மீண்டும், மீண்டும் சூடாக்கிச் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்...

மீண்டும், மீண்டும் சூடாக்கிச் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்...

மீண்டும் சூடாக்கிப் பரிமாறுதல் என்பது சமைத்தல் மற்றும் பரிமாறுதலின் இன்றியமையாத விதிகளில் ஒன்று. சுவையாகச் சமைக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் உணவை வீணாக்கவே கூடாது என்ற உணர்வில்,

மீண்டும் சூடாக்கிப் பரிமாறுதல் என்பது சமைத்தல் மற்றும் பரிமாறுதலின் இன்றியமையாத விதிகளில் ஒன்று. சுவையாகச் சமைக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் உணவை வீணாக்கவே கூடாது என்ற உணர்வில், சமைத்து முதல்நாள் உண்டு, மீந்த உணவுகளை எல்லாம் வசதியாக குளிர்சாதனப் பெட்டிக்குள் பதுக்கி வைத்து மீண்டும் மறுநாள் காலையிலோ, மதிய நேரத்திலோ எடுத்துச் சூடாக்கி உண்பதற்கும், பரிமாறுவதற்கும் நாம் மறப்பதே இல்லை. ஆனால் வெகு சில உணவுகளை அப்படி மீண்டும், மீண்டும் சூடாக்கி உண்ணக் கூடாது என பல ஆண்டுகளாக உணவியல் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் நமது இல்லத்தரசிகள் அந்த எச்சரிக்கை ஆலோசனைகளை கிஞ்சித்தும் மதிப்பதே இல்லை. 

வீட்டில் சமைத்து உண்பதானாலும் சரி, அல்லது ஹோட்டல்களுக்குச் சென்று உண்பதானாலும் சரி சில உணவு வகைகளை மீண்டும் சூடாக்கிப் பரிமாறுவதாக நீங்கள் உணர்ந்தீர்களானால் அத்தகைய உணவுகளை உண்பதற்கு மறுத்து விடுங்கள். ஏனெனில் அவை உணவுகள் அல்ல, மறுசூடாக்குதலின் போது, அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் எல்லாம் விஷமாக மாறிவிடுகின்றன என உணவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

எந்தெந்த உணவுப் பொருட்களை எல்லாம் மறுசூடாக்கி உண்ணக் கூடாது தெரியுமா?  கீழே உள்ள பட்டியலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்;

கீரை...

முதல் நாள் சமைத்த கீரை மீந்து விட்டால்... அதைச் சூடாக்கிச் சாப்பிடும் வழக்கம் உங்களுக்கு இருந்தால், இனிமேல் மறந்தும் அப்படிச் சாப்பிட்டு விடாதீர்கள். கீரை அன்றே சமைத்து அப்போதே சாப்பிட்டு முடிக்கப் படவேண்டிய உணவு வகைகளில் ஒன்று. ஏனெனில், கீரையில் நைட்ரேட் சத்து அதிகமுள்ளதால், அந்த நைட்ரேட், கீரையை மீண்டும், மீண்டும் சூடாக்கி உண்ணும் போது விஷமாக மாறும் தன்மை கொண்டது உணவியல் வல்லுனர்கள் மேற்கண்டதொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கீரையை ஃப்ரெஷ்ஷாகச் சமைத்து அப்போதே உண்பதற்கு மட்டுமே சரியான உணவு. மீந்திருந்தால் பக்கத்து வீடு, எதிர் வீட்டு நண்பர்களுக்கு அளித்து நட்பை வலுப்படுத்த வேண்டுமே தவிர, உணவை வீணாக்கக் கூடாது என்ற பெயரில் மொத்தக் குடும்பத்தையும் வற்புறுத்தி விஷத்தை உண்ண வைத்து விடக்கூடாது.

வெங்காயத்தாள் மற்றும் கேரட்...

கீரையைப் போலவே வெங்காயத்தாள் மற்றும் கேரட்டிலும் கூட நைட்ரேட்டுகள் அதிகம். எனவே இவற்றையும் மீண்டும், மீண்டும் சூடாக்கி உண்ணும் போது அவற்றிலுள்ள நைட்ரேட்டுகள் உணவை விஷமாக மாற்றி விடுகின்றன. எனவே, சூப் மற்றும் கலந்த சாதங்கள் சமைக்கும் போது சேர்க்கும் வெங்காயத்தாள் மற்றும் கேரட்டையும் கூட அன்றன்றைக்கே சாப்பிட்டுத் தீர்ப்பதே நல்லது. மிச்சம் வைத்து மீண்டும், மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உகந்ததல்ல.

