பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம்!

‘இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள், பிள்ளைகள் எல்லோரும் கெட்டுப் போகிறார்கள். மற்ற நாடுகளைப் போல இதைத் தடுத்து விடுங்கள்’ என்று பாராளுமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அங்கே என்ன பதில்
பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம்!

ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன?

நீங்கள் செல்ஃபோனில் அனுப்புகின்ற ஃபோட்டோக்கள் முதல் மெசேஜ்கள் வரை காவல்துறை அதிகாரிகளாகிய நாங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு அனுமதி வாங்கி விட்டால் பார்க்க முடியும். இந்தக் கண்கள் மட்டும் தானே பார்க்கின்றன என்று நீங்கள் நினைத்துச் செய்கின்ற அத்துணையும் கம்ப்யூட்டருக்குப் பின்னால், செல்ஃபோனுக்குப் பின்னால் இந்த உலகமே பார்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நகரத்தின் நிலை என்னவென்று காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் ஐஆர் எஸ் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கும் தெரியும்.

ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். செல்ஃபோன் வாங்கித் தராதீர்கள் என்று சொல்கிறார்களே... ஏன் சொல்கிறார்கள்? 100% பேரிடம் கணக்கெடுப்பு நடத்தினார்கள். 67% ஆண்களும், 33% பெண்களும் ஆபாசப் படங்களை செல்ஃபோனிலே பார்க்கின்றார்கள். அதை தங்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி தருகின்ற உண்மை. ஃபேன் ஃபிக்‌ஷன் என்ற காமரசம் ததும்பும் இணையதளங்களைப் பார்த்த இந்திய மாணவர்களின் குறிப்பாக தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் பேர். இதை நான் அவையிலே பதிவு செய்கின்றேன். பசி, உறக்கம், தாகம் போல காமமும் ஓர் உணர்வு. அதை எந்த நேரத்திலே எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டிய காலம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன். நீங்கள் சொல்லித்தரவில்லை என்றால் செல்ஃபோன்களும், இண்டர்னெட்களும், டிவிக்களும், சினிமாக்களும் அவர்களை முறை தவறி வழிநடத்தி விடும்.

சின்னஞ்சிறுசுகளை இனம்புரியாத உலகத்துக்கு அழைத்துச் செல்வதின் மூலம் கவர்ச்சியைக் கடைவிரித்துக் காசு பண்ணுகிறார்கள். எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள் ஜப்பான், சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலேயே ஒரு செல்ஃபோன் செயலி கூட வேலை செய்யாது. (வியாபார நிமித்தம் அந்த நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு அது நன்றாகத் தெரிந்திருக்கும்). இந்தியாவுக்கு வந்து இறங்கினீர்கள் என்றால் எல்லா செல்ஃபோன் செயலிகளுமே திறந்திருக்கும். அப்படியானால் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தானே அதிகமாக இருக்க வேண்டும். எதற்காக இதையெல்லாம் சொல்லுகின்றேன்? நினைத்துப் பாருங்கள்... ஒரு சொடுக்கிலே திரையிலே வந்து விழுகின்ற ஆபாசப் படங்கள் என்ற வெள்ளம் அமைதியான தமிழ்நாட்டுக் குழந்தைகளுடைய பண்பு நலன்களை அடித்துச் செல்லுகிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ட்ராய்டு ஃபோன் கேட்கிறார்கள் என்றதும் உடனே வாங்கித் தருகிறீர்களே? ஆன்ட்ராய்டு என்றால் என்னவென்ற உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆப்பிள் ஃபோன் என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன் கேட்கிறேன் தெரியுமா? கல்லூரிகளில் பெற்றோர்களிடத்தில் நான் உரையாற்றச் செல்லும் போது நான் இந்த ஃபோனைப் பற்றிப் பேசும் போது பெற்றோர்கள் எல்லாம் பெரும்பாலும் ஒன்றுமறியதாவர்களாக பவ்வியமாக உட்கார்ந்திருப்பார்கள்... ஆனால், பின்னால் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகள் எல்லாம் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? பெற்றோர்களுக்கு ஃபோனைப் பற்றி பெரிதாகத் ஒன்றும் தெரியாது.

ஆன்ட்ராய்டு ஃபோன் என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்?

