உங்கள் வேலைக்கு உலை வைக்கக் கூடிய இந்த 7 விஷயங்களைச் செய்யாதீர்கள்!

உங்கள் வேலைக்கு உலை வைக்கக் கூடிய இந்த விஷயங்களைச் செய்யாதீர்கள்!
உங்கள் வேலைக்கு உலை வைக்கக் கூடிய இந்த 7 விஷயங்களைச் செய்யாதீர்கள்!

வீட்டில் இருப்பது போல் எல்லா இடத்திலும் நம்மால் இருக்க முடியாது. குறிப்பாக அலுவலகத்தில். வேலை செய்யும் இடத்தில் சிலவற்றை கடைபிடித்தாக வேண்டியது அவசியம். இல்லை நான் இப்படித்தான். எல்லா இடத்திலும் இதுதான் என் குணம் என்று சொல்வீர்கள் எனில் நஷ்டம் யாருக்கும் இல்லை, சாட்சாத் உங்களுக்கு மட்டும்தான். எனவே பணியிடங்களில் பின் வரும் விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள். பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல்மொழி உங்களை யார் என்று மற்றவர்களுக்கு உணர்த்திவிடும். அதிக கவனத்துடன் சரியான உடல்மொழியுடன் அலுவலகத்தில் இருந்தால் பிரச்னை ஏதும் ஏற்படாது. முக்கியமாக பின் வரும் 7 விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள்.

கைகளை கட்டி உட்கார்வது, கால் மேல் கால் போட்டு அமர்வது
 
கைகளை கட்டி உட்கார்வது மரியாதை நிமித்தம் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால் இடம் பொருள் ஏவல் பார்த்து உங்கள் நடவடிக்கை இருப்பது அவசியம். அலுவலக மீட்டிங்கில் நீங்கள் கையை குறுக்காக கட்டியிருக்கும் அதே சமயம் கால் மேல் கால் போட்டும் அமர்வது முரண்பாடுகளை கொண்ட ஒரு செய்கையாகும். கையை மார்பில் இறுக்கமாக கட்டியிருந்தால் நீங்கள் பிடிவாதக்காரர் எனும்படியான ஒரு தோற்றத்தை தரவல்ல உடல்மொழியாகும். உங்கள் மேலதிகாரி எதாவது சொல்லும் போது, கையை கட்டியிருந்தால் அது இறுக்கமான ஒரு சூழ்நிலையை உங்களுக்குத் தெரியாமலேயே உருவாக்கிவிடும்.

உங்கள் கேபினில் அல்லது குளிருக்காக நீங்கள் உங்கள் கையை கட்டிக் கொள்வது பிரச்னையில்லை. யாரும் பார்க்காத நேரங்களில், கால் மேல் என்ன தலைமேல் கூட உங்கள் காலை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தர்க்கத்தின் போதோ அல்லது விவாதத்தின் போதோ, அப்படிச் செய்வது மற்றவர்களுக்கு அசெளரியமாக உணரச் செய்யும். நீங்கள் எதிராளியின் கவனத்தை ஏதோ ஒருவகையில் அசைக்க முயல்வதாக அது இருக்கக்கூடும் என ரான் ஃப்ரீட்மான் மற்றும் ஆண்ட்ரூ ஜெ.எலியட் உடல்மொழி குறித்த ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர். 

செல்போனை தள்ளி வைத்துவிடுங்கள்

தேவையான சமயங்களில் மட்டுமே அலுவலகங்களை செல்போனை பயன்படுத்துங்கள். உங்கள் சொந்தக் கதைகளை பேசிக் கொண்டிருக்க நிறுவனம் உங்களுக்கு சம்பளம் தரவில்லை. அலுவலக நேரத்தில் செல்பி எடுப்பது, ஃபேஸ்புக்கில் எழுதுவது, வாட்ஸப்பில் பேசுவது போன்றவற்றை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். அதுவும் ஏதாவது மீட்டிங் நடக்கும் சமயம் உங்கள் செல்போன் மணி அடித்தால் அது உங்கள் வேலைக்கான ஆப்பு மணி என அறிக. தவிர அலுவலத்தில் இருக்கும் போது மொபைலை சைலண்ட் மோடில் வைத்திருங்கள். குறுஞ்செய்தி மணி அடிக்கடி அடித்துக் கொண்டிருந்தால் அது உங்கள் கவனத்தை சிதறடிக்கும். மற்றவர்களின் கவனத்தையும் சேர்த்துதான். எனவே தேவைப்படும் அவசரமான விஷயங்களை மட்டுமே மொபைலில் பேசுங்கள்.  