பீட்ரூட்...

பீட்ரூட்டிலும் நைட்ரேட் சத்துக்கள் உள்ளன. அவை நமது ஆரோக்யத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அதையே நாம் மீள் சூடாக்கி உண்ணும் போது பீட்ரூட்டும் கூட விஷத்தன்மை கொண்டதாகத் தான் மாறிவிடுகிறது. எனவே அதையும் அளவாகச் சமைத்து அன்றே சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது.

உருளைக் கிழங்கு...

உருளைக் கிழங்கில் நமது உடல்நலனுக்குத் தேவையான சத்துக்கள் நிறைய இருந்தாலும் அவற்றை மீண்டும் சூடாக்கிச் சாப்பிடும் போது அவற்றிலுள்ள சத்துக்கள் வீணாவதோடு, உடல்நலனில் எதிர்மறை விளைவுகளையும் கூட ஏற்படுத்தி விடுகிறது. அதனால் உருளைக் கிழங்கை மறுபடியும் சூடுபடுத்தி உண்பதைத் தவிர்த்து விடுவது நல்லது.

முட்டை...

முட்டையில் அல்புமின், குளோபுளின் புரதச் சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அவற்றை சமைத்த உடனே சாப்பிடுவது மட்டுமே ஆரோக்யத்துக்கான ஒரே வழி. எடுத்து வைத்து நாளை சாப்பிடலாம் என வேக வைத்த முட்டையை சேமித்து வைத்துச் சாப்பிட்டீர்களானால் அது ஃபுட் பாய்ஸன் முதல் கடுமையான வாயுத்தொல்லை வரை மிக, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

சிக்கன்...

சிக்கன் பலருக்கும் மிக, மிகப் பிடித்த அசைவ உணவு வகைகளில் ஒன்று. மாட்டிறைச்சியைக் காட்டிலும் அதிகமான புரதச் சத்து சிக்கனில் இருப்பதால் சமைத்த உடனே உண்டால் உடல் நலனுக்கு நல்லது. மிஞ்சியதை மறுநாள் சூடாக்கி உண்ணலாம் என்று நினைத்தீர்களானால் அது உங்களை  மிகப்பெரிய செரிமானச் சிக்கலில் கொண்டு விடும். எனவே சிக்கனைப் பொறுத்தவரை ஒரே நாளில் காலையில் சமைத்து இரவுக்குள் மீண்டும் சூடாக்காமல் சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. ஒருவேளை சூடாக்கித்தான் சாப்பிட்டாக வேண்டும் எனில் மிகக் குறைந்த தீயில் லேசாகச் சூடாக்கி சாப்பிடலாம். ஆனால், மறுநாள் வரை வைத்திருந்து சூடாக்கி உண்பதை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.

காளான்...

காளான் உடல் ஆரோக்யத்துக்கு உகந்த சுவையான உணவு மட்டுமல்ல சமைப்பதற்கும் மிக எளிதான உணவு வகைகளில் ஒன்று. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் காளானையும் கூட நாம் சமைத்த அன்றே சாப்பிட்டு முடித்து விடுவது தான் நல்லது. மிஞ்சியதை நாளை சாப்பிடலாம் என மீண்டும் சூடாக்கிச் சாப்பிட்டால் அது இதய நோய் முதல் கடுமையான செரிமானப் பிரச்னை வரை ஏற்படுத்தி வ்டக் கூடியது. ஒருவேளை காலையில் சமைத்த காளானை இரவில் சாப்பிட வேண்டும் என்ற நிலையிலும் கூட அதைச் சூடாக்காமல் அப்படியே சாப்பிடுவதே உகந்தது. சூடாக்கும் போது சுவையான உணவென நினைத்து நாம் உண்பது விஷமாகி கடும் உபத்திரவம் அளிக்கும் பொருளாகி மாறி விடும்.

Image courtesy: youtube
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com