செல்ஃபோனைப் பொறுத்தவரை இந்தியாவில் 100 க்கு 51% பேர் அரைகுறை ஞானம் கொண்டவர்கள். ஆனால் 81% பேர் இந்தியாவில் செல்ஃபோன் பயன்படுத்துகிறோம். ஆனால் அப்படிப் பயன்படுத்தும் செல்ஃபோனை பிள்ளைகளுக்கு வாங்கித் தரும் போது அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு தான் வாங்கித் தருகிறோமா என்றால் அது தான் இல்லை. ஆண்ட்ராய்டு என்றால் அது ஒரு  ‘கனெக்டிவிட்டி லிங்க்’ என்பதை தெரிந்து கொண்டு வாங்கித் தருகிறோமா? என்றால் அது தான் இல்லை. ஐஓஎஸ் என்பது ஆப்பிள் ஃபோனின் கனெக்டிவிட்டி லிங்க். காவல்துறை அதிகாரியாகக் குறிப்பிடுகின்றேன். ஆப்பிள் ஃபோனில் ஹேக்கர்ஸ் அதாவது இணையத் திருடர்கள் நுழைந்து தகவல்களைத் திருடுவது கஷ்டம். ஆனால், ஆண்ட்ராய்டு அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் அதை ஹேக் பண்ணலாம்.

நாம் 35 வயதில் தெரிந்து கொள்வதை நம் பிள்ளைகள் 15 வயதில் தெரிந்து கொள்கிறார்கள்... அதற்கான மெச்சூரிட்டி இல்லாமலே!

2G,3G,4G  என்றெல்லாம் பார்த்தோமே அதையெல்லாம் எதற்காகப் பார்த்து வியந்தோம் என்பது வேறு கதை. ஆனால், அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் சொல்வதென்றால் 2G என்றால் பைப்பைத் திறந்தால் தண்ணீர் வருகிறார் போல. 3G என்றால் வயக்காட்டில் பம்ப் செட்டில் தண்ணீர் வருகிறார் போல. ஆனால், இந்த 4G     என்பது நயாகரா நீர்வீழ்ச்சி மாதிரி. எல்லாம் கொட்டும். அது ஒரு இண்டர்னெட் ஜங்கிள். நல்லதுமிருக்கும், கெட்டதுமிருக்கும். விஷ செடியுமிருக்கும். மூலிகைச் செடியும் இருக்கும். எதைப் பார்க்கலாம் என்பது 15 வயதில் பிள்ளைகளுக்குத் தெரியுமா? பெரியவர்களாகிய நமக்கு 35 வயதில் தெரியக்கூடிய விஷயங்கள் அந்தப் பிள்ளைகளுக்கு 15 வயதில் தெரியும். மெச்சூரிட்டி வருவதற்கு முன்பு அதைப் பற்றியதான நாலெட்ஜ் வந்து விடுகிறது. அந்த நாலெட்ஜை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறது இன்றைய இளைய சமுதாயம். சொல்லித் தரவேண்டியது யார்?

கேடு விளைவிக்கும் ஆப்களை தடை செய்யக் கோரும் உச்சநீதிமன்றத்துக்கு இந்தியப் பாராளுமன்றத்தின் பதில்...

‘இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள், பிள்ளைகள் எல்லோரும் கெட்டுப் போகிறார்கள். மற்ற நாடுகளைப் போல இதைத் தடுத்து விடுங்கள்’ என்று பாராளுமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அங்கே என்ன பதில் கிடைத்தது தெரியுமா? பகிரங்கமாக இதைச் சொல்கிறேன். ‘இது சுதந்திர நாடு, இதை இயக்குபவர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இயக்குகிறார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். இப்போது தான் அதற்குரிய முயற்சிகள் நடக்கின்றன.

பிள்ளைகளுக்கு ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித் தந்து விட்டு அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என நம்பும் பெற்றோர்களின் நம்பிக்கை எப்படிப்பட்டது?

