தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்!

போட்டியில் கலந்து கொண்டு தங்களது குரூப் ஃபோட்டோக்களையும், பள்ளி நினைவுகளையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அத்தனை பேருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

தினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே போட்டிக்கான வாசகர்களின் வரவேற்பு அட்டகாசமாக இருந்தது. தினம், தினம் வந்து குவிந்த மின்னஞ்சல்களில் தங்களது இளமையும், இனிமையுமான பள்ளி நினைவுகளைப் பகிர வாசகர்களிடையே பலத்த போட்டா போட்டி இருந்ததைக் கண்டு தினமணிக்கு மெத்த மகிழ்ச்சி. மொத்த மின்னஞ்சல்களையும் ஒவ்வொன்றாக நிதானமாக வாசித்து, ஃபோட்டோக்களை அலசி பரிசுக்குரிய சிறந்த குரூப் ஃபோட்டோக்களைத் தேர்ந்தெடுப்பதில் எதை விடுவது, எதைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு முடிவுக்கு அத்தனை எளிதாக வர இயலவில்லை. ஏனெனில், வாசகர்கள் அனுப்பியிருந்த அத்தனை மின்னஞ்சல்களிலும் பொதிந்திருந்தது வெறும் பள்ளி குரூப் ஃபோட்டோக்களும், அவர் தம் நினைவுகளும் மட்டுமே அல்லவே! 

எங்களுக்கு வந்திருந்த மின்னஞ்சல்கள் ஒவ்வொன்றுமே அதை அனுப்பியவர்களைப் பொறுத்தவரையில் அவரவர் வாழ்வில் அவர்கள் மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் துடிக்கும் பொன்னான தருணங்களைக் கொண்டிருந்தவை அல்லவோ!. சிலரது ஞாபகப் பகிர்வுகளை வாசிக்கையில், வாழ்க்கையில் எவரொருவராலும் வெறுக்கவே முடியாத ஒரு பருவம் என்றால் அது அவரவரது பள்ளிப்பருவம் மட்டுமே என்று உணர முடிந்தது.

சிலருக்குப் பரீட்சைக் காலங்கள் வேப்பங்காயாகக் கசந்திருக்கலாம். சிலருக்குப் பள்ளிக்கூடம் செல்வதேகூட பிடிக்காமல் இருந்திருக்கலாம். சிலர், எழுத்தாளர் கி.ரா. (கி.ராஜநாராயணன்) சொல்வதைப்போல, மழைக்காகக்கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கி இருக்கலாம். சிலருக்கோ, பள்ளி செல்லப் பிடித்திருந்தும்கூட சில ஆசிரியர்களைக் கண்டால் கடுவன்பூனைகளாக அச்சம் உடலில் மயிர்க்கூச்செரியச் செய்து குளிர் பரப்பியிருக்கலாம். சிலருக்கு மாணவப் பருவத்தில் நேர்ந்த சில்லறைச் சண்டை, சச்சரவுகளால் மண்டை உடைந்து காயம் பட்ட வடு இருக்கலாம். சிலருக்கு நல்மாணாக்கர் என்ற விருது கிடைத்திருக்கலாம். சிலருக்கு உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் ஆட்டோகிராப் ஹீரோபோல முதல் காதலி கிடைத்திருக்கலாம். சிலருக்கு நமக்கான வாழ்க்கைத்துணை இவர்தான் என்றே யோசிக்க முடியாத அந்தப் பருவத்தில் அவர்களது எதிர்கால வாழ்க்கைத் துணைவி, துணைவர்களும்கூட ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்து முடித்திருக்கலாம். சிலருக்கு வாழ்வு மொத்தத்துக்குமான மிகச் சிறந்த பரிசுத்தமான நட்பென்பது பள்ளியில் முகிழ்த்த ஒரு சிலராக மட்டுமே இன்று வரையிலுமாக இருந்திருக்கலாம்... மொத்தத்தில் அவை எல்லாமே இப்போது தனிமையில் உட்கார்ந்து சிந்திக்கையில் ஆச்சர்ய இனிமை தரும் நினைவுகள்தானே. கூட்டிக் கழித்துப் பார்க்கையில் அதில் குறையெனப்படுவது யாதொன்றுமில்லை!

இப்போது போட்டியில் வென்றவர்கள் பட்டியலைப் பார்க்கலாம்.

முதல் பரிசு... 

சந்திரசேகரன்

டியர் சார், இத்துடன் 1987-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எனது எஸ்.எஸ்.எல்.சி. குரூப் ஃபோட்டோவை இணைத்துள்ளேன்.  இப்படி ஒரு போட்டியை அறிவித்ததற்கு நன்றி.

பள்ளியின் பெயர்: அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப் பள்ளி)
ஊர்: வெள்ளையம்மாள்புரம்
படித்த ஆண்டு: 1977 முதல் 87 வரை; என்னுடன் படித்த நண்பர்கள் பெயர் ஃபோட்டோவிலேயே உள்ளது.
தலைமை ஆசிரியர்: லேட் திரு. எஸ். அமாவாசை (நாங்கள் 10-ம் வகுப்பு படித்த வருட மத்தியில் இயற்கை எய்தினார்)
தமிழ் & வகுப்பு ஆசிரியர்: திரு. குமரன் ஐயா அவர்கள்
அறிவியல் ஆசிரியர்: திருமதி. பூபதி
வரலாறு + புவியியல்: திரு.இராமலிங்கம்
கணிதம்: திரு. சின்னத்துரை
ஆங்கிலம்: திருமதி முத்துலட்சுமி மற்றும் திருமதி சீனித்தாய் அவர்கள்.

