இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் நிச்சயம் பணக்காரர் ஆகிவிடுவீர்கள்!

சினிமாவில் ஒரே பாடலில் ஹீரோ பணக்காரன் ஆகிவிடும் காட்சிகளை நம்மில் பலரும் ரசித்திருப்போம்
இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் நிச்சயம் பணக்காரர் ஆகிவிடுவீர்கள்!

சினிமாவில் ஒரே பாடலில் ஹீரோ பணக்காரன் ஆகிவிடும் காட்சிகளை நம்மில் பலரும் ரசித்திருப்போம். நமக்கு எங்கே அந்த நல்லது எல்லாம் நடக்கும் என்று சலித்துக் கொள்கிறீர்களா? குறுகிய காலத்தில் இல்லையென்றாலும், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணம் படைத்தவர்கள் ஆக, சில வழிகள் இருக்கத்தான் செய்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?

தொழிலில் வெற்றி பெற்று, பெரும் கோடீஸ்வரர்களான எட்டு பேரை வைத்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கிடையே மூன்று பொதுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர் ஆய்வாளர்கள். அந்த மூன்றும் மற்றவர்களிடம் இல்லை அல்லது குறைவாக இருக்கலாம். எந்த மூன்று பழக்கங்களால்தான் ஒரு சாரார் பென்ஸ் காரிலும் மற்றவர்கள் ஓட்டை சைக்கிளிலும் பயணம் செய்கிறார்கள். அந்த 3 என்னவென்று பார்க்கலாமா?

வேகம் வேகம் வேகம் - ஆனால் விவேகமான வேகம்!

கோடியில் ஒருவராக இருப்பதும், கோடீஸ்வரனாக வாழ்வதும், தெருக்கோடியில் நிற்பதும் அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதையிலும் அதற்காக தீவிர மற்றும் தீரா முயற்சிகளில்தான் உள்ளது. கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்களை கவனித்திருக்கிறீர்களா? கற்பனைக்கு எட்டாத பேங்க் பேலன்ஸ், விதம் விதமான கார்கள், வீடுகள், ஐஃபோன்கள்... நினைத்ததை நடத்திக் கொள்ளும் பணம்தான் அளவில்லாமல் இருக்கிறதே என்று அவர்கள் சும்மா இருக்கிறார்களா? நிச்சயம் இல்லை.

செல்வந்தர்களும் மில்லியனர்களும் அதிவேகத்தில் தங்கள் லட்சியங்களைத் தொடங்கியவர்கள். புதிய யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதை செயல்படுத்த அவர்கள் உடனடியாக களம் இறங்குவார்கள். சரியாக வருமா இல்லை சொதப்புமா என எதற்கும் அவர்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை. ரிஸ்க் எடுப்பது அவர்களுக்குப் பிடிக்கும். காரணம் அதிகமான ரிஸ்க் அதிகமான பணம். மேலும் தொழிலில் புதுப் புது விஷயங்களை கடைப்பிடிப்பார்கள். தங்கள் யோசனையில் உருவான திட்டங்கள் பாதியில் தேங்கிவிடாமல் அதை நோக்கி சோர்வடையாமல் உழைப்பார்கள். இத்தகைய செயல்வீரர்கள்தான் டாலர் தேசங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிறார்கள்.

நல்ல நேரம் வந்தாச்சா? நேரம் ரொம்ப முக்கியம்ங்க!

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது என்று பாட விரும்புகிறீர்களா? அந்த ராசலட்சுமி உங்கள் வாசற்கதவை தட்ட வேண்டும் என்றால் நேரம் தவறாமை உங்களில் ஒரு பகுதியாக மாற வேண்டும். வெற்றிகரமான மக்கள் தங்கள் நேரத்தை மதித்து நடப்பவர்கள். தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக ஒற்றை வினாடியைக் கூட வீணடிக்க மாட்டார்கள். நேரம் = பணம் என்றுணர்ந்து ஒவ்வொரு நொடியையும் வெற்றியை நோக்கிய பாதையில் செலவிடுகின்றனர். 

மேலும் தங்கள் நேரத்தை கட்டுக்குள் வைத்திருந்து, எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை உடையவர்கள். இவர்கள் பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஊறிக் கிடப்பதில்லை, பயனற்ற ஒரு விஷயத்திற்காகவும் தங்களுடைய பொன்னான நேரத்தை செலவிடுவதில்லை. வெட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அல்லது தொலைக்காட்சி பெட்டிகளில் தொலைந்து போவதில்லை. தங்கள் வேலையை மதித்து அதையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள் அவர்கள்.

வேலையை வேலையாக நினைக்காதீர்கள்!
 
வெற்றியாளர்களைப் பொறுத்தவரையில் சுத்தி வளைப்பது அவர்களுக்கு வராது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நேரடியாக ஒரு வேலையை  செய்து முடிப்பார்கள். எந்தவொரு வேலையைத் தொடங்கும் போது எதிர்மறையாக நினைக்க, அவர்கள் மூளை நேரம் எடுப்பதில்லை.

வெற்றி தோல்வி போன்ற எண்ணங்களில் சிக்கி, அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் எது நடந்தாலும் சரி என்று துணிச்சலுடன் களத்தில் இறங்கிவிடுவார்கள். ஒரு வேலையில் இறங்கும்போது மனத்தில் எதாவது குழப்பங்கள் அல்லது தயக்கங்கள் தோன்றக்கூடும். எனவே அதற்கு முன்பாகவே, மூளையின் கட்டளைகளுக்குச் செவி சாய்ப்பார்கள். அதுவே அவர்களை தனித்துவமாக்குகிறது. மேலும் எதைப் பார்த்தும் மலைத்துப் போக மாட்டார்கள். முக்கியமாக வேலையை வேலை என்று நினைக்க மாட்டார்கள். எந்தவொரு கடினமான வேலையையும், தீவிரமாக ஒற்றைச் சிந்தனையுடன் செய்து முடிப்பார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com