பழச்சந்தையில் இந்திய கிவி பழங்களை யாரும் சீந்துவாரில்லை... அந்தக் கோபத்தில் உதித்ததே இந்த கிவி ஒயின் ஐடியா!

பழச்சந்தைகளில் நியூசிலாந்து, இத்தாலி, சிலியில் இருந்து இறக்குமதியாகும் கிவி பழங்களுக்கு இருக்கும் மதிப்பு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் ஏகபோகமாக விளைவிக்கப் படக்கூடிய இந்திய கிவிபழங்களுக்கு
பழச்சந்தையில் இந்திய கிவி பழங்களை யாரும் சீந்துவாரில்லை... அந்தக் கோபத்தில் உதித்ததே இந்த கிவி ஒயின் ஐடியா!

கிவி பழங்கள் இன்று அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பழக்கடைகளிலும் கிடைக்கின்றன. லோக்கல் அண்ணாச்சி கடைகளிலும் கிவி பழங்கள் கணிசமான இடங்களை ஆக்ரமித்துள்ளன. காரணம் கிவி பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்டுகள் அபிரிமிதமாக இருப்பதாக அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து எழுதி வந்ததன் விளைவு இது. கிவியில் இருக்கும் அளவை விட அதீதமாக ஆன்ட்டி ஆக்ஸிடண்டுகள் நம்மூர் கொய்யாப் பழத்தில் இருப்பதாக நம்பப் பட்டாலும் கொய்யாவை இன்று நம்மிடையே வயதானவர்களும், அப்பழத்தை தொடர்ந்து உண்ணும் வழக்கம் கொண்டவர்களும் மட்டுமே உண்கிறோம். கொய்யாவோடு ஒப்பிடும் போது கிவி பழம் சாப்பிடுகிறோம் என்று சொல்லிக் கொள்வது இன்றைய இளம் தலைமுறைக்கு பெருமிதமாகக் கூட இருக்கலாம்.

அல்லது அவர்களுக்கு கொய்யா சப்பிட்டுப் பழக்கமில்லாமலும் இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் நாம் நமது பாரம்பரியமான கொய்யா பழத்தின் சத்துக்களை கிவி போன்ற அயல்நாட்டுப் பழங்களின் வருகையால் இழந்து விட்டோம் என்பது மட்டும் யதார்த்த உண்மை.

கொய்யாவின் இடத்தை கிவி பிடித்தது வாஸ்தவமே என்ற போதும் அப்படி நாம் விரும்பி வாங்கும் கிவிப் பழங்களும் நியூசிலாந்தில் விளைந்ததாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில் ஏதாவது லாஜிக் இருக்க முடியுமா? இல்லை. ஆனால், ஏனோ இந்தியாவில் விளையும் கிவி பழங்களுக்கு விற்பனை வரவேற்வு இல்லை என்கிறார்கள். இந்திய பழச்சந்தைகளில் நியூசிலாந்து, இத்தாலி, சிலியில் இருந்து இறக்குமதியாகும் கிவி பழங்களுக்கு இருக்கும் மதிப்பு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் ஏகபோகமாக விளைவிக்கப் படக்கூடிய இந்திய கிவிபழங்களுக்கு இல்லை. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் நிழல் மறைவுப் பிரதேசங்களில் ஒன்று. அங்கே கிவி பழங்களை அதிகமாக விளைவிக்கக் கூடிய அருமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பழங்களும் எக்கச்சக்கமாக விளைகின்றன. ஆனால் அவற்றுக்கு விற்பனை வரவேற்பு இல்லையென்றால் அந்தப் பழங்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

இந்தியர்களான நமக்கு கிவி பழங்கள் பாரம்பரியப் பெருமை எதுவும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் நமக்கு இந்தப் பழங்கள் அறிமுகம் ஆயின. வெகுஜன புழக்கத்துக்கு வந்தது அதற்கும் ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரே! இந்தியர்களைப் பொருத்தவரை கிவி பழங்களில் துவர்ப்புச் சுவை அதிகமிருந்த போதும் ஏனோ நமக்கு அந்தப் பழம் தினமும் உண்ணக்கூடிய பழக்கத்தை உண்டாக்கும் அளவுக்கு கவர்ச்சிகரமான அம்சம் கொண்ட பழங்களில் ஒன்றாகி விட்டது.

இப்படி ஒரு கேள்வி அருணாச்சலப் பிரதேசத்தில் கிவி பழங்களை அதிகமாக விளைவித்துக் கொண்டிருக்கும் டகி ரிட்டா டாகேவுக்கும் அவரது கணவரான டகே டாமோவுக்கும் வந்தது. அடிப்படையில் அக்ரிகல்ச்சுரல் இஞ்சினியரான டகி ரிட்டா தங்களது பண்ணைகளில் விளையக்கூடிய கிவி பழங்கள் வீணாகாமல் காக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். வழக்கறிஞரான தன் கணவருடன் இணைந்து மிகப்பெரிய பண்ணை நடத்தி வரும் டகி ரிட்டா தோட்டக் கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் தனது பிரச்னைக்கான உரிய தீர்வுக்காக யோசித்தார். அதில் கிடைத்தது தான் கிவி ஒயின் ஐடியா! இந்திய கிவி பழங்களுக்கு பழச்சந்தையில் வரவேற்பு இல்லாவிட்டால் என்ன? அதற்காகப் போராடி நேரத்தையும், பழங்களையும் வீணடிப்பதைக் காட்டிலும் மாற்று வழி யோசிப்போம் என்று முனைந்ததில் கண்டறிந்தது தான் கிவி ஒயின் ஐடியா.

இந்தியாவிலேயே கிவி பழங்களை விளைவிக்க முடிந்தபோதும் கூட ஆண்டுதோறும் 6000 மெட்ரிக் டன் அளவிலான கிவி பழங்களை இன்றும் நான் ஏன் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்? அப்படியொரு நிர்பந்தம் நமக்கு ஏன்? என்று ஒருபக்கம் கோபத்துடன் குரல் எழுப்பினாலும் பல ஆண்டுகளாக விளைந்து விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள கிவி பழங்களை யாருமே வாங்கக் கொள்ள முன் வராத சோகத்தை எப்படிக் கடப்பது? அப்போது தான் தொடர்ந்து பழங்களை வீணாக்குவதைக் காட்டிலும் அவற்றை நொதிக்க வைத்து அதிலிருந்து ஒயின் தயாரிக்கலாமே என்றொரு எண்ணம் தோன்றியது. உடனடியாக டகி ரிட்டா தனது கணவரின் உதவியுடன் அதைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டார். தங்களது நிலத்தில் விளையும் பழங்களில் இருந்து மட்டுமல்ல தமது மாநிலத்தில் கிவி விளைவிக்கும் அனைத்து விவசாயிகளின் பழப்பண்ணைகளில் இருந்தும் இன்று மொத்தமாகக் கிவி பழங்களை வாங்கி அதிலிருந்து கிவி ஒயின் தயாரிக்கிறார்கள் இந்தத் தம்பதியினர். அதற்கு நார ஆபா எனப் பெயரிட்டிருக்கிறார்கள். ஒயின் அருந்துவதை தனது வாழ்வின் மிகப்பெரிய கொண்டாட்டமாக நினைத்த மாமனாரின் பெயரைத்தான் தங்களது கிவி ஒயினுக்கு சூட்டியிருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர்.

ஒயின் குடிப்பது என்பது அருணாச்சலப் பிரதேசப் பழங்குடி கலாச்சாரங்களில் பரம்பரையாக உள்ள பழக்கம் தான். என்றாலும் அவர்களுக்கு ஒயினை ஆண்டுக் கணக்கில் பதப்படுத்திப் பயன்படுத்தும் பக்குவம் தெரியாது. அந்தப் பழமையான பழக்கத்தை மீட்டெடுத்து அதில் புதுமையான ஒயின் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை புகுத்தி பழமைக்கும், புதுமைக்குமான பள்ளத்தை நிரப்பி கிவி பழங்களில் இருந்து தயாரிக்கும் ஒயினை நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்ததில் கிடைத்தது எங்களுக்கான வெற்றி. இன்று இந்த மக்கள் தங்களது ஒயினை தாங்களே தயாரிக்க முடிவதோடு அவற்றை நெடுங்காலத்துக்கு பராமரிக்கவும் முடிகிறது.

இவர்கள் விளைவிக்கும் கிவி பழங்களின் மற்றொரு சிறப்பு, அவை முற்றிலும் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படுவது. எந்தவிதமான வேதி உரங்களையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. 2300 சதுர அடி இடத்தில் இயங்கும் இவர்களது கிவி ஒயின் தயாரிப்பு தொழிற்சாலையில் தற்போது 25 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு தங்களது நிலத்தில் விளைந்த பழங்களோடு நாசிக், இத்தாலி, சீனா, டென்மார்க்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி பழங்களைக் கொண்டும் ஒயின் தயாரிக்கப்படுகிறது. ஒயின் தொழிற்சாலைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவது எப்படி என்பதை இவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். அந்த அளவுக்கு தயாரிப்பில் சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.

நமது சொந்த நாட்டில் உற்பத்தியாகும் பழங்களை விற்பனை செய்ய முடியவில்லையே? அயல்நாட்டு இறக்குமதி பழங்களுடன் போட்டியிட முடியவில்லையே எனச் சோர்ந்து போய் உட்காராமல் பழங்களைத் தானே விற்கமுடிவதில்லை... நாங்கள் அவற்றை பாரம்பரியச் சுவையுடன் ஒயினாக மாற்றி அவற்றின் சத்துக்கள் கெடாமல் பயன்பாட்டுக்குத் தருகிறோம் என்ற சிந்தனை நிச்சயம் ஆரோக்யமானதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com