மின்னஞ்சல் முகவரி: chansan2510@gmail.com

எப்பொழுதும் மறக்க முடியாத பசுமை நினைவுகள். இப்போது விடுமுறையில் சென்றாலும் ஏக்கத்துடன் பார்த்து மனைவி, குழந்தைகளுக்கும் பகிர்ந்துகொள்வேன். நண்பர்கள் யாராவது பார்த்தால் மேலே உள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

அன்பிற்குரிய தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,

வாழ்வின் உன்னதமான கவலை, ஆசை, பொறாமை இல்லா இளமை பருவ பகிர்வுக்கு வழிவகுத்த எங்கள் நாளிதழுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.

நான் தற்போது வளைகுடா நாடுகளில் எஞ்சினியராக, கடந்த 20 வருடங்களாக மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். வேலை விஷயமாக மஸ்கட், அபுதாபி, துபாய் சென்று வருவேன்.

எங்கள் ஊர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் வெள்ளையம்மாள்புரம் என்ற சிறுகிராமம். இங்குதான் எனது குழந்தைப் பருவம் முதல் பள்ளிப்படிப்பு வரை. இங்கு அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியும், அரசு கள்ளர் மாணவர் விடுதியும் (சுமார் 50 விடுதி மாணவர்கள்) உள்ளபடியால், அருகிலுள்ள பள்ளியில்லா கிராம மாணவர்கள் இங்கு தங்கிப் பயின்றனர்.

நான் முதல் வகுப்பு 1977 முதல் 1987 ல் பத்தாம் வகுப்பு வரை இங்குதான் பயின்றேன். என்னுடன் ஃபோட்டோவில் இருப்பவர்களில் 7 பேர் தவிர மீதமுள்ள அனைவரும் என் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான். அப்போதைய எங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. S. அமாவாசை அவர்கள், தான் கொண்டுவரும் தினமணி நாளிதழை என்னிடம் கொடுத்து செய்திக் குறிப்பு எடுத்து காலை நேரப் பிரேயரில் செய்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்பாடு செய்தார். அப்போது ஒருநாள் செய்தியில் ‘ஒரிஸ்ஸா வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல் வழங்கினார் என்பதற்குப் பதிலாக, முதல்வர் பரிசு வழங்கினார் என்று செய்தி வாசிக்க அதைப் புரிந்தவர்கள் முழிக்க/சிரிக்க, என் தமிழாசிரியர் திருத்தினார். பின்னர் (கொட்டியது வேறு விஷயம்!)

நாங்கள் படித்த அந்தக் காலத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பள்ளியை சோலைபோல வைத்துக்கொள்வோம். எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் (பாத்தி என்று சொல்வார்கள்) அதை அவர்கள் பராமரிப்பு செய்ய வேண்டும். மாணவர்கள் நில வேலையும், மாணவிகள் தண்ணீர் ஊற்றும் வேலையும் பார்ப்பார்கள். பகிர்ந்துகொண்டு செய்து பூந்தோட்டம்போல் கல்ரோஜா, புல்வெளி, காகிதப்பூ, செவ்வந்தி என்றும், குரோட்டன்ஸ் செடிகள் என்றும் பள்ளியே ஒரு சோலைபோல இருக்கும். மரத்தடியில் கரும்பலகை வைத்துப் பாடம் நடக்கும். அப்போது எங்கள் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் (21 மாணவர்கள் மட்டுமே) இல்லை என்பதால், சின்னமனூர் சென்று பரீட்சை எழுதி வருவோம். அவ்வளவு மகிழ்ச்சி! பஸ்ஸில் சென்று வர.

இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியப் பெருமக்களுக்குப் பிரிவு உபசார விழா நடத்தி சிறு பரிசுகள் அளித்து மகிழ்ந்தோம். நான் பள்ளியில் கொஞ்சம் படிப்பில் கெட்டி என்பதால், அனைத்து நற்செயல்களையும் எனது பொறுப்பாக்கிவிடுவார்கள் ஆசிரியர்கள். அனைத்தையும் நண்பர்கள் உதவியுடன் சிறப்புறச் செய்து, நாங்களும் நல்ல பெயர் எடுத்து எங்கள் பள்ளிக்கும் நற்பெயர் ஏற்படுத்திக்கொடுத்தோம். ஏனெனில், எங்கள் செட்டில் தேர்ச்சி விகிதம் அதிகமானது.

பள்ளியைச் சுத்தம் செய்யும் பணி மாணவர்களான எங்கள் பொறுப்பு. அதிகாலையில் அவரவர் வீட்டுத் துடைப்பத்துடன் குழுவாக (ஒரு நாளுக்கு ஒரு குழு வீதம்) 5 மணிக்குத் தொடங்கி குழுவாகப் பள்ளியைச் சுத்தம் செய்து ஒன்றாக அமர்ந்து குளிர் காய்ந்து பின் பிரிந்து வீட்டுக்குச் சென்று 8.30 மணிக்கு மீண்டும் பள்ளிக்கு வருவோம்.

