உங்க வீட்ல ஹெச்டி டி.வி இருக்கா? அதைக் கண்டுபிடித்த இந்தியர் இவர் தான்!

1990-இல் ஹெச்டி தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தை அருண் உருவாக்கினார். அதன் மூலமாக, முந்தைய முறைகளை விடத் தரமான காணொலிகளை அதிக துல்லியமாகக் காணவும்,
உங்க வீட்ல ஹெச்டி டி.வி இருக்கா? அதைக் கண்டுபிடித்த இந்தியர் இவர் தான்!

உலகை மாற்றிய கண்டுபிடிப்புகளில் தொலைக்காட்சிக்கு பேரிடம் உண்டு. ஆனால், 1926-இல் ஜான் பெயர்டு கண்டுபிடித்த இயந்திர இயக்க தொலைக்காட்சியை (Mechanical TV)  நாம் இப்போது கண்டால் வியப்பாக இருக்கும். அதிவேகக் காணொலிகளை மிகத் துல்லியமாகக் காணவும் கேட்கவும் உதவக் கூடியதாக இப்போதைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இன்றைய தொலைக்காட்சி, வடிவத்திலும் தொழில்நுட்பத்திலும் பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பு-வெள்ளை தொலைக்காட்சி, வண்ணத் தொலைக்காட்சி, அனலாக் தொழில்நுட்ப தொலைக்காட்சி, எண்மத் தொலைக்காட்சி என்று வளர்ந்த தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தின் உச்ச நிலை ஹெச்டி தொழில்நுட்பமாகும். உயர் வரையறு தொலைக்காட்சி தொழில்நுட்பம் (High-Definition Television) எனப்படும் ஹெச்டி, வழக்கமான தொலைக்காட்சி முறைமைகளை விட பல மடங்கு பகு திறன் கொண்ட நிகழ்படமாகும்.

இத்தொழில்நுட்பத்தை உருவாக்கியவர், இந்திய கணினிப் பொறியாளர் அருண் நேத்ராவளி. உலக அளவில் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான பெல் லேபரட்டரியின் (Bell Laboratories) தலைவராகப் பொறுப்பேற்று பல நூறு விஞ்ஞானிகளை வழிநடத்தியவர் அவர்.

கர்நாடக மாநிலம், அங்கோலாவில், 1946, மே 26-இல் அருண் நேத்ராவளி பிறந்தார். அவரது குடும்பம் மும்பை, மாதுங்கா பகுதிக்கு குடியேறியது. அங்கு நகராட்சிப் பள்ளியிலும், மன்னர் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளியிலும் படித்த அவர், எல்பின்ஸ்டோன் கல்லூரியில் பட்ட முன்வகுப்பு பயின்றார். பிறகு மும்பை ஐஐடியில் மின்பொறியியலில் பி.டெக் பெட்டம் பெற்ற அவர் (1967), மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். 

ஹவுஸ்டனிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் மின்னியலில் எம்.எஸ். பட்டமும் (1969) பிஹெச்.டி. பட்டமும் (1970) பெற்ற அருண், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் 1970 முதல் 1972 வரை பணியாற்றினார்.

நியூஜெர்ஸியிலுள்ள பெல் லேப்ஸில் 1972-இல்  தொழில்நுட்பப் பணியாளராக இணைந்தார் அருண். அங்கு அவரது திறமை உடனடியாக கண்டுகொள்ளப்பட்டது. அவரை நாடி பல முக்கிய பணிகள்  வந்தன. அந்நிறுவனத்தின் காட்சித் தொடர்பியல் ஆராய்ச்சித் துறைத் தலைவராக 1978-இல் நியமிக்கப்பட்டார் அருண்; 1983-இல் கணினி ஆய்வுப் பிரிவின் இயக்குநரானார். 1991-இல் அந்நிறுவனத்தின் தலைவராக அவர் உயர்ந்தார்.    

கணினி வலைப்பின்னல் (Computer Networks), இயந்திரம்- மனித இடைமுகம் (Human Interfaces to Machines), படம் பண்படுத்துதல் (Pictutre Processing), எண்மத் தொலைக்காட்சி (Digital Television) உள்ளிட்ட பல துறைகளில் அவரது ஆராய்ச்சிகள் நிகழ்ந்தன. அத்துறைகளில் பல பிரதான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அருண் நேத்ராவளி, 70-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களின் பயன்பாட்டுக்குச் சென்று சேர வேண்டுமானால், ஆராய்ச்சி நிறுவனங்களும் தொழில்துறையும் இணைந்து பணிபுரிவது அவசியம் என்பது அருணின் கோட்பாடு. அந்த வகையில் அவரது பல கண்டுபிடிப்புகள் பெல் ஆய்வகத்தால் உரிய வகையில் பயன்படுத்தப்பட்டன. அதனால் அந்த நிறுவனமும் பயனடைந்தது.

1990-இல் ஹெச்டி தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தை அருண் உருவாக்கினார். அதன் மூலமாக, முந்தைய முறைகளை விடத் தரமான காணொலிகளை அதிக துல்லியமாகக் காணவும், ஐந்து மடங்கு  அமுக்கப்பட்ட படப்புள்ளிகளில் (Compressed Pixels) படங்களைக் காணவும் முடிந்தது. அதன் விளைவாக தொலைக்காட்சி, கணினித்திரைகளின் வடிவமும் மாறியது. 