மூன்றடி தள்ளியே நில்லுங்கள்

பேசும் போதும் பழகும் போதும் உங்களுடைய மேலாளர் அல்லது சக ஊழியர்களிடமிருந்து ஒரு அடி தள்ளியே நில்லுங்கள். அது உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது. நெருக்கத்துக்குப் போனால் நெருக்கடிக்கு உள்ளாவீர்கள் என்று அனுபவித்து சொன்னவர்கள் பலர். உங்கள் அலுவலக நண்பரின் தோளில் கை போட்டுச் செல்வது, அரட்டை அடிப்பது போன்றவை எல்லாம் அலுவலக இடங்களில் மதிக்கப்படுவதில்லை. மேலும் அவரவருக்கான இடங்களில் அவரவர் வேலையில் கவனம் செலுத்துவதே நல்லது. பணி இடங்களைப் பொருத்தவரையில் ப்ரெண்ட்ஸாக இருப்பதை விட ஃப்ரெண்ட்லியாக இருப்பதுதான் சாலச் சிறந்தது.

உறுதியாக கை குலுக்குங்கள்

அலுவலங்களில் உங்களுக்கு யாராவது கை கொடுக்க முயற்சித்தால் ஏனோ தானோவென்று கையை கொடுக்காதீர்கள். அழுத்தமாக உறுதியாக கை குலுக்குங்கள்.

அதே சமயம் எதிரில் இருப்பவர்களின் கண்களை நேராக பாருங்கள். அது உங்கள் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம். எங்கோ பார்ப்பதும், கை கொடுப்பதற்கு தயங்குவதும் உங்கள் ஆளுமை குறைபாடாக கணிக்கப் படலாம்.

எக்ஸ்க்யூஸ் மீ - கதவை தட்டுங்கள்

உங்கள் மேலதிகாரி அல்லது சக ஊழியரின் அறைக்குச் சென்றால் கதவை தட்டிவிட்டுச் செல்லவும். மீட்டிங் நடக்கும் போது சற்று தாமதமாக உள் நுழையும் போது மன்னிப்பு கோருங்கள். அது முடியாவிட்டால் ஒரு புன்னகையோ ஒரு தலை அசைவோ கூட போதும் உங்கள் தாமதத்தை சமன் செய்ய உதவக் கூடும்.

அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்காதீர்கள்

சிலர் கடிகாரத்தையே முறைத்துக் கொண்டிருப்பார்கள். எப்போது ஆறு மணி அடிக்கும், வெளியே போகலாம் எனும்படியான முகபாவத்துடன் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்களுடைய சீட்டில் மிகச் சாய்வாக தளர்ந்து உட்கார்ந்து எப்போது கிளம்புவோம் என்று காத்திருப்பார்கள். இன்னும் சிலர் வெட்டியாக கம்யூட்டரில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆறு மணி அடித்த அடுத்த நொடி இவர்கள் ஒருநொடியும் தாமதிக்காமல் கிளம்பிவிடுவார்கள்.

நம்மை யார் கவனிக்கிறார்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அதற்காகத் தான் சிலருக்கு சம்பளமே தரப்படுகிறது. மேலும் அலுப்பான முகபாவத்துடனோ, இஞ்சி சாப்பிட்டது போன்ற கடுப்புடனோ காணப்படாதீர்கள். அது உங்களுக்கு எதிராக மாறிவிடக் கூடும். வேலை அலுப்பாக இருந்தால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆனதும் திரும்பி வாருங்கள். நீங்கள் எந்தளவுக்கு ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்களோ அது வரையில் தான் அந்த வேலை உங்களுக்கு நிச்சயம். அலுப்பும் சலிப்புமாக தொடர்ந்தால் ஒரு நாள் இல்லை ஒருநாள் வேலையின் இறுதி நாளாகிவிடும் ஜாக்கிரதை. 

இதையெல்லாம் ஒருபோதும் செய்யாதீர்கள்

சொடக்கு போடுவது, சோம்பல் முறிப்பது, தலைமுடியை ஒதுக்கி கொள்வது, உடலை சொறிவது, நகத்தை கடிப்பது, உதடுகளை கடிப்பது, சுவரில் அல்லது பர்னிச்சர்களில் சாய்ந்து நிற்பது, அலுவலக சோபாவில் பொத்தென்று விழுவது, நாற்காலியை சத்தம் ஏற்படுமாறு இழுப்பது, லிப்டில் சத்தமாக பேசுவது, கெட்ட வார்த்தை பேசுவது, தேவையில்லாத கருத்துக்களை கூறுவது, சத்தமாக சிரிப்பது, போன்றவற்றை அலுவலகத்தில் செய்யாதீர்கள்.

உங்களை சோம்பேறியாக காட்டக் கூடிய செய்கைகள் முதல் இரண்டு. மற்றவை ஒழுக்க விஷயங்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு ஆபிஸிலும் டெகோரம் என்று ஒரு விஷயம் கடைப்பிடிக்கப்பட்டுவரும். அதில் அடிப்படை விதிமுறைகளை பணியாளர்கள் கடைபிடித்தாக வேண்டும் அப்போதுதான் வேலையில் உத்திரவாதம் கிடைக்கும்.

நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் போது செய்யும் சிறு தவறுகள் கூட ஒருநாள் பூதாகரமாக வெடிக்கக் கூடும். எனவே எப்போதும் விழிப்புணர்வுடன் வேலை நேரத்தில் வேலையில் மட்டுமே கவனத்துடன் செயல்படுவது அடுத்தடுத்த நிலைகளுக்கு உங்களை உயர்த்தும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com