நான் மீட்டெடுத்த ‘சுதந்திரத்தை’ என்னிடமே கொடுத்து விடுங்களேன்! தத்துப் பாட்டி கீதாவின் உருக்கமான வேண்டுகோள்!

நான் மீட்டெடுத்த ‘சுதந்திரத்தை’ என்னிடமே கொடுத்து விடுங்களேன்! தத்துப் பாட்டி கீதாவின் உருக்கமான வேண்டுகோள்!

பிறக்கும் போதே தனக்கான பிறப்புரிமையை உரத்த குரலில் உலகுக்குப் பறைசாற்றி உயிருக்குப் போராடி காலனை வென்று கீதாவின் கை சேர்ந்து ‘சுதந்திரம்’ என்ற பெயரில் அவதரித்திருக்கும் இந்தக் குழந்தை நிச்சயம் தனது 

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த வாரம் மழை பெய்து ஓய்ந்த ஒரு காலை நேரத்தில் கீதா கண்விழிக்கையில் நேரம் சற்றுப் பிந்தித்தான் விட்டது. முதல் நாளில் நல்ல மழை என்பதால் அந்தப் பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்தது. இதனால் இரவில் தடைபட்ட மின்சாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து, காத்திருந்து ஓய்ந்த பின் இரவு வழக்கமான நேரம் கடந்து கீதாவும், அவரது மகள் ஷாலினியும் தாமதமாகத்தான் தூங்கச் சென்றிருக்கிறார்கள். இதனால் காலையில் கீதா விழித்தெழ சற்று நேரமாகியிருக்கிறது. அப்போது அக்கம்பக்கத்தில் பலமான பேச்சுக்குரல் கேட்டு யாரோ, என்னவோ என்று வெளியில் பதறி ஓடி வந்த கீதா... தன் மகளும் அந்தத் தெருவிலிருந்த பிற அண்டைவீட்டாரும் வீட்டின் முன்னிருந்த சிக்கலான ஒரு கழிவுநீர் குழாய்ச் சந்திப்பின் முன் பதற்றத்துடன் திரண்டிருந்ததைக் கண்டார். அங்கே... ஆளாளுக்கு கழிவுநீர்க் குழாய்க்குள் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது... குழந்தை சிக்கிக் கொண்டது என்பது போன்ற பேச்சுக் குரல் காதில் விழுந்ததும் கீதாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திரண்டிருந்த மக்களில் யாருக்கும் குனிந்து உள்ளே மாட்டிக் கொண்டிருந்த சிசுவை வெளியில் எடுக்கும் மன தைரியம் இல்லாத நிலையில், இனிமேலும் தாமதித்தால் உள்ளிருக்கும் குழந்தைக்கு பெரிய ஆபத்து என்று உணர்ந்த கீதா. அப்படியே சாலையில் படுத்து கழிவுநீர் குழாய்க்குள் கையை விட்டார். மிகச்சிறிதான அந்த துவாரத்தில் குழந்தை கிடைமட்டமாக சிக்கியிருப்பதை இப்போது கீதாவுக்கு புலனானது. உள்ளிருந்த சேற்றுக்குள் தன் கைகளைப் பதித்து குழந்தையின் உடலைப் பதமாகக் பிடித்து மெதுவாக இழுத்தார் கீதா. குழந்தை வெளியில் வந்தது.

பிறந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத... பச்சிளம் சிசுவொன்று தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில்... கழுத்தைச் சுற்றி தொப்புள் கொடி இறுக்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் உடனடியாக சற்றூம் யோசிக்காமல் அதன் மீதிருந்த சேற்றை வெந்நீரில் அலசி கூடுமான வரை குழந்தையின் வாய், மூக்கு, காதுகளில் புகுந்திருந்த சேற்று நீர், பூச்சிகள், புழுக்களை அகற்றி சுத்தமான டவல் ஒன்றில் குழந்தையைச் சுற்றியெடுத்து உடனடியாக காவல்துறைக்கு குழந்தை கிடைத்த விவரத்தைப் புகாராக அளித்து விட்டு அவர்கள் துணையுடனே அருகிலிருந்த அரச்சு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார் கீதா. 