என்றும் அன்புடன்,

சந்திரசேகரன்

{pagination-pagination}

*

இரண்டாம் பரிசு...

திலகா சுந்தர்

நான் படித்த பள்ளியின் பெயர் இந்து நாடார் உறவின்முறைக் கமிட்டி மேல்நிலைப் பள்ளி, டி.என்.புதுக்குடி, புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம். (1987 to 1989) 

வகுப்பு: ப்ளஸ் 1 & ப்ளஸ் 2

தரையில் உட்கார்ந்து இருப்பவர்கள்: (வலமிருந்து இடம்) - 1. சித்ரா, 2. ராஜதிலகம் (திலகா), 3. தாமரை புஷ்பம், 4. சாந்தி, 5. சக்தி அனுபமா, 6. பொற்செல்வி, 7. ரேச்சல் சீனி, 8. அருணா, 9. மாதவி, 10. தனலட்சுமி.

இரண்டாவது வரிசை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்: (இடமிருந்து வலம்) 1. அன்பு அண்ணா, 2. செளந்தராஜன், 3. ராஜேந்திரன், 4. ராதாகிருஷ்ணன் ஐயா (தமிழ்), 5. பெயர் நினைவில்லை (அலுவலர்), 6. பெயர் நினைவில்லை (அலுவலர்), 7. R. ராதாகிருஷ்ணன் சார், 8. தலைமை ஆசிரியை சுந்தரி மேடம், 9. முருகையா சார் (வேதியியல்), 10. அஹமது சார் (விலங்கியல்) 11. வின்சென்ட் சார் (தாவரவியல்), 12.செளந்திரபாண்டியன் சார் (டிரில் மாஸ்டர்).

மூன்றாவது வரிசையில் நிற்கும் மாணவிகள்: (வலமிருந்து இடம்) - அவ்வையார், பர்வதாகுமாரி, இந்திரா, மணிச்செல்வி, பார்வதி (பானு), அலமேலு அம்மாள், மரியசெல்வம், முத்துலட்சுமி

மாணவர்கள்: அருள்ராஜ், செல்லப்பா, ஹரிகிருஷ்ணன், ஜெயபாலமூர்த்தி, ஜெயராஜ், கனகராஜ், கருப்பையா, கோவில் ராஜ், குமரகுருபரன், மாரியப்பன், மயிலேறும் பெருமாள், முத்துதுரை, பிச்சைகனி, சாமி, சங்கர் ராஜ், சங்கர், சரவண ராஜேஷ், செல்வன் அற்புதராஜ், சுடலைராஜன், திருமலைக்குமார், உதுமான் அலி, தியாகராஜன். 

என் பெயர் திலகா சுந்தர். (பள்ளியில் என் பெயர் ராஜ திலகம்). நான் அமெரிக்காவில் எனது கணவர் மற்றும் மகனுடன் கடந்த 17 வருடங்களாக வசிக்கிறேன்.

நான் இந்தியா வரும்போதெல்லாம், அம்மா வீட்டின் பீரோவின் உள்ளறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்து கண் கலங்கி பள்ளி நினைவுகளில்  மூழ்கிவிடுவது உண்டு.

பள்ளி நினைவுகள் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத நினைவுகளாக ஆகிப்போனாலும் அந்தப் பதினாறு வயதினிலே என்னுள் ஒரு குழப்பான சூழ்நிலையே நிலவியது. கண் முன்னால் தெரியும் காட்சிகளை ரசித்துப் பார்ப்பதிலும், கதைகள் வாசிப்பதிலும், கற்பனை உலகில் சஞ்சரிப்பதிலுமே ஆர்வம் இருந்தது. எதிர்காலம் பற்றிய திட்டமிடல், வாழ்வின் உயர்ந்த இடத்துக்கு செல்லுதல் இதல்லாம் என்னவென்றே தெரியாமல் இருந்தது. இந்த புகைப்படம் எடுக்கும்போது எப்படியாவது இந்த ப்ளஸ் 2 படிப்பு முடிந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும், அதே சமயம் ஏதோ ஒரு சோகமும் என்னுள்ளே இருந்தது.

HNUC மேல்நிலைப்பள்ளி என்று அழைக்கப்படும் இந்த பள்ளியில் புதிதாக ப்ளஸ் 1-ல் சேர்ந்தேன். பள்ளியின் தோற்றமும், எங்களது தலைமை ஆசிரியை சுந்தரி அம்மா அவர்களின் அழகிய கனிந்த முகமும் பிரமிப்பையும், வியப்பையும் அளித்தது. எங்களுக்கு பாடம் எடுத்த அனைத்து ஆசிரியர் பெருமக்களும் 28 வயதிலிருந்து 35 வயதிற்குள்ளான இளைஞர்கள். கிராமப்புர அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்புவரை வயதான ஆசிரிய, ஆசிரியைகளைப் பார்த்து பார்த்துப் பழகிப்போன கண்களுக்கு, இந்தப் பள்ளி மிகவும் புதுமையாகவும், ஆசிரியர்களின் கடமை உணர்வு மற்றும் பாடம் நடத்தியதில் இருந்த அர்ப்பணிப்பும், உத்வேக உணர்வும் மிகவும் வியப்பாகவும் அதே சமயத்தில் ஒரு வித பயத்தையும், பிரபலங்களுடன் போட்டியிட முடியாத, தோற்றுப் போன உணர்வையே என்னுள் ஏற்படுத்தியது.

