வெட்டி வேலையல்ல சர்வதேச விருதுக்குரிய செயல்; பரிகசித்தவர்களை வியப்பிலாழ்த்திய சிறுவன் சைலேந்திர சிங்!

சைலேந்திர சிங், ராஜஸ்தான் மாநிலத்தில், தான் பிறந்த பிஜாரிலால் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் காரணிகளில் ஒருவராக இருப்பதாலும், கிராமம் முழுவதிலுமாக
வெட்டி வேலையல்ல சர்வதேச விருதுக்குரிய செயல்; பரிகசித்தவர்களை வியப்பிலாழ்த்திய சிறுவன் சைலேந்திர சிங்!

‘சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசு’ என்பது ஆண்டுதோறும் கிட்ஸ் ரைட்ஸ் ஃபவுண்டேஷன் எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு மூலமாக வழங்கப்படும் ஒரு சர்வதேச விருது. இந்த விருது, உலக அளவில் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு சமூக அக்கறை வாய்ந்த செயற்கரிய சீரிய செயல்களைச் செய்யும் சிறுவர், சிறுமிகளுக்காக வருடந்தோறும் வழங்கப்படுகிறது. இம்முறை இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்ட 10 நபர்களில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் சைலேந்திர சிங்கும் ஒருவர். தற்போது 17 வயதாகும் சைலேந்திர சிங், தான் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்துப் பேசுகையில்;

இவ்விருது, உலகம் முழுவதுமாக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, ஆதரவற்ற சிறுவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கித் தருதல், எய்ட்ஸ் மற்றும் எச் ஐ வி பாதிப்புக்கு உள்ளான சிறுவர், சிறுமிகளைத் தனிமைப்படுத்தாமல் அவர்களையும் சமுதாயத்தின் ஒரு அங்கத்தினராகப் பாவிப்பது, அவர்களுக்கான நிம்மதியான வாழும் சூழலை உருவாக்கித் தருதல், சட்ட ரீதியாக குழந்தைகள் நலனுக்கான உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தல், குழந்தைத் திருமணம், கொத்தடிமைகளாக ஆக்கப்படும் குழந்தைகள் மீட்பு, உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி உழலும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மீட்சிக்காக துணிந்து களத்தில் இறங்கிப் போராடும் சிறுவர்களின் வீர, தீரச் செயல்களுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக என பெயரும் பரிந்துரைக்கப்பட்டது எனக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது எனினும் இத்துறையில் மேலும் போராடுவதற்கான வலுவையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் இவ்விருது இருப்பதால் சந்தோசமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சைலேந்திர சிங், ராஜஸ்தான் மாநிலத்தில், தான் பிறந்த பிஜாரிலால் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் காரணிகளில் ஒருவராக இருப்பதாலும், கிராமம் முழுவதிலுமாக குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் முன்னணியில் இருந்து பாடுபட்டதாலும் சைலேந்திர சிங் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதைப் பற்றிப் பேசுகையில்; 

நானும் சிறு வயதில் மற்றெல்லா குழந்தைகளையும் போல, என் கிராமத்தில் நான் காண நேர்ந்த குழந்தைத் திருமணங்களின் போது, எனக்கும் எப்போதாவது, கூடிய விரைவிலே கூட குழந்தைத் திருமணம் நடத்தப்படலாம், என்று எண்ணிக்கொண்டு அதற்காக காத்திருந்தவன் தான். ஏனெனில், பெற்றோர்கள் செய்வது எல்லாமே குழந்தைகளின் நன்மைக்காக மட்டுமே! குழந்தைகளான நாங்கள் பெரியவர்களையும், பெற்றோர்களையும் எதிர்த்துப் பேசக்கூடியவர்கள் அல்ல, பேசவும் கூடாது என்பது எங்கள் கிராமங்களில் எழுதப்படாத விதி.அச்சமயத்தில் தான் 'Save the children' ஃபவுண்டேஷன் நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் சந்திப்புகளுக்கு நான் செல்லக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அங்கே விரிந்த மொட்டைமாடியில் அமர்ந்து எங்களது கிராமங்களில் குழந்தைத் திருமணம் என்ற பெயரிலும், குழந்தைகளின் கல்வியைப் புறக்கணித்து அவர்களை சிறுவயதில் குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கி குடும்பத்தின் ஒட்டுமொத்தன் நன்மைக்கு என்ற பெயரிலும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த கொடுமைகளைப் பற்றியெல்லாம் விலாவரியாக அறிய நேர்ந்த போது இவற்றையெல்லாம் எதிர்க்கும் உத்வேகம் என்னுள் அதிகரிக்கத் தொடங்கியது.

ஆனால், என் உணர்வுகளையும், குழந்தைத் திருமண தடுத்து நிறுத்தல்களையும் கிராமத்தினர் ரசிக்கவில்லை என்பதோடு, உனக்கெதற்கு இந்த வேண்டாத வேலை! உருப்படியாக எதையேனும் செய்யப்பார், வீணாக எங்கள் மரபார்ந்த நம்பிக்கைகளில் தலையிடாதே! என்ற கண்டனக் குரல் தான் அதிகமாக இருந்தது. என் பெற்றோரே கூட எனது சீர்திருத்த முயற்சிகளைக் கண்டு ‘உனக்கேன் இந்த வேண்டாத வேலை?’ என்று தான் என்னை முடக்கப்பார்த்தார்கள். ஆனால் என்னுள் இருந்த ஏதோ ஒரு உணர்வு குழந்தைகளுக்கான உரிமைகளைப் பாதுகாத்தே ஆக வேண்டும் என்று போராடும் வலுவை அதிகரிக்கச் செய்து கொண்டே இருந்தது. அப்படித்தான் நான் என் கிராமத்தில் எப்போது குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தகவல் அறிந்தாலும் உடனடியாகத் துணிந்து அதைத் தடுக்க செயலில் இறங்கத் தொடங்கினேன். அப்படி, இதுவரை 5 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியிருப்பதோடு, என் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையே இல்லாமலும் ஆக்கியிருக்கிறேன். என்னுடைய சீர்திருத்தப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாகத்தான் என் பெயர் அந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. என்கிறார் சைலேந்திர சிங்.

தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வரும் இம்மாணவருக்கு வயது 17. பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் சமூக சேவைத்துறையில் செய்ய வேண்டும் என்பதும். இந்தியாவில் இருக்கும் குழந்தைகளில் ஒருவர் கூட கல்வியறிவு பெற முடியாத துன்பத்தை அனுபவிக்கக் கூடாது என்ற நிலையை அடைவதுமே தனது எதிர்கால இலக்கு எனக் கூறுகிறார் சைலேந்திர சிங்!

வளர்க அவரது சேவைப்பணிகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com