அப்படியென்றால், குழந்தைகளுக்கு செல்ஃபோன் வாங்கித் தந்து விட்டு என் பிள்ளை தப்பு செய்யாது என்று நம்பும் அம்மா, அப்பாக்களின் நம்பிக்கை எப்படிப் பட்டது தெரியுமா? மெளண்ட் ரோடில் அப்போது தான் நடை பயிலக் கூடிய பருவத்திலிருக்கும் சின்னஞ்சிறு குழந்தையை விட்டு விட்டு, என் குழந்தை... தானாக பத்திரமாக சாலையைக் கடந்து வந்து விடும் என்று நம்புவது எத்தனை முட்டாள்தனமோ, அதை விடப் பெரிய முட்டாள் தனமாக இருக்கும் என்பதை மனதிலே பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

நேரில் பேசுவதற்கு சங்கோஜப்படுகின்ற எதையும் செல்ஃபோனில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் செல்ஃபோனில் அனுப்புகின்ற ஃபோட்டோக்கள் முதல் மெசேஜ்கள் வரை காவல்துறை அதிகாரிகளாகிய நாங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு அனுமதி வாங்கி விட்டால் பார்க்க முடியும். இந்தக் கண்கள் மட்டும் தானே பார்க்கின்றன என்று நீங்கள் நினைத்துச் செய்கின்ற அத்துணையும் கம்ப்யூட்டருக்குப் பின்னால், செல்ஃபோனுக்குப் பின்னால் இந்த உலகமே பார்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது நீங்கள் ஆசையாக செல்ஃபோன் வாங்கித் தருகிறீர்களே அந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா?

மார்ஃபிங் என்ற விஷயத்தின் விபரீதம் இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கிறது?

வினுப்ரியா என்ற இளம்பெண் தூக்குப் போட்டு இறந்ததாக செய்திகளில் கண்டிருப்பீர்கள். அது ஏன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அந்தப் பெண் தனது புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். ஒருவன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தில் முகத்தை மட்டும் வெட்டி எடுத்து வேறொரு ஆபாசப் புகைப்படத்தின் உடலுடன் இணைத்து மார்ஃபிங் செய்து ஆபாச இணையதளங்களில் பரப்பி விட்டான். அந்தப் பெண், அது தன்னுடைய புகைப்படம் இல்லை என்று பலரிடம், பலமுறை சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பவில்லை. முடிவாக அவரது படிப்பறிவற்ற சொந்தப் பெற்றோரே வினுப்பிரியாவை நம்பாமல் அவர் மீது கேள்வியெழுப்பவே அன்றிரவே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் அந்தப் பெண்.

தவறு யாருடையது? சமூகத்தினுடைய குற்றமல்லவா? பெற்றோர்களின் குற்றமல்லவா?  மார்ஃபிங் என்றொரு விஷயமிருக்கிறது. அதைப் பயன்படுத்தி ஒருவன் குற்றம் செய்கிறான். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் பெண்ணை கேள்விக்குள்ளாக்கும் போது குற்றத்துக்கு அம்மா, அப்பா தானே காரணமாகி விடுகிறீர்கள்! எதற்கு செல்ஃபோன் வாங்கித் தருகிறீர்கள்? பேசுவதற்கு என்றால், 2000 ரூபாயில் பேசுவதற்கு மட்டுமாக வேறு வகையில் உபயோகப் படுத்த முடியாத வகையிலான செல்ஃபோன் இருக்கிறது, அதை வாங்கிக் கொடுங்கள்.

கணினித் திருட்டுக்கு ஒரு அமெரிக்க உதாரணம்...

அமெரிக்காவில் ஒரு கார் நிறுவனம், ஆறு மாதத்திற்கு முன்பு 70 லட்ச ரூபாய்க்கு ஒரு கார் தயாரித்தார்கள். அனைத்துமே கம்ப்யூட்டரைஸ்டு வசதிகள் பொருத்தப்பட்ட கார் அது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அந்தக் காரை வெளியில் எடுத்துச் செல்கிறார்கள். இதெல்லாம் உண்மையில் நடந்த சம்பவங்கள்... அதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்... பின்னால் காரில் இருந்து ஒருவன் பேசுகிறான். உன் காரில் இருக்கும் கண்ட்ரோல் என்னிடம் இருக்கிறது என்று. கார் நிறுவனக்காரன் மிரண்டு போனான். ‘ஏய் சும்மா சொல்கிறாயா? என்று பின்னால் வந்த கார்காரனை இவன் மிரட்ட, நீ ஓட்டித்தான் பாரேன் என்று அவன் சவால் விட, இவன் ஓட்டிப் பார்த்தான்... பிரேக் பிடிக்க முடியவில்லை, நினைத்த படி வலது, இடது பக்கம் திருப்ப முடியவில்லை. காரின் இயக்கம் முழுதும் பின்னால் உள்ள கார்க்காரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அப்போது தான் இவன் உணர்ந்து கொள்கிறான். வண்டியை நிறுத்த முடியாத அபாயத்தில் அவன் தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கதற.. பிறகு பின்னால் வந்த கார்க்காரன் காரை நிறுத்தி அவனைக் காப்பாற்றுகிறான். அப்படிப்பட்டவனை அந்தக் கார் நிறுவனம் 1 மில்லியன் டாலர் சம்பளம் கொடுத்து தன்னிடம் வேலைக்கு வைத்துக் கொண்டது. வேறு வழியில்லை. ஏனென்றால், அவன் எப்படித் திருடினான் என்று தெரியவேண்டும். மீண்டும் இப்படி யாராவது தங்களது காரைத் திருடாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டாக வேண்டும். இப்படியெல்லாம் செய்ய முடிகிறது எனும் போது, நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள், மெசெஜ்களைத் திருட முடியாதா?

கூகுளில் Agree, Disagree ஆப்சன்களில் அக்ரிமெண்ட்டை முழுதாகப் படித்துப் பார்த்து பட்டனை அழுத்தும் புத்திசாலிகள் யாராவது உண்டா?

செல்ஃபோன் வாங்கியதும், அதை இயக்கத் தொடங்கும் போது ஒரு அடையாளத்துக்காக உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கேட்கும். அப்போது கீழே Agree, Disagree என்று இரண்டு ஆப்சன்கள் இருக்கும். அதில் அந்த அக்ரிமெண்ட்டை நீங்கள் யாராவது எப்போதாவது முழுவதுமாகப் படித்துப் பார்த்து விட்டு பிறகு Agree பட்டனை அழுத்தி இருக்கிறீர்களா? ஒருவர் கூட அதை முழுதாகப் படித்துப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், Disagree பட்டனைத் தொட்டால் இணையப் பக்கங்கள் ஒன்றுமே திறக்காது. Agree பட்டனைத் தொட்டால் உலகமே திறக்கும். அதனால் நாம் அதைப் படித்துப் பார்க்காமலே அழுத்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறோம்.

Agree பட்டனை அழுத்தும் போது நீங்கள் எதற்கெல்லாம் உடன்படுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்...

நான், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். Agree பட்டனை அழுத்தினால் நீங்கள் எதையெல்லாம் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று தெரியுமா? நீங்கள் இணையத்தில் பார்க்கும் பகிரும் அத்தனை புகைப்படங்கள், இணையப் பக்கங்கள், மின்னஞ்சல்கள், சாட்டுகள் என அனைத்தையுமே கூகுள் நிறுவனம் குக்கீஸ்களில் ஸ்டோர் செய்து ஹிஸ்டரியில் பத்திரப் படுத்தும். யாராவது அதைத் திருடி தவறாகப் பயன்படுத்தினால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு கூகுள் நிறுவனம் பொறுப்பேற்காது. என்று கூகுள் நிறுவனம் உங்களிடம் முன்கூட்டியே ஒரு அக்ரிமெண்ட் வாயிலாக ஒப்புதல் பெறுகிறது. அந்த அக்ரிமெண்ட்டை ஒப்புக் கொண்டு தான் நீங்கள் Agree   பட்டனை அழுத்தி உள்ளே நுழைகிறீர்கள்.

Agree பட்டன் குறித்து சுந்தர் பிச்சை சொன்ன விபரீத விளையாட்டு...

கூகுள் CEO சுந்தர் பிச்சை சமீபத்தில் லண்டனில் நடந்த மீட்டிங்கில் சொன்னார். தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 10% புத்திசாலிகளாவது கூகுள் அக்ரிமெண்டைப் படித்துப்பார்த்து விட்டு கையெழுத்துப் போடுவார்கள்... ஐ மீன் Agree பட்டனை அழுத்துவார்கள் என்று சொன்னார். ஆனால், அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் சொன்னார்கள். இல்லை.. நிச்சயமாக ஒருவர் கூட படித்துப் பார்த்து விட்டு கையெழுத்துப் போடமாட்டார்கள் என்று. கடைசியாக, சும்மா விளையாட்டுக்கு என்று சொல்லி அந்த அக்ரிமெண்ட்டின் இறுதியில் இரண்டு வரிகளைச் சேர்த்தார்கள். அது என்னவென்றால், ஆண்ட்ராய்டு ஃபோனில் Agree பட்டனை யார் தொட்டு அழுத்தினாலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் ஒன்றை கூகுள் நிறுவனத்திற்கு கொடுத்து விட வேண்டும் என்ற வரிகளைச் சேர்த்தார்கள். சும்மா விளையாட்டுக்குத்தான், ஆனால், அதையும் ஒரு பயலும் பார்க்கவில்லை. எல்லோரும் படித்துப் பார்க்காமலே Agree பட்டனை அழுத்தியிருந்தார்கள். நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறது. 

பேரண்ட்டல் கைடன்ஸ் குறித்து இப்போதாவது தெரிந்து கொள்ளா விட்டால் வேறெப்போது தான் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

அமெரிக்காவில் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு செல்ஃபோன் வாங்கித் தருகிறார்கள், ஆனால், எப்படி வாங்கித் தருகிறார்கள் தெரியுமா? பேரண்ட்டல் கைடன்ஸ் (PG) என்றொரு செயலி இருக்கிறது. அந்த சாஃப்ட்வேரை உள்ளே வைத்துக் கொடுத்து விடுகிறார்கள். தவறான விஷயங்களைப் பிள்ளைகள் தேடுகிறார்கள் என்றால் அந்தச் செயலியின் விளைவாக உடனே அப்பாவுக்கு அலார்ம் அடிக்கும். பிறகு எவனாவது அப்படித் தேடுவானா? நமக்கு அந்த மாதிரியான செயலிகள் இருக்கிறது என்பதாவது தெரியுமா? தயவு செய்து பிள்ளைகளே, செல்ஃபோன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களது மின்னஞ்சல் முகவரியை முகநூலில் போடாதீர்கள். உங்களது செல்ஃபோன் நம்பரை முகநூலில் போடாதீர்கள். உங்களது ஃபோட்டோவையோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களது ஃபோட்டோவையோ முகநூலில் போடாதீர்கள். ஏனென்றால் அதை எடுத்து பிறர் தவறாக உபயோகிப்பதற்கு எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன. இப்போது தான் செக்‌ஷன் 2000 என்று ஒன்றைச் சேர்த்து... இணையத்தில் இருந்து தகவல்களை எடுத்து தவறாகப் பயன்படுத்தினால் அதற்கு மூன்று வருட தண்டனை என்று கொண்டு வந்திருக்கிறார்கள். மானம், மரியாதை எல்லாம் போன பிறகு தவறு செய்தவர்களைத் தண்டித்து என்ன செய்யப் போகிறோம்?!

செல்ஃபோனை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தும் பக்குவம் முதலில் பெற்றோர்களுக்கு வர வேண்டும்... பிறகு பிள்ளைகளுக்கும்...

உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்வதாக இருந்தால், ஒழுக்கமுடன் பிள்ளைகள் வளர வேண்டுமென்றால் செல்ஃபோனை நல்லதிற்கு மட்டும் பயன்படுத்துங்கள். செல்ஃபோனை நிறைய நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும். யுட்டிலிட்டி செயலி என்று ஒன்று இருக்கிறது. இங்கிருந்து உலகின் எந்த மூலையில் இருக்கும் மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெற்று இந்திய மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியும். தனித்தனியாக இருப்பவர்களை குழுக்களாக இணைப்பது மாதிரியான எவ்வளவோ நல்ல பயன்கள், நல்ல கருத்துக்கள் இதில் இருக்கின்றன. சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பற்றிச் சொல்லலாம். அதில் அத்தனை பேரும் ஒற்றுமையாகத் திரண்டது எதனால்? இணைய சமூக ஊடகங்கள் தானே இணைத்தது. ஆனால் செல்ஃபோனையும், இண்டர்நெட்டையும் நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் வெறும்19% பேர் மட்டும் தானாம். 81% பேர் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களே!

நன்றி: சமூக சிந்தனையாளர் கலியமூர்த்தி ஐபிஎஸ் அவர்களுக்கு.
(சங்கரன் கோவிலில் ஒரு விழிப்புணர்வு & பாராட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் தான் மேலே இதுவரை நீங்கள் வாசித்தறிந்த உண்மைகள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com