இத்தொழில்நுட்பத்தால் உலக அளவில் புகழ் பெற்ற அருண், 1999-இல் பெல் லேப் நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார். 2001 வரை அப்பதவியில் அவர் இருந்தார். தனது பதவிக்காலத்தில் பெல் நிறுவனத்தில் பல புதுமைகளைப் புகுத்தி, அதன் லாபகரமான இயக்கத்துக்கு அவர் வித்திட்டார்.

பெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான லுசென்ட் டெக்னாலஜிஸில் தலைமை விஞ்ஞானியாகவும் அவர் பணிபுரிந்தார். அருணின் புதிய கண்டுபிடிப்புகளால் லுசென்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்தது. 

டாவு பேடா பி, சிக்மா ஸி (Tau Beta Phi, SDigma Xi) ஆகிய ஆராய்ச்சி நிறுவனங்களிலும், அமெரிக்காவின் மின்னியல்- மின்னணுவியல் பொறியாளர் கழகம் (ICCC), அமெரிக்க தேசிய பொறியாளர் அகாதெமி ஆகியவற்றிலும் அருண் உறுப்பினராக உள்ளார்.  

2004-இல் ஆம்னி கேபிடல் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரராக அருண் பொறுப்பேற்றார். 2007-இல் எல்எஸ்ஐ லாஜிக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்தார். அகேர் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் அவர் தற்போது வழிகாட்டி வருகிறார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கூடுதல் பேராசிரியராக அருண் 1984 முதல் பணிபுரிகிறார். கொலம்பியா பல்கலைக்கழகம், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களிலும் அவர் மதிப்புறு பேராசிரியராக உள்ளார்.

170-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளையும் 3 நூல்களையும் எழுதியுள்ள அருண் நேத்ராவளிக்கு இந்திய அரசு 2001-இல் பத்மபூஷண் விருது வழங்கியது. அமெரிக்காவில் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் அதிபரின் உயரிய விருது 2002-இல் அவருக்கு வழங்கப்பட்டது. 

ICCC-யின்  டொனால்ட் ஜி.ஃபின்க் பரிசு (1982), அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பதக்கம் (1991), ஃபிரடரிக் பிலிப்ஸ் விருது (2000), ஜாக் எஸ்.கில்பி விருது (2001), ஜப்பானின் என்இசி கணினித் தொடர்பியல் விருது (1997), இந்திய மென்பொருள் நிறுவனக் கூட்டமைப்பின் நாஸ்காம் பதக்கம் (2000) உள்ளிட்ட பல விருதுகளையும், பல உயர்கல்வி நிறுவனங்களின் கெளரவ முனைவர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.   

நிகழ்படம், காணொலித் தரவுகளை அமுக்கம் (Vedio Compression) செய்வதிலும், அவற்றின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் அருண் நேத்ராவளியின் ஆய்வு முடிவுகள் பெரும் பயன் அளிக்கின்றன. இன்று பயன்பாட்டிலுள்ள எம்பெக் தர நிர்ணயத்தின் (MPEG) உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. 

அவர் ஹெச்டி தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தபோது, அதன் மதிப்பை உடனடியாகப் பலரும் உணரவில்லை. அதற்கான படக்குழாயின் விலை அதிகமாக இருந்ததால், அத்தொழில்நுட்பம் உடனடியாகப் பரவலாகவில்லை. அப்போது, "தொலைக்காட்சிக்குப் பதிலாக கணினித் திரைகளில் இதைப் பயன்படுத்தத் துவங்கும்போது இதன் சிறப்பு புரியும். அதற்கு இணையத் தொடர்பு வேகம் அதிகரிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்'' என்றார் அருண் நேத்ராவளி. 

அவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. இன்று ஹெச்டி காட்சிகளைக் காணும் வகையிலான திரை கொண்ட கணினிகளும் தொலைக்காட்சிகளுமே கோலோச்சுகின்றன. 

இன்று அமெரிக்காவின் பெருமைமிகு குடிமகனாக உயர்ந்துள்ள அருண் நேத்ராவளி, "ஹெச்டி தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தின் தந்தை' என்று அறியப்படுகிறார். 

மும்பையின் நகராட்சிப் பள்ளியில் துவங்கிய அவரது அறிவுத்தேடல், தொழில்நுட்ப உலகின் சிகரமான முர்ரே ஹில்ஸ் பகுதிக்கு அவரை இட்டுச் சென்றது. அங்குதான் பெல் லேப் தலைமையகம் அமைந்துள்ளது. 

பெல் லேபரட்டரியின் ஒவ்வொரு துறையிலும் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள் இருப்பதாகக் கூறுவதுண்டு. அத்தகைய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் 3 ஆண்டுகள் இருந்து, அதனை லாபகரமாக வழிநடத்திய பெருமைக்குரியவர் அருண் நேத்ராவளி. 
- வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com