நான், பர்வதா, பானு, சித்ரா இந்த நான்கு பேரும் மதிய உணவு சாப்பிடும்போது நன்றாக அரட்டை அடிப்பது உண்டு. அப்போது ‘புன்னகை மன்னன்’ படத்தில் வரும் ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன். உன் கையில் என்னைக் கொடுத்தேன்’ பாடலை பர்வதா மிகவும் இனிமையாகப் பாடுவாள். நாங்களெல்லாம் மெய் மறந்து கேட்டு ரசிப்போம். பள்ளியின் அழகு ராணியாக பர்வதா வலம் வந்தாள். தீர்க்கமான அறிவு, நேர்த்தியாக உடை உடுத்துதல், புத்திசாலித்தனம் என அந்தக் கூட்டத்தில் வித்தியாசமாகத் தெரிந்தாள்.

சக்தி அனுபமாவைப் பார்க்கும்போது பாரதி படைத்த புதுமைப் பெண்ணா இவள்! என்று எனக்குத் தோன்றும்! அவளது பார்வையில் ஒரு, ஒரு... என்னவென்று சொல்லத் தெரியாத வெப்பத்துடன் கூடிய தீர்க்கம் இருந்தது. சக்தி படிப்பிலே படு சுட்டி! எழுத்துகள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக மிளிரும். வகுப்பிலே முதல் மாணவி! அவளை மிஞ்ச ஆளே கிடையாது. அவளது ஜிமாமென்ட்ரி டப்பாவின் மூடிக்குள் மூன்று பெண் தெய்வங்களின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அவ்வப்போது அந்த டப்பாவை திறந்து கைகளால் கண்களில் ஒற்றிக்கொள்வாள். மாநிறம், வயதுக்கு ஏற்ற உயரமும், உடல் அமைப்பும் கொண்டவள். சுருண்ட கருங்கூந்தல் இரட்டை ஜடை பின்னப்பட்டு, அவள் நடக்கையில் அழகாக அசைந்தாடும். இடுப்பின் ஒரு இஞ்சுகூட தெரியாதிருக்கும் பொருட்டு  ‘பின்’களால் இடுப்பைச் சுற்றியிருக்கும் தாவணிக்கும் அதன் அருகே இருக்கும் ரவிக்கைக்குமாக இணைத்து பல ஹூக்குகளை குத்தியிருப்பாள் சக்தி!

இயல்பிலே குழந்தைத்தனமும், நகைச்சுவை உணர்ச்சியையும் கொண்டிருந்த நான், என் தோழிகளை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதுண்டு. ஆனால் வகுப்பறையில் இறுக்கமான முகத்துடன் ‘உம்’ என்று இருப்பதுண்டு. ஆம்! இந்த புகைப்படம் எடுக்கும்போதும் அப்படித்தான், தலையைச் சற்றே குனிந்து,  இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருக்கிறேன். (கீழிருந்து முதல் வரிசை... வலமிருந்து இரண்டாவது இடத்தில், நீல நிற தாவணி அணிந்திருக்கிறேன்). நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு நான் பெரிதாக சாதிக்கவில்லை என்பதால், என் ஆசிரியர்களுக்கு என்னைப் பற்றிய ஞாபகம் எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன்!

வாழ்க்கை என்பது ஒரு பரமபத விளையாட்டுபோலத்தான். நிச்சயமாக இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று யாராலும் சொல்ல இயலாது. வாழ்க்கைச் சக்கரம் மட்டும் உருண்டோடிக்கொண்டிருக்கிறது, நெஞ்சில் நீங்காத நினைவுகளச் சுமந்துகொண்டே!!!{pagination-pagination}

மூன்றாம் பரிசு மட்டும் ஸ்பெஷலாக மூன்று நபர்களுக்கு...

1. A. மூர்த்தி

மதிப்பிற்குரிய தினமணி ஆசிரியருக்கு,

பள்ளிக்காலத்தில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோக்களை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்த உங்களது கட்டுரை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. நான் எனது பள்ளி குரூப் ஃபோட்டோவை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.

அப்போது நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தோம். நான் மட்டுமல்ல இந்த குரூப் ஃபோட்டோவைப் பார்க்கும் என் நண்பர்கள் அனைவரும்கூட இப்போது மிகவும் ஆச்சர்யப்பட்டுக்கொள்கிறோம். எப்படி அத்தனை வறுமையிலும் காசு செலவழித்து இந்த ஃபோட்டோக்களை எல்லாம் எங்களது பெற்றோர்களால் எங்களுக்கு வாங்கித்தர முடிந்தது என!? அதையெல்லாம் உணர்ந்ததால்தான், நான் இந்த ஃபோட்டோவை மிக மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

என் பெயர் A.மூர்த்தி. தற்போது BHEL நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். 38 வருடங்களாகப் இந்தியா முழுவதிலும் உள்ள வெவ்வேறு மாநில பவர் புராஜெக்டுகளில் பணிபுரிந்து, பின்னர் தற்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் பள்ளியின் பெயர் ஸ்ரீ சாரதா அப்பர் பிரைமரி ஸ்கூல். மேற்கு மாம்பலத்தில், மாம்பழம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது. நான் இந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்னர் மேற்கு மாம்பலத்திலிருந்த அஞ்சுகம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினேன். இந்த ஃபோட்டோவில் நடு வரிசையில் வலமிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பது நான்தான்.

