கழுதை மேய்ப்பதில் என்ன கேவலம்! லாபம் கொழிக்கும் தொழில் என்கையில் மேய்க்கக் கசக்குமோ?!

கேரளாவில் ஒரு மனிதர் கழுதைப்பாலில் காஸ்மெடிக்ஸ் தயாரித்து விற்பதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டிருக்கிறார் என்று அறிய நேரும் போது ஆச்சர்யமாக இருக்கிறது
கழுதை மேய்ப்பதில் என்ன கேவலம்! லாபம் கொழிக்கும் தொழில் என்கையில் மேய்க்கக் கசக்குமோ?!

குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுத்தால் எப்பேர்ப்பட்ட சளித்தொல்லையும் அறவே நீங்கும் என என் தம்பியின் மாமியார் சொல்லும் போது எனக்கதில் நம்பிக்கை வரவில்லை. அட! இப்படி ஒரு மூடநம்பிக்கையா? என்றிருந்தது. அம்மா கூட, அப்படி நினைக்காதே, கழுதைப்பால் மகிமை பற்றி வரலாற்றில் படித்ததில்லை, கிளியோபாட்ரா கழுதைப்பாலில் தான் குளிப்பாள் என்று. அதன் மருத்துவ குணம் சரும ஆரோக்யத்துக்கு நல்லதென்று அப்போதே எகிப்தில் நம்பியிருக்கிறார்கள். என்றார். அது சரி, அன்று கழுதைகள் நிறைய இருந்திருக்கக் கூடும். கழுதைப்பாலுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், இன்று அப்படி இல்லையே! கழுதை எங்கே இருக்கிறது என்றே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. இப்போது போய் கழுதைப் பால் எங்கேடா கிடைக்கும் என்று அலைய முடியுமா? என்று கேலியாகச் சொல்லத் தோன்றியது.

ஆனால், இங்கே பார்த்தால், கேரளாவில் ஒரு மனிதர் கழுதைப்பாலில் காஸ்மெடிக்ஸ் தயாரித்து விற்பதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டிருக்கிறார் என்று அறிய நேரும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த எபிபேபி என்பவர் தான் அந்த அதிசயிக்கத் தக்க தொழிலதிபர். ஏனெனில் அடிப்படையில் ஒரு பொறியாளரான எபி, வித்யாசமான தொழில் ஏதாவதொன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்பதற்காகவே தனது வேலையை விட்டு விட்டு கழுதைப்பால் ஆராய்ச்சியில் இறங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை அதற்கெனவே ஒப்புக் கொடுத்து தற்போது வெற்றிகரமாக கழுதைப் பால் காஸ்மெடிக்ஸ் தொழிலில் ஈடுபட்டு மிகச்சிறந்த முறையில் லாபமீட்டி வருவதாகக் கூறுகிறார்.

முதன்முதலில் அவரைச் சூழ்ந்திருந்த சொந்தங்களும், மக்களும், இதென்ன வேலையை விட்டு விட்டு, இப்படி கழுதை பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறானே! இவனொரு சுத்த மடையன்’ என்று கேலி செய்து கொண்டும் அறிவுரை கூறிக் கொண்டும் இருந்திருக்கின்றனர். எபி அதையெல்லாம் பொருட்படுத்தினார் இல்லை.

அமெரிக்கா 2015ம் ஆண்டு கழுதைப்பாலின் மருத்துவ குணத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. இங்கிலாந்தும் தற்போது அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது கழுதைப்பாலின் மகிமையால் அமெரிக்காவில் அதற்கு தற்போது ஏக டிமாண்ட். ‘பாண்டா சிண்ட்ரோம்’ எனப்படும் வித்யாசமான குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தைகளின் சிகிச்சைக்காக புத்தம்புதிய அப்போது தான் கறந்த கழுதைப்பால் வேண்டி கழுதைப் பண்ணைக்கு அருகிலேயே அதிகமும் குடியேறி வருகின்றனர். ஏனெனில் கழுதைப்பாலில், தாய்ப்பாலுக்கு நிகரான புரோட்டினும், லாக்டோஸும் இருப்பதாக அந்நாட்டு அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் மெய்ப்பித்திருப்பதால் மக்கள் அவ்விதம் நம்புகின்றனர். எனது 10 ஆண்டுகால ஆராய்ச்சித் தேடலில் இதையறிந்த போது, நாமும் ஏன் கழுதைப்பாலை அடிப்படையாகக் கொண்ட தொழில் ஏதாவதொன்றைத் தொடங்கக் கூடாது! என்றெனக்குத் தோன்றியது. அதன் பயனாக நான் கண்டடைந்தது தான் கழுதைப்பால் காஸ்மெடிக்ஸ் தொழில் என்று சிரிக்கிறார் எபி.
இதற்காக அவர் கழுதைகள் வாங்கத் தேர்ந்தெடுத்த இடம் தமிழ்நாடு. இங்கிருந்து 36 கழுதைகளை வாங்கி அவற்றை இரண்டரை ஏக்கர் நிலத்தில் கழுதைப் பண்ணையிட்டு வளர்க்கத் தொடங்கினார் எபி. ஆரம்பத்தில் சில கழுதைகள் இறந்தாலும் தன் கொள்கையில் விடாமுயற்சி கொண்டிருந்த எபி ஒவ்வொரு கழுதைக்கும் தனிச்சிரத்தை எடுத்துக் கொண்டு அவற்றை அன்புடனும், கவனத்துடனும் வளர்க்கத் தொடங்கி இருக்கிறார். கழுதைகளுக்குத் தீனியாக வீட்டுப்புற்களையே பயன்படுத்துவதாகக் கூறும் எபி, ஆரோக்யமான ஒரு கழுதையிலிருந்து நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் கரக்கலாம் என்கிறார்.
அப்படிக் கரந்த பால் சேகரிக்கப்பட்டு 40 டிகிரி செல்சியஸுக்கு கீழ் உறைய வைக்கப்படுகிறது. உறைதலின் மூலம் பாலில் இருக்கும் நீர்மப் பொருள் நீக்கப்பட்ட பின் உலர வைக்கப்பட்டு  
பெளடராக்கப்படுகிறது. இப்படி பெளடராக்கப்பட்ட் பாலில் இருந்து ஃபேஸ் கிரீம் முதல் பாடி லோஷன்கள் வரையிலான காஸ்மெடிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாரான தனது காஸ்மெடிக்குகளை எபி Dolphin IBA எனும் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறாராம்.

எபியின் பண்ணையில் தற்போது கழுதைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே கழுதைப் பால் காஸ்மெடிக்ஸ் வாங்க வரக்கூடிய கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். கழுதைப்பால் அரிதானது என்பதால் அதன் விலை சற்று அதிகம் என்று கூறும் எபி, 40 கிராம் எடை கொண்ட ஃபேஸ் கிரீமை 1920 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகக் கூறுகிறார். தற்போது எபியின் கழுதைப்பண்ணையில் காஸ்மெடிக்குகள் மட்டுமல்ல கழுதைகளும் கூட விற்கப்படுகின்றனவாம். முன்பெல்லாம் எப்படி மாட்டுப்பால் வேண்டுமென்றால் வீடுகளில் மாடுகளை வளர்த்தார்களோ, அதே போல மக்கள் தற்போது தங்களது சரும பிரச்னைகளுக்கு நிவாரணம் பெற கழுதைப்பால் வேண்டி கழுதைகளை விலைக்கு வாங்கி வீடுகளில் வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். மேலை நாடுகளில் பரவலாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் பழக்கம் தற்போது நம்மூரிலும் பரவி வருகிறது. அப்படி விரும்பி வந்து கழுதைகளை விற்பனைக்கு கேட்பவர்களுக்காகத் தான் அவற்றை விற்பதாகக் கூறும் எபி, ஒரு கழுதையின் விலையாக நிர்ணயித்திருப்பத்கு 80,000 ரூபாய் முதல் 100000 ரூபாய் வரை!

தனது 10 வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதைக் கருதும் எபி... கூடிய விரைவில் தனது பிராண்ட் காஸ்மெடிக் பொருட்களை சர்வதேச பிராண்டாக மாற்றும் முயற்சியில் இருக்கிறார்.

நம்பிக்கை தான் வாழ்க்கை. அந்த நம்பிக்கையை செயல்படுத்தும் ஆற்றல் இருப்பவர்களை நம்பிக்கை என்றும் ஏமாற்றுவதே இல்லை.

அதற்கு எபியும் அவரது கழுதைப்பால் காஸ்மெடிக்ஸும் ஒரு சாட்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com