ஹூண்டாய், ஆப்பிள், டாப்லரோன் சாக்லேட், டொயோட்டோ, எல்ஜி, பிராண்ட் லோகோக்களின் கியூட் பின்னணி!

நீங்கள் தினமும் பார்க்கும் இந்த பிரபலமான பிராண்ட் லோகோக்களின் பின் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யப் பின்னணியை அறிந்தால் ஆச்சர்யத்தில் உங்களது புருவம்   ‘ஒரு அதார் லவ்’ ப்ரியா பிரகாஷ் வாரியர் போல அனிச்சை 
ஹூண்டாய், ஆப்பிள், டாப்லரோன் சாக்லேட், டொயோட்டோ, எல்ஜி, பிராண்ட் லோகோக்களின் கியூட் பின்னணி!

நீங்கள் தினமும் பார்க்கும் இந்த பிரபலமான பிராண்ட் லோகோக்களின் பின் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யப் பின்னணியை அறிந்தால் ஆச்சர்யத்தில் உங்களது புருவம் ஒரு அதார் லவ் ப்ரியா பிரகாஷ் வாரியர் போல அனிச்சை செயலாக ஏறி இறங்கக்கூடும். அத்தனை கியூட்டான கதைகள் மறைந்திருக்கின்றன இந்தப் பிராண்டுகளின் லோகோ வடிவமைப்பின் பின்.

நாம் தினமும் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் ஃபோன்கள், துண்டுப் பிரசுரங்கள், ஃபிளெக்ஸ் போர்டுகள் வாயிலாகவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப்பொருட்கள் வாயிலாகவும் நமக்கு நன்கு அறிமுகமான எண்ணற்ற பிராண்ட் பொருட்களின் லோகோக்களைப் பார்க்கிறோம். ஆனால், நமக்குப் பல சமயங்களில்  அந்தப் பொருட்கள் தான் நினைவிருக்கின்றனவே தவிர லோகோக்கள் குறித்து நாம் பெரிதாக யோசிப்பதாக இல்லை. லோகோக்கள் நாம் நன்கு அறிந்தவையாகவே இருப்பினும் அவற்றின் பின்னணி பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நாம் அலட்டிக் கொள்ளாத காரணத்தால் லோகோக்களின் மவுசு ஒன்றுமில்லாததாக ஆகிவிடாது. அவை, அவற்றின் தனித்தன்மையுடனும், காலம் கடந்த வெற்றிகளுடனும் பல்லாண்டுகளாக ஜொலித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஏனெனில் நமக்குப் பிடித்தமான பொருட்களை நாம் வாங்க ஒருவகையில் மறைமுகத் தூண்டலாக அமையக் கூடியவையும் இந்த லோகோக்கள் தான். எனவே லோகோக்களின் முக்கியத்துவம் பற்றி வாடிக்கையாளர்களான நாம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கும், அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப லோகோக்களை வடிவமைக்கும் டிசைனர்களுக்கும் அது குறித்த அக்கறையும், தெளிவும் நிறையவே இருக்கும்.

அப்படி மக்களிடையே நன்கு பிரபலமான சில பொருட்களின் லோகோ பின்னணி குறித்துத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

அடிடாஸ் ...

அடிடாஸ் விளம்பரங்களில் அதன் லோகோவைப் பார்த்திருக்கிறீர்களா? மூன்று கோடுகள் இடம்பெற்றிருக்கும். லோகோவின் டிசைன் மாறினாலும் பெரும்பாலும் இந்த மூன்று கோடுகள் மாறுவதே இல்லை. அவை சற்றேறக்குறைய மலைகளை ஞாபகப்படுத்தக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.

அதைப் பற்றி பேசுகையில் அடிடாஸின் நிறுவனரான அடால்ஃப் டாஸ்லர் சொன்னது; விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்வில் ஒவ்வொரு நாளுமே பல்வேறு விதமான தடைகளைக் கடந்து வர வேண்டியதாக இருப்பதை நினைவுறுத்தும் வகையில் இந்த மூன்று கோடுகளை, தடை பல கடந்து செல்ல வேண்டிய மலைகளை நினைவுறுத்தும் விதத்தில் வடிவமைத்திருப்பதாகக் கூறியிருந்தார். அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் சார்ந்து விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யக்கூடிய ஃபேமஸ் பிராண்டுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்...

