திறமையான செஃப் ஆனாலும் கூட ‘பெர்ஃபெக்ட் சமையல்’ கற்றுக் கொள்வதென்றால் லேசுப்பட்ட காரியமில்லை!

ஆட்டுக்கறி எவ்வளவு நேரம் வேக வைக்கப் பட்டால் தலைமை செஃப் எதிர்பார்த்தது போல மட்டன் மிருதுவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்தச் சோதனை
திறமையான செஃப் ஆனாலும் கூட ‘பெர்ஃபெக்ட் சமையல்’ கற்றுக் கொள்வதென்றால் லேசுப்பட்ட காரியமில்லை!

தமிழ்நாட்டில் விஜய் டி.வி புகழ் செஃப் வெங்கடேஷ் பட்டைத் தெரியாதவர்களிருக்க முடியாது. அவரது சமையல் நிகழ்ச்சிக்கு லட்சோபலட்சம் ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் யூ டியூபில் அவரது நேர்காணல் ஒன்றை காண நேர்ந்தது. மிக சுவாரஸ்யமான அந்த நேர்காணலில் வெங்கடேஷ் பட் நினைவு கூர்ந்த ஒரு விஷயம் ‘நச்’ ரகம். இந்த உலகில் அது செஃப் வேலையாகட்டும், இல்லை வேறு எந்த வேலையாகட்டும் எதிலுமே கற்றுக் கொள்வதில் இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதாவது டெடிகேஷன் என்ற ஒரு விஷயம் பூரணமாக அமைந்து விட்டால் அதற்குப் பின்னால் அவர்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் அது! அதற்கு உதாரண நிகழ்வாக அவர் குறிப்பிட்டதும் கூட ‘வாவ்’ ரகமான ஒரு சம்பவம்.

பாரம்பர்ய பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பட் ஒரு தீவிரமான வெஜிடேரியன். ஆனால் செஃப் ஆக வந்து விட்டு வெஜிடேரியன் உணவை மட்டுமே தான் சமைப்பேன் என்றால் 5 நட்சத்திர உணவகங்களில் வேலையில் நீடிக்க முடியுமோ?! அந்த உணவகங்களின் சமையலறைக்கு வரும் அத்தனையையுமே... ஏன் அதன் விருந்தினர்கள் விரும்பும் அத்தனை வகை உணவுகளையுமே ஒரு செஃப் சமைத்துக் கொடுத்து தான் தீர வேண்டும். அதன்படி வெங்கடேஷ் பட்டை, ஆரம்ப நாட்களில் அவரது தலைமை சமையல்காரர் பணியாற்றப் பணித்த இடம், அசைவ உணவு வகைகளுக்காக கறி வெட்டும் கூடம். அங்கே மீன், மட்டன், சிக்கன், என கறி வெட்டிப் பழகுவதற்கே தனக்கு குறைந்த பட்சம் 6 மாதங்கள் ஆனது என்கிறார் வெங்கடேஷ் பட். 

அதுமட்டுமல்ல இரண்டு வருடங்கள் இவர் பயிற்சி செஃப் ஆகப் பணிபுரிந்து வேலை கற்றுக் கொண்டு வெளிவரவும், இவருக்கு மேலே இருந்த இரு பிரதான சமையல்காரர்கள் வேலையை விட்டு வேறிடம் செல்லவும் சரியாக இருக்கவே அவர்கள் வகித்த கிச்சன் செஃப் பதவி வெங்கடேஷ் பட்டுக்கு வருகிறது. அப்போது இவரது தலைமை செஃப் ஆக இருந்த சந்திர மெளலி என்பவர் சைவ பட்ஷிணியான வெங்கடேஷ் பட் அசைவ உணவுகளைச் சமைப்பதிலும் நன்றாகத் தேறி இருக்கிறாரா? இல்லையா என்பதைச் சோதிக்க தனக்கு இரவு உணவாக ஆப்பமும், மட்டன் ஸ்டியூவும் சாப்பிடச் சமைத்துத் தரச்சொல்லி கேட்டிருக்கிறார். தனக்கு தொழில் கற்றுத்தந்த குரு கேட்டு விட்டாரே... என்று மட்டன் ஸ்டியூவையும், ஆப்பத்தையும் ஒரு கை பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அசத்தலாக சமைத்து எடுத்துச் சென்றூ பரிமாறியிருக்கிறார் வெங்கடேஷ் பட். பரிமாறி விட்டு அவர் என்ன சொல்லப் போகிறாரோ! என்று அவரது வாயைப் பார்த்துக் கொண்டு இவர் நிற்க... தலைமை செஃப்போ, இவர் சமைத்த மட்டன் ஸ்டியூவை எடுத்து அப்படியே இவரது புறங்கையில் நன்றாகப் பிடித்து அழுத்தித் தேய்த்துக் காட்டியிருக்கிறார். ஏன் தெரியுமா?

