ஒழுக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சொல்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்!

எந்த ஒரு விஷயத்தையும் பாஸிட்டிவாகவே அணுகவேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது ஒன்று தான் பாஸிட்டிவ் அப்ரோச்சுக்கான எளிய வழி என்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.
ஒழுக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சொல்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்!

யூ டியூப் இணையதளத்தில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் அவர்களின் நேர்காணலொன்றைக் காண நேர்ந்தது. தமிழ்நாட்டில் எத்தனையோ ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கலாம். அவர்களில் பெயர் சொன்னால் தெரியுமளவுக்கு மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர்கள் வெகு சிலரே. அவர்களில் எஸ்பி சைலேந்திர பாவுவும் ஒருவர். அவரிடம் நிகழ்ச்சியின் நெறியாளர் பல கேள்விகள் கேட்டார். அதிலொன்று இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய எதிக்ஸ் என்று சொல்லப்படக்கூடிய நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் பற்றியது.

உண்மையில் எதிக்ஸ் என்றால் என்ன? ஒழுக்கம் என்றால் என்ன?

நான் பல கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறேன். அப்படிச் செல்லும் போது அனைத்துக் கல்லூரிகளிலும் முதல்வர்கள் என்னிடம் பேசும் போது, ‘எங்கள் கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம். எக்காரணம் கொண்டும் கல்லூரி ஒழுக்க விதிகளை மாணவர்கள் மீறக்கூடாது என்பதில் நாங்கள் மிக ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறோம் என்பார்கள்.

இங்கே அவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் என்று சுட்டிக் காட்டுவது கல்லூரியில் செல்ஃபோன்கள் பயன்படுத்தத் தடை, மாணவர்கள் மது அருந்தாமல் இருப்பது, புகைக்காமல் இருப்பது, மாணவிகளிடம் அனாவசியமாகப் பேசாமல் இருப்பது, போன்ற விஷயங்களாக இருக்கும். மேற்கண்ட விஷயங்களை மட்டுமே எந்த விதத்தில் இவர்கள் ஒழுக்க நெறிமுறைகளில் சேர்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நிஜம் தான் மாணவர்கள் தங்களது கல்லூரி நேரத்தில் அவர்கள் மேலே குறிப்பிட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது என்பது ஒழுக்க நெறிமுறை தான். ஆனாலும், அதையும் தாண்டி ஒழுக்கம் என்பதற்கு வேறு ஆழமான அர்த்தம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

பிறரை நேசிக்க வேண்டும், பிறருக்கு எந்த விதமான கெடுதலும் செய்யாமல் இருக்க வேண்டும். இது தான் உலகின் மிகப்பெரிய எதிக்ஸ் மற்றும் ஒழுக்கவிதி என்பேன் நான்.

உலகில் எதிக்ஸ் என்பது மிகப்பெரிய விஷயம். அதன் அடிப்படை இதிலிருந்து தான் தொடங்குகிறது. இது சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டால் உலகின் தலைசிறந்த ஒழுக்க விதியாக இதைத்தான் சொல்வேன் நான்.’ என்றார்.

அதுமட்டுமல்ல; யூபிஎஸ்இ உள்ளிட்ட குடிமைப் பணித்தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியில் சேர சிரமப்பட்டார்கள் எனில் அவர்களுக்காகவே அரசு சார்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் இயங்கும் அரசு அனைத்திந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். அங்கே உணவு, தங்குமிடம், பயிற்சி கட்டணம் உள்ளிட்டவை அனைத்தும் இலவசம் என்றும் கூறினார்.

குடிமைப் பணித்தேர்வுகளுக்கு தயாராகும் போது தொடர்ந்து அதில் வெற்றியடைய முடியாவிட்டாலும் கூட அதற்கென தயார் செய்த காலம் வீணென்று கருத வேண்டியதில்லை. அப்போது பெற்ற அனுபவங்களையும், பயிற்சிகளையும் கொண்டு மாற்று வேலைவாய்ப்புக்கான தகுதியைப் பெற்றிருக்கிறோம் என 100 % திருப்தி அடையலாம். ஏனெனில் குடிமைப் பணித்தேர்வுகளுக்கான பயிற்சிகளால் கிடைக்கக் கூடிய உலக ஞானத்தை வேறு எந்த பயிற்சிகளாலும் தரமுடியாது. எனவே இந்த உலகில் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வும், கடின உழைப்பும் வீணாவதில்லை எனும் நம்பிக்கையோடு அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும். அதுவே இன்றைய இளைஞர்களுக்கு தேவையான முதல் பாஸிட்டிவ் எனர்ஜி என்கிறேன் நான். எனவும் அவர் கூறினார்.

பாஸிட்டிவ் எனர்ஜியை வெளியில் இருந்து பெறுவதைக் காட்டிலும் அது அவர்களுக்கு உள்ளிருந்து உற்பத்தியாகக் கூடியது எனும் விஷயத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பாஸிட்டிவாகவே அணுகவேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது ஒன்று தான் பாஸிட்டிவ் அப்ரோச்சுக்கான எளிய வழி என்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.

இன்றைய இளைஞர்களுக்கு அவர் சொல்லும் முக்கியமான மூன்று அவுரைகள்;

  1. ஃபிட்டாக இருங்கள்... தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அப்போது தான் உற்சாகமான மனநிலை கிடைக்கும்.
  2. புத்தகங்கள் வாசியுங்கள், நிறையக் கற்றுக் கொள்ளுங்கள் அப்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான மனநிலை கிடைக்கும்.
  3. வேலைத்திறனில் அக்கறையோடு இருங்கள். சம்பளத்துக்காக வேலை செய்யாமல் அந்த வேலையை உங்களால் எத்தனை சிறப்புரச் செய்ய முடியும் என்று யோசித்து நீங்கள் செய்த வேலை உங்களுக்கே திருப்தி அளிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட வேலையை திறம்படச் செய்து முடியுங்கள்.

இந்த மூன்று குணங்களும் இருந்தால் போதும். உங்கள் வாழ்வுக்கான வெற்றி உங்களைத் தேடி வந்து அரவணைக்கும். என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com