ஆசிரியையின் பெயர் சீதாலஷ்மி. ஆனால் எனது மற்ற நண்பர்களின் பெயர்களை எல்லாம் என்னால் இப்போது நினைவுபடுத்திக்கொள்ள இயலவில்லை. நன்றி.

{pagination-pagination}

*

2. உஷாதேவி

அறியாப் பருவத்தில் அன்பைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத தூய்மையான நட்பு பள்ளி நாட்களுக்கு உரித்தானது. 1971-ஆம் ஆண்டு மதுரையில் புகழ்மிக்க புனித சூசையப்பர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தேன். அப்போது பள்ளிகளில் யூனிபார்ம் கிடையாது. 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் வண்ண உடை உடுத்திய வண்ணத்துப்பூச்சிகளாய், எதிர்காலத்தை பற்றிய கனவுகளுடன் நிற்கிறோம். பிரிவை நினைத்து கலங்கியும் நிற்கிறோம். ஏ, பி, சி, டி என்று நான்கு பிரிவுகள் . ஆதலால் பெரிய புகைப்படம்.

இடமிருந்து பள்ளி முதல்வர் செல்வி . தாமஸ், மாணவி தலைவி ஜெயலட்சுமி, சிஸ்டர் மேரி, தனபாக்கியம், ஜீவா, கிளாரா புஷ்பம், க்ளோரி என வகுப்பு ஆசிரியைகள். இரண்டாவது வரிசையில் கீதா, நான், மூன்றாவது வரிசையில் செந்துரு, ஞானம், ஞானக்கனி, லதா, சந்தானம் என பட்டியல் பெரியது. படம் எடுத்தவுடன் அழுத அழுகையை நினைத்தால் இப்போதும் அழுகை வருகிறது. 

கிட்டத்தட்ட 47 வருடங்கள் கழித்து, பெருமுயற்சியால் 40 தோழிகளை ஞானமும், சந்தனமும் தொடர்புகொண்டு ஜூலை 25, 2017,  மதுரையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். இல்லத்தரசிகளாய், மருத்துவர்களாய், அரசுப் பணியில் ஓய்வு பெற்றவர்களாய், கவுன்சிலராக என அன்றைய இளந்தளிர்கள், ஆலமரமாய் விரிந்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தோம். ஆசிரியைகள் திருமதி ஷாநவாஸ், லட்சுமியை வரவழைத்து கவுரவித்தோம். பழைய நினைவுகள், பரிசுகளைப் பரிமாறிக்கொண்டது மட்டுமல்ல, பொன்விழா ஆண்டையும் கொண்டாடப் போகிறோம்.

என்.உஷாதேவி, 
'விக்னேஷ் வில்லா', 
7B,சுபேதார் தோப்பு, 
நியூ பங்கஜம் காலனி, 
மதுரை - 625009 
கைபேசி எண்: 9442766810

*{pagination-pagination}

3. ஆர்.வி. பதி

நகரும் நினைவுகள். 

குழந்தைகள் தின விழாவினை வித்தியாசமாகக் கொண்டாடி பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள தினமணி நாளிதழுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
என் பெயர் ஆர்.வெங்கடாசலபதி. ஆர்.வி.பதி என்றால் தமிழ் எழுத்துலகில் அனைவருக்கும் தெரியும். தற்போது கல்பாக்கத்தில் வசித்துக்கொண்டிருக்கும் நான் 53-வது வயதில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். செங்கற்பட்டு ஸ்ரீராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் 1973-74 ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது மதியம் சுமார் மூன்று மணி அளவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை இதுநாள் வரை பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். இதைத் தவிர என் இளம் வயது புகைப்படம் ஏதும் என்னிடத்தில் இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். மேலிருந்து கீழாக இரண்டாவது வரிசையில் நடுவில் அமர்ந்திருக்கும் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி.தையல்நாயகி அவர்களின் வலதுபுறத்திலிருந்து நான்காவதாக சற்றே முறைத்தவாறு நின்று கொண்டிருப்பது அடியேன்.   
 
