எங்கே போனார்கள் அந்த ஜூனியர் கபூர்கள்? அவர்களை என் கண்கள் தேடுதே!

போனி கபூருக்கு ஸ்ரீதேவி அவருடைய வாழ்வில் வருவதற்கு முன்பே ஒரு அழகான குடும்பம் இருந்தது. அப்போது போனி கபூருக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே இருந்தார், அவர் தான் மோனா கபூர்.
எங்கே போனார்கள் அந்த ஜூனியர் கபூர்கள்? அவர்களை என் கண்கள் தேடுதே!

காலையில் ஆங்கிலச் செய்திகளுக்கான ஒரு இணையப் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைக் கண்டதும் அதன் தலைப்பினாலோ அல்லது பெற்றோரின் அனுசரணையை இழந்த பிள்ளைகளின் பிரிவாற்றாமை பற்றிப் பேசும் அந்தப் பதிவின் உள்ளடக்கத்தாலோ ஏதோ ஒரு விதமாக இந்தப் பகிர்வு மனதைக் கலங்கச் செய்யவல்லதாக இருந்தது.

நமக்கெல்லாம் போனி கபூரை நன்றாகத் தெரிந்திருக்கும், அவர் ஸ்ரீதேவியின் கணவர் என்பதால் மட்டும்!. 

போனி கபூருக்கு ஸ்ரீதேவி அவருடைய வாழ்வில் வருவதற்கு முன்பே ஒரு அழகான குடும்பம் இருந்தது. அப்போது போனி கபூருக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே இருந்தார், அவர் தான் மோனா கபூர். போனி கபூர், மோனா கபூர் தம்பதிக்கு அர்ஜூன் கபூர், அன்ஷுலா கபூர் என இரண்டு குழந்தைகள். அர்ஜுன் கபூரை இன்று தமிழிலும் கூடப் பலருக்கும் தெரிந்திருக்கும். வளர்ந்து வரும் இளம் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்.

அர்ஜூன் கபூர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில், இளமையில் தனது அம்மாவுடனும், அப்பாவுடனும், தங்கையுடனும் தான் எடுத்துக் கொண்டிருந்த மிக அழகான புகைப்படமொன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார். புகைப்படத்தை பதிவிட்டது அவரது தங்கை அன்ஷுலா கபூர். இந்தப் புகைப்படம் அவர்கள் இருவருக்குமே மிகவும் ஸ்பெஷலாகத் தான் இருந்திருக்கும்.

ஏனெனில், அர்ஜூன் கபூர், அன்ஷுலா கபூர் இருவருமே மிக இளமையில் தங்களது தந்தையின் அருகாமையை இழக்க வேண்டியவர்கள் ஆனார்கள். தாய் மோனா மட்டுமே அவர்களுடன் தனது இறப்பின் கடைசிக் கணம் வரை உடனிருந்தார். கிட்டத்தட்ட எல்லா சிங்கிள் மதர் அம்மாக்களையும் போல மோனாவும், கணவர் உடனில்லாத கால கட்டங்களில், தன் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்கப் பல தடைகளை தாண்டி வரவேண்டியவராகவே இருந்தார்.
அத்தனை தடைகளையும் தாண்டி மகன் அர்ஜூன் கபூர் ஒரு ஹீரோவாக அறிமுகமாகி அவரது முதல் படம் திரை தொடவிருந்த சூழலில் அதைக் கண்ணாரக் காணும் வாய்ப்பின்றி மோனா உடல்நலக்குறைவால் மரணித்தார். அப்பா இருந்தும் இல்லாத நிலை. அம்மாவோ இனிமேல் இல்லவே இல்லை எனும் நிலையில், தன்னைத் தேற்றிக் கொள்ளவே அர்ஜூனுக்கு சில காலம் தேவைப்பட்டிருக்கிறது, இந்நிலையில் மிகச் சிறியவளான தன் தங்கை குறித்த பயம் தன்னை மிகவும் அச்சுறுத்தியதாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலொன்றில் அர்ஜூன் தெரிவித்திருக்கிறார். 

அப்பா எங்களைப் பிரிந்து செல்லும் போது எனக்கு 11 வயது, தங்கைக்கு 6 வயது. அப்பா பிரிந்த பின் அம்மாவுடன் நான் என் 25 வது வயது வரை உடனிருந்தேன். தங்கைக்கு அப்போது 20 வயது. அவள் என்னை விடச் சிறியவளாக இருந்த போதும், என்னை விட மனமுதிர்ச்சி பெற்றவளாகவே எப்போதும் இருந்து வந்தாள். வாழ்வில் துன்பமும், இயலாமையும் வாட்டிய பல்வேறு காலகட்டங்களில் எங்களுடன் இருந்து வழிகாட்டிய அம்மா, என் முதல் படம் வெளியாகவிருந்த சில நாட்களுக்கு முன்பு இறக்க நேர்ந்ததை என மனம் ஏற்றுக் கொள்ளவே இல்லை. மிகத் துயரத்தில் கழிந்த அந்த நாட்களில் என் தங்கை அன்ஷுலா தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து வந்தாள். 

குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அரவணைப்பும், அறிவுரைகளும் தேவைப்படுகிற நேரத்தில் நானும், என் தங்கையும் எங்களது அம்மாவை இழந்து விட்டோம், அப்பா இருந்தாலும் அப்போதும், இப்போதும் அவர் எங்களுடன் இல்லை. அவர் எங்களுடன் கழிக்கும் நேரம் மிக அரிதானது. அம்மா இறந்த பின்பு என் தங்கையை நான்  ஒரு குழந்தையாகத் தான் பாவிக்கத்ட் ஹொடங்கினேன், அதனால் தான் அவளை எப்படிப் பாதுகாப்பது என்ற யோசனையில் சில காலம் கலங்கிக் கொண்டிருந்தேன்.  ஆனால் இன்று என் தங்கை அமெரிக்காவில் தன் படிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறாள். எனது பட வெளியீட்டு நேரத்தில் என்னுடனிருக்க விரும்பி இப்போது இந்தியா வந்திருக்கிறாள். அமெரிக்காவில் அவளுக்கு பெரிய வேலை கிடைத்திருந்த சூழலிலும் தன் அண்ணன் தனிமையை உணரக் கூடாது என எண்ணி என் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக மீண்டும் இந்தியாவுக்கு வந்து இப்போது என்னுடன் இருக்கிறாள்.

இந்த தருணத்தில் இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டது கூட அவளே தான்!

‘இதைக்காணும் போதெல்லாம்... நாங்கள் இழந்து விட்ட எங்களது அன்பான குடும்ப நாட்களை எண்ணி மனம் ஏக்கம் கொள்கிறது, எங்கே போனது அந்த அழகான குடும்பம்?! எங்கே காணாமல் போனார்கள் புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி கபூர்கள் என என் மனம் கலங்கிகிறது.’ என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அர்ஜூன் கபூர்!

பிரிந்து போன எல்லாப் பெற்றோர்களின் குழந்தைகளுக்குள்ளும் இப்படி ஒரு ஏக்கம் இருக்கலாம்.

ஆனால் அந்த ஏக்க உணர்வுகளை வெளிப்படுத்தத் தோன்றுவதென்னவோ, அவர்களது வாழ்வில் புதிய சந்தோஷங்கள் முகிழ்க்கக் கூடிய பிறிதொரு தருணத்தில் தான் எனும்போது அது சற்று ஆறுதலான விஷயமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com