குழந்தை கிடைத்த சற்று நேரத்தில் இந்த விவரம் உள்ளூர் தொலைக்காட்சி முதல் உலகத்தொலைக்காட்சி வரை இணைய ஊடகங்கள் வாயிலாகச் சென்றடைய கழிவுநீர் குழாயிலிருந்து குழந்தையை மீட்ட கீதாவின் மனோ தைரியத்தைப் பாராட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் நேரில் சென்று மரியாதை செய்து வாழ்த்தியிருக்கின்றனர். குழந்தையை கண்டடைந்த அந்த நேரத்தில் கீதாவும் மற்றவர்களைப்போல கொஞ்சம் தயங்கியிருந்தால் குழந்தைக்கு என்ன வேண்டுமானாலும் நேர்ந்திருக்கலாம். உடனடியாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டதோடு அதற்குரிய முதலுதவிகளையும் செய்து உடனடியாக விரைந்து காவல்துறை மூலம் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றது கீதாவின் புத்திசாலித்தனம்.

தனக்கு இத்தனை துணிவு வரக் காரணம் என்னவென்று கீதாவே யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கண்ணீருடன் விளக்கியிருந்தார்...

மிக இளவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் ஆலந்தூரில் இருக்கும் குடும்பமொன்றில் தத்துப் பிள்ளையாகச் சென்றவர் கீதா. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை வளர்த்தார்களே தவிர அவர்களும் மத்தியதரக் குடும்பத்தவர்கள் தான் என்பதால் தனக்கு அம்மா பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான், தான் வளர்க்கப் பட்டதாகக் கூறினார். பிறந்ததில் இருந்து அம்மாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்ததால் தனக்கு அதன் மீதான ஏக்கம் அதிகமிருந்ததாகக் குறிப்பிடும் கீதா, பின் தனக்குத் திருமணமாகி மகள் ஷாலினி பிறந்ததும் அவரை இதுநாள் வரையில் ஒருமுறை கூட கோபத்தில் அடித்ததே இல்லை என்று கூறுகிறார். குழந்தைகள் நம்மை நம்பி இந்தப் பூமியில் பிறக்கின்றன. அதற்கென்று தனியான உணவுச் செலவு இல்லை. அம்மா உண்பதில் சிறிது அந்தக் குழந்தைக்கும் ஊட்டி வளர்த்தாளே போதும் இந்தியாவில் குழந்தைகள் வளர்ந்து விடும். நமது அரசாங்கம் ஏழைக் குழந்தைகளுக்கு என்று எத்தனையோ சலுகைகளை அறிவித்திருக்கிறது. அவர்களின் படிப்புக்கும் அரசு உதவி கிடைக்கும். அதனால் நம் நாட்டில் எப்படியாவது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விடலாம். அதற்காக பிறந்த சிசு என்றும் பாராமல் குழந்தையை இப்படிச் சேற்றில் வீச வேண்டிய அவசியம் இல்லை. இது மகாப் பெரிய பாவம். இந்தப் பாவத்தைச் செய்தவர்களுக்கு இப்போது தெரியாது இதன் பலன். நாளை இந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகும் போது என்றாவது ஒருநாள்.. ‘ஐயோ நம் குழந்தையைப் பெற்று இப்படி ஈவு இரக்கமில்லாமல் சேற்றில் வீசி விட்டோமே!’ என்று கண்ணீர் விடும் நாள் வரும். அப்போது அந்தத் தாயின் சுதந்திரம் பறிபோகும். சுதந்திர தினத்தன்று கிடைத்த அழகான ஆண்குழந்தை என்பதால் இந்தக் குழந்தைக்கு நான் சுதந்திரம் என்று பெயர் வைத்தேன். எனக்கு அவன் பேரன். என் மகள் ஷாலினிக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காக நாங்கள் வருந்திக் கொண்டிருக்கும் போது எங்களைத் தேடி வந்து கிடைத்திருக்கிறது இந்த சுதந்திரம். நான் கண்டெடுத்த இந்த சுதந்திரம் எங்களுக்கே மீண்டும் கிடைத்தால் எங்களுக்கு மிகவும் சந்தோசம் தான். 