முதல்வரிசையில் முதல் ஆளாக நின்று கொண்டிருக்கும் விமல், நான்காவதாக நின்றுகொண்டிருக்கும் விஜயகுமார், ஜெயக்குமார், சீனுவாசன் மற்றும் இரண்டாவது வரிசையில் எனக்கு வலப்பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் ஜார்ஜ் வில்சன், இடப்பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் குருமூர்த்தி மற்றும் இதே வரிசையில் முதல் ஆளாக நிற்கும் ரவிக்குமார், கடைசியாக நின்றுகொண்டிருக்கும் நாராயணன், எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி. தையல்நாயகிக்கு வலதுபுறத்தில் அமர்ந்திருக்கும் ஆதிநாயகி, இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் கே.கே.கீதா, அதே வரிசையில் கடைசியாக அமர்ந்திருக்கும் விசாலாட்சி, கீழ்வரிசையில் அமர்ந்திருக்கும் ரேவதி மற்றும் ரேணுகா என எனது எல்லா வகுப்புத் தோழர், தோழிகளையும் இன்றுவரை என்னால் நினைவுகூர முடிகிறது. இதில் ஜெயகுமார் மற்றும் நாராயணனோடு இன்றுவரை நட்பில் இருக்கிறேன். திருமதி.ரேணுகா கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிகிறார். திருமதி. ஆதிநாயகி அஞ்சல் துறையில் பணியாற்றுகிறார் என்று நினைக்கிறேன். எனது வகுப்புத் தோழர்கள், தோழிகள் ஆசிரிய, ஆசிரியைகள் தற்போது எங்கிருந்தாலும் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். 
 
ஆர்.வி.பதி எனும் ஆர்.வெங்கடாசலபதி

முகவரி
24,  ஏழாவது தெரு,
கல்பாக்கம் 603102,
காஞ்சிபுரம் மாவட்டம்.

*

{pagination-pagination}

நான்காம் பரிசு...

நரசிம்மன் ஸ்ரீனிவாசராகவன்​

தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,

இத்துடன் நான் எனது முதல் வகுப்பு, 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு, 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். எனது பள்ளி நினைவுகளை மீட்டெடுக்க வாய்ப்பு தந்த தினமணிக்கு நன்றி!

பள்ளி நினைவுகள்...

முதலாம்  வகுப்பு...

இன்றைக்கு  35 வருடங்களுக்கு  முன்னால்  1982-ஆம்  வருடம்  நான் மதுரையில் ரத்னா  ஆரம்பப்  பள்ளியில்  முதலாம்  வகுப்பு  படித்தேன். அரசாங்கம்  நடத்தும் பள்ளி என்றாலும் மிகச் சிறிய பள்ளி என்றாலும் அழகாக இருக்கும். முற்றத்துடன் கூடிய ஓட்டு தாழ்வாரம் போன்ற அமைப்பு. தாழ்வாரத்தில் வரிசையாக  வகுப்புகள். ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் இடையில் ஒரு சிறிய ப்ளைவுட் போர்டில் செய்த தடுப்புதான் இருக்கும். அதுவும், கையால் தூக்கி வேறு இடத்திற்கு எடுத்துக்கொண்டு போய்விடலாம். அப்பா என்னை அழைத்துச்  சென்று பள்ளியில் சேர்த்த நாள் இன்னும் நினைவு இருக்கிறது. தலைமை ஆசிரியர் பெயர் திரு. மணி. முழுப்பெயர் நினைவில்லை. மஞ்சள் பையை கையில் சுற்றிக்கொண்டு நான் ஏதாவது பணம் கட்டணுமா பீஸ் என்று அப்பா கேட்டதும், அதற்கு அவர் ஒன்றும் இல்லை. பையனை நாங்கள் பார்த்துக்கறோம், விட்டுட்டு போங்க என்று  சொன்னதும்... 

அந்த நாள்...

சொக்கலிங்க நகரில் உள்ள எங்கள்  வீட்டில்  இருந்து  பைபாஸ் ரோடு தாண்டி பல சந்துகளின் வழியாகத்  தனியாகத்தான் சென்று வருவது வழக்கம். இந்தக் காலம் போல பிள்ளைக் கடத்தல் அன்று இருந்ததா என்றும் தெரியாது. அதைப்பற்றி பெற்றோரும் கவலைப்பட்டது கிடையாது. எனக்கும் அந்த உணர்வே கிடையாது. 

எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியை திருமதி.  மாரியம்மாள்  என்று  பெயர் (நினைவுகள்  சரியாகத்தான்  இருக்கும்  என்ற  நம்பிக்கை). கூடப் படித்தவர்களில் ஷண்முகம் என்ற ஒரே ஒரு பெயர் மட்டும் நினைவில் இருக்கிறது. 

ஓரெண்டு  ரெண்டு… ஈரெண்டு நாலு என்று கத்திக் கத்திச் சொல்லிச் சொல்லியே எல்லாம் மனப்பாடம் ஆனது என்றும் அழியா நினைவுகள்.

3-ம் வகுப்பு

காலேஜுக்கு கட் அடிச்சுட்டு ஊரை சுத்துவார்கள் என்றால், நாங்கள் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே ஸ்கூலுக்கு கட் அடித்தவர்கள். ஆனால் ஊரைச் சுற்றவில்லை. வீட்டிற்கு வந்ததுதான் சாதனை.

இன்னிக்கி முப்பத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னால TVS Primary ஸ்கூலில் 3- ஆம் கிளாஸ் படித்துக்கொண்டு இருந்த சமயம், செல்லம்மா டீச்சர்தான் கிளாஸ் டீச்சர். எனது வீடு இருந்தது சொக்கலிங்க நகர் முதலாவது தெரு. சுரேஷ் என்ற பெங்களூர் தக்காளி இருந்தது ஜெய்ஹிந்த்புரம். அப்போது, சொக்கலிங்க நகர் என்பது ஏதோ வேறு கிரகத்தில் இருப்பதுபோலவும், நான் மட்டும்தான் பள்ளிக்கு ரொம்ப தூரத்தில் இருந்து வருவதுபோலவும் ஒரு உணர்வு. 

