில் உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு சூப்பை ருசிக்கலாம்.

மெயின் கோர்ஸ்:

ஸ்டார்ட்டர்கள் சுவையாகத் தான் இருக்கும். அதற்காக அவற்றிலேயே முழு வயிறும் நிறைந்து விட்டால் அப்புறம் மீதமுள்ள மெயின் கோர்ஸ், உணவுகளான சிக்கன், மட்டன் தம் பிரியாணி, ஸ்பைஸி முர்க்(சிக்கன்) கிரேவி, ஸ்பெஷல் கத்தரிக்காய் கிரேவி, மட்டன் மசாலா, பனீர் மசாலா, ஸ்டீம்டு ரைஸ், சிக்கன், மட்டன், பனீர், மஷ்ரூம் மசாலாக்கள் ஸ்டஃப் செய்த மொறு, மொறு தோசைகள், உள்ளிட்டவற்றை ருசி பார்க்க வயிற்றில் இடமிருக்காது. எனவே ஸ்டார்ட்டர்களை முதல் அளவோடு நிறுத்திக் கொண்டு மெயின் கோர்ஸ் உணவுகளுக்குச் செல்லலாம்.

இப்போது மெயின் கோர்ஸ் எடுத்துக் கொண்டால் பஃபே முறையில் அணிவகுக்கும் அவற்றுக்கான சுயசேவைப் பிரிவில் எதையும் மிஸ் பண்ணத் தேவை இருக்காது.

சாலட்டுகள்:

சாலட்டுகளில் வெஜ் மற்றும் பழ சாலட்டுகள் இரண்டுமே கிடைக்கின்றன. அவற்றில் எது பிடிக்குமோ அதை உண்ணலாம்.

சாட்கள்: சாலட்டுகள் மட்டுமல்ல அவற்றோடு பட்டர் கார்ன் மசாலா, பேல் மசாலா உள்ளிட்ட, சுட்ட அப்பளம் உள்ளிட்ட சாட் வகை ஸ்நாக்குகளும் கிடைக்கின்றன.

ஸ்வீட்:

மெயின் கோர்ஸ் உணவுகளை ஒரு கை பார்த்ததும் அப்புறம் ஸ்வீட்களுக்குப் போகலாம். அங்கூர் குளோப் ஜாமூன், கேரட் ஹல்வா, பாஸந்தி, சுகர் ஸிரப்பில் ஊறிய பிரெட், அதில் தொட்டுக் கொள்ள பால்கோவா போல ஏதோ ஒன்று.  குட்டிக் குட்டி துண்டுகளாக இரண்டு மூன்று கேக் வகைகள் எல்லாம் உண்டு. இதில் பிடித்ததை மட்டுமோ அல்லது எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளி எடுத்தோ எப்படியோ ஒரு வகையில் மனதிற்குப் பிடித்தவாறு ருசி பார்க்கலாம்.

கடைசியாக டெஸர்ட்டுகள்:

நாங்கள் சென்ற அன்று வெனிலா மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்கள் இருந்தன. இவை ஒரு வேளை ஃபிளேவர்கள் மாற்றப் பட்டும் கிடைக்கலாமோ என்னவோ தெரியவில்லை. வெனிலாவும், ஸ்ட்ராபெர்ரியும் கூட நன்றாகவே இருந்தன.

அவ்வளவு தான் லஞ்ச் முடிந்து விட்டது. ஆனால் இப்படி ஒரு லஞ்ச் சாப்பிட்டு முடிப்பவர்கள், அன்றைய இரவில் வெறுமே ஒரு பெரிய கிளாஸ் பால் மற்றும் இரண்டு நேந்திரம் வாழைப்பழங்களோடு டின்னரை முடித்து விட வேண்டும். கூடுதலாக ஏதாவது சாப்பிட்டு வைத்து வயிற்றை தேவையில்லாமல் சித்திரவதை செய்து விடக் கூடாது.

விருந்தோம்பல்:

உணவு வகைகளை விடவும் அங்கே பரிமாறுபவர்களின் விருந்தோம்பலும்( hospitality) பாரட்டும் படி இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 

சென்னையில் தி.நகர், வடபழனி, வேளச்சேரி, நுங்கம் பாக்கம் என நான்கு  இடங்களில் இந்த ரெஸ்டாரெண்ட்டுகள் இருக்கின்றன. 

பில்:

நபர் ஒருவருக்கு 666 ரூபாய்களோடு டாக்ஸ் தனி. எல்லாம் சேர்த்து ஒருவர் சாப்பிட 700 முதல் 750 வரை ஆகலாம். ஆனால் கொடுக்கும் காசுக்கு குறையில்லாமல் சுவைத்து விட்டு வரலாம்.

வாய்ப்புக் கிடைத்தால் மாதம் ஒருமுறை குழந்தைகளோடு சென்று கிரில்டு உணவுகளை ருசித்து விட்டு வரலாம்.

சுவை அருமையோ அருமை.

அசைவப் பிரியர்கள் மட்டுமல்ல சைவப் பிரியர்களும் தங்களது நாவின் சுவை அரும்புகளை தீட்டிக் கூர் பார்க்க அருமையான இடம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com