குழந்தையை நானே வளர்ப்பதாகக் கூறி அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். அவர்கள் குழந்தையைத் தத்தெடுக்க சட்ட நடைமுறைகள் நிறைய இருப்பதாகவும் அதனால் சற்றுப் பொறுங்கள் என்று கூறியிருப்பதாகவும் தெரிவிக்கும் கீதா, நானும் கஷ்டப்படும் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண் தான்... ஆனாலும் அந்தக் குழந்தை எனக்குக் கிடைத்தால் அரசு அனுமதி கொடுத்தால் என்னால் அந்தக் குழந்தையை எந்தக் குறையும் இன்றி பாசம் காட்டி வளர்க்க முடியும். ஒருவேளை என்னை விட நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு அந்தக் குழந்தை வருங்காலத்தில் தத்துக் கொடுக்கப்பட்டாலும்  அவனைக் கண்டெடுத்த வகையில் நானும் அவனுக்கொரு பாட்டி தான். நான் தான் அவனுக்கு சுதந்திரம் என்று பெயர் வைத்தேன். அவனை வளர்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தாலும் கூடப் போதும். அந்தக் குழந்தையை உயிரோடு மீட்டதில் இன்று என் மனசாட்சி என்னை பாராட்டிக் கொண்டிருக்கிறது. வீட்டிலும் கூட என் மகளும், உறவினர்களும் ‘சுதந்திரத்தினால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகி விட்டாய்’ என்று என்னைக் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்க சந்தோசமாகத்தான் இருக்கிறது. அத்தனையும் அந்தக் குழந்தையை உயிருடன் மீட்டதினால் மாத்திரம் தான். மீட்ட எனக்கே இப்படி இருக்கிறதே... 10 மாதம் சுமந்து பெற்ற தாயால் எப்படி அந்தக் குழந்தையை வேண்டுமென்றே இப்படி கழிவுநீர் குழாயில் போட முடிந்தது? என்று தான் எனக்குத் தெரியவில்லை. 

அந்தக் குழந்தையை ஏன் அப்படிக் கழிவுநீர்க் குழாயில் வீசி எறிந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அப்படி வீசி எறிந்தவர்களிடம் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு குழந்தை வேண்டாமென்றால் அதைக் கந்தையானாலும் பரவாயில்லை ஒரு நல்ல துணியில் போர்த்தி பாதுகாப்பாகவாவது போடுங்கள். இப்படியெல்லாம் வேண்டா வெறுப்பாகக் கழிவு நீர் சாக்கடையில் வீசாதீர்கள். அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது. குழந்தையில்லாமல் எத்தனை பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? என்று கண்ணீர் சிந்துகிறார் கீதா.

கீதா கண்டெடுத்த சுதந்திரத்தை வளர்க்கப் போவது யார்?

என்பது தான் அடுத்த கேள்வி.

நிஜமாகவே தமிழகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகள் மீட்பு வரலாற்றில், இதுவரை இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து குழந்தை கண்டெடுக்கப் பட்டிருந்தால் அவற்றில் பெரும்பாலும் குழந்தை இறந்து விட்டிருக்கும். கழிவுநீர் குழாயில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியும் கூட மீட்கப் பட்டு பத்திரமாக உயிர் தப்பிய குழந்தை ’சுதந்திரம்’ மட்டுமேயாகத் தான் இருக்கக் கூடும்.

பிறக்கும் போதே தனக்கான பிறப்புரிமையை உரத்த குரலில் உலகுக்குப் பறைசாற்றி உயிருக்குப் போராடி காலனை வென்று கீதாவின் கை சேர்ந்து ‘சுதந்திரம்’ என்ற பெயரில் அவதரித்திருக்கும் இந்தக் குழந்தை நிச்சயம் தனது ஆரோக்யத்தை மீட்டெடுத்து இந்த உலகில் ஏதாவதொரு செயற்கரிய அரும் செயலை நிகழ்த்தத்தான் ஜனித்திருக்கக் கூடும்.

அதுவரையிலும் அந்தக் குழந்தையையும் அதை மீட்ட கீதாவையும் மறவாதிருப்போமாக!

Image Courtesy: Top Tamil News you tube channel.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com