தக்காளி என்ற பெயர் எந்த டீச்சர் அவனுக்கு சூட்டியது என்று தெரியாது. ஆனால் அப்போதில் இருந்தே அந்த பெயருக்குக் கொஞ்சம்கூட களங்கம் ஏற்படாத வண்ணம் சும்மா தளதளன்னு பளபளன்னு ரொம்ப அழகா இருப்பான் நம்ம சுரேஷ்.

அப்போ எல்லாம் ரிக்ஷாவில் போவது கனவு. எத்தனை தடவை கேட்டாலும் ரிக்ஷா சவாரி மட்டும் கிடைக்காது. பாண்டியன் போக்குவரத்து கழகத்தில் கூட்டிக்கொண்டு போவார்கள். (அப்பா வேலை செய்ததால் இலவச பயணம்) அல்லது நடந்தே போவோம். ரோட்டுல ரிக்ஷாவை பாக்கும்போது எல்லாம் ஏதோ இந்தக்காலத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அல்லது கல்ப் ஏர்லைன்ஸ் பார்ப்பதுபோல ஏக்கமாக பார்ப்பேன். அந்த சமயத்தில்தான் சுரேஷ் சொன்னான்...

டேய், என்னோட சொந்தக்காரங்க வீடு (பாட்டி வீடோ அல்லது மாமா வீடோ தெரியல) சொக்கலிங்க நகர் ஆறாவது தெருவுல இருக்கு. நாங்க எல்லாரும் அடுத்த மாசம் ரிக்ஷாவில அங்க போகப்போறோம். நீயும் வரியான்னு கேட்டான்.

அதை கேட்ட உடனேயே, டேக் ஆப் ஆகாமலேயே 2500 அடி உயரத்தில் பறப்பதுபோல ஒரு உணர்வு. அன்னிக்கே அம்மாகிட்ட கேட்டேன்,அவன்கூட சேர்ந்து ரிக்ஷாவில் போலாமான்னு. அம்மாவும் சரின்னு சொல்ல, மறுநாள் சுரேஷ்கிட்ட சொன்னேன். டேய், நானும் உன்கூட வரேன்னு. கவுண்ட் டௌன் தொடங்கியது. அந்த நாளும் வந்தது. மத்தியானம் லஞ்ச் நேரத்துல நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து சுரேஷ் வீட்டுக்கு போனோம் ஜெய்ஹிந்த்புரத்துல (ஸ்கூலுக்கு பங்க்குத்தான்).

சுரேஷ் அம்மா சாப்பிட சொன்னார்கள். இன்னும் ஞாபகம் இருக்கிறது, தட்டுல சாதம் மட்டும் போட்டு ஒவ்வொரு காயும், கூட்டும், குழம்பும், ரசமும் தனித்தனி கிண்ணத்தில் ரெஸ்டாரண்டில் கொடுப்பதுபோலக் கொடுத்தார்கள். அதைப் பார்க்க ரொம்ப அதிசயமாக இருந்தது. எங்கள் வீட்டில் தனித்தனியாக கப்பில் சைடு டிஷ் வைப்பது பழக்கம் கிடையாது. ஒரே தட்டில் ஒவ்வொன்றும் ஒரு பக்கமாகவே இருக்கும். முதல் முதலாக இத்தனை கப் சைடு டிஷ்ஷுக்குப் பார்த்து அதிசயப்பட்டு அம்மாக்கிட்ட அப்பறம் சொன்னேன்..

அப்பறம் சாப்பிட்ட பின்னால் எல்லாரும் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு கிளம்பினோம். அன்றைய தினத்தின் சந்தோஷம் இன்றும் உணர்கிறேன், ரிக்ஷாவில் பயணித்தது. குஷன் சீட்டுக்கு எதிரில் உள்ள சின்ன கட்டையில் நானும் சுரேஷும் உட்கார்ந்துகொண்டோம். நடராஜ் தியேட்டர் பாலத்தில் மிதிக்க முடியாமல் ரிக்ஷாக்காரர் கீழே இறங்கி இழுத்துக்கொண்டே சென்றது அப்பொழுது ஒன்றும் தோணவில்லை என்றாலும், இப்பொழுது நினைத்தால் பாவமாக இருக்கிறது. (அப்போ நடராஜ் தியேட்டர் இருந்ததா என்று நினைவு இல்லை).

பாலம் இறக்கத்தில் ரிக்ஷா வேகமாகப் போனபொழுது உணர்ந்த சில்லுன்னு காத்து! அப்போ எல்லாம் பசும்பொன் நகரில் இருந்து ரோட்டுக்கு லெப்ட் சைடில் முழுக்க வயல்வெளி. PRC ஆபீஸ் அப்பறம் ஒரு அக்ரிகல்ச்சர் ஆபீஸ். அவ்வளவுதான் கட்டிடம். அதைத் தாண்டினால் அடுத்து SBOA ஸ்கூல்தான் அடுத்த கட்டிடம். 

ரொம்ப சந்தோஷமாக வந்து சேர்ந்தோம். பை பாஸ் ரோட்டு மேலே எனது வீடு இருந்ததால், இதுதான் எனது வீடு என்று பெருமையாக காட்டிக்கொண்டு டாட்டா காட்டி விட்டு இறங்கி ஓடினேன். அப்பறம் சாயங்காலம் ஆறாவது தெருவுக்குப் போய் கொஞ்ச நேரம் சுரேஷ்கூட விளையாடிவிட்டுத் திரும்பி வந்தேன்.

வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களில் அன்றைய தினமும் ஒன்று. சில நினைவுகளை நெஞ்சம் என்றும் மறப்பதில்லை. சுரேஷுடனான நட்புக்கு வயது இன்றைக்கு 33 வருடங்களுக்கும் மேல்.

*{pagination-pagination}

ஐந்தாம் பரிசு...

கணபதி சுப்ரமணியன்​

பள்ளி பெயர் - சுப்பையா வித்தியாலயம் மாணவர் உயர் நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

தலைமை ஆசிரியர்-  திரு அந்தோணி சாமி

வகுப்பு ஆசிரியர் -  திரு ஆறுமுகம்

வருடம் -  1960   

வகுப்பு  - எஸ்.எஸ்.எல்.சி.

என் பெயர் கணபதி சுப்பிரமணியன். (புகைப்படத்தில், கீழே ஆசிரியர்களின் காலடியில் உட்கார்ந்திருப்பவர்களில் வலமிருந்து முதல். கையில் என் அண்ணன் புகைப்படம்!)

நினைவு...

இந்த மாணவர் கும்பலில் நாங்கள் ஐந்து பேர் கடந்த ஆண்டு 2016 வரை தொடர்புகொண்டிருந்தோம். [நான், நரசிம்மன், சுப்பையா, ப்ரின்ஸ் செல்லராஜ், முத்து கோபால்]. ஆனால் இன்று நானும் திரு ப்ரின்ஸ் செல்லராஜ் மட்டுமே உயிருடன் உள்ளோம். என் வயது இப்போது 73. பள்ளியில் படிக்கும்போது, தூத்துக்குடிக்கு பண்டிட் ஜவஹர்லால் நேரு காரில் ஊர்வலமாய் வந்தபோது [திரு காமராசரும் உடன் இருந்ததாய் நினைவு], சாலையில் நின்று கையசைத்தோம். அவர் வீசிய மாலை எங்கள் பக்கம் விழுந்தபோது ஏற்பட்ட சந்தோஷமே சந்தோஷம்!

***

பரிசு பெற்ற அனைவருக்கும் தினமணியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களுக்கான சிறப்புப் பரிசு நீங்கள் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மாற்று முகவரி இருந்தால் dinamani.readers@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலேயே அதை எங்களுக்குத் தெரிவிக்கலாம்.

வென்றோருக்கான பரிசுகள் முற்றிலும் நீங்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம். எதுவாயினும், நிச்சயம் அப்பரிசு உங்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாகவே இருக்கக்கூடும் என்று நம்புகிறோம்!

பரிசுக்குரிய முதல் 5 இடங்களுக்குத் தேர்வாகாவிடினும், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி போட்டியில் பங்கேற்ற அத்தனை வாசகர்களும் தினமணியின் நேசத்துக்குரிய வாசகர்களே! போட்டியில் அவர்களது பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில், குரூப் ஃபோட்டோ போட்டிக்கு புகைப்படங்கள் அனுப்பிய வாசகர்கள் அத்தனை பேருடைய ஃபோட்டோக்களும் தொகுக்கப்பட்டு தினமணி குரூப் ஃபோட்டோ போட்டிக்கான ஃபோட்டோ கேலரி ஒன்று, கூடிய விரைவில் தொகுக்கப்படவிருக்கிறது. வாசகர்களின் சிறந்த பங்களிப்பாக அது தினமணி.காம் இணையதளத்தின் புகைப்படப்பிரிவில் என்றென்றைக்கும் உங்களது நினைவுகளின் வாசம் பரப்பிக்கொண்டிருக்கும்.

போட்டியில் கலந்துகொண்டு தங்களது குரூப் ஃபோட்டோக்களையும், பள்ளி நினைவுகளையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்ட வாசகர்கள் அத்தனை பேருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

கடந்த மாதம் இந்திய தபால் தினத்தை ஒட்டி தினமணி கடிதம் எழுதும் போட்டி அறிவித்திருந்தோம், இந்த மாதம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி அறிவிப்பு வெளியாகி, இதோ அதற்கான பரிசுகளையும் அறிவித்தாகிவிட்டது. இதிலிருந்து நாங்கள் அறிந்துகொண்டது என்னவெனில், வாசகர்களுக்கு வித்தியாசமான, அதேசமயம் தங்கள் வாழ்வியலோடு ஒட்டிய புத்தம் புதிய போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வமும், முனைப்பும் என்றைக்கும் சலிப்பதே இல்லை என்று புரிந்தது. 

அதையொட்டி, தினமணியின் அடுத்த புத்தம் புதிய போட்டி ஒன்றுக்கான அறிவிப்பு டிசம்பர் 10-ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அது என்ன போட்டி? எந்த விதத்தில் அது வித்தியாசமான போட்டி என்பதை போட்டி அறிவித்த பின்னர் நீங்களே உணர்வீர்கள்!

நன்றி!

தினமணி இணையதளக் குழு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com