மட்டன் நன்கு வெந்திருந்தால் இவர் தேய்த்த தேய்ப்புக்கு அப்படியே பூவிலிருந்து இதழ் உதிர்வது போல பூப்போல தனித்தனியாக மெத்தெனப் பிய்ந்து வரும். ஆனால், பார் நீ சமைத்த மட்டன் சரியாக வேகாததால் எத்தனை அழுத்தியும் அப்படியே கல் மாதிரி கிடக்கிறது’ என்றிருக்கிறார். இப்படி இருந்தால் 5 நட்சத்திர விடுதிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு நீ சமைத்திருப்பது பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை நீ எப்படி தெரிந்து கொள்வாய்? என்பது போல ஒரு பார்வை பர்த்து விட்டு தலைமை செஃப் நகர்ந்து விட்டார்.

அதன் பிறகு நடந்த விஷயம் தான் அடடா! இதல்லவோ அர்ப்பணிப்பு ரகம்.

அன்று இரவு முழுவதும் செஃப் வெங்கடேஷ் பட் தூங்கவில்லை, உடை மாற்றவில்லை, அன்று வீடு திரும்பும் எண்ணமே இல்லை அவருக்கு. உடனடியாக மீண்டும் சமையலறைக்குச் சென்றார். தனக்குத் தேவையான அளவு மட்டனை கறி வெட்டும் இடத்தில் இருந்து எடுத்தார். எடுத்த ஆட்டுக்கறியை 20 நிமிடங்கள், 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் எனத் தனித்தனியாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் வேக வைத்துப் பரிசோதிக்கத் தொடங்கினார். ஆட்டுக்கறி எவ்வளவு நேரம் வேக வைக்கப் பட்டால் தலைமை செஃப் எதிர்பார்த்தது போல மட்டன் மிருதுவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்தச் சோதனை. முடிவில் வெங்கடேஷ் பட் ஆட்டுக்கறியை வேக வைப்பதற்கான பெர்ஃபெக்ட் குக்கிங் டைமை ஒருவழியாகக் கண்டறிந்தார்.

மறுநாள் காலையில் தலைமை செஃப், உணவகத்துக்கு திரும்பி வரும் போது... முதல் நாள் பார்த்த அதே உடையில் கையில் அவருக்கான பெர்ஃபெக்ட் மட்டன் ஸ்டியூவுடன் நின்ற வெங்கடேஷ் பட்டைக் கண்டதும் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. தன் சிஷ்யப்பிள்ளையை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அப்போது அவர் சொன்னாராம். ‘ எதிர்காலத்தில் நீ ஒரு மிகப்பெரிய செஃப் ஆக வருவாய்... உன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ என்று. அது நிஜமான சந்தோஷத்தில் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், என் வாழ்க்கையில் நான் பெற்ற மிக அரிய பாராட்டாக இதைக் கருதுகிறேன் எனத் தெரிவித்தார் வெங்கடேஷ் பட்.

நிஜம் தான்.
 
சமையற்கலை என்றில்லை நாம் செய்யும் எந்த ஒரு வேலையையுமே முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தால் அதில் கிடைக்கும் பலனே அலாதியானது தான்.

Thanks to you tube & BEHINDWOODS TV
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com