உலகின் தலைசிறந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் பிராண்ட் லோகோ உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்த லோகோவுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதைப் பற்றி பேசுகையில் ஆப்பிள் லோகோ வை வடிவமைத்தவரும் உலகின் தலைசிறந்த லோகோ வடிவமைப்பாளர்களில் ஒருவருமான ராப் ஜனாஃப் சொன்னது; ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவை வடிவமைப்பதற்காக நான் நிறைய சிந்தித்தேன். ஒரு கூடை நிறைய ஆப்பிளை வாங்கி வைத்துக் கொண்டு அதை எந்த வடிவத்தில் இன்னும் எளிமைப்படுத்தி வடிவமைத்தால் பயனாளர்களான மக்களின்  மனதில் எளிதில் பதியும் என பல மணி நேரங்கள் நான் ஆப்பிளின் தோற்றத்தை பலவிதங்களில் வரைந்து பார்த்தேன். முடிவில் ஒரு முனையில் கொஞ்சம் கடிக்கப்பட்ட ஆப்பிளைக் கண்டதும் எனது மூளைக்குள் மின்னல் வெட்டியது. கடிப்பதை ஆங்கிலத்தில் பைட் (Bite) என்போம். கம்ப்யூட்டர் மொழியிலும் ஒரு பைட் (byte) உண்டு. அந்த ஒற்றுமையை எண்ணித்தான் இறுதியில் இந்த லோகோவைத் தேர்வு செய்தோம். இன்று உலகில் அதிகம் பேரால் விரும்பத்தக்க காஸ்ட்லி பிராண்ட் லோகோக்களில் ஒன்றாகத் திகழ்கிறது இந்த ஆப்பிள் லோகோ என்றார்.

ஹூண்டாய்...

தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் கார்களில் முக்காலே மூணு வீசம் ஹூண்டாய் பிராண்ட் கார்கள் தான் அதிகம். நடுத்தர குடும்பத்தினர் விரும்பி வாங்கக்கூடிய வகையில் நடுத்தர பட்ஜெட்டில் வாங்கக் கூடிய வசதியில் அமைந்திருக்கும் கார்களில் ஒன்று இந்த ஹூண்டாய். இதன் லோகோவைப் பார்த்திருக்கிறீர்களா? H எனும் ஆங்கில எழுத்தின் நடுவில் இடம்பெற்றிருக்கும் கோடு சற்றே சாய்வாக இணைந்திருக்குமாறு இந்த லோகோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை நன்கு உற்றுக் கவனித்தீர்கள் எனில் இருமனிதர்கள் இணைந்து கைகுலுக்கிக் கொள்வதைப் போல ஒரு புடைப்புச்சித்திரம் கிடைக்கும்.

அவர்கள் வேறு யாருமல்ல... ஹூண்டாய் கார் நிறுவனத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் பிரதிநிதியும், அவரிடம் கார் வாங்க வந்த வாடிக்கையாளரும் தான். வாடிக்கையாளர், வாகன விற்பனைப் பிரதிநிதி உறவை சிறப்பிப்பதாக இந்த லோகோ வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பதை எப்போதாவது உங்களால் ஊகிக்க முடிந்திருக்கிறதா? மிக அருமையான நினைவில் பதியக்கூடிய சிறப்பான லோகோ வடிவமைப்பு என இதைப் பாராட்டலாம் தானே!

VAIO (வாயோ)...

லேப்டாப்களை உற்பத்தி செய்து தரும் வாயோ பிராண்ட் லோகோவின் முதல் இரண்டு எழுத்துக்கள் VA அனலாக் அலைகளையும் (analogue wave) கடைசி இரண்டு எழுத்துக்கள் IO  என்பது 1, 0 எனும் எண்களுடனான டிஜிட்டல் சிக்னல்களையும் நினைவூட்டக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் நிறுவனமான வாயோவின் லோகோ அதற்கேற்ற வகையில் பொருத்தமாக கம்ப்யூட்டர் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பு என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்க கூடும்?!

அமேஸான் Amazon...

அமேஸான் லோகோவை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா?  A எனும் முதல் எழுத்தையும் Z எனும் நான்காம் எழுத்தையும் இணைக்குமாறு ஒரு அம்புக்குறி தென்படும்.

கம்பெனியின் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்கள் விரும்பக்கூடிய விதத்தில் A TO Z வரையிலான அத்தனை பொருட்களையும் ஒரே பிராண்டின் கீழ் அளிக்கக்கூடியது அமேஸான் நிறுவனம் என்பது தான் இந்த லோகோவின் அர்த்தம். ஒருவகையில் இது தான் அமேஸானின் விற்பனை தத்துவம் அல்லது தந்திரம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

பாஸ்கின் ராபின்ஸ்...

BASKIN ROBBINS ஐஸ்கிரீம் பிராண்ட்... இது ஐஸ்கிரீமுக்கு மட்டுமல்ல யோகர்ட்டுக்கும் ஃபேமஸ். இந்த ஐஸ்கிரீம் பிராண்ட் லோகோவின் நடுவிலிருக்கும் இளஞ்சிவப்பு நிற 31 எதைக் குறிக்கிறது தெரியுமா? 31 விதமான ஃபிளேவர்களில் ஐஸ்க்ரீம் வெரைட்டிகளை இந்தக் கம்பெனி தயாரித்து அளிக்கிறது என்பது தான் அதன் லோகோவின் அடையாளம்.

நீங்கள் எப்போதாவது இந்த பிராண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கிறீர்களா? நம்மூரில் அருண், கார்னெட்டோ, ஐபாகோ அளவுக்கு இது பிரபலமானதாகத் தெரியவில்லை. 

டொயோட்டா...

டொயோட்டா கார் லோகோ உங்களுக்கெல்லாம் நன்கு பரிச்சயமானதே. அதைப்பார்த்ததும் உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றியிருக்கிறது? கொஞ்சம் கற்பனை செய்து தான் பாருங்களேன். பலரும் அது குதிரையில் தொப்பி அணிந்து வரும் கெளபாயை நினைவூட்டும் விதத்தில் உள்ளது என்கிறார்கள். ஆனால் நிஜம் அதுவல்ல,

டொயோட்டோவின் லோகோ கதையை ஆராய்ந்தால் அந்நிறுவனத்தின் ஆரம்ப கால வியாபார வரலாறு வெளிவருகிறது. இன்று உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் இந்த ஜப்பான் நிறுவனம் ஆரம்பகாலங்களில் ஜவுளித்துறையில் சாதனை புரிந்து வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த லோகோவில் ஊசியில் நூல் கோர்ப்பது மாதிரியான வடிவம் புலப்படுகிறதா என்று உற்றுப் பாருங்கள். ஆம்... டொயோட்டோ லோகோ உருவானதின் பின்னணி இது தான்.

பின்னாட்களில் இவர்கள் கார் தயாரிப்பில் ஈடுபடுகையில் பழைய பாரம்பர்யத்தை மறவாமல் அதே லோகோவை தமது காரின் அனைத்து எழுத்துக்களிலும் டிசைன் செய்து விட்டார்கள்.

காண்டினெண்டல் லோகோ...

காண்டினெண்டல் எனப்படும் உலகின் தலைசிறந்த கார் டயர் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவைப் பார்த்திருக்கிறீர்களா? continental எனும் சொல்லின் முதலிரண்டு எழுத்துக்களைப் பாருங்கள். முதல் எழுத்தான C க்குள் சிக்கென உள்ளடங்கிப் பொருந்தி O எனும் ஆங்கில எழுத்து இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் அதன் லோகோ. இதற்கான காரணத்தைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.

காண்டினெண்டல் தனது தயாரிப்பான கார் டயர் வடிவத்தை அப்படியே தனது லோகோ வடிவமைப்பில் பயன்படுத்தி இருக்கிறது என்பது இப்போது உங்களுக்கும் புரிந்திருக்க கூடும்.

டாப்லெரோன் சாக்லெட் லோகோ...

சுவிஸ் தயாரிப்புகளான டாப்லெரோன் சாக்லெட்டுகள் உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடித்த சாக்லெட் வெரைட்டிகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அதன் லோகோவைப் பார்த்ததும் உங்களுக்கு இதுவரை என்னவெல்லாம் தோன்றியிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். பலருக்கும் அதன் லோகோ நினைவிருக்கிறதா எனத் தெரியவில்லை ஆனால் அதன் வடிவம் நினைவிருக்கக் கூடும்.

நீளமான முக்கோண வடிவ இந்த சாக்லேட் பார்கள் மிகவும் சுவையானவை. இதன் லோகோவில் இடம்பெற்றிருக்கும் மேட்டர்ஹார்ன் மலையின் வடிவத்தை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு தானிந்த வகை சாக்லெட்டுகள் தயாராகின்றன. நீங்கள் கவனித்தீர்களா? இல்லையா எனத் தெரியவில்லை. இந்த சாக்லேட் பிராண்ட் லோகோவில் இருக்கும் மலையை இன்னும் சற்று துல்லியமாகக் கவனித்தீர்கள் எனில் அதற்குள் நீங்கள் ஒரு அழகான தாவிக்குதிக்கும் கரடியையும் பார்க்கலாம். முன்னொரு காலத்தில் சுவிட்ஸர்லாந்தின் இந்த மலைப்பகுதியில் கரடிகள் மிகுந்திருந்தனவாம். அந்த ஊரே கரடிகளின் நகரம் என்று அழைக்கத்தக்க வகையில் எங்கு பார்த்தாலும் கரடிகள் நிறைந்திருக்கும் என்கிறார்கள். அதை நினைவூட்டும் விதத்தில் தான் முக்கோண வடிவ மலை போன்ற சாக்லேட் உறையின் மேல் மலையினுள் உறையும் கரடி பொம்மை லோகோ.

எல் ஜி...

கொரியன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான இதன் லோகோவை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் அர்த்தம் தான் தெரிந்திருக்காது. LG என்றால் Life's Good என்றொரு பொருள் வருகிறது.

அதே தான் எல் ஜி யின் வாடிக்கையாளர்கள் ஒரு முறை எல்ஜி பொருட்களை வாங்கி விட்டால் பிறகு அதனால் கிட்டிய திருப்தியுடனே வெறும் வாய்மொழிப் பிரச்சாரமாகவே பல புதுப்புது வாடிக்கையாளர்களை அந்நிறுவனத்துக்கு பெற்றுத் தந்து விடுவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை இதுவரை பொய்த்துப் போனதே இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com