சாக்லெட் சாப்பிட்டா உடல்நலனுக்கு கேடுன்னு யாரு சொன்னாங்க?!

சாக்லெட் சாப்பிடும் போதெல்லாம், ‘சாக்லெட் உடல்நலத்திற்கு கெடுதல்’ என்று மூளைக்குள் அலார்ம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.
சாக்லெட் சாப்பிட்டா உடல்நலனுக்கு கேடுன்னு யாரு சொன்னாங்க?!

நீங்கள் ஒரு அதிதீவிர சாக்லெட் ப்ரியராக இருக்கலாம். ஆனால், சாக்லெட் சாப்பிடத் தயாராகும் ஒவ்வொரு முறையும் பலத்த யோசனைக்குப் பிறகு தான் அதை வாயிலிட்டுச் சுவைக்க முடிகிறது என்றால் அது எத்தனை பெரிய துரதிருஷ்டம்.

அட... ப்ரியமான சாக்லெட்டை வாங்கினோமா... உடனே கவரைப் பிரித்து வாயிலிட்டு, மெய்மறந்து ரசித்துச் சுவைப்போமா! என்றில்லாமல், இதென்ன, எப்போது பார்த்தாலும்... சாக்லெட் சாப்பிடும் போதெல்லாம், ‘சாக்லெட் உடல்நலத்திற்கு கெடுதல்’ என்று மூளைக்குள் அலார்ம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.

அடப்போங்கைய்யா, நீங்களும், உங்கள் சாக்லெட்டும்! என்று சாக்லெட் ஆசையைத் துறந்து விடத் துணிந்து விட்டீர்களா? அடடா... அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள் பிளீஸ்! இதோ உங்களுக்காகவே, உங்களது சாக்லெட்டைக் காட்டிலும் இனிப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது. அதைப் படித்த பின் சாக்லெட் உங்கள் உடல்நலத்திற்கு நல்லதா? கெட்டதா? என்று முடிவு செய்து கொண்டு அப்புறமாய் உங்கள் சாக்லெட் ஆசையைத் தியாகம் செய்யுங்களேன்...


சாக்லெட்டுகளில் பால் கலக்காத டார்க் சாக்லெட்டுகள் உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்காதவையாம். டார்க் சாக்லெட்டுகளில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் கோகோ இருந்தால் அவற்றில் போதுமான ஃபிளேவனாய்டுகள் இருக்கும். ஆகவே அவற்றைச் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது. ஆனால் அதிலும் லிமிட் இருக்கிறது. நாளொன்றுக்கு ஒரு அவுன்ஸ் அல்லது இரு நாட்களுக்கொருமுறை ஒரு அவுன்ஸ் என்று டார்க் சாக்லெட் சாப்பிட்டுக் கொள்ளலாம். மேலும் அவற்றில் கூடுதலாகப் பாதாம் பருப்புகளைக் கலந்து உண்டால் இன்னும் நல்லது. ஏனெனில் டார்க் சாக்லெட்டுடன், பாதாம் கலந்து சாப்பிடுவதால் உடல் நலனுக்கு உகந்த நல்ல கொலஸ்டிரால் கிடைக்கும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல; டார்க் சாக்லெட்டில் இன்னும் பல அற்புதமான உடல்நலனுக்கு உகந்த விஷயங்கள் இருக்கின்றன; அவற்றையெல்லாம் நீங்களும் தெரிந்து வைத்துக் கொண்டு, இனிமேல் தைரியமாகச் சாக்லெட் சாப்பிடுங்கள்.

  1. டார்க் சாக்லெட் உடலில் இருக்கும் வீக்கங்கள் குறைய உதவுகிறது.
  2. கேன்சர் மற்றும் டிமென்ஸியா வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது.
  3. மன அழுத்தத்தைத் தடுத்து மனநிலையை ஆரோக்யமாகவும், ஆற்றலுடையதாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  4. சில மேலை நாட்டு ஆராய்ச்சிக் கட்டுரை முடிவுகளின் படி, டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் இதயநோய் வராமல் தடுக்கமுடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
  5. டார்க் சாக்லெட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
  6. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதால் நீரழிவு நோயில் இருந்து காக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்ல ரத்ததில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் வலிமை வாய்ந்த தடுப்பானாகச் செயல்படுகிறது. 
  7. உடலின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்தவும் டார்க் சாக்லெட் உதவுகிறது.
  8. டார்க் சாக்லெட்டில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருப்பதால், அவை உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கிள்களால் உடலநலனில் எந்தப் பிரச்னையும் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
  9. டார்க் சாக்லெட்டில் கலக்கப்படும் முக்கியமானதொரு ரசாயனப் பொருள் இருமல் வராமல் தடுக்க உதவுகிறது.
  10. டார்க் சாக்லெட் உண்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன.
  11. அதுமட்டுமல்ல, டார்க் சாக்லெட் உண்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. என்கிறார்கள்.

ஆக, டார்க் சாக்லெட்டில் இத்தனை நல்ல குணாதிசயங்கள் இருப்பதால், இனிமேல் சாக்லெட் சாப்பிடும் ஆசை வந்தால், உடனடியாக அந்த சாக்லெட் டார்க் சாக்லெட் வகையறா தானா? என்று பார்த்து விட்டு சாப்பிடத் தொடங்குங்கள். அதனால் உடல்நலனுக்கு எந்த விதமான தீங்கும் வராது என்கின்றன மேலை நாட்டு அறிவியல் ஆய்வறிக்கைகள்.

ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைக்க வேண்டும். அது;

அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு!

Article concept